92திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) ஐய - ஐயனே, யாவையும் அறிதியே - நீ யாவற்றையும்
அறிவாயன்றே, வையை நாடவன் மனக்கருத்து உணர்ந்து - வையை
நாட்டையுடைய பாண்டியனது உள்ளக் கருத்தை ஓர்ந்து, உய்ய - யான்
உய்திபெற, ஓர் கவி உரைத்து - ஒரு கவிபாடி, எனக்கு அருள் செய்ய
வேண்டும் என்று - அடியேனுக்கு அருளல் வேண்டுமென்று, இரந்து
செப்பினான் - குறையிரந்து கூறினான்.

     இல்வாழ்க்கையை மேவியே நின் அடியை அருச்சிக்க வேண்டும்
என்பதனையும், மணமுடித்தற்குப் பொருளில்லாது நான் வருந்துதலையும்
நீ அறிவாய் என்பான் ‘யாவையும் அறிதி’ என்றான். முற்றுணர்வுடைய
நினக்குப் பாண்டியன் மனக்கருத்துணர்தல் அரிதன்றென்பதும் கருத்தாகக்
கொள்க. கொல், ஆம் அசைகள். (87)

தென்ன வன்குல தெய்வ மாகிய
மன்னர் கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ்
சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார்
இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான்.

     (இ - ள்.) தென்னவன் குல தெய்வமாகிய - பாண்டியன்
குலதெய்வமாகிய, மன்னர் - சுந்தர பாண்டியர், கொங்குதேர் வாழ்க்கை
இன் தமிழ் - கொங்குதேர் வாழ்க்கை என்னும் முதலையுடைய இனிய
தமிழ்ப்பாவை, சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார் - சொல்லழகு
நிரம்பப் பாடித் தந்தருளினார்; இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி
வாங்கினான் - துன்பம் நீங்கி அத்தருமி என்பவன் (அதனை) வணங்கி
வாங்கினான்.

     கொங்குதேர் வாழ்க்கை என்பது,

"கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீயறியும் பூவே"

என்னும் பாசுரத்திற்கு முதற்குறிப்பு. தமிழ் என்பது செய்யுளை உணர்த்திற்று.
இச்செய்யுள் நலம் புனைந்துரைத்தல் என்னும் துறை யமைந்தது.
‘மணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை யுடைய அழகிய
சிறையினையுடைய வண்டே, பயிற்சிமிக்க நட்பும், மயில்போற்சாயலும்,
நெருங்கியபற்களும் உடைய இவ்வரிவையின் கூந்தல்போல நறுமணமுடையன
நீ அறியும் பூக்களுள் உளவோ, விருப்பம் பற்றிக்கூறாது உண்மை கூறுக’
என்பது இதன் பொருள். இங்ஙனம் புனைந்துரைக்கு முகத்தால் தலைவன்
நயப்புணர்த்தினான் என்க. இதனாற் றலைவி கூந்தல் இயற்கை மண
முடைத்தென்பது பெறப்படுதல் காண்க. இச்செய்யுள் குறுந்தொகையிற்
கோக்கப் பெற்றுள்ளது. (88)