தகரேறு படலம்
 
1180.
சூரன் முதல் ஓர் உயிர் தொலைக்க வரு செவ்வேள்
ஆரு மகிழ் வெள்ளியச லத்தின் அமர் போழ்தின்
மேருவில் உடைப் பரன் விரும்ப அகிலத்தே
நாரதன் ஓர் வேள்வியை நடாத்தியிடல் உற்றான்.
1
   
1181.
மாமுனிவரும் சுரரும் மாநில வரைப்பில்
தோமறு தவத்தின் உயர் தொல்லை மறையோரும்
ஏமம் ஒடு சூழ்தர இயற்றிய மகத்தில்
தீ மிசை எழுந்தது ஒரு செக்கர் புரை செச்சை.
2
   
1182.
அங்கிதனில் வந்த தகர் ஆற்று மகம் தன்னில்
நங்களினமே பலவும் நாளும் அடுகின்றார்
இங்கு இவரை யான் அடுவன் என்று இசைவு கொண்டே
வெம் கனலை யேந்து பரி மீது எழுதல் போலும்.
3
   
1183.
மாருதமும் ஊழிதனில் வன்னியும் விசும்பில்
பேருமுரும் ஏறும் ஒரு பேர் உருவு கொண்டே
ஆருவது போல் விரைவும் அத்து ஒளியும் ஆர்ப்பும்
சேர எழும் மேடம் அடு செய்கை நினைந்தன்றே.
4
   
1184.
கல் என மணித் தொகை களத்தின் இடை தூங்கச்
சில்லரி பெய் கிங்கிணி சிலம்பு அடி புலம்ப
வல்லை வருகின்ற தகர் கண்டு மகத்து உள்ளோர்
எல்லவரும் அச்சமொடு இரிந்தனர்கள் அன்றே.
5
   
1185.
இரிந்தவர்கள் யாவரையும் இப்புவியும் வானும்
துரந்து சிலர் வீழ்ந்து தொலைவாக நனிதாக்கிப்
பரந்த தரை மால் வரை பராகம் எழ ஓடித்
திரிந்து உயிர் வருந்த அடல் செய்தது செயிர்த்தே.
6
   
1186.
எட்டுள திசைக்கரி இரிந்து அலறி ஏங்கக்
கிட்டி எதிர் தாக்குமதி கேழ் கிளரும் மானத்
தட்டி ரவி தேரொடு தகர்ந்து முரிவாக
முட்டும் அவர் தம் பரியை மொய்பின் ஒடு பாயும்.
7
   
1187.
இனைய வகையால் தகரி யாண்டும் உலவுற்றே
சினமொடு உயிர் கட்கு இறுதி செய்து பெயர் காலை
முனிவர்களும் நாரதனும் மொய்ம்பு மிகு வானோர்
அனைவர்களும் ஓடினர் அரும் கயிலை புக்கார்.
8
   
1188.
ஊறு புக அன்னவர் உலைந்து கயிலைக் கண்
ஏறி வரு காலையில் இலக்கமுடன் ஒன்பான்
வீறு திறல் வீரரொடு மேவி யுல வுற்றே
ஆறு முக அண்ணல் விளையாடல் அது கண்டார்.
9
   
1189.
ஈசன் இடை நண்ணுகிலம் ஈண்டு குமரேசன்
நேசமொடு நம் துயரம் நீக்க எதிர் வந்தான்
ஆ சிறுவன் அல்லன் இவன் அண்டர் பலரோடும்
வாசவனை வென்று உயிரை மாற்றி எழுவித்தான்.
10
   
1190.
எம் குறை முடித்திடல் இவற்கு எளிது நாம் இப்
புங்கவனொடு உற்றது புகன்றிடுதும் என்னாத்
தங்களில் உணர்ந்து சுரர் தாபதர்கள் யாரும்
அங்கு அவன் முன் ஏகினர் அருந்துதிகள் செய்தே.
11
   
1191.
வந்து புகழ் வானவரும் மாமுனிவர் தாமும்
தந்தி முகற்வற்கு இளவல் தன் அடி வணங்கக்
கந்தன் அவர் கொண்டதுயர் கண்டு மிக நீவிர்
நொந்தனிர் புகுந்தது நுன்றிடுதிர் என்றான்.
12
   
1192.
கேட்டி இளையோய் மறை கிளத்தும் ஒரு வேள்வி
வேட்டனம் இயாங்களது வேலை இடை தன்னில்
மாட்டு கனல் ஊடு ஒரு மறித்தகர் எழுந்தே
ஈட்டம் உறும் எம்மை அட எண்ணியதை அன்றே.
13
   
1193.
ஆடு எழு கிளர்ச்சியை அறிந்து மகம் விட்டே
ஓடி இவண் உற்றனம் உருத்தது துரந்தே
சாடியது சிற்சிலவர் தம்மை அதனாலே
வீடியது அளப்பில் உயிர் விண்ணின் ஓடு மண்மேல்.
14
   
1194.
நீல விடம் அன்று இது நிறம் குலவு செக்கர்க்
கோல விடமே உருவு கொண்டது அயமே போல்
ஓலம் இட எங்கும் உல உற்றது உயிர் எல்லாம்
கால முடிவு எய்தும் ஒரு கன்னல் முடி முன்னம்.
15
   
1195.
சீற்றமொடு உயிர்க்கு இறுதி செய்து உலவு மேடத்து
ஆற்றலை அடக்கி எமது அச்சமும் அகற்றி
ஏற்ற குறை வேள்வியையும் ஈறு புரிவித்தே
போற்றுதி எனத் தொழுது போற்றி செயும் வேலை.
16
   
1196.
எஞ்சும் அவர் தம்மை இளையோன் பரிவின் நோக்கி
அஞ்சல் விடுமின்கள் என அங்கையது அமைத்தே
தஞ்சம் எனவே பரவு தன் பரிசனத்துள்
மஞ்சு பெறு மேனி விறல் வாகு ஒடு சொல்வான்.
17
   
1197.
மண்டு கனல் வந்து இவர் மகம் தனை அழித்தே
அண்டமொடு பார் உலவி யார் உயிர்கள் தம்மை
உண்டு திரி செச்சை தனை ஒல்லை குறு குற்றே
கொண்டு அணைதி என்று உமை குமாரன் உரை
                                 செய்தான்.
18
   
1198.
குன்று எழு கதிர் போல் மேனிக் குமரவேள் இனைய
                                      கூற
மன்றலந் தடம் தோள் வீர வாகுவாம் தனிப்பேர்
                                      பெற்றான்
நன்று என இசைந்து கந்தன் நாண் மலர்ப் பாதம்
                                     போற்றிச்
சென்றனன் கயிலை நீங்கிச் சினத்தகர் தேடல் உற்றான்.
19
   
1199.
மண்டல நேமி சூழும் மா நிலம் உற்று நாடிக்
கண்டிலன் ஆகிச் சென்று ஏழ் பிலத்தினும்
                               காணகில்லான்
அண்டர் தம் பதங்கள் நாடி அயன் பதம் முன்னது
                                 ஆகத்
தண் தளிர்ச் செக்கர் மேனித் தகர் செலும் தன்மை
                                 கண்டான்.
20
   
1200.
ஆடலந் தொழில் மேல் கொண்டே அனைவரும் இரியச்                                      செல்லும்
மேடம் அஞ்சுறவே ஆர்த்து விரைந்து போய் வீரவாகு
கோடு அவை பற்றி ஈர்த்துக் கொண்டுராய்க் கயிலை
                                     நண்ணி
ஏடு உறு நீபத்து அண்டார் இளையவன் முன்னர்
                                     உய்த்தான்.
21
   
1201.
உய்த்தனன் வணங்கி நிற்ப உளமகிழ்ந்து அருளித்தேவர்
மெய்த்தவர் தொகையை நோக்கி ஏழகம் மேவிற்று
                                     எம்பால்
எய்த்தினி வருந்து கில்லீர் யாருநீர் புவனி யேகி
முத்தழல் கொடுமுன் செய்த வேள்வியை முடித்திர்
                                     என்றான்.
22
   
1202.
ஏர்தரு குமரப் புத்தேள் இவ்வகை இசைப்ப அன்னோர்
கார் தரு கண்டத்து எந்தை காதல வேள்வித் தீயில்
சேர்தரு தகரின் ஏற்றைச் சிறியரேம் உய்யும் ஆற்றால்
ஊர்தி அது ஆகக் கொண்டே ஊர்ந்திடல் வேண்டும்
                                      என்றார்.
23
   
1203.
என்னலும் தகரை அற்றே யானமாக் கொள்வம்
                                    பார்மேல்
முன்னிய மகத்தை நீவிர் முடித்திர் என்று அருள
                                    யார்க்கும்
நல் நயம் ஆடல் செய்யும் நாரதன் முதலோர் யாரும்
அன்னதோர் குமரன் எந்தை அடிபணிந்து அருளால்
                                    போந்தார்.
24
   
1204.
நவையில் சீர் முனிவர் தேவர் நயப்ப நாரதர் என்று                                     உள்ளோன்
புவிதனில் வந்து முற்றப் புரிந்தனன் முன்னர் வேள்வி
அவர் புரி தவத்தின் நீரால் அன்று தொட்டு அமல
                                       மூர்த்தி
உவகையால் அனைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தியாக.
25