தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம் 93



பொற்ற னிச்சடைப்* புவன நாயகன்
சொற்ற பாடல்கைக் கொண்டு தொன்னிதி
பெற்றெ டுத்தவன் போன்று பீடுறக்
கற்ற நாவலர் கழக நண்ணினான்.

     (இ - ள்.) பொன்சடை - பொன்போலுஞ் சடையினையுடைய, தனி
புவன நாயகன் - ஒப்பற்ற உலக நாயகனாகிய சோமசுந்தரக்கடவுள், சொற்ற
பாடல் கைக் கொண்டு - திருவாய் மலர்ந்தருளிய திருப்பாசுரத்தைக்
கையிலேற்று, தொல் நிதி பெற்றெடுத்தவன் போன்று - வைப்பு நிதியைப்
பெற்றவன்போல (மகிழ்ந்து), பீடு உறக் கற்ற நாவலர் கழகம் நண்ணினான்
- பெருமை பொருந்தக் கற்று வல்ல புலவர் சங்கத்தை அடைந்தான்.

     பீடுறக் கற்ற என்றும், பீடுற நண்ணினான் என்றும் இயைத்தல்
அமையும். (89)

கல்வி யாளர்தங் கையி னீட்டினான்
வல்லை யாவரும் வாங்கி வாசியாச்
சொல்லின் செல்வமும் பொருளுந் தூக்கியே
நல்ல நல்லவென் றுவகை நண்ணினார்.

     (இ - ள்.) கல்வியாளர் தம் கையில் கட்டினான் - புலவர் கையில்
(அத்திருப் பாசுரத்தைக்) கொடுத்தான்; வல்லை வாங்கி - விரைந்து வாங்கி,
யாவரும் வாசியா - அனைவரும் அதனைப் படித்து, சொல்லின் செல்வமும்
பொருளும் தூக்கியே - சொல்வளத்தையும் பொருள் வளத்தையும் சீர் தூக்கி
- நல்ல நல்ல என்று - (அவை) மிகவும் நல்லன என்று கூறி, உவகை
நண்ணினார் - மகிழ்ச்சி யுற்றனர்.

     அடுக்கு உவகை பற்றியது; வியப்புமாம். (90)

அளக்கில் கேள்வியா ரரசன் முன்புபோய்
விளக்கி யக்கவி விளம்பி னார்கடன்
உளக்க ருத்துநே ரொத்த லாற்சிரந்
துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்.

     (இ - ள்.) அளக்கு இல் கேள்வியார் - அளவில்லாத
நூற்கேள்வியையுடைய சங்கப் புலவர்கள், அரசன் முன்பு போய் -
பாண்டியன் முன்சென்று, அக்கவி விளம்பி விளக்கினார்கள் -
அக்கவியினைக் கூறிப் பொருள் விளக்கினார்கள்; தன் உளக் கருத்து நேர்
ஒத்தலால் - தன் உள்ளக் கருத்துடன் (அது) முற்றும் ஒத்திருத்தலால்,
மீனவன் சிரம் துளக்கி மகிழ்ச்சி தூங்கினான் - பாண்டியன் முடியசைத்துக்
களிகூர்ந்தான்.

     அளக்கு தொழிற்பெயர், விளம்பி விளக்கினார் என மாறுக.
நேரொத்தல் - முழுதொத்தல். (91)


     (பா - ம்.) * பொற்றளிர்ச்சடை.