அவள் முகமெனத் தெளிந்து
சென்று அணைந்தனன் என்க. கூந்தலாற்
சூழப்பட்ட முகம் வண்டு சூழ்ந்த கமலம் போன்றிருந்தது. இதன்கண்
ஐயவணியும் தெரிதருதேற்றவுவமை யணியும் விரவியுள்ளன. (54)
களித்த காதலன்
மொக்குள்வாய்த் தன்னிழல் கண்டு
தெளித்து வாணகை செய்யமாற் றாளென்று சீறித்
தளிர்க்கை நீட்டினள் கண்டில டடவினள் சலத்துள்
ஒளித்தி யோவெனா வுதைத்தனள் பேதைமா தொருத்தி. |
(இ
- ள்.) பேதைமாது ஒருத்தி - பேதையாகிய ஒரு பெண், களித்த
காதலன் - களிப்புற்ற தலைவன், மொக்குள்வாய் - நீர்க்குமிழியில், தன்
நிழல் கண்டு - தனது நிழலைப் பார்த்து, தெளித்து வாள் நகை செய்ய -
உரப்பி ஒள்ளிய நகை செய்ய, மாற்றாள் என்று சீறி - (அவள் அந்நிழலைத்)
தனது மாற்றாளென்று சினந்து, தளிர்க்கை நீட்டினள் தடவினள் கண்டிலள் -
தனது தளிர் போன்ற கைகளை நீட்டித்தடவிக் காணாது, சலத்துள்
ஒளித்தியோ எனா உதைத்தனள் - நீருள் மறைந்தனையோ வென்று சொல்லி
உதைத்தாள்.
தன்நிழல்
- காதலியின் பிரதி பிம்பம். தெழித்து என்பது தெளித்து
என்றாயது; அவட்குத் தெளிவித்து என்றும், அதனைக் கலங்காது நிறுத்தி
என்றும் உரைத்தலுமாம். நீட்டினள், கண்டிலள், தடவினள் என்பன
முற்றெச்சம். சலத்துள் ஒளித்தியோ என்பதனை இரட்டுற மொழிதலாக்கி,
வஞ்சத்தால் உள்ளே மறைந்தனையோ என்றும் உரைத்தல் அமையும். இது
நிழலை மாற்றாளென மயங்கினமையால் மயக்கவணி. (55)
நாறு சுண்ணமென் கலவையு நானமுந் தம்மின்
மாறி வீசிநின் றாடுவார் மாலைதா ழகலத்
தூறு பாடற வந்தரத் தனிகவர்ந் துண்ப
ஆறு செல்பவர் பொருள்வௌவு மரட்டரே போல. |
(இ
- ள்.) நாறு சுண்ணம் மென்கலவையும் நானமும் -
நறுமணங்கமழுஞ் சுண்ணப்பொடியையும் மெல்லியகலவையையும் மான்
மதத்தையும், தம்மில் மாறி வீசி நின்று ஆடுவார் - தம்முள் மாறி மாறி வீசி
விளையாடும் ஆடவர் மகளிர்களின் மாலைதாழ் அகலத்து - மாலை தங்கிய
மார்பின்கண், ஊறுபாடுஅற - அவை சென்று பொருந்துதல் இல்லையாக,
ஆறு செல்பவர் பொருள் வௌவும் அரட்டர் போல - வழிச்செல்வாரின்
பொருளை இடையே பறித்துக்கொள்ளும் ஆறலைப்பார் போல, அளி -
வண்டுகள், அந்தரத்து - இடை வெளியுணின்று, கவர்ந்து உண்ப -
அவற்றைக்கொள்ளை கொண்டு உண்பன.
வீசுகின்ற
சுண்ணம் கலவை நானம் என்பன குறித்த இடத்திற்குச்
செல்லாமல் இடையே வண்டுகள் கவர்ந்துண்டல் வழிச்செல்வார் பொருளை
இடையே ஆறலைப்பார் கவர்ந்துண்டல் போலும் என்க. ஊறுபாடு - உறுதல்,
பாடு, தொழிற் பெயர் விகுதி. அரட்டர் - ஈண்டு ஆறலைப்பார். (56)
|