தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 69



வாய்ந்தநாண் மலர்கொய் தீவான் மெய்யிலம் மலர்த்தேந் தாது
சாந்தமான் மதம்போற் சிந்திக் கிடப்பவோர் தையல் யாரைத்*
தோய்ந்தசாந் தென்றா ளுள்ளத் துன்னையுஞ் சுமந்து கொய்த
ஆய்ந்தசண் பகத்தா தென்றா னெய்சொரி யழலி னின்றாள்.

     (இ - ள்.) ஓர் தையல் - ஒரு பெண்ணானவள், வாய்ந்த நாள்மலர்
கொய்து ஈவான் மெய்யில் - மணம் வாய்ந்த புதிய மலரைப் பறித்துக்
கொடுக்குந் தலைவன் உடலில், அத்தேம் மலர்த்தாது - அத்தேன் நிறைந்த
மலரின் மகரந்தம், சாந்தம் மான்மதம் போல் சிந்திக் கிடப்ப - சந்தனத்தோடு
கலந்த கத்தூரி போலச் சிந்திக் கிடக்க (அதனைக் கண்டு), யாரைத் தோய்ந்த
சாந்து என்றாள் - இஃது எந்த மாதரைக் கூடினமையா லமைந்த சாந்து
என்றாள்; உள்ளத்து உன்னையும் சுமந்து கொய்த - (அவன்) உள்ளத்தின்கண்
உன்னையுந் தாங்கிக்கொய்த, ஆய்ந்த சண்பகத்தாது என்றான் - ஆராய்ந்த
சண்பக மலரின் மகரந்தம் என்று கூறினான். நெய்சொரி அழலின் நின்றாள் -
(அது கேட்டலும்) நெய்சொரியப்பட்ட நெருப்பைப் போல சினமூண்டு
நின்றாள்.

     தோய்ந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. தலைவியின்
பொருட்டே மலர் கொய்தலானும், சண்பக மலரின் நிறம் தலைவியின்
மேனியையும் அதன் மணம் அவள் மணத்தையும் காட்டி நிற்றலானும்
தலைவியை அகத்தே நினைந்த வண்ணமாக நின்று மலர் கொய்தமையை
‘உள்ளத்துன்னையுஞ் சுமந்து கொய்த’ எனத் தலைவன் கூறினான்; நான்
தனித்தன்றி நீயும் உடனிருக்க என்பது தோன்ற இங்ஙனம் கூறினான் என்க.
இங்ஙனமாய எச்சவும்மையைப் பிறமகளிரையன்றி உன்னையும் சுமந்து
என்னும் பொருட்டாகக் கொண்டு தலைவி வெகுண்டு நின்றாள் என்க. (39)

பிணியவிழ் கோதை யாளோர் பேதைதன் பதிதன் னூடல்
தணியவந் தடியில் வீழத் தன்னிழ லனையான் சென்னி
மணியிடைக் கண்டு கங்கை மணாளனை யொப்பீரெம்மைப்
பணிவதென் னென்று நக்குப் பரிவுமேற் பரிவு செய்தாள்.

     (இ - ள்.) பிணி அவிழ்கோதையாள் ஓர் பேதை - கட்டு அவிழ்ந்த
மலர் மாலையை யணிந்தாளாகிய ஒரு பெண், தன் பதி தன்ஊடல் தணிய
வந்து அடியில் வீழ - தனது நாயகன் தன் ஊடல் தணியுமாறு வந்து காலில்
வீழ்ந்து வணங்க, தன் நிழல் அனையான் சென்னிமணி இடைக்கண்டு -
தனது நிழலை அத்தலைவன் முடியிலுள்ள மணியின்கட் கண்டு, கங்கை
மணாளனை ஒப்பீர் - (முடியில் ஒருத்தியை ஒளித்து வைத்திருப்பதால்)
கங்கையின் நாயகனாகிய சிவபிரானைப்போல்வீரே,


     (பா - ம்.) * தையலாரை.