6திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



அப்பெருஞ் சலதி வெள்ளத் தழுந்தின வழிவி லாத
எப்பெரும் பொழிலு மேழு தீபமு மிவற்றுட் டங்கி
நிற்பன செல்வ வான திணைகளு நீண்ட சென்னிப்
பர்ப்பத வகையு மீறு பட்டன வாக வங்கண்.

     (இ - ள்.) அப்பெருஞ் சலதிவெள்ளத்து அழுந்தின - அந்தப்பெரிய
கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத எப்பெரும் பொழிலும் -
அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீபமும் - ஏழு தீவுகளும்,
இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும் - இவைகளிலே
தங்கிநிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், நீண்ட சென்னிப்
பர்ப்பதவகையும் - உயர்ந்தமுடிகளையுடைய மலைவகைகளும்,
ஈறுபட்டனவாக - ஒழிந்தனவாக; அங்கண் - அப்பொழுது.

     அழுந்தின, முற்றெச்சம். பொழில் - உலகம்.

     இஃது இப்பொருட்டாதலை.

"செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை
மூவர்கோ னாய்நின்ற முதல்வன்"

என்னும் திருவாசகத்திற் காண்க. நிற்பனவான திணை - நிலைத்திணை.
செல்வவான திணை - இயங்குதிணை. திணை - குலம். (10)

தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத.

     (இ - ள்.) தேன் இழி குதலைத்தீஞ்சொல் - தேன் ஒழுகும் இனிய
குதலைச் சொல்லையுடைய, சேல் நெடுங் கண்ணி கோயில் - சேல் போலும்
நீண்ட விழிகளையுடைய உமையம்மையின் திருக்கோயிலும், வான் இழி
விமானம் - வானினின்றும் இறங்கிய இந்திரவிமானமும், பொற்றாமரை -
பொற்றாமரை வாவியும், விளையாட்டின் வந்த கான் இழி இடபக்குன்றம் -
இறைவன் திருவினையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும்
(சோலைகளையுடைய) இடபமலையும், கரிவரை - யானைமலையும்,
நாகக்குன்றம் - நாகமலையும், ஆன் இழிவரை - பசுவின் உருத்திரிந்த
பசுமலையும், வராகவரை - பன்றிமலையும், முதல் - முதலிய இடங்கள்,
அழிவு இலாத - (அந்நீரினால்) அழியாதனவாயின.

     தேன் இழி என்பதற்குத் தேனும் புறங்கொடுக்கும் என்றுரைத்தலுமாம்.
சேல் நெடுங்கண்ணி - அங்கயற்கண்ணம்மை. கான் இழி சோலைகளை
யுடைய என வருவித்துரைக்க. முதல் - முதலான. ஆக்கச்சொல் விரித்து
அழிவிலாதனவாயின என்க. (11)