அசமுகி நகர் காண்படலம்
 
3453.
இன்னன பல பல எய்தச் சூரன் ஆம்
மன்னவன் இருத்தலும் மற்று அவ் வெல்லையில்
தொல் நகர் அணித்து உறத் துன் முகத்தினாள்
தன்னொடும் அசமுகி தான் வந்து எய்தினாள்.
1
   
3454.
மோட்டு உறு மகேந்திர முதிய மாநகர்
கூட்டு உறு திரு எலாம் குலைய முன்னவள்
மாட்டு உறு துணையொடு வந்து உற்றால் எனக்
கீட்டிசை வாய்தலைக் கிட்டினாள் அரோ.
2
   
3455.
கெழுதரும் அசமுகக் கெடல் அணங்கு தன்
பழி தருகையினைப் பார்த்து நேர்ந்துளார்
அழி தரு துன்பு கொண்டு அழலில் சீறினார்
இழிதரும் இச்செயல் யார் செய்தார் எனா.
3
   
3456.
மானம் இல் அசமுகி மகேந்திரப் புரம்
தானுரு துயர்க்கு ஒரு தாரி காட்டல் போல்
ஊன் உறு குருதி கை உகுப்பச் சென்றுழி
ஆனது கண்டனர் அவுணர் யாவரும்.
4
   
3457.
வட்டு உறு பலகையின் வல்ல நாய் நிரைத்து
இட்டனர் கவற்றினை இசைத்த சூள் ஒடும்
கிட்டினர் இடம் தொறும் கெழுமி ஆடினர்
விட்டனர் அத்தொழில் விரைந்து உற்றார் சிலர்.
5
   
3458.
தெரிதரு கரிய பொன் திரித்திட்டால் எனப்
புரிதரு மருப்பு உடைப் புலியன் செச்சையை
முரிவரு பேர் அமர் மூட்டிக் கண்டு உளார்
பரிவொடு பிரிந்து அயல் படர் கின்றார் சிலர்.
6
   
3459.
கார்ப் பெயல் அன்னதோர் கடாம் கொள் மால்கரி
கூர்ப் புறு மருப்பு மெய் குளிப்பச் சோரி நீர்
ஆர்ப்பொடு தத்தம் இல் ஆடல் செய்வது
பார்ப்பது விட்டனர் படர்கின்றார் சிலர்.
7
   
3460.
துய்யது ஓர் கிஞ்சுகச் சூட்டு வாரணம்
மொய்யொடு தன் உயிர் முடியும் எல்லையும்
செய்யுறு வெம் சினச் செருவை நோக்கினார்
ஒய் என நீங்கியே உறுகின்றார் சிலர்.
8
   
3461.
ஊனம் இல் பல பணி உடன்று சீறியே
பானுவை நுகர விண் படரும் ஆறு என
வானிகள் ஓச்சினர் வானில் கைவிடா
மேனிகள் வியர்ப்பு உற வெகுண்டு உற்றார் சிலர்.
9
   
3462.
வாம் பரி தேர் கரி மானம் பாண்டில்கள்
ஏம்பலோடு ஊர்ந்திட இயற்றும் கல் பொரீஇ
யாம் பொருள் அல்லது ஒன்று அடைவது என் எனச்
சோம்புதல் இன்றியே தொடர்கின்றார் சிலர்.
10
   
3463.
குறி கெழு வெளில் ஒடு குற்றி நாட்டியும்
அறிகுறி தீட்டியும் அவை இலக்கமா
எறிகுறு படையினை எய்யும் கோலினை
நெறி தொறும் விட்டு அவண் நேர்கின்றார் சிலர்.
11
   
3464.
நாந்தகம் ஆதியா நவிலும் தொல் படை
ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னம் ஆய்
ஏய்ந்திடும் கழகம் உற்று இயற்று மாறொரீஇப்
போந்தனர் ஒரு சிலர் பொருமல் மிக்கு உளார்.
12
   
3465.
வாள் படு கனலிகால் வானின் கண்ணவாம்
காட்புறு நரம்பு யாழ் காமர் வீணைகள்
வேட்பு உறும் ஈர்ங்குழல் மிடறு கால் இசை
கேட்பது விட்டு அவண் கிட்டினார் சிலர்.
13
   
3466.
நாடக நூல் முறை நுனித்து நன்று உணர்
கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர்
ஆடு உறு கோட்டிகள் அகல் உற்று அங்ஙனம்
கூடினர் ஒரு சிலர் குலையும் மெய்யினார்.
14
   
3467.
புலப்படு மங்கலப் பொருள் முற்றும் கொடு
நலப்படு வேள்விகள் நடத்திக் கேள் ஒடு
பலப்பல வதுவை செய் பான்மை நீத்து ஒராய்க்
குலைப்புறு கையொடும் குறு குற்றார் சிலர்.
15
   
3468.
மால் ஒரு மடந்தை பால் வைத்து முன் உறு
சேல் விழி ஒருத்தி பால் செல்ல ஊடியே
மேல் உறு சினத்து இகல் விளைக்க நன்று இது
காலம் என்று உன்னியே கழன்று உற்றார் சிலர்.
16
   
3469.
தோடு உறு வரி விழித் தோகை மாருடன்
மாடமது இடை தொறும் வதிந்த பங்கயக்
காடு உறு பூம் தடம் காமர் தண்டலை
ஆடலை வெறுத்து எழீஇ அடைகின்றார் சிலர்.
17
   
3470.
சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகை அம்
கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார்
உள் உறுத்திய புலன் ஊசல் போன்று உளார்
தள் உறத் தள் உறத் தளர்ந்து உற்றார் சிலர்.
18
   
3471.
அனைய பல் வகையினர் அவளைக் கண்டுளார்
பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர்
கனலொடு தீப்புகை கால் உயிர்ப்பினர்
முனி உறு கின்றனர் மொழிகின்றார் இவை.
19
   
3472.
அந்தகன் ஒருத்தன் பேரோன் ஆடல் வல்லியத்தோன்
                                       ஆதி
வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை
முந்து உறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற
செம்தழல் உருவத்து அண்ணல் செய்கையோ இனையது
                                      என்பார்.
20
   
3473.
மேதியம் சென்னிவீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன்
கோது அறு குருதிக் கண்ணன் குருதி அம் குரத்தன்
                                       முந்தே
பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில் தாரகனே பண்டன்
ஆதியர் ஆயுள் கொண்ட ஐயை தன் செயலோ என்பார்.
21
   
3474.
சிரபத்தி அளவை இல்லாத் திறல் அரி ஒரு நால் தந்தக்
கரபத்தின் அண்ணல் வானோர் யாரையும் கலக்கம் செய்ய
வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாள்
சரபத்தின் வடிவம் கொண்டான் தன் செயலாம் கொல்
                                        என்பார்.
22
   
3475.
வண்டு உளர் கமலச் செம் கண் மாயனும் தூய நீலம்
கண்டம் அது அடைத்த தேவும் கலந்தனர் தழுவிச் சேரப்
பண்டு அவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசால் உற்ற
செண்டு உறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார்.
23
   
3476.
பிளிற்று உறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை
                            எயிற்றுப் புன்கண்
வெளிற்று உறு தடக்கை கொண்ட வேழமா முகத்து
                               எம்மேலோன்
ஒளிற்று உறு கலன்மார்பு எய்தி உயிர் குடித்து
                             உமிழ்ந்த தந்தக்
களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும்
                                    என்பார்.
24
   
3477.
ஈசனை மதிக்கிலாதே யாம் முதல் கடவுள் என்று
பேசிடு தலைவர்க்கு ஏற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும்
ஆசு அறு சங்கு கன்னன் அகட்டு அழல் குண்டம்
                                    போல்வான்
தேசு உறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார்.
25
   
3478.
நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாக அணைப் பள்ளி மீது
தஞ்ச மொடு இருந்த அண்ணல் தன் செயலாமோ என்பார்
அஞ்சுவன் இனைய செய்கைக்கு அனையது நினைவு
                                  அன்று என்பார்
நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன்
                                        என்பார்.
26
   
3479.
புரந்தரன் என்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ
                                     என்பார்
கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன்று
                                     என்பார்
இருந்திடு கடவுளோர்கள் இழைத்திடும் விதியோ
                                     என்பார்
நிரந்து நம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை
                                     என்பார்.
27
   
3480.
கழைத்துணி நறவ மாந்திக் களிப்பு உறா உணர்ச்சி
                                    முற்றும்
பிழைத்தவர் ஆகும் அன்றேல் பித்தர் செய்தனராம்
                                    என்பார்
இழைத்த நாள் எல்லை சென்றோர் இயற்றியார் யாரோ
                                    என்பார்
விழுப்பெரு முனிவர் சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை
                                     என்பார்.
28
   
3481.
அங்கியின் கிளர்ச்சியே போல் அவிர் சுடர்க் கூர்
                              வாள் தன்னைத்
தங்களில் ஏந்தி இன்னோர் சான்ற சூள் உறவு சாற்றித்
துங்கமொடு அமரின் ஏற்று முறை முறை துணிந்தார்
                                   கொல்லோ
இங்கு இவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார்.
29
   
3482.
ஆர் இவள் கரத்தில் ஒன்றை அடவல்லார் எவர்
                                கண்ணேயோ
பேர் உறு காதல் கொண்டு பெண் மதி மயக்கம்
                                   தன்னால்
சீரிய உறுப்பில் ஒன்று சின்னமாத் தருவன் என்று
கூர் உடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும்
                                   என்பார்.
30
   
3483.
கேடு உறும் இனையள் தன்னைக் கேட்பது என்
                             இனிநாம் என்பார்
நாடி நாம் வினாவினோமேல் நம் எலாம் முனியும் என்பார்
மாடு உறப் போவது என்னை மா நில வரைப்பின் காறும்
ஓடியே அறிதும் என்பார் இனையன உரைத்த லோடும்.
31
   
3484.
சொல் இயல் சூரன் தங்கை துன்முகியோடு கை போய்
வல்லையில் போதல் கேளா மம்மருள் அவுண மாதர்
சில் இயல் கூந்தல் தாழத் தெருத் தொறும் செறிந்து
                                      கஞ்சம்
ஒல்லை முத்து உதிர்ப்பது என்ன ஒண்கணீர் உகுத்துச்
                                     சூழ்ந்தார்.
32
   
3485.
அந் நகர் மகளிர் யாரும் ஆடவர் யாரும் சூழ்ந்து
துன்னினர் இனைய வாற்றால் துயர் உழந்து இரங்கிச்
                                      சோரப்
பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்கு கோ நகரம் போந்து
மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக்கு அணியள்
                                     ஆனாள்.
33