96திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பேசிலேன் - நின்னிடத்துப் பெறுகின்ற பொருளை இழந்தேன் என்று
கூறிற்றிலேன்; யார்க்கும் மேலாம் கறை கெழுமிடற்றோய் - அனைவருக்கும்
மேலாகிய நஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றினையுடைய இறைவனே,
நின்றன் கவி - நீ பாடியருளிய பாசுரத்திற்கு, சில் வாழ் நாள் சிற்றறிவு
உடைப் புலவர் - சில் வாழ்நாளும் சிற்றறிவுமுடைய புலவர், குற்றம்
சொன்னால் - குற்றங் கூறினால், உனை மதிக்க வல்லார் யார் - நின்னை
மதிக்கவல்லவர் யாவர் (ஒருவரும் இல்லை யென்றபடி.)

     யான் பொருளிழந்த வருத்தத்தினும் புலவர் நின் கவிக்குக்
குற்றங்கூறியதனாலாகிய வருத்தம் பெரிதுடையே னென்றான் என்க.

"யாவர்க்கு மேலாம் அளவிலாச் சீருடையான்"

என்பது திருவாசகம். (97)

எந்தையிவ் விகழ்ச்சி நின்ன தல்லதை யெனக்கியா தென்னாச்
சிந்தைநோ யுழந்து சைவச் சிறுவனின் றிரங்க யார்க்கும்
பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனு மான
சுந்தர விடங்க னங்கோர் புலவனாய்த் தோற்றஞ் செய்தான்.

     (இ - ள்.) எந்தை - எமது தந்தையே, இவ்விகழ்ச்சி நின்னது
அல்லது - இந்த நிந்தை நின்னைச் சார்ந்ததல்லது, எனக்கு யாது என்னா -
எனக்கு யாதுள தென்று கூறி, சைவச் சிறுவன் - அவ் வாதிசைவ மாணவன்,
சிந்தைநோய் உழந்து நின்று இரங்க - மனக்கவலையால் வருந்தி நின்று
இரங்க, யார்க்கும் பந்தமும் வீடும் - அனைவருக்கும் பந்தமும் வீடும்,
வேதப் பனுவலும் பயனுமான - மறைநூலும் அதன் பயனுமாகிய, சுந்தர
விடங்கன் - சோமசுந்தரக் கடவுள், அங்கு ஓர் புலவனாய்த் தோற்றம்
செய்தான் - அங்கு ஒரு புலவனாகத் தோற்றுவானாயினன்.

     இவ்விகழ்ச்சி நின்னது என்றது நீ அதனைப்போக்கவேண்டுமென்னும்
குறிப்பிற்று. அல்லதை, ஐ சாரியை. இறைவன் பந்தமும் வீடுமாயினமையும்,
வேதமும் அதன் பயனுமாயினமையும்,

"பந்தமுமாய் வீடுமாயினார்க்கு"

எனவும்,

"மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய
மன்னே"

எனவும் திருவாசகத்திற் கூறப்படுதல் சிந்திக்கற்பாலது. (98)

கண்டிகை மதாணி யாழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலங் குடிகொண் டாகத் தழகெலாங் கொள்ளை கொள்ளத்
தண்டமிழ் மூன்றும் வல்லோன் றானெனக் குறியிட் டாங்கே
புண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள.