76திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     பைங்கழல் - பசும் பொன்னாற் செய்யப்பட்ட கழல். தலைவன்
மார்பிலே தாமரை மொட்டு அழுந்திய வடுவைக் காமக் கிழத்தியின்
முலைச்சுவடாகக் கருதித் தலைவி புலந்தனள் என்க. எரியெனச்
சினமிக்கு என விரித்துரைத்துக் கொள்க. (52)

வீழ்ந்த காதலன் செய்ததீங் காகிய வேலாற்
போழ்ந்த நெஞ்சினாள் புலவிநோய் பொறாளவன் காண
ஆழ்ந்த நீரிடை யழுந்துவாள் * போன்றயர்ந் தயலே
தாழ்ந்த வன்னத்தை நோக்கிக்கை தாவென விரந்தாள்.

     (இ - ள்.) வீழ்ந்த காதலன் - தன்னால் விரும்பப்பட்ட காதலன்,
செய்த தீங்கு ஆகிய வேலால் - தனக்குச் செய்த தீமை என்னும்
வேற்படையால், போழ்ந்த நெஞ்சினாள் - பிளக்கப்பட்ட உள்ளத்தை
யுடையளாகிய ஒருமாது, புலவி நோய் பொறாள் - ஊடல் நோய்
பொறாதவளாய், அவன்காண - அக்காதலன் பார்க்க, ஆழ்ந்த நீரிடை
அழுந்துவாள் போன்று - ஆழமாகிய நீரின்கண் அழுந்துவாள் போலப்
பாவனை காட்டி, அயர்ந்து - சோர்ந்து, அயலே தாழ்ந்த அன்னத்தை
நோக்கி - அருகிலே (தாமரை மலரில்) தங்கிய அன்னத்தைப் பார்த்து,
கைதா என இரந்தாள் - கைகொடு எனக் குறை யிரந்தாள்.

     புலவி துன்பஞ் செய்தலின் அதனைப் பொறாளாயினள் என்க.
தலைவன் தன்னை அணைத்து எடுக்குங் கருத்தினளாய் நீரில் அழுந்துவாள்
போன்று அயர்ந்து அன்னத்தை நோக்கி இரப்பாளாயினள். தாழ்தல் -
தங்குதல். (53)

கரும்பு போன்மொழி யாளொரு காரிகை வதனஞ்
சுரும்பு சூழ்கம லங்களுட் கமலமாய்த் தோன்ற
விரும்பு காதல னையுற்று மெலிந்தன மெல்ல
அரும்பு முல்லைகண் டையத்தி னீங்கிச்சென் றணைந்தான்.

     (இ - ள்.) கரும்பு போல் மொழியாள் - கருப்பஞ்சாறு போலுஞ்
சொற்களை யுடையளாகிய, ஒரு காரிகை - ஒரு பெண்ணினுடைய, வதனம் -
முகமானது, சுரும்பு சூழ் கமலங்களுள் கமலமாய்த் தோன்ற - வண்டுகள்
சூழ்ந்த தாமரை மலர்களுள் ஒரு தாமரைமலராய்த் தோன்ற, விரும்பு காதலன்
ஐயுற்று மெலிந்தனன் - அவளை விரும்பிய காதலன் ஐயுறவு கொண்டு
மெலிந்து, மெல்ல அரும்பு முல்லை கண்டு - (அது போழ்து) மெல்ல
அரும்பிய முல்லையரும்பு போலும் பற்களைக்கண்டு, ஐயத்தின் நீங்கிச்சென்று
அணைந்தான் - சந்தேகத்தினின்றும் நீங்கிப்போய்க் காதலியைக் கலந்தான்.

     கரும்பு அதன் சாற்றிற்கும், கமலம் அதன் மலருக்கும், முல்லை
அதன் அரும்புக்கும் ஆகுபெயர். முல்லை யரும்பு பற்களை உணர்த்திற்று.
இது தாமரை மலரோ காதலியின் முகமோ என ஐயுற்று மெலிந்த காதலன்
அதனைக் கண்டு அவள் புன்னகை செய்தமையாற் றோன்றிய பற்களால்


     (பா - ம்.) * அமிழ்த்துவாள்.