ஒய்யென - விரைந்து,
இதுவும் என்னை ஊடிய மகளிரேயோ - என்னை
இக்கொம்பும் பிணங்கிய மாதரேயோ, கொய் என வளைத்து நின்றான் -
பறிப்பாய் என்று கூறி அதனை வளைத்து நின்றனன்; கண் முத்தம்
கொழிப்ப நின்றாள் - அவள் கண்களில் முத்துப்போல நீர் துளிக்க
நின்றனள்.
வளைக்க
என ஒரு சொல் வருவிக்க. ஒய்யென, விரைவுக் குறிப்பு.
ஒய்யென வளைத்து நின்றான் என இயைக்க கைக்கு அகப்படாது விலகி
நிற்றலால் ஊடிய மகளிர் போலும் எனத் தலைவன் கூறிய தொடர்க்கு
என்னுடன் ஊடிய மகளிர் போலும் எனக் கூறினானாகப்பொருள் கொண்டு,
அவன் பரத்தையருடன் இன்பம் நுகர்ந்தானெனக் கருதிப் புலந்தழுதாள்
என்க. இது தூரகாரிய வேதுவின்பாற்படும். (35)
மைக்குழ லொருத்தி காதில் வட்டப்பொன் னோலை யூடே
திக்கய மனையான் கொய்த செருந்திப்பூச் செருகி நோக்கி
இக்குழை யழகி தென்றா னிடுவெங்கைக் * கிடுதி யென்னா
அக்குழை யோடும் வீசி யன்பனுக் கலக்கண் செய்தாள். |
(இ
- ள்.) மைக்குழல் ஒருத்திகாதில் - கரிய கூந்தலை யுடைய ஒரு
பெண்ணின் காதில், வட்டப்பொன் ஓலையூடு - வட்டமாகிய பொன்னாற்
செய்த ஓலை யூடே, திக்கயம் அனையான் கொய்த செருந்திப் பூச்செருகி -
திக்கு யானை போன்ற ஒருவன் தான் பறித்த செருந்தி மலரைச் செருகி,
நோக்கி - அதனைப் பார்த்து, இக்குழை அழகிது என்றான் - இந்தக்
குழையானது அழகாயுள்ளது எனக் கூறினான், எங்கைக்கு இடு இடுதி என்னா
- எமது தங்கைக்கு, இடுவாய் இடுவாய் என்று கூறி, அக்குழையோடும் வீசி
- அந்தக் காதணியோடு மலரையும் எறிந்து, அன்பனுக்கு அலக்கண்
செய்தாள் - (அவள்) அந்த அன்பனுக்குத் துன்பம் விளைத்தாள்.
தலைவன்
ஆர்வ மிகுதியால் மலரைச் செருகி அழகிது என்று
பாராட்டா நிற்க, அவன் தன்னால் விரும்பப்பட்ட பிறமகளிர்க்கு
இக்கோலத்தைக் காட்டுதற் பொருட்டு இங்ஙனஞ் செய்தான் எனத்தலைவி
உட்கொண்டு பிணங்கினாள் என்க;
"கோட்டுப்பூச்
சூடினுங் காயு மொருத்தியைக்
காட்டிய சூடினீ ரென்று" |
என்னுங் குறள்
இங்கு நோக்கற்பாலது. முதற்கண் ஊடியிருந்த தலைவியது
ஊடலைத் தீர்த்தற்கு மலர் கொணர்ந்து செருகினான் என்றும், பரத்தையர்க்கு
ஒப்பனை செய்த பயிற்சியால் இங்ஙனம் மலர் செருகினானெனக்கருதினள்
என்றும் கோடலுமாம். திக் என்னும் வடசொல் திரியாது நின்றது. எங்கை
என்றது பரத்தையை. இடு இடுதி என வெகுளியால் இருகாற் கூறினாள். (36)
(பா
- ம்.) * இடுமெங்கை.
|