இவ்விள வேனிற் காலத் தின்னுயிர்த் துணைவி யோடும்
செவ்விய செங்கோ னேமிச் செண்பக மாற னோர்நாள்
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில்
வெவ்விய வேடை நீப்பா னிருந்தனன் வேறு வைகி. |
(இ
- ள்.) இவ்விளவேனில் காலத்து ஓர் நாள் - இந்த இளவேனிற்
காலத்தில் ஒருநாள், கைவினை வல்லோன் செய்த - சிற்பநூல் வல்லோன்
செய்த, கதிர் விடு காந்தக் குன்றில் - ஒளிவிடும் சந்திரகாந்தக் கல்லாலாகிய
செய்குன்றின்கண், வெவ்விய வேடை நீப்பான் - கொடிய வெப்பத்தைப்
போக்கும் பொருட்டு, செவ்விய செங்கோல் நேமிச் செண்பகமாறன் -
திருந்திய செங்கோலையும் ஆனைத்திகிரியையுமுடைய செண்பகமாறன்
என்பான், இன் உயிர்த் துணைவியோடும் - தனது இனிய உயிர்போலும்
மனைவியோடும், வேறு வைகி இருந்தனன் - வேறாகத் தங்கி யிருந்தனன்.
இவ்விளவேனிற்
காலம் - இதுகாறும் வருணித்த இயல்பினையுடைய
இளவேனிற்காலம். செவ்விய என முன்வந்தமையின் செங்கோல் என்பது
பெயர் மாத்திரையாய் நின்றது. காந்தம் - சந்திரகாந்தம். வெவ்விய வேடை
- மிக்க வெப்பம். நீப்பான், வினையெச்சம். (77)
மாந்தளி ரீன்று கோங்கு வண்டள வரும்பித் தண்டேங்
காந்தள்செங் கமல மாம்பல் சண்பகங் கழுநீர் பூத்துச்
சாய்ந்தமென் கொடியுந் தானுந் தனியிடத் திருப்பா னேரே
வாய்ந்ததோர்* நாற்றந் தோன்ற வசைந்தது வசந்தத் தென்றல். |
(இ
- ள்.) மாந்தளிர் ஈன்று - மாந்தளிர் தளிர்த்து, கோங்கு
வண்தளவு அரும்பி - கோங்கு மொட்டும் வளவிய முல்லையரும்பும்
அரும்பி, தண் தேம் காந்தள் - தண்ணிய தேன் நிறைந்த காந்தள் மலரும்,
செங்கமலம் ஆம்பல் சண்பகம் கழுநீர் பூத்து - செந்தாமரை மலரும் குமுத
மலரும் சண்பக மலரும் குவளைமலரும் மலர்ந்து, சாய்ந்த மென்கொடியும்
தானும் - ஒசிந்த மெல்லிய கொடி (ஒன்று உள தேல் அது) போன்ற
தேவியுந் தானுமாக, தனி இடத்து இருப்பான் நேரே - தனியிடத்தில்
இருக்கும் அச்சண்பகமாறனுக்கு நேரே, வாய்ந்தது ஓர் நாற்றம் தோன்ற -
புதுமை வாய்ந்ததாகிய ஓர் நறுமணந் தோன்றுமாறு, வசந்தத் தென்றல்
அசைந்தது - வசந்த காலத்திற்குரிய தென்றல் மெல்லென வீசியது.
மாந்தளிர்
முதலியவற்றையுடைய கொடியொன்றுளதேல் அதுபோலும்
என விரித்து இல்பொருளுவமை யாக்குக. மாந்தளிர் மேனியையும், கோங்கு
தனத்தையும், தளவு பற்களையும், காந்தள் கையையும், கமலம் முகத்தையும்,
ஆம் பல் வாயையும், சண்பகம் மூக்கையும், கழுநீர் கண்ணையும்,
(பா
- ம்.) * ஆய்ந்ததோர்.
|