தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 79



அப்பெ ரும்புனற் றடங்குடைந் தாடுவா ராயத்
தொப்ப ருந்தனி யொருமக ளொருவன்றன் முகத்துத்
துப்பை வென்றசெந் துவரிதழ்ச் செய்யவாய்த் தூநீர்
கொப்ப ளித்தன*ளாம்பலந் தேனெனக் குடித்தான்.

     (இ - ள்.) அப்பெரும் புனல் தடம் குடைந்து ஆடுவார் ஆயத்து -
அந்தப் பெரிய நீர் நிறைந்த வாலியில் குடைந்து நீராடும் மகளிர் கூட்டத்து,
ஒப்பு அருந் தனி ஒரு மகள் - ஒப்பற்ற ஒருமாது, ஒருவன் தன் முகத்து -
ஒரு ஆடவன் முகத்தில், துப்பை வென்ற செந்துவர் இதழ்ச் செய்யவாய்த்
தூநீர் கொப்பளித்தனள் - பவளத்தை வென்ற செந்நிறம் வாய்ந்த
இதழையுடைய சிவந்த வாயிலுள்ள தூய நீரைக் கொப்பளித்தாள்; ஆம்பல்
அம்தேன் எனக் குடித்தான் - (அவன் அந்நீரை) ஆம்பல் மலரிலுள்ள
அழகிய தேன் என்று கருதிக் குடித்தான்.

     தனியொரு, செந்துவர் என்பவற்றில் ஒரு பொருண்மேல் இரு சொற்கள்
வந்தன. வாய் ஆம்பல் மலர் போலுதலின் ‘ஆம்பலந்தேனெனக் குடித்தான்’
என்றார்; அஃது அவனுக்கு இனிமை மிக்கிருந்தது தேன் என்பதனாற் பெற்றாம். (59)

ஆழ மவ்விடைச் செல்லலை நில்லென வடுத்தோர்
வேழ மன்னவன் விலக்குவான் போலொரு வேற்கண்
ஏழை தன்னைக்கை யால்வளைத் தேந்திவண் டறைதார்
சூழு மார்பணைத் திரதிதோ டோய்ந்தவ னொத்தான்.

     (இ - ள்.) ஓர் வேழம் அன்னவன் - ஆண்யானை போன்ற ஒரு
ஆடவன், ஒரு வேல் கண் ஏழை தன்னை - வேல்போன்ற விழிகளையுடைய
ஒரு மாதினை, அவ்விடை ஆழம் செல்லலை நில் என - அவ்விடம்
ஆழமுடைத்தாகலின் செல்லாதே நில் என்று, விலக்குவான்போல் அடுத்து
- தடுப்பவன்போலச் சென்று, கையால் வளைத்து ஏந்தி - கரங்களால்
வளைத்துத் தூக்கி, வண்டு அறை தார் சூழும் மார்பு அணைத்து -
வண்டுகள் ஒலிக்கும் மாலை சூழ்ந்த மார்பின்கண் அணைத்து, இரதி தோள்
தோய்ந்தவன் ஒத்தான் - இரதியின்தோளைக் கூடின மன்மதனை ஒத்தனன்.
செல்லலை, எதிர்மறை யொருமை ஏவல் முற்று; அல், எதிர்மறை இடைநிலை.
அவன் கருத்து அவளைத் தழுவுவதாகலின் ‘விலக்குவான்போல்’ என்றார்.
இதனை இலேசவணியின்பாற் படுத்தலுமாம். (60)

மாசி னானமுஞ் சூடிய மாலையு மெய்யிற்
பூசு சாந்தமு மாரமும் பொய்கைக்குக் +கொடுத்து
வாச மெய்யினி லம்புய வாசமு மயங்க
ஆசை மைந்தரோ டிளையவ ரகன்கரை யடைவார்.

     (பா - ம்.) * கொப்புளித்தனள்.
     (பா - ம்.) + மார்பமும் பொய்கைக்கு.