விடைபெறு படலம்
 
1266.
எல்லை அன்னதின் மால் அருள் கன்னியர் இருவர்
சொல் அரும் பெரு வனப்பினர் சுந்தரி அமுத
வல்லி என்றிடும் பெயரினர் கந்த வேள் வரைத்தோள்
புல்லும் ஆசையால் சரவணத்து அரும் தவம் புரிந்தார்.
1
   
1267.
என்னை ஆளுடை மூவிரு முகத்தவன் இரண்டு
கன்னி மாருமாய் ஒன்றி நோற்றிடுவது கருத்தில்
உன்னியே எழீஇக் கந்தமால் வரையினை ஒருவி
அன்னை தோன்றிய இமகிரிச் சாரலை அடைந்தான்.
2
   
1268.
பொருவில் சீர் உடை இமைய மால் வரைக்கு ஒரு
                                 புடை ஆம்
சரவணம் தனில் போதலும் தவம் புரி மடவார்
இருவரும் பெரிது அஞ்சியே பணிந்து நின்று ஏத்த
வரம் அளிப்பது என் கூறுதிர் என்றனன் வள்ளல்.
3
   
1269.
மங்கை மார் தொழுது எம்மை நீ வதுவையால் மருவ
இங்கு யாம் தவம் புரிந்தனம் கருணை செய் என்ன
அங்கு அவ்வாசகம் கேட்டலும் ஆறு மா முகத்துத்
துங்க நாயகன் அவர் தமை நோக்கியே சொல்வான்.
4
   
1270.
முந்தும் இன் அமுதக் கொடி மூவுலகு ஏத்தும்
இந்திரன் மகள் ஆகியே வளர்ந்தனை இருத்தி
சுந்தரி இப் பெயர் இளையவள் தொல் புவி தன்னில்
அம் தண் மா முனி புதல்வியாய் வேடர் பால் அமர்தி.
5
   
1271.
நன்று நீவிர்கள் வளர்ந்திடு காலையாம் நண்ணி
மன்றல் நீர்மையால் உங்களை மேவுதும் மனத்தில்
ஒன்றும் எண்ணலீர் செல்லும் என்று எம்பிரான் உரைப்ப
நின்ற கன்னியர் கை தொழுது ஏகினர் நெறியால்.
6
   
1272.
ஏகும் எல்லையில் அமுதம் ஆம் மென் கொடி என்பாள்
பாக சாதனன் முன்னம் ஓர் குழவியாய்ப் படர்ந்து
மாக மன்ன நின் உடன் வரும் உபேந்திரன் மகள் யான்
ஆகையால் எனைப் போற்றுதி தந்தை யென்று
                                    அடைந்தாள்.
7
   
1273.
பொன்னின் மேருவில் இருந்தவன் புதல்வியை நோக்கி
என்னை ஈன்ற யாய் இங்ஙனம் வருக என இசைத்துத்
தன்னது ஆகிய தனிப் பெரும் களிற்றினைத் தனது
முன்னர் ஆகவே விளத்தனன் இத்திறம் மொழிவான்.
8
   
1274.
இந்த மங்கை நம் திருமகள் ஆகும் ஈங்கு இவளைப்
புந்தி அன்பொடு போற்றுதி இனையவள் பொருட்டால்
அந்தம் இல் சிறப்பு எய்துமே என்றலும் அவளைக்
கந்த மேல்கொடு நன்று எனப் போயது களிறு.
9
   
1275.
கொவ்வை போல் இதழ்க் கன்னியை மனோவதி கொடு                                        போய்
அவ்வி யானையே போற்றியது அனைய காரணத்தால்
தெய்வ யானை என்று ஒரு பெயர் எய்தியே சிறிது
நொவ் உறாது வீற்று இருந்தனள் குமரனை நுவன்றே.
10
   
1276.
பெருமை கொண்டிடு தெண் திரைப் பாற்கடல் பெற்றுத்
திரு மடந்தையை அன்புடன் வளர்த்திடும் திறம் போல்
பொருவில் சீருடை அடல் அயிராவதம் போற்ற
வரிசை தன்னுடன் இருந்தனள் தெய்வத மடந்தை.
11
   
1277.
முற்று உணர்ந்திடு சுந்தரி என்பவள் முருகன்
சொற்ற தன்மையை உளங்கொண்டு தொண்டை நன்
                                     நாட்டில்
உற்ற வள்ளி அம் சிலம்பினை நோக்கி ஆங்கு
                                     உறையும்
நற்றவச் சிவமுனி மகளாகவே நடந்தாள்.
12
   
1278.
இந்த வண்ணம் இவ் இருவர்க்கும் வரம்தனை ஈந்து
கந்த மால் வரை யேகியே கருணையோடு இருந்தான்
தந்தை இல்லது ஓர் தலைவனைத் தாதையாய்ப் பெற்று
முந்து பற் பகல் உலகெலாம் படைத்ததோர் முதல்வன்.
13
   
1279.
இத்திறம் சில பகல் இருந்து பன்னிரு
கைத்தலம் உடையவன் கயிலை மேல் உறை
அத்தனொடு அன்னை தன் அடி பணிந்திடச்
சித்தம் அது உன்னினன் அருளின் செய்கையால்.
14
   
1280.
எள்ளரும் தவிசினின்று இழிந்து வீரராய்
உள்ளுறும் பரிசனர் ஒருங்கு சென்றிடக்
கொள்ளை அம் சாரதர் குழாமும் பாற் பட
வள்ளல் அங்கு ஒருவியே வல்லை யேகினான்.
15
   
1281.
ஏய் என வெள்ளி வெற்பு எய்தி யாங்ஙனம்
கோயிலின் அவைக்களம் குறுகிக் கந்தவேள்
தாயொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே
ஆயவர் நடு உற அருளின் வைகினான்.
16
   
1282.
அண்ணல் அம் குமரவேள் அம்கண் வைகலும்
விண்ணவர் மகபதி மேலை நாள் முதல்
உள் நிகழ் தம்குறை உரைத்து நான்முகன்
கண்ணனை முன் கொடு கயிலை எய்தினார்.
17
   
1283.
அடைதரும் அவர் தமை அமலன் ஆலயம்
நடைமுறை போற்றிடும் நந்தி நின் மெனத்
தடை வினை புரிதலும் தளர்ந்து பல் பகல்
நெடுது உறு துயரொடு நிற்றல் மேயினார்.
18
   
1284.
அளவு அறு பல பகல் அம் கண் நின்று உளார்
வளன் உறு சிலாதனன் மதலை முன்பு தம்
உளமலி இன்னலை உரைத்துப் போற்றலும்
தளர்வு இனிவிடு மின் என்று இதனைச் சாற்றினான்.
19
   
1285.
தம் குறை நெடும் புனல் சடில மேல் மதி
அம் குறை வைத்திடும் ஆதி முன்பு போய்
நும் குறை புகன்று அவன் நொய்தின் உய்ப்பனால்
இங்கு உறைவீர் என இயம்பிப் போயினான்.
20
   
1286.
போயினன் நந்தி அம் புனிதன் கண் நுதல்
தூயனை வணங்கினன் தொழுது வாசவன்
மாயவன் நான்முகன் வான் உளோர் எலாம்
கோயிலின் முதல் கடை குறுகினார் என்றான்.
21
   
1287.
அருள் உடை எம்பிரான் அனையர் யாரையும்
தருதி நம் முன்னரே சார என்றலும்
விரைவொடு மீண்டனன் மேலையோர்களை
வருக என அருளினன் மாசு இல் காட்சியான்.
22
   
1288.
விடைமுகன் உரைத்த சொல் வினவி யாவரும்
கடிதினில் ஏகியே கருணை வாரிதி
அடி முறை வணங்கினர் அதற்குள் வாசவன்
இடர் உறு மனத்தினன் இனைய கூறுவான்.
23
   
1289.
பரிந்து உலகு அருள் புரிபரையொடு ஒன்றியே
இருந்து அருள் முதல்வ கேள் எண்ணிலா உகம்
அரும் திறல் சூர் முதல் அவுணர் தங்களால்
வருந்தினம் ஒடுங்கினம் வன்மை இன்றியே.
24
   
1290.
அந்தம் இல் அழகு உடை அரம்பை மாதரும்
மைந்தனும் அளப்பு இலா வான் உளோர்களும்
வெம் தொழில் அவுணர்கள் வேந்தன் மேவிய
சிந்துவின் நகர் இடைச் சிறைக் கண் வைகினார்.
25
   
1291.
இழிந்திடும் அவுணரால் யாது ஒர் காலமும்
ஒழிந்திடல் இன்றியே உறைந்த சீர் ஒடும்
அழிந்தது என் கடி நகர் அதனை யான் இவண்
மொழிந்திடல் வேண்டுமோ உணர்தி முற்றுநீ.
26
   
1292.
முன் உற யான் தவம் முயன்று செய்துழித்
துன்னினை நம் கணோர் தோன்றல் எய்துவான்
அன்னவனைக் கொடே அவுணர்ச் செற்று நும்
இன்னலை அகற்றுதும் என்றி எந்தை நீ.
27
   
1293.
அப்படிக் குமரனும் அவதரித்து உளன்
இப்பகல் காறும் எம் இன்னல் தீர்த்திலை
முப்புவனம் தொழு முதல்வ தீயரேம்
துப்பு உறு பவப் பயன் தொலைந்தது இல்லையோ.
28
   
1294.
சூர் உடை வன்மையைத் தொலைக்கத் தக்கது ஓர்
பேர் உடையார் இலை பின்னை யான் இனி
யாரொடு கூறுவன் ஆரை நோகுவன்
நீ ருடை முடியினோய் நினது முன் அலால்.
29
   
1295.
சீகர மறிகடல் சென்று நவ்வி சேர்
காகம் அது என்ன உன் கயிலை அன்றியே
ஏக ஓர் இடம் இலை எமக்கு நீ அலால்
சோகம் அது அகற்றிடும் துணைவர் இல்லையே.
30
   
1296.
ஏற்று எழு வன்னி மேல் இனிது துஞ்சலாம்
தோற்றிய வெவ்விடம் எனினும் துய்க்கலாம்
மாற்றலர் அலைத்திட வந்த வெம் துயர்
ஆற்றரி தாற்ற அரி தலம் இப் புன்மையே.
31
   
1297.
தீதினை அகற்றவும் திருவை நல்கவும்
தாதையர் அல்லது தனயர்க்கு ஆர் உளர்
ஆதலின் எமை இனி அளித்தியால் என
ஓதினன் வணங்கினன் உம்பர் வேந்தனே.
32
   
1298.
அப்பொழுது அரி அயன் ஐய வெய்யசூர்
துப்புடன் உலகு உயிர்த் தொகையை வாட்டுதல்
செப்ப அரிது இன் இனிச் சிறிதும் தாழ்க்கலை
இப்பொழுது அருள்க என இயம்பி வேண்டினார்.
33
   
1299.
இகபரம் உதவுவோன் இவற்றைக் கேட்டலும்
மிக அருள் எய்தியே விடுமின் நீர் இனி
அக மெலிவு உறல் என அருளி ஆங்கு அமர்
குகன் முகம் நோக்கியே இனைய கூறுவான்.
34
   
1300.
பாரினை அலைத்துப் பல் உயிர் தமக்கும் பருவரல்
                            செய்து விண்ணவர்தம்
ஊரினை முருக்கித் தீமையே இயற்றி உலப்பு உறா
                          வன்மை கொண்டு உற்ற
சூரனை அவுணர் குழுவொடும் தடிந்து சுருதியின் நெறி
                                 நிறீஇ மகவான்
பேர் அரசு அளித்துச் சுரர் துயர் அகற்றிப் பெயர்தி
                      என்றனன் எந்தை பெருமான்.
35
   
1301.
அருத்தி கொள் குமரன் இனைய சொல் வினவி
                        அப்பணி புரிகுவன் என்னப்
புரத்தினை அட்ட கண் நுதல் பின்னர்ப் பொள்ளென
                          உள்ளம் மேல் பதின் ஓர்
உருத்திரர் தமையும் உன்னலும் அன்னோர் உற்றிட
                          இவன் கையில் படையாய்
இருத்திர் என்று அவரைப் பல படை ஆக்கி ஈந்தனன்
                               எம்பிரான் கரத்தில்.
36
   
1302.
பொன் திகழ் சடிலத்து அண்ணல் தன் பெயரும்
             பொருவு இலா உருவமும் தொன்னாள்
நன்று பெற்று உடைய உருத்திர கணத்தோர் நவில்
                     அரும் தோமரம் கொடிவாள்
வன் திறல் குலிசம் பகழி அங்குசமும் மணிமலர்ப்
                              பங்கயம் தண்டம்
வென்றி வில் மழுவும் ஆகி வீற்று இருந்தார் விறல்
                       மிகும் அறுமுகன் கரத்தில்.
37
   
1303.
ஆயதற் பின்னர் ஏவில் மூதண்டத்து ஐம் பெரும்
                                 பூதமும் அடுவ
தேய பல் உயிரும் ஒருதலை முடிப்ப தேவர் மேல்
                           விடுக்கினும் அவர்தம்
மா இரும் திறலும் வரங்களும் சிந்தி மன் உயிர் உண்பது
                                எப் படைக்கும்
நாயகம் ஆவது ஒரு தனிச் சுடர் வேல் நல்கியே மதலை
                              கைக் கொடுத்தான்.
38
   
1304.
அன்னதற் பின்னர் எம்பிரான் தன் பால் ஆகி நின்றே                                   ஏவின புரிந்து
மன்னிய இலக்கத்து ஒன்பது வகைத்தா மைந்தரை
                           நோக்கியே எவர்க்கும்
முன்னவன் ஆம் இக் குமர னோடு ஏகி முடிக்குதிர்
                             அவுணரை என்னாத்
துன்னு பல் படையும் உதவியே சேய்க்குத் துணைப்
                        படையாகவே கொடுத்தான்.
39
   
1305.
நாயகன் அதன் பின் அண்டவா பரணன் நந்தி                            உக்கிரனொடு சண்டன்
கா யெரி விழியன் சிங்கனே முதலாம் கணப்பெரும்
                              தலைவரை நோக்கி
ஆயிர விரட்டி பூத வெள்ளத்தோடு அறுமுகன் சேனை
                                ஆய்ச் செல்மின்
நீயிர் என்று அருளி அவர் தமைக் குகற்கு நெடும்
                     படைத் தலைவரா அளித்தான்.
40
   
1306.
ஐம் பெரும் பூத வன்மையும் அங் கண் அமர் தரும்                           பொருள்களின் வலியும்
செம்பதுமத் தோன் ஆதி ஆம் அமரர் திண்மையும்
                     கொண்டது ஓர் செழும் தேர்
வெம் பரி இலக்கம் பூண்டது மனத்தின் விரைந்து முன்
                        செல்வது ஒன்று அதனை
எம் பெரு முதல்வன் சிந்தையால் உதவி ஏறுவான்
                        மைந்தனுக்கு அளித்தான்.
41
   
1307.
இவ்வகை எல்லாம் விரைவுடன் உதவி யேகுதி நீ எனக்                                        குமரன்
மைவிழி உமையோடு இறைவனைத் தொழுது வலம்
                    கொடே மும் முறை வணங்கிச்
செவ்விதின் எழுந்து புகழ்ந்தனன் நிற்பத் திரு உளத்து
                            உவகையால் தழுவிக்
கைவரு கவானுய்த்து உச்சிமேல் உயிர்த்துக் கருணை
                செய்து அமலைக் கை கொடுத்தான்.
42
   
1308.
கொடுத்தலும் வயின் வைத்து அருளினால் புல்லிக்                குமரவேள் சென்னி மோந்து உன்பால்
அடுத்திடும் இலக்கத்து ஒன்பது வகையோர் அனிகமாய்ச்
                              சூழ்ந்திடப் போந்து
கடக்க அரும் ஆற்றல் அவுணர் தம் கிளையைக் ஆதிக்
                           இக் கடவுளர் குறையை
முடித்தனை வருதி என்று அருள் புரிந்தாள் மூ இரு
                              சமயத்தின் முதல்வி.
43
   
1309.
அம்மை இத்திறத்தால் அருள் புரிந்திடலும் அறுமுகன்                        தொழுது எழீஇ யனையோர்
தம் விடைகொண்டு படர்ந்தனன் தானைத் தலைவராம்
                         இலக்கம் மேல் ஒன்பான்
மெய்மை கொள் வீரர் யாவரும் கணங்கள் வியன்
                       பெரும் தலைவரும் இருவர்
செம்மலர் அடிகள் மும் முறை இறைஞ்சிச் சேரவே
                          விடை கொடு சென்றார்.
44
   
1310.
நின்றிடும் அயன் மால் மகபதி எந்தாய் நீ எமை                           அளித்தனை நெஞ்சத்து
ஒன்று ஒரு குறையும் இல்லையால் இந்நாள் உய்ந்தனம்
                               உய்ந்தனம் என்று
பொன் திகழ் மேனி உமையுடன் இறைவன் பொன் அடி
                            பணிந்து எழ நுமக்கு
நன்றி செய் குமரன் தன்னுடன் நீரும் நடம் எனா
                            விடையது புரிந்தான்.
45