கொய்யு நீலமுங் கமலமுங் கொண்டுகொண் டனங்கன்
எய்யும் வாளியி னெறிவரா லெறிந்திடு மலரைக்
கையி னாற்புடைத் தெளிந்தவர் கதிர்முகம் படக்கண்
டைது வாணகை செய்தக மகிழ்ச்சியு ளாழ்வார். |
(இ
- ள்.) கொய்யும் நீலமும் கமலமும் கொண்டு கொண்டு - கொய்த
நீல மலரையும் தாமரை மலரையும் கைக்கொண்டு, அனங்கன் எய்யும்
வாளியின் எறிவர் - மதவேள் எய்யும் மலர்க்கணைபோல ஒருவர்
மேலொருவர் வீசுவர், எறிந்திடு மலரை - அங்ஙனம் வீசிய மலரை,
கையினால் புடைத்து - கரத்தினால் (அது எதிர்த்துச் செல்லுமாறு) தாக்கி,
எறிந்தவர் முகம் படக்கண்டு - (அது சென்று) எறிந்தவரின் முகத்திற்
படுதலைப்பார்த்து, ஐதுவாள் நகை செய்து - அழகிதாக ஒள்ளிய நகைபுரிந்து,
அகமகிழ்ச்சியுள் ஆழ்வார் - மனமகிழச்சியாகிய கடலில் அழுந்துவார்.
அனங்கன்
- உடம்பில்லாதவன் எனக் காரணப் பெயர். நீலமும்
கமலமும் அவற்கு அம்புகளாகலின் அனங்கன் எய்யும் வாளியின் என்றார்;
இவர் எறிதலும் காமத்தை மிகுத்தல் கொள்க. ஆல், அசை. ஐது,
இடைச்சொல்லடியாகப் பிறந்த குறிப்பு முற்று எச்சமாயது. (57)
வாச மென்பனி நீரொடு சுண்ணமும் வாரி
வீசு வாரிளம் பிடியொடு வேழமா நிரைபோற்
காசு லாந்தொடி வில்லிடக் கைகளா லள்ளிப்
பூசு சாந்தவை யழிந்திடப் புனிதநீ ரிறைப்பார். |
(இ
- ள்.) இளம்பிடியொடு வேழமா நிரைபோல் - இளமையாகிய
பெண் யானைகளோடு ஆண் யானையின் கூட்டங்கள் நீரை வீசி
விளையாடுதல் போல, வாசம் மென்பனி நீரொடு சுண்ணமும் வாரி வீசுவார்
- மணமுள்ள மெல்லிய பனி நீருடன் சுண்ணப்பொடியையும் அள்ளி
(மகளிரும் ஆடவரும்) வீசி விளையாடுவர் : காசு உலாம் தொடி வில்லிட
- மணிகள் அழுத்திய வளைகள் ஒளி வீச, கைகளால் புனிதநீர் அள்ளி -
கைகளாலே தூயநீரை அள்ளி, பூசு சாந்து அழிந்திட இறைப்பார் - பூசிய
சந்தனம் அழியுமாறு வீசுவர்.
மகளிரும்
ஆடவரும் கூடி நின்று நீர் முதலியவற்றை இறைத்தல்
பிடிகளும் வேழங்களும் கூடி நின்று நீரினை இறைத்தல் போலுமென்க.
தொடி என்பது வீரவளையும் ஆகலின் ஆடவர்க்கும் பொருந்தும்; மகளிர்
அள்ளி ஆடவர் மார்பில் இறைப்பர் என்றுமாம். சாந்தவை, அவை பகுதிப்
பொருள் விகுதி. (58)
|