ஏமா சலமென் முலையார் நடையோ வியமே யென்னப்
பூமா தவிசேர் வாரும் புன்னை நிழல்சேர் வாருந்
தேமா நிழல்சேர் வாருஞ் செருந்தி நிழல்சேர் வாருங்
காமா யுதசா லைகள்போற் கைதை நிழல்சேர் வாரும். |
(இ
- ள்.) ஏம அசலம் என் முலையார் - பொன்மலையென்று
கூறத்தக்க கொங்கையையுடைய மகளிர், நடை ஓவியம் என்ன பூமாதவி
சேர்வாரும் - நடக்கும் பதுமைபோலச் சென்று பூக்கள் நிறைந்த குருக்கத்தி
நிழலை அடைவாரும், புன்னை நிழல் சேர்வாரும் - புன்னைமரத்தின் நிழலை
அடைவாரும், தேமா நிழல் சேர்வாரும் - தேமாவின் நிழலை அடைவாரும்,
செருந்திநிழல் சேர்வாரும் - செருந்தியின் நிழலை அடைவாரும், காம ஆயுத
சாலைகள்போல் - மதவேளின் படைச் சாலைகள் போல் (மலர்ந்த), கைதை
நிழல் சேர்வாரும் - தாழையின் நிழலை அடைவாரும் (ஆயினர்).
ஏமாசலம்,
காமாயுதம் என்பன வடமொழித் தீர்க்கசந்தி. போல் என
இயல்பாகப் பாடமோதி, போலுங் கைதை எனப் பொருளுரைத்தல் சிறப்பு.
ஆயினர் என ஒருசொல் வருவித்து முடிக்க. (27)
கோடும் பிறைவா ணுதலார் குழலைக் கருவிக் காரென்
றாடுந் தோகை யவர்கண் ணோக்கிக் கணையென் றஞ்சி
ஓடுங் கொடியி னன்னா ருருமாந் தளிரென் றயில்வான்
நாடுங் குயிலன் னவர்பண் ணிசைகேட் டொதுங்கி நாணும். |
(இ
- ள்.) கோடும்பிறைவாள் நுதலார் குழலை - வளைந்த
பிறைபோன்ற ஒள்ளிய நெற்றியையுடைய மகளிரது கூந்தலை, கருவிக்கார்
என்று, ஆடும்தோகை - மின்னுமுதலிய தொகுதியையுடைய முகில் என்று
கருதி ஆடுகின்ற மயில்கள், அவர் கண் நோக்கிக் கணை என்று அஞ்சி
ஓடும் - அவர் கண்களைக் கண்டு அம்பென்று கருதி அஞ்சி ஓடாநிற்கும் ;
கொடியின் அன்னார் உருமாந்தளிர் என்று அயில்வான் நாடும் குயில் -
கொடிபோன்ற அம்மகளிரின் உருவத்தை மாந்தளிரென்று கருதிக் கோதி
உண்ணச் செல்லுங் குயில்கள், அன்னவர்பண் இசைகேட்டு ஒதுங்கி நாணும்
- அவர் பாடும் பண்ணொலியைக் கேட்டு நாணிச் செல்லாநிற்கும்.
கருவி
- தொகுதி. களிப்பால் ஆடும் என்க. கொடியின், சாரியை நிற்க
உருபு தொக்கது. அயில்வான், வினையெச்சம். நாணி ஒதுங்கும் என மாறுக.
நாணுதல் தம் அறியாமையை உணர்ந்து வெள்குதலும், இசைக்குத் தோற்று
நாணலும் ஆம். கூந்தலை மேகம் எனவும் கண்ணை அம்பெனவும் மயிலும்,
உருவை மாந்தளிரெனக் குயிலும் மயங்கினவெனக் கூறுதலால் இது
மயக்கவணி. (28)
நீடுந் தரங்க மிரங்கு நிறைநீர் நிலையே யன்றிப்
பாடுஞ் சுரும்புண் கழுநீர் பைந்தாட் குமுதம் பதுமங்
கோடும் பூத்த வென்னக் கொடியே ரிடையார் குழையுந்
தோடுங் கிடந்த வதனத் தொகையாற் பொலிவ சோலை. |
|