வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல்
உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்
தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான். |
(இ
- ள்.) வெள்ள நீர் வறப்ப - பிரளயநீர் வற்ற, ஆதிவேதியன் -
சிவபெருமான், முன் உள்ளவாறுபோல் ஞாலம் உதிப்ப நல்கி - முன்
இருந்ததன்மை போலவே உலகந் தோன்றுமாறு அருள்புரிந்து, உம்பரோடு
இம்பர் ஏனைப் புள்ளொடு விலங்குநல்கி - தேவர்களையும் மக்களையும்
மற்றைப் பறவைகளையும் விலங்குகளையும் தோற்றுவித்து, கதிர்உடல்
புத்தேள் மூவர் தள் அரு மரபின் - ஒளிவடிவமுடைய சந்திரனும் சூரியனும்
தீக்கடவுளுமாகிய மூவரின் தள்ளுதற்கரிய மரபில், முன்போல் தமிழ்
வேந்தர்தமையும் தந்தான் - முன்போலவே மூன்று தமிழ் மன்னர்களையும்
தந்தருளினான்.
போல்,
அசையுமாம். உம்பர், இம்பர் என்பன அவ்விடங்களிலுள்ளாரை
உணர்த்தின. திங்கள் மரபினர் பாண்டியரும், ஞாயிற்றின்மரபினர் சோழரும்,
அங்கி மரபினர் சேரரும் ஆம். (12)
[கலி
விருத்தம்] |
அங்சியை
மதிமர பென்னு மாழியுட்
டங்கிய கலையெணான் கிரட்டி தன்னொடும்
பொங்கிய நிலாமதி போலத் தோன்றினான்
வங்கிய சேகர வழுதி மன்னனே. |
(இ
- ள்.) அங்கு இயை மதிமரபு என்னும் ஆழியுள் -
அங்ஙனமியைந்த சந்திரன்மரபாகிய கடலுள், தங்கிய எண்ணான்கு இரட்டி
கலையொடும் - பொருந்திய அறுபத்துநான்கு கலைகளோடும், பொங்கிய
நிலாமதிபோல - விளங்கித்தோன்றிய நிலவினையுடைய சந்திரன்போல,
வங்கிய சேகரவழுதி மன்னன் தோன்றினான் - வங்கியசேகர பாண்டியன்
என்னும் வேந்தன் தோன்றினான்.
தொடக்கமும்
ஈறும் தோன்றாது நெடிதாய் வருதலின் மதிமரபை
ஆழியாக உருவகித்தார். இவன் அறுபத்துநான்கு கலையும் நிரம்பினான்
ஆகலின் எண்ணான்கிரட்டி கலையொடும் பொங்கிய மதிபோல என்றார்;
இஃது இல்பொருளுவமை. வங்கியம் - வம்சம். (13)
தாளணி கழலினான் றங்க ணாயகன்
கோளணி புரிசைசூழ் கோயில் சூழவோர்
வாளணி கடிநகர் சிறிது வைகவைத்
தாளரி யேறென வவனி காக்குநாள். |
(இ
- ள்.) தாள் அணிகழலினான் - காலிற்கட்டிய வீரக்கழலையுடைய
அவ்வேந்தன், தங்கள்நாயகன் - தங்கள்தலைவனாகிய சோமசுந்தரக்
கடவுளின், கோள் அணி புரிசைசூழ் கோயில் சூழ - ஒன்பது கோள்களுந்
தவழும் மதில்சூழ்ந்த திருக் கோயிலைச்சூழ, ஓர் வாள் அணி கடிநகர் சிறிது
வைகவைத்து - ஒளிபொருந்திய காவலையுடைய ஒரு நகரைச்சிறிதாக
ஆக்கிக்கொண்டு, ஆளரி ஏறென அவனி காக்கு நாள் - சிங்கவேறுபோலப்
புவியைப் பாதுகாத்து வரும்நாளில்.
கோள்
அணிபுரிசை - கோட்களை அணிந்த மதில்; மதிலின் உயர்ச்சி
கூறியவாறு. வைக வைத்து - பொருந்த வைத்து; ஆக்கி என்றபடி. (14)
செய்யகோன் மனுவழி செலுத்து நீர்மையாற்
பொய்கெழு கலிப்பகை புறந்தந் தோடத்தன்
வையகம் பல்வளஞ் சுரப்ப வைகலும்
மெய்கெழு மன்பதை மிக்க வாலரோ. |
(இ
- ள்.) செய்ய கோல் மனுவழி செலுத்தும் நீர்மையால் -
செங்கோலை மனுவறத்தின்வழியே ஓச்சுகின்றதன்மையால், பொய்கெழு
கலிப்பகை புறந்தந்து ஓட -பொய்மிக்க கலி என்னும் பகைவன் புறங்காட்டி
ஓட, தன் வையகம் வைகலும் பல்வளம் சுரப்ப - தன் நாடு நாள்தோறும்
பலவளங்களையுஞ் சுரத்தலால், மெய்கெழு மன்பதை மிக்க - உண்மைமிக்க
மக்கட்கூட்டங்கள் (நாள்தோறும்) மிக்கன.
கலி
- வறுமை முதலிய தீமை. வைகலும் என்பதனை ஈரிடத்துங்
கூட்டுக. ஆல், அரோ : அசைகள். (15)
பல்குறு மானிடப் பரப்பெ லாமொருங்
கல்குற விடங்குறை வாக வாய்மதுப்
பில்குறு தாரினான் பிறைமு டித்தவன்
மல்குறு கோயிலின் மருங்க ரெய்தினான் |
(இ
- ள்.) பல்குறும் மானிடப்பரப்பு எலாம் - (அங்ஙனம்) பல்கிய
மக்கட் பரப்பு அனைத்தும், ஒருங்கு அல்குற இடம் குறைவாக - ஒருங்கு
தங்குவதற்கு இடம் குறைவுபட, ஆய்மதுப் பில்குறு தாரினான் - (வண்டுகள்)
ஆராயுந் தேன்பிலிற்றும் மாலையையுடைய பாண்டியன், பிறைமுடித்தவன்
மல்குறு கோயிலின் மருங்கர் எய்தினான் - பிறையையணிந்த
சோமசுந்தரக்கடவுள் வீற்றிருந்து விளங்குந் திருக்கோயிலின் பக்கத்தை
அடைந்தனன்.
உறுதல்
எல்லாம் துணைவினை. வண்டு ஆயும் எனவிரிக்க. மல்குதல்
- விளங்குதன்மேற்று. மருங்கர், ஈற்றுப்போலி. (16)
கறையணி கண்டனைத் தாழ்ந்து கைதொழு
திறையவ நின்னருள் வலியி னிந்நிலப்
பொறையது வாற்றுவேற் கீண்டிப் போதொரு
குறையதுண் டாயின தென்று கூறுவான். |
|