90திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பங்கத்தாராகி என்பதைப் பங்க முற்றவராகி எனவும் மாறுக. சூழ்பொருள்
- கருதிய பொருள்; வினைத்தொகை. படர் - துன்பம். (82)

         [கலிவிருத்தம்]
அந்த வேலையி லாதி சைவரில்
வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையான்
முந்தை யாச்சிம முயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் றருமி யென்றுளான்.

     (இ - ள்.) அந்த வேலையில் - அப்பொழுது, ஆதிசைவரில் வந்த
மாணவன் - ஆதி சைவ மரபில் வந்த மாணவனும், தந்தை தாய் இலான்
- தந்தையும் தாயும் இல்லாதவனும், முந்தை ஆச்சிமம் முயலும் பெற்றியான்
- பிரமசரிய நிலையில் வழுவாது ஒழுகுந் தன்மையனும் ஆகிய, தருமி
என்றுளான் - தருமி என்ற பெயருள்ள ஒருவன், மணம் செய் வேட்கையான்
- மணஞ்செய்யும் விருப்புடையவனாய்.

     ஆதிசைவர் - சிவனை அருச்சிக்கும் சிவ மறையோர். இவர்களைச்
சதாசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களினின்றும் தோன்றி ஐந்து
முனிவரின் வழியினர் என்பர். முந்தை - முன். ஆச்சிரமம் என்பது திரிந்து
நின்றது. வேட்கையான் என்பதை எச்சமாக்குக. (83)

ஒருவ னான்முகத் தொருவன் மார்புறை
திருவ னாடருந் தேவ னாலுரு
அருவ நாலகன் றானைத் தன்கலி
வெருவ நாடிமுன் வீழ்ந்து வேண்டுவான்.

     (இ - ள்.) ஒருவன் - ஒப்பற்றவனும், நான்முகத்து ஒருவன் -
நான்குமுகங்களையுடைய பிரமனாலும், மார்பு உறை திருவன் - திருமகள்
உறையும் மார்பினை யுடைய திருமாலினாலும், நாடரும் தேவன் - தேடிக்
காண்பதற்கு அரியதேவனும், நால் உரு நால் அருவம் அகன்றானை -
நான்கு உருவங்களும் நான்கு அருவங்களும் (அருவுருவம் ஒன்றும்)
ஆகிய இவற்றைக் கடந்தவனுமாகிய சோமசுந்தரக் கடவுளை, தன் கலி
வெருவ நாடி - தன் துன்பம் அஞ்சி ஓடக் கருதி, முன்வீழ்ந்து
வேண்டுவான் - திருமுன் வீழ்ந்து வணங்கி வேண்டுவானாயினன்.

     மார்பு உறை திருவன் என்பதனைத் திரு உறை மார்பன் என விகுதி
பிரித்துக்கூட்டுக. உருவம் நான்கு அயன், மால், உருத்திரன், மகேசன்,
அருவம் நான்கு விந்து, நாதம், சத்தி, சிவம். உபலக்கணத்தால்
அருவுருவாகிய சதாசிவமுங் கொள்க. இவ்வொன்பது பேதங்களிலும்
வியாபித்து நின்று தொழில் நடாத்தும் துரிய சிவனாகிய முழுமுதல்வன்
உண்மையில் இவற்றைக் கடந்து நிற்பன் என்க;