தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 71



     பூம்படம் - பூத்தொழிலமைந்த ஆடையுமாம். போக என்னும்
வியங்கோள் ஈறுதொக்கது. பற்றி என்பதற்கு உடையைப் பற்றிக்கொண்டு
என்றுரைத்தலுமாம். (42)

மாந்தளி ரடியார் சாய்ப்ப வளைந்தபூஞ் சினைவண் டன்னார்
கூந்தலிற் கிடந்த செம்மற் கோதைமேல் வீழ்ந்த கற்பின்
ஏந்திழை யவரை நீத்துப் பலர்நுகர்ந் தெச்சி லாக்கும்
பூந்தொடி யவரைத் துய்க்கும் பேதையர் போன்ற தன்றே.

     (இ - ள்.) மாந்தளிர் அடியார் சாய்ப்ப - மாந்தளிர் போன்ற
அடிகளை யுடைய மகளிர் வளைத்தலால், வளைந்த பூஞ்சினை - வளைந்த
மலர்க்கொம்பினின்றும், அன்னார் கூந்தலில் கிடந்த - அம்மகளிரின் குழலிற்
றங்கிக்கிடந்த, செம்மல் கோதை மேல் வீழ்ந்த வண்டு - பழம் பூமாலையின்
மேல் வீழ்ந்த வண்டு, கற்பின் ஏந்திழையவரை நீத்து - கற்பு நிறைந்த
மனைக்கிழத்தியரை விடுத்து, பலர் நுகர்ந்து எச்சில் ஆக்கும்
பூந்தொடியவரைத் துய்க்கும் - பலரும் நுகர்ந்து எச்சிலாக்கிய பொருட்
பெண்டிரைத் துய்க்கும், பேதையர் போன்றது - அறிவிலிகளை ஒத்தது.

     செம்மல் - பழம்பூ. சினையினின்றும் கோதை மேல் வீழ்ந்த வண்டு
பேதையர் போன்றது என முடிக்க. கொம்பிலுள்ள மலரைக் கற்புடை
மகளிராகவும் கூந்தலிலுள்ள வாடிய மலரை விலை மாதராகவும் உவமைக்
கேற்பப் பொருளையும் விரித்து ஓருவம வாசகந் தோன்றக் கூறினமையால்
இஃது ஒருவயிற்போலி யுவமையணி. அன்று, ஏ அசை. (43)

கலிவிருத்தம
புல்லி மைந்தர் பொருள்கவர்ந் தாரென
வல்லி யன்ன மடந்தையர் கொய்தலின்
அல்லி நாண்மல ரற்றபின் கைப்பொருள்
இல்லி யென்ன விளைத்தன காவெலாம்.

     (இ - ள்.) புல்லி - தழுவி, மைந்தர் பொருள் கவர்ந்தார் என -
ஆடவர் பொருளைவிலைமாதர் கவர்ந்ததுபோல, வல்லி அன்ன மடந்தையர்
கொய்தலின் - கொடி போன்ற மகளிர் பறித்தலினால், அல்லி நாள்மலர்
அற்றபின் - அகவிதழையுடைய புதிய மலர்கள் ஒழிந்த பின், கைப்பொருள்
இல்லி என்ன - (அங்ஙனம் பரத்தையர்க்குக் கொடுத்தலால்) கைப்பொருள்
அற்ற வறியன் போல, கா எலாம் இளைத்தன - சோலைகளெல்லாம்
வறங்கூர்ந்தன.

     கவர்ந்தார் என்பது தொழிலையுணர்த்திற்று. அல்லி - பூவின்
அகவிதழ் இல்லி, இகரவிகுதி வினைமுதற் பொருள் குறித்தது. குலமகளிர்க்கு
விலை மகளிரை