மயிலிளம் பெடையன் னாளோர் மாதர்மாங் குடம்பை செல்லுங்
குயிலிளம் பெடைதன் னாவிச் சேவலைக் கூவ நோக்கி
அயிலிளங் களிறன் னானைக் கடைக்கணித் தளியுந் தேனும்
பயிலிளஞ் சோலை மாடோர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள். |
(இ
- ள்.) இளம்பெடை மயில் அன்னாள் ஓர் மாதர் - இளமை
பொருந்திய பெண் மயில் போல்வாளாகிய ஒரு பெண், மாங்குடம்பை
செல்லும் இளங்குயிற் பெடை - மாமரத்திலுள்ள தனது கூட்டின் கட்
செல்லும் இளமையுடைய பெண் குயில், தன் ஆவிச்சேவலைக் கூவ -
தன் உயிர்போன்ற ஆண்குயிலைக் கூவி அழைக்க, நோக்கி - அதனைக்
கண்டு, அயில் இளங்களிறு அன்னானை - வேற்படை ஏந்திய மழயானை
போன்ற தன் காதலனை, கடைக்கணித்து - கடைக்கண்ணால் நோக்கி,
அளியும் தேனும் பயில் இளஞ்சோலை மாடு - ஆண் வண்டும் பெண்
வண்டும் பயிலும் இளமரக்காவின் மருங்கு, ஓர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள்
- ஒரு குருக்கத்திப் பந்தரை அடைந்தனள்.
குயிற்பேடை
சேவலைக் கூவிக் குடம்பை சென்றதனை நோக்கிய
வளவில் காதலனைக் கூடும் வேட்கை விஞ்சினமையின் தலைவற்குக்
குறிப்பா னுணர்த்தி மாதவிப்பந்த ரெய்தினாளென்க. கடைக்கணித்தல் -
கடைக்கண்ணோக்கால் கலவிக் குறிப்புணர்த்தல். நாணம் மகளிர்க்கு
இயல்பாய குணம் ஆகலின் வாயாற் கூறாளாயினாள். தன் ஆவி, ஆறாம்
வேற்றுமை ஒற்றுமைக் கிழமைப் பொருளில் வந்தது. கடைக்கணித்து,
பெயரடியாகப் பிறந்த இறந்தகால வினையெச்சம். பந்தர், போலி. (37)
பாசிழை யொருத்தி யாற்றாப் புலவியாள் பைந்தா ரான்முன்
பூசகில் வாசங் காலிற் போக்கியும் புனைபூண் காஞ்சி
ஓசையைச் செவியி லுய்த்துங் கலவியி னுருவந் தீட்டுந்
தூசினை யுடுத்தும் போர்த்துந் தூதுவிட் டவள்போ னின்றாள். |
(இ
- ள்.) பாசிழை ஒருத்தி - பசிய அணிகளை யணிந்த ஒரு பெண்,
ஆற்றாப் புலவியாள் - பொறாத புலவியையுடையவளாய், பைந்தாரான்முன் -
பசியமாலையை யணிந்த தலைவன் முன், பூசு அகில் வாசம் காலில்
போக்கியும் - பூசிய அகிலின் மணத்தைக் காற்றின் வழிச் செலுத்தியும்,
புனைபூண் காஞ்சி ஓசையை - இடையில் அணிந்த காஞ்சி யென்னும்
அணியின் ஒலியை, செவியில் உய்த்தும் - அவன் காதிற் புகச் செய்தும்,
கலவியின் உருவம் தீட்டும் தூசினை உடுத்தும் போர்த்தும் - கலவியின்
வடிவங்களை எழுதிய ஆடையை உடுத்தும் போர்த்தும், தூவிட்டவள்
போல் நின்றாள் - தூதனுப்பியவள்போல நின்றனள்.
பசுமை
என்பதன் ஈறுகெட்டு முதல் நீண்டது. ஆற்றாப்புலவியாள் -
தலைவனுடன் ஊடி நின்றவள் பின் அவ்வூடல் நீட்டிக்கப் பொறாதவளாய்.
காஞ்சி இடையிலணியும் அணிவிசேடம்; எண்கோவையுடையது.
கலவியினுருவம் - பற்குறி நகக்குறிகள் பாணிகொடு தட்டல், நற்கமிழ்து
துய்த்தவல் களி நன்கெழ அணைத்தல் முதலியன. இச்செய்யுள் உதாரம்
என்னும் குணவணி; தொழில் நுட்பமும் ஆம். (38)
|