(இ
- ள்.) கறை அணி கண்டனைத் தாழ்ந்து - நஞ்சக்கறையினை
அணிந்த திருமிடற்றினையுடைய இறைவனை வணங்கி, கைதொழுது -
கைகூப்பி, இறையவ - தலைவனே, நின் அருள்வலியின் - நினது
அருள்வலியினால், இந்நிலப் பொறையது ஆற்றுவேற்கு - இந்நிலச்சுமையைத்
தாங்கிவந்த எனக்கு, ஈண்டு இப்போது ஒரு குறையது உண்டாயினது என்று
கூறுவான் - இங்கு இப்பொழுது ஒருகுறை உண்டாயிற்றென்று அதனைக்
கூறுவானாயினன்.
பொறையது,
குறையது என்பவற்றில் அது பகுதிப்பொருள் விகுதி. (17)
இத்தனை மாக்களு மிருக்கத் தக்கதாப்
பத்தனங் காணவிப் பதிக்க ணாதியே
வைத்தறை செய்திடும் வரம்பு காண்கிலேன்
அத்தமற் றதனையின் றறியக்காட் டென்றான்.
|
(இ
- ள்.) இத்தனை மாக்களும் இருக்கத் தக்கதா - இவ்வளவு
மக்களும் இருக்கத்தகுதியுடையதாக, பத்தனம் காண - ஒரு நகரினை
ஆக்குவதற்கு, இப்பதிக்கண் ஆதியேவைத்து அறைசெய்திடும் வரம்பு
காண்கிலேன் - இந்நகரின்கண் ஆதி காலத்திலிருந்து வரையறுத்து வைத்த
எல்லையை அறியேன்; அத்த அதனை இன்று அறியக்காட்டு என்றான் -
(ஆதலால்) அத்தனே அவ்வெல்லையை இன்று யான் அறியுமாறு
காட்டியருள்வாயாக வென்று இரந்து வேண்டினன்.
பத்தனம்
- பட்டணம்; நகரம். அறைசெய்துவைத்த என மாறுக.
மற்று : அசை. (18)
நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய வருட்கட லாகிப் போதுவார். |
(இ
- ள்.) நுண்ணிய பொருளினும் நுண்ணிதாயவர் - அணுவினும்
அணுவாயுள்ள அச்சோமசுந்தரக்கடவுள், விண் இழி விமானம் நின்று
எழுந்து - வானினின்றும் இறங்கிய இந்திர விமானத்தினின்றும் எழுந்து,
மீனவன் திண்ணிய அன்பினுக்கு எளிய சித்தராய் - பாண்டியனது வலிய
அன்பிற்கு எளிய சித்தமூர்த்தியாகி, புண்ணிய அருள் கடல் ஆகிப்
போதுவார் - அறமும் அருளுமாய கடலாகி வருவாராயினர்.
இறைவன்
எவற்றினும் நுண்பொருளாதலை,
"அணுத்தருந் தன்மை யிலையோன் காண்க"
"நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க" |
என்னும் திருவாசகம்.
அவரைக் கண்ட துணையானே அறக்கடலென்றும்
அருட்கடலென்றும் அனைவரும் கருதுமாறு போதுவாராயினர் என்க. (19)
|