செங்கதிர் மேனி யான்போ லவிழ்ந்தன செழும்ப லாசம்
மங்குலூர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சி திங்கட்
புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை
அங்கதி ராழி யான்போ லலர்ந்தன விரிந்த காயா. |
(இ
- ள்.) செழும்பலாசம் - வளவிய முண் முருக்குகள், செங்கதிர்
மேனி யான்போல் அவிழ்ந்தன - செவ்வொளி பொருந்திய மேனியையுடைய
சூரியனைப் போலச் செந்நிறமாக மலர்ந்தன; காஞ்சி - காஞ்சிமரங்கள்,
மங்குலஊர் செல்வன்போல மலர்ந்தன - முகிலை ஊர்தியாகக்கொண்டு
ஊரும் இந்திரன்போலக் கருநிறமாக மலர்ந்தன; பூஞ்சினை மரவம் -
பொலிவுள்ள கிளைகளையுடைய குங்கும மரங்கள், திங்கள் புங்கவன்போலப்
பூத்த - சந்திரனைப்போல வெண்ணிறமாக மலர்ந்தன; விரிந்த காயா -
விரிந்த காயாஞ்செடிகள், செங்கை அம் கதிர் ஆழியான் போல் அலர்ந்தன
- சிவந்த கையில் அழகிய ஒளியையுடைய திகிரியையுடைய திருமால்போல
நீலநிறமாக மலர்ந்தன.
மரவம்
- வெண்கடம்புமாம். பூத்த, முற்று. உவமம் நான்கும் உருவு
பற்றியன.
ழுஒருகுழை
யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியும்
மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியும்
ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்
ஆனேற்றுக் கொடியோன்போ லெதிரிய வில்வமும்ழு |
என்னும் பாலைக்கலியடிகள்
இங்கு நோக்கற்பாலன. இதனைப்
பலவயிற்போலி யுவமை யணியின்பாற் படுத்தலுமாம். (12)
தரைகிழித் தெழுநீர் வையைத் தடங்கரை யெக்க ரல்குல்
அரவமே கலைசூழ்ந் தென்ன வலர்ந்துதா துகுப்ப ஞாழல்
மரகதந் தழைத்து வெண்முத் தரும்பிப்பொன் மலர்ந்து வாங்குந்
திரைகடற் பவளக் காடு செய்வன கன்னிப் புன்னை. |
(இ
- ள்.) தரை கிழித்து எழு நீர் வையைத் தடங்கரை - தரையைக்
கிழித்துச் செல்லா நின்ற நீரையுடைய வையையாற்றின் பெரிய கரையாகிய
பெண், எக்கர் அல்குல் - மணல்மேடாகிய அல்குலில், அரவம் மேகலை
சூழ்ந்தென்ன - ஒலியையுடைய மேகலையை அணிந்தாற்போலத்
(தோன்றுமாறு), ஞாழல் அலர்ந்து தாது உகுப்ப - குங்குமமரங்கள் மலர்ந்து
மகரந்தத்தைச் சிந்துவன; கன்னிப் புன்னை - இளமையாகிய புன்னைமரங்கள்,
மரகதம் தழைத்து - மரகதம்போலும் இலைகள் தழைத்து, வெண்முத்து
அரும்பி - வெள்ளிய முத்துக்கள்போலும் முகைகள் அரும்பி, பொன்
மலர்ந்து - பொன்போலும் பூக்கள் மலர்ந்து, வாங்கும் திரை கடல்
பவளக்காடு செய்வன - வளைந்த அலைதலையுடைய கடலிலுள்ள
பவளக்காடு போலும் மகரந்தஞ் சிந்துவன.
|