திருவாலவாயான படலம்9



             கலிநிலைத்துறை.
பாம்பி னாற்கடி சூத்திரங் கோவணம் பசுந்தாட்
பாம்பி னாற்புரி நூல்சன்ன வீரம்வெம் பகுவாய்ப்
பாம்பி னாற்குழை குண்டலம் பாதகிண் கிணிநாண்
பாம்பி னாற்கர கங்கணம் பரித்தனர் வந்தார்.

     (இ - ள்.) பாம்பினால் கடிசூத்திரம் கோவணம் - பாம்பினால்
அரைஞாணும் கோவணமும், பசுந்தாள் பாம்பினால் - இல்லாத காலையுடைய
பாம்பினால், புரிநூல் சன்னவீரம் - பூணுநூலும் வெற்றிமாலையும்,
வெம்பகுவாய்ப் பாம்பினால் - கொடிய பிளந்தவாயையுடைய பாம்பினால்,
குழை குண்டலம் பாதகிண்கிணிநாண் - குழையுங் குண்டலமும் காற்சதங்கை
கோத்த கயிறும், பாம்பினால் கரகங்கணம் பரித்தனர் வந்தார் - பாம்பினால்
கைவளையும் தாங்கிவந்தார்.

     பசுந்தாட் பாம்பு முதலியவற்றைச் சுட்டாகக்கொள்க. பசுமை இன்மை
மேற்று; "அருங்கேடன்" என்புழிப்போல இல்லாத தாளையுடைய பாம்பு
என்றார்;

"பச்சைத்தா ளரவாட்டி"

என்னும் தமிழ்மறையுங் காண்க. சன்னவீரம் - மார்பிலும் முதுகிலும் மாறி
யணியும் ஒருவகை வெற்றிமாலை;

"சன்னவீரம் திருமார்பில் வில்லிலக"

என்பது திருக்கைலாய ஞானவுலா. பரித்தனர், முற்றெச்சம். (20)

வந்த யோகர்மா மண்டப மருங்குநின் றங்கைப்
பந்த வாலவா யரவினைப் பார்த்துநீ யிவனுக்
கிந்த மாநக ரெல்லையை யளந்துகாட் டென்றார்
அந்த வாளரா வடிபணிந் தடிகளை வேண்டும்.

     (இ - ள்.) வந்தயோகர் - அங்ஙனம் வந்த சித்தமூர்த்திகள்,
மாமண்டபம் மருங்குநின்று - பெரியமண்டபத்தின் மருங்குநின்று,
அங்கைப்பந்த ஆலவாய் அரவினைப் பார்த்து - அழகிய திருக்கரத்திற்
கட்டிய நஞ்சுபொருந்திய வாயையுடைய பாம்பைப்பார்த்து, நீ இவனுக்கு
இந்த மாநகர் எல்லையை அளந்து காட்டு என்றார் - நீ இப்பாண்டியனுக்கு
இந்தப் பெரியநகரத்தின் எல்லையை வரையறுத்துக் காட்டு வாயாக என்று
கூறியருளினார்; அந்த வாள் அரா அடிபணிந்து அடிகளைவேண்டும் -
அந்த ஒளிபொருந்திய பாம்பு அடிவணங்கிச் சித்தமூர்த்திகளை இரந்து
வேண்டும்.

     பந்தம் - கட்டு; கங்கணம். (21)

பெரும விந்நக ரடியனேன் பெயரினால் விளங்கக்
கருணை செய்தியென் றிரந்திடக் கருணையங் கடலும்
அருண யந்துநேர்ந் தனையதே யாகெனப் பணித்தான்
உருகெ ழுஞ்சின வுரகமு*மொல்லெனச் செல்லா.


     (பா - ம்) *உருகெழுஞ் செலவுரகமும்.