அவை புகு படலம்
 
4193.
மடந்தையொடு இரிந்திடும் வாசவன் முகன்
அடைந்திடு சிறைக் களம் அகன்று வான் நெறி
நடந்தனன் அவுணர்கோன் நண்ணு கோன் நகர்
இடம் தரு கிடங்கரை இகந்து போயினான்.
1
   
4194.
அகழியை நீங்கினான் அயுதந் தன்னினும்
மிகுதி கொள் நாற்படை வெள்ளம் தானைகள்
தகுதியின் முறை முறை சாரச் சுற்றிய
முகில் தவழ் நெடு மதில் முன்னர் ஏகினான்.
2
   
4195.
கான்கொடி கங்கை நீர் கரப்ப மாந்தியே
மீன் கதிர் உடுபதி விழுங்கி விட்டிடும்
வான் கெழு கடி மதில் வரைப்பின் முன்னரே
தான் கிளர் கோபுரம் கண்டு சாற்றுவான்.
3
   
4196.
குரை கடல் உண்டவன் கொண்ட தண்டினால்
வரு புழை மீமிசை வாய்ப்பத் தாரகன்
பெரு வரை நிமிர்ந்திடும் பெற்றி போலும் ஆல்
திரு நிலை பல உடைச் சிகரி நின்றதே.
4
   
4197.
தூணமது உறழ் புயச் சூரன் என்பவன்
சேண் உறும் அண்டம் மேற் செல்லச் செய்தது ஓர்
ஏணி கொலோ இது என்ன நின்றது ஆல்
நீண் நிலை பலவுடன் நிமிர்ந்த கோபுரம்.
5
   
4198.
துங்கமொடு இறை புரி சூரன் கோயிலில்
பொங்கு செம் மணி செறி பொன் செய் கோபுரம்
எங்கணும் முடியு நாள் இவுளி வாய்ப்படும்
அங்கி விண் காறு எழும் வடிவம் அன்னதே.
6
   
4199.
அண்டம் அங்கு எவற்றினும் அமர்ந்து நிற்புறும்
விண் தொடர் வரைகளும் மேரு வானவும்
பண்டி தன் மிசை உறப் பதித்தது ஓக்குமால்
கொண்டு இயல் சிகரி உள் கூட சாலைகள்.
7
   
4200.
மெய்ச் சுடர் கெழுமிய வியன் பொன் கோபுரம்
உச்சியில் தொடுத்திட முழங்கு கேதனம்
அச்சுதனாம் சிவன் அளவை தீர் முகத்து
உச்சி தொறும் இருந்து அரா ஒலித்தல் போலும் ஆல்.
8
   
4201.
திசை படு சிகரியில் செறிந்த வான் கொடி
மிசை படும் அண்டம் மேல் விடாமல் எற்றுவ
பசை படும் அதள் உடைப் பணை அகத்தினில்
இசை படப் பலகடிப் பெறிதல் போலும் ஆல்.
9
   
4202.
விண்ணவர் தாம் உறை வியன் பதத்தொடும்
திண் நிலை இடம் தொறும் சிவண வைகினர்
அண்ணல் அம் கோபுரம் அதனில் கை வலோன்
பண் உறும் ஓவியப் பாவை என்னவே.
10
   
4203.
என்பன பலபல இயம்பி ஈறு இலாப்
பொன் புனை தோணி அம் புரிசைச் சூழலின்
முன்பு உறு கோபுர வனப்பு முற்றவும்
நன் பெரு மகிழ்ச்சியான் நம்பி நோக்கினான்.
11
   
4204.
புதஉறு கோபுரப் பொருவு இல் வாய்தல் உள்
மதவலி உக்கிரன் மயூரன் ஆதியோர்
அதிர் தரு நாற்படை அயுதம் சுற்றிடக்
கதம் ஒடு காப்பது காளை நோக்கினான்.
12
   
4205.
நோக்கிய திறலவன் நொச்சி தாவியே
ஆக்கமொடு அமர் தரும் அவுணன் கோயில் உள்
ஊக்கமொடு உம்பரான் ஓடி முன் உறு
மேக்கு உயர் சூளிகை மிசையில் போயினான்.
13
   
4206.
சூளிகை மீமிசை துன்னுபு சூரன்
மாளிகை உள்ள வளம் தனை எல்லாம்
மீளரி தாவிழியோடு உளம் ஏவ
ஆளரி நேர்தரும் ஆண்டகை கண்டான்.
14
   
4207.
கண்டதொர் அண்ணல் கடும் திறல் வெம் சூர்
திண் திறல் வாள் அரி சென்னி கொள் பீடத்து
எண் தகும் ஆணை இயற்றிய செம் பொன்
மண்டபம் வைகுறும் வண்மை தெரிந்தான்.
15
   
4208.
அரும் தவ வேள்வி அயர்ந்து அரன் ஈயும்
பெருந் திரு மிக்கன பெற்று உலகு எல்லாம்
திருந்து அடி வந்தனை செய்திட வெம் சூர்
இருந்திடு கின்ற இயற்கை இசைப்பாம்.
16
   
4209.
ஐ இரு நூறு எனும் யோசனை ஆன்றே
மொய் ஒளி மாழையின் முற்றவும் ஆகித்
துய்ய பன் மாமணி துஞ்சிவில் வீசி
மையறு காட்சி கொள் மண்டபம் ஒன்றின்.
17
   
4210.
மேனகை யோடு திலோத்தமை மெய்யின்
ஊனம் இல் காமர் உருப்பசி ஆதி
வானவர் மங்கையர் வட்டம் அசைத்தே
மேல் நிமிர் சீகரம் வீசினர் நிற்ப.
18
   
4211.
சித்திர மாமதி செம் கதிர் பாங்காய்
முத்து அணி வேய்ந்து முகட்டு இள நீலம்
உய்த்து மணித் தொகை உள்ளம் அழுத்தும்
சத்திரம் ஆயின தாங்கினர் நிற்ப.
19
   
4212.
வெள்ளடை பாகு வெளிற்று உறு சுண்ணம்
கொள்ளும் அடைப்பை மென் கோடிகம் வட்டில்
வள்ளுடை வாளிவை தாங்கி மருங்காய்த்
தள்ளரும் மொய்ம்புள தானவர் நிற்ப.
20
   
4213.
வெம்மை கொள் பானுவை வெம் சிறை இட்ட
செம்மலும் ஏனைய சீர் கெழு மைந்தர்
மும்மை கொள் ஆயிர மூவரும் ஆகத்
தம் முறையால் புடை சார்ந்தனர் வைக.
21
   
4214.
பாவ முயன்று பழித்திறன் ஆற்றும்
காவிதி யோர் கருமங்கள் முடிப்போர்
ஆவது ஒர் சாரணராய் படை மள்ளர்
ஏவரும் ஞாங்கரின் எங்கணும் நிற்ப.
22
   
4215.
நாடக நூல் முறை நன்று நினைந்தே
ஆட அரம்பையராய் உளர் எல்லாம்
சேடியர் கின்னரர் சித்தர் இயக்கர்
பாடு உற வீணைகள் பண்ணினர் பாட.
23
   
4216.
ஏகனை ஈசனை எந்தையை எண்ணார்
ஆகிய தொல் அவுணக் குழு என்ன
வேகும் உளத்தினர் கஞ்சுகர் வெங்கண்
மாகதர் சூரல் பிடித்து வழுத்த.
24
   
4217.
உள்ளிடும் ஆயிரம் யோசனை எல்லை
கொள் இடமான குலப் பெரு மன்றம்
தள் இட வற்ற சனங்கள் மிகுத்தே
எள் இட வெள்ளிடம் இன்று என ஈண்ட.
25
   
4218.
வச்சிர மெய் வயிடூரியம் ஒண் பல்
உச்சியில் வால் உளையே ஒளிர் முத்தம்
அச்சுறு கண் மணி ஆம் அரி மாவின்
மெய்ச் சிரம் ஏந்தும் வியன் தவிசின் கண்.
26
   
4219.
மீ உயர் நீல வியன் கிரி உம்பர்
ஞாயிறு காலையின் நண்ணிய வாபோல்
பாய் இருள் கீறிய பன்மணி கொண்ட
சேய பொன் மா முடி சென்னியின் மின்ன.
27
   
4220.
கறுத்தவ ராத்துணை கண்டிரு வெய்யோர்
உறுப்பிடை கவ்வி ஓசிந்து தலைப் போய்
முறுக்கிய வாலொடு முன்கலந்து என்ன
மறுத்தவிர் குண்டலம் வார்குழை தூங்க.
28
   
4221.
வீறிய மா மணி வெற்பின் மிசைக்கண்
ஏறிய ஒண் பகல் இந்து இயற்கை
மாறிய வந்தென மால் வள மாகும்
நீறு செறிந்திடு நெற்றி இலங்க.
29
   
4222.
விண்டு உமிழ் கின்ற வியன் புழை தோறும்
தண் துளி வந்து அமர் தன்மையது என்னப்
புண்டரிகம் பொறை போற்றி உயிர்க்கும்
வண் தரளத் தொடை மார்பின் வயங்க.
30
   
4223.
பங்கம் இல் சந்தொடு பாளிதம் நானம்
குங்குமம் ஏனைய கந்திகள் கூட்டி
அங்கம் அதன் கண் அணிந்தன அண்டம்
எங்கும் உலாவி இருங்கடி தூங்க.
31
   
4224.
வான் திகழ் நீல் நிற மா முகிலின் பால்
தோன்றிய மின் புடை சுற்றியது என்ன
ஏன்று உள அண்டம் எனைத்தையும் ஆற்றும்
ஆன்று உயர் தோள் இடை அங்கதம் மல்க.
32
   
4225.
மெய்த்துணை ஆம் இரு வெம் பணி ஞாலம்
பைத்தலை கொள்வ பரம் பொறை ஆற்றா
தெய்த்தன பூண் கொடி யாப்பு உறுமா போல்
கைத்தல முன் கடகம் செறிவு எய்த.
33
   
4226.
நீலம் அதாய நெடும் கிரி மேல் பால்
வாலிய கங்கை வளைந்திடு மாபோல்
கோல மிடற்று இடை கோவை கொள் முத்தின்
சால் உறு கண்ட சரங்கள் இமைப்ப.
34
   
4227.
வீர மடந்தையர் மேதக நாளும்
சீரிய தோள் இணை செல் கதி என்ன
ஏரியல் பல் மணி இட்டு அணி செய்த
ஆர அடுக்கல் பொன் ஆகம் இலங்க.
35
   
4228.
அந்தியின் வண்ணமும் அத் தொளி ஊரும்
சுந்தர மால் இடை சுற்றிய வா போல்
முந்து பராரை கொள் மொய்ம் மணி ஆடை
உந்தியின் ஒண் பணியோடு வயங்க.
36
   
4229.
இரு பணி பார் முகம் இட்டிட வீட்டி
உரு மொடு மின்னும் உலப்பில சுற்றிக்
கரு மிடறு ஊடு கலந்து என நுண் னூல்
குரை கழல் வார்கழல் கொண்டு குலாவ.
37
   
4230.
மென்மணி மாழையின் வேதன் இயற்றிப்
பன்மணி மீது படுத்திய பல் பூண்
தொன்மணி மெய்புனை சூர பன்மா ஓர்
பொன் மணி மா முகில் போல இருந்தான்.
38
   
4231.
இருந்திடு கின்ற இயற்கை விழிக்கு ஓர்
விருந்து அமுதாக வியப்பொடு நோக்கிச்
சுரந்திடும் அன்பொடு சூளிகை வைகும்
பெரும் திறல் மாமுகில் இங்கு இவை பேசும்.
39
   
4232.
மூவரின் முந்திய முக்கணன் அம்பொன்
சேவடி பேணிய தேவர்கள் தம் உள்
தூவுடை வேல் உள சூரபன் மாப்போல்
ஏவர் படைத்தனர் இத்திரு எல்லாம்.
40
   
4233.
ஓய்ந்து தவம் புரிவோருள் உவன் போல்
மாய்ந்தவர் இல்லை மறத்தொடு நோற்றே
ஆய்ந்திடின் முக்கண் எம் ஐயனும் இன்னோற்கு
ஈந்தது போல் பிறர்க்கு ஈந்ததும் இன்றால்.
41
   
4234.
பாடு உறு வேள்வி பயின்று அழல் புக்கும்
பீடு உறும் இவ்வளம் ஆயின பெற்று
நீடு உறு மாறு நினைந்திலன் வெய்யோன்
வீடு உறு கின்ற விதித் திறன் அன்றோ.
42
   
4235.
மெய்ச் சோதி தங்கு சிறு கொள்ளி தன்னை விரகு இன்மை                             கொண்ட குருகார்
கச்சோதம் என்று கருதிக் குடம்பை தனின் உய்த்து                             மாண்ட கதை போல்
அச்சோ எனப் பல் இமையோரை ஈண்டு சிறை வைத்த                             பாவம் அதனால்
இச்சூர பன்மன் முடிவெய்து நாளை இதனுக்கு ஒர் ஐயம்                             இல்லை.
43
   
4236.
மிகையான வீரம் வளம் ஆற்றல் சால மேவுற்று உளோரும்                                     இறையும்
பகையார் கண் ஏனும் உளராகி வாழ்தல் பழுதன்றி நன்றி                                     படுமோ
மகவானை மங்கை யுடனே துரந்தும் அவர் மைந்தனோடு                                     சுரரை
அகலாமல் ஈண்டு சிறை செய்த பாவம் அதனால் இழப்பன்                                     அரசே.
44
   
4237.
மன்னும் திறத்தின் அமர் சூரபன்மன் மாமக்கள் சுற்றம்                                நகரம்
முன்னும் படிக்கும் அரிதான செல்வம் உடன் ஆளை ஈறு                                படு மேல்
முன் என்பவர்க்கு முன்னாகும் ஆறுமுகன் நல்கும் முத்தி                                அலதேல்
என் உண்டு நாளும் வினை செய்து உழன்ற இவன் ஆர்                                உயிர்க்கு நிலையே.
45
   
4238.
என்று இத் திறங்கள் அருளோடு பன்னி எழில் கொண்ட                            வேர மிசையே
துன் உற்ற வீரன் வளனோடு இருந்த சூரன் முன் ஏகல்                            துணியாக்
குன்றத்தினின்றும் இவர் எல்லை போன்று குமரேசன்                            எந்தை அடிகள்
ஒன்றக் கருத்தின் இடை கொண்டு எழுந்து நடை கொண்டு                            அவைக் கண் உறுவான்.
46
   
4239.
நலம் செய் சூளிகை நீங்கி விண் நெறிக் கொடு நடந்து
கலம் செய் திண்திறல் வாகுவாம் பெயர் உடைக் கடவுள்
வலம் செய் வாள் படை அவுணர் கோன் மன்னி                                  வீற்றிருக்கும்
பொலும் செய்கின்ற அத்தாணி மண்டபத்து இடைப்                                  போனான்.
47
   
4240.
எல்லை இல்லது ஓர் பெரும்திரு நிகழ வீற்று இருந்த
மல்லல் அம் கழல் இறைவனைக் குறுகி மாற்றலரால்
வெல்ல அரும் திறல் வீரவாகுப் பெயர் விடலை
தொல்லை நல் உருக் காட்டினன் அவைக்கு எலாம்                                      தோன்ற.
48
   
4241.
ஒற்றை மேருவில் உடையதோர் பரம் பொருள் உதவும்
கொற்ற வேல் உடைப் புங்கவன் தூது எனக் கூறி
இற்றை இப்பகல் அவுணர் கோன் கீழியான் எளிவாய்
நிற்றல் எம்பிரான் பெருமையின் இழிபு என நினைந்தான்.
49
   
4242.
மாயை தந்திடு திருமகன் மன்னி வீற்று இருக்கும்
மீ உயர்ந்திடும் அரி அணைக்கு ஒருபுடை விரைவில்
போய் இருப்பது மேல் அன்று புன்மையோர் கடனே
ஆயது அன்றியும் பாவம் என்று உன்னினான் அகத்துள்.
50
   
4243.
இனையது உன்னியே அறுமுகப் பண்ணவன் இருதாள்
நினையும் எல்லையில் ஆங்கு அவன் அருளினால் நிசியில்
தினகரத் தொகை ஆயிர கோடி சேர்ந்தது என்னக்
கனக மா மணித் தவிசு ஒன்று போந்தது கடிதின்.
51
   
4244.
நித்திலப்படு பந்தரும் சிவிகையும் நெறியே
முத் தமிழ்க்கு ஒரு தலைவனாம் மதலைக்கு முதல்வன்
உய்த்தவாறு எனக் குமரவேள் வீரனுக்கு உதவ
அத்தலைப்பட வந்தது மடங்கல் ஏறு அணையே.
52
   
4245.
பன்னிரண்டு எனும் கோடி வெய்யவ ரெலாம் பரவப்
பொன்னின் மால் வரை திரைக்கடல் அடைந்தவா போல
மின் உலாவிய பொலன் மணிப் பீடிகை விறல் சேர்
மன்னர் மன்னவன் அவைக் களத்து ஊடு வந்ததுவே.
53
   
4246.
சிவன் மகன் விடு பொலன் மணித் தவிசு சேண் விளங்கிப்
புவன முற்று உறத் தன் சுடர் விடுத்தலில் பொல்லாப்
பவ மனத்தொடு தீமையே வைகலும் பயிற்றும்
அவுணர் மெய்யையும் தெய்வதப் படிவம் ஆக்கியது ஆல்.
54
   
4247.
அயில் எயிற்று உடை அவுணர்கள் அணிகலன் தன்னில்
குயில் உடைப் பல மணிகளும் குமர வேள் உய்த்த
இயல் உடைப் பெரும் தவிசு ஒளி பரத்தலின் இரவி
வெயில் இடைப் படு மின்மினி போல் விளங்கிலவே.
55
   
4248.
செக்கர் வான் நிற மதிக்கதிர் உடுக்களின் திரட்சி
தொக்க பாயிருள் பலவகை எழிலியின் துளக்கம்
மிக் கெலாம் செறி மாலையின் உம்பர் மேல் வெய்யோன்
புக்கதே எனத் தொலைத்ததால் அச்சபைப் பொலிவை.
56
   
4249.
திசை முகத்தனும் செயற்கு அரும் தவிசு ஒளி செறிந்தே
அசை வரும் திறல் சூரபன்மா எனும் அவுணன்
இசைமை தன்னையும் ஆணை தன்னையும் அவன்                                     யாக்கை
மிசை கொள் பேர் அணிக் கதிரையும் விழுங்கின                                     விரைவில்.
57
   
4250.
அனைய வான் தவிசு அவுணன் நேர் இருத்தலும் அது                                           கண்டு
எனது நாயகன் விடுத்தனன் போலும் என்று எண்ணி
மன மகிழ்ச்சியால் அறுமுகப் பிரான் அடி வழுத்தி
இனைய நாடுவான் இருந்தனன் ஆங்கு அதன் மிசையே.
58
   
4251.
பெரும் தனிச் சுடர் எறித்திடு பொன் மணிப் பீடத்து
இருந்து மேதகு சிறப்பொடு விளங்கிய ஏந்தல்
விரிந்த பல் கதிர் உடைய தோர் வெய்யவன் நடுவண்
பொருந்தி வைகிய கண்ணுதல் பரமனே போன்றான்.
59
   
4252.
மின் இருந்த வேல் அவுணர் கோன் எதிர் உறும் விடலை
முன் இருந்த ஆடு அகன்றனை அடு முரண் சீயம்
செம் நிணம் கவர்ந்து அலமர அணுகி முன் எற்றப்
பொன் இரும் தவிசு இருந்திடும் வீரனே போன்றான்.
60
   
4253.
வெம்மைக் கால் இருள் வேலை போல் மூடி விண்                                      புவியைத்
தம்முள் சித்தரிற் காட்டலும் சதுர் முகத்து ஒருவன்
நம் ஒத்தார் இலை என்றிடச் சிவன் புகழ் நவிலும்
செம்மைத் தொல் குண மாலும் நேர்ந்து இருந்தனன்                                      திறலோன்.
61
   
4254.
இவற்று இயற்கையால் வீரவாகுப் பெயர் ஏந்தல்
நிவப்பின் மிக்கது ஓர் பொன் மணித் தவிசின் மேல்                                     நெஞ்சின்
உவப்பும் வீரமும் மேதக இருத்தலும் உற்ற
அவைக் களத்தினர் யாவரும் கண்டனர் அதனை.
62
   
4255.
நோற்றல் முற்று உறும் வினைஞர் பால் நொய்தின் வந்து                                       இறுத்த
ஆற்றல் சால் வளம் போலவே அரியணை அதன் கண்
தோற்று மேலவன் நிலைமையைக் காண்டலும் துளங்கி
ஏற்ற அற்புதம் எய்தினர் அவை களத்து இருந்தார்.
63
   
4256.
வார் இலங்கிய கழல் மன்னன் முன்னரே
தார் இலங்கிய மணித் தவிசின் உற்றுளான்
வீரனும் போலும் ஆல் வினையம் ஓர் கிலேம்
யார் இவன் கொல் என இயம்புவார் சிலர்.
64
   
4257.
முந்தி இவண் கண்டிலம் முடிவில் ஆற்றல் சேர்
எந்தை முன் இது பொழுது இருத்தல் மேயினான்
நம் தமை நீங்கியே நடுவணே இவன்
வந்தது எவ்வாறு என வழங்குவார் சிலர்.
65
   
4258.
ஒப்பு அரும் சனங்களோடு ஒன்றி நம் எலாம்
தப்பினன் புகுந்தனன் தமியன் என்னினும்
இப் பெரும் தவிசு இவண் இருந்து ஆற்றவும்
அற்புதம் அற்புதம் ஆம் என்பார் சிலர்.
66
   
4259.
சீய மெல் அணையொடு செம்மல் முன்னரே
ஏய் எனும் அளவையின் ஈண்டு தோன்றினான்
ஆய்பவர் உண்டு எனின் அறைவன் நம்மினும்
மாயன் இங்கு இவன் என வகுக்கின்றார் சிலர்.
67
   
4260.
அறை கழல் ஒருவனை அவையத்து என் முனம்
குறுகிய விடுத்தது என் குழாம் கொண்டீர் எனா
இறையவன் நங்களை யாது செய்யுமோ
அறிகிலம் எனப் பதைத்து அழுங்குவார் சிலர்.
68
   
4261.
ஒட்டலன் ஒருவனை ஒறுத்திடாது இவண்
விட்டது என் என்று இறை வெகுளு முன்னரே
கிட்டினம் அவன் தனைக் கெழுமிச் சுற்றியே
அட்டனம் வருதும் என்று அறைகின்றார் சிலர்.
69
   
4262.
விளி விலாத் திறல் உடை வேந்தன் தன் எதிர்
களி உலா மனத்தொடு கடிதின் உற்று உளான்
தெளிவிலா மாயையின் திறலன் போலும் ஆல்
அளியனோ நுங்களுக்கு அவன் என்பார் சிலர்.
70
   
4263.
மன்னவன் எதிர் உற வந்துளான் தனை
அன்னவன் பணியினால் அடுவது அல்லதை
முன்னுற அதனை யாம் உன்னுவோம் எனில்
பின்னது பிழை எனப் பேசுவார் சிலர்.
71
   
4264.
யார் இதை அறிகுவர் இனையன் இவ்விடைச்
சூர் உற உன்னியே துன்னினான் கொலோ
சேரலர் பக்கமாய்ச் சேர்ந்து உளான் கொலோ
ஓருதும் மேல் என உரை செய்வார் சிலர்.
72
   
4265.
கடும் தகர் முகத்தவள் கை ஒன்று அற்ற நாள்
தடிந்தனன் காவலோர் தம்மை மன்னவன்
தொடும் கழல் இவன் வரும் சூழ்ச்சி நோக்கி இன்று
அடும் பலர் தம்மை என்று அச்சுற்றார் சிலர்.
73
   
4266.
வாசவன் முதலினோர் மருளத் தொல்லை நாள்
தேசு உறும் விஞ்சையர் வடிவில் சேர் உறீஇ
ஆசிலோர் புன் இறுத்து ஆணை காட்டிய
ஈசனே இங்கிவன் என்கின்றார் சிலர்.
74
   
4267.
ஆயதோர் காசிபன் அதிதி தங்கள் பால்
சேயனாய் வந்த ஒரு சிந்தன் போன்று உலாய்த்
தூயவான் புவி எலாம் அளப்பச் சூழ்ந்திடு
மாயனே இவன் என மதிக்கின்றார் சிலர்.
75
   
4268.
விண் தொடு சூளினை விளம்பி விண் புவி
உண்டு ஒரு கணம் தனில் உந்தி காட்டிய
புண்ட ரிகத்தனே புணர்ப்பின் இவ் உருக்
கொண்டனன் ஆம் எனக் கூறுவார் சிலர்.
76
   
4269.
மூவருள் ஆகுமோ முடிவின் மாதிரத்
தேவருள் ஆகுமோ சேணில் வைகிய
தாவரு முனிவரர் தம் முள் ஆகுமோ
ஏவருள் ஆகுமோ இவன் என்பார் சிலர்.
77
   
4270.
மாலை தாழ் மார்புடை மன்னற்கு இன்னமும்
ஆலம் ஆர் கண்டனே அருளின் இன்னதோர்
கோலமாய் வரம் தரக் குறுகினான் கொலோ
மேல் யாம் உணருதும் விளைவு என்பார் சிலர்.
78
   
4271.
காற்றுடன் அங்கியும் கடும் கண் காலனும்
கூற்றனும் ஓர் உருக் கொண்டு வைகிய
தோற்றம் இது அன்றி இச் சூரன் முன் வரும்
ஆற்றலர் யார் என அறைகின்றார் சிலர்.
79
   
4272.
குன்றமும் அவுணனும் குலைந்து பாடு உற
ஒன்று ஒரு வேலினை ஒருவன் உய்த்தனன்
என்றனர் அன்னவன் ஈண்டு மன்னன் முன்
சென்றனனோ எனச் செப்புவார் சிலர்.
80
   
4273.
செற்றிய பன்மணிச் செம்பொன் மன்றமும்
முற்றிடும் அவுணரும் ஒளிறு வான் கதிர்
மற்று இவன் அணிகளின் தவிசின் வாள் பட
அற்றது பகல் சுடராய் என்பார் சிலர்.
81
   
4274.
இருந்திடும் அவுணர்கள் யாரும் இத்திறம்
வரும் திறம் நினைகிலர் மறந்தும் இவ்விடை
தெரிந்திடின் இங்கு இது திறல் கொள் மன்னனே
புரிந்திடு மாயையின் புணர்ப்பு என்பார் சிலர்.
82
   
4275.
நென்னலின் இறந்து உயிர் நீத்த தாரகன்
முன்னுறு தன் உரு முடிய இப் பகல்
இன்னது ஓர் பொன் உரு எடுத்து முன்னை பால்
துன்னினன் கொல் எனச் சொல்கின்றார் சிலர்.
83
   
4276.
சங்கம் மேவினர் இனையன அளப்பில சாற்ற
அங்கண் ஓர் அரிமான் தவிசு இருக்கையில் அவுணன்
துங்கம் எத்துணை அத்துணைச் சிறப்பொடு தோன்றிச்
செம் கை வேலவன் புகழ்ந்து வீற்று இருந்தனன்                                      திறலோன்.
84
   
4277.
அறிவர் மேலவன் தவிசில் வீற்று இருத்தலும் அவுணர்க்கு
இறைவன் ஆங்கு அது நோக்கியே எயிற்று அணி                                       கறித்துக்
கறுவியே நகைத்து உரப்பி மெய் வியர்ப்பு எழக் கண்கள்
பொறி சொரிந்திடப் புகை உமிழ்ந்து இனையன புகல்வான்.
85
   
4278.
சுற்ற நீங்கியே இலை உண்டு விலங்கு எனச் சுழன்று
வற்றன் மா மரக் காட்டகத்துக் இருந்து உடல் வருத்தும்
சிற்று உணர்ச்சியோர் வல்ல சித்து இயல்பு இது சிறியோய்
கற்று உளாய் கொலாம் காட்டினை நமது முன் காண.
86
   
4279.
துன்று வார்சடை யோகினோர் அல்லது தொலைந்து
பின்று தேவரும் வல்லரிச் சிறு தொழில் பெரிதும்
ஒன்றும் அன்னதை இவ்விடைக் காட்டலர் உன்போல்
நன்று நன்று நீ நம் முனர்க் காட்டிய நடனம்.
87
   
4280.
சித்தர் ஆயினோர் செம் கண் மால் முதலிய தேவர்
இத் திறத்தன காட்டுதற்கு அஞ்சுவர் என் முன்
தத்தம் எல்லையில் புரிந்திடல் அல்லது தமியோய்
பித்தனே கொலாம் நமக்கு இது காட்டுதல் பிடித்தாய்.
88
   
4281.
உரை செய் இந்நகர் மகளிரும் செய்வர் ஊன் முற்றாக்
கருவின் உள் உறு குழவியும் செய்திடும் கருத்தில்
வரைகளும் செயும் மாக்களும் செய்யும் மற்று அதனால்
அரியது அன்று அரோ பேதை நீ புரிந்திடும் ஆடல்.
89
   
4282.
என்னை எண்ணலை எதிர் உற இருந்தனை இதனான்
மின்னல் வாள் படை உறை கழித்து ஒய்யென வீசிச்
சென்னி வீட்டுவன் நின் செயல் முற்றவும் தெரிந்து
பின்னர் அத்தொழில் புரிவன் என்றே உளம் பிடித்தேன்.
90
   
4283.
ஏண் உற்றார் எலாம் வழுத்திய அவுணரும் யாமும்
காணக் காட்டினை நீ அறி விஞ்சையைக் கண்டாம்
பூணித்தாய் என வரும் உனக்கு இத் துணைப் பொழுது
பாணித்து ஆவியை அளித்தனன் அன்னது பரிசே.
91
   
4284.
வாசவன் கரந்து ஓடினன் பிறர் இது மதியார்
கேசவன் இது நினைகிலன் மறைகளின் கிழவோன்
ஆசி கூறியே திரிந்திடும் அவர்க்கு எலாம் முதலாம்
ஈசன் என்னிடை வருகிலன் யாரை நீ என்றான்.
92
   
4285.
தீயன் இத்திறம் உரைத்தன கேட்டலும் திறலோன்
காய மீன் எனக் காயமேல் வியர்ப்பு எழக் கனன்று
மாயை செய்து உழல் வலி இலார் போல் எனை மதித்தாய்
ஆய புந்தியை விடுமதி கேள் இது என்று அறைவான்.
93
   
4286.
புரந்தரன் குறை அயன் முதல் அமரர் தம் புன்மை
வருந்தும் வானவர் சிறை எலாம் நீக்கி மற்று அவர்தம்
திருந்து தொல் இறை உதவுவான் செந்தி மா நகர் வந்து
இருந்த ஆதி அம் பண்ணவன் அடியனேன் யானே.
94
   
4287.
துன்னு தானை கட்கு அரசராய் அறுமுகத் தொல்லோன்
பின்னர் வந்து உளார் ஒன்பதோடு இலக்கம் ஆம்                                    பெயரால்
அன்னவர்க்கு உளே ஒருவன் யான் நந்தி பாங்கு                                    அமர்ந்தேன்
ஒன் அலார் புகழ் வீர வாகு எனும் பெயர் உள்ளேன்.
95
   
4288.
தாரகப் பெயர் இளவலைத் தடவரை தன்னை
ஓர் இறைக்கு முன் படுத்த வேல் அறுமுகத்து ஒருவன்
சூர் எனப்படு நின்னிடைத் தமியனைத் தூது ஆப்
பேர் அருள் திறத்து உய்த்தனன் என்றனன் பெரியோன்.
96
   
4289.
கொடுத்திடாத வென் கொண்டவன் உரைத்த சொல்                                கொடுங்கோல்
நடத்து மன்னவன் கேட்டலும் ஆங்கு அவன் நம் மேல்
விடுத்த காரணம் என்னையோ விளம்புதி என்ன
எடுத்து மற்று இவை எம்பிரான் தூதுவன் இசைப்பான்.
97
   
4290.
மருத்துவன் தனைச் சசியொடு துரந்து சேண் வதிந்த
புரத்தை ஆர் அழல் கூட்டியே அனையவன் புதல்வன்
ஒருத்தனோடு பல் அமரரை உவளகம் தன்னில்
இருத்தினாய் என வினவினன் அறுமுகத்து இறைவன்.
98
   
4291.
இந்திராதிபர் அயன் முதல் பண்ணவர் யாரும்
வந்து வந்து வேண்டிடுதலும் அவர் குறை மாற்றப்
புந்தி கொண்டு பன்னிரு புயத்து எம்பிரான் புவிக்கண்
அந்தம் இல் துறை பாரிடத் தானையோடு அடைந்தான்.
99
   
4292.
தரையின் நண்ணி நின் இளவலை வரை யொடு தடிந்து
நெருநலே வந்து செந்தியின் வைகினான் நினையும்
விரைவின் வந்து அட உன்னினான் இன்று நும் இசையே
அருள் கொடே சில புகன்று எனைத் தூண்டினன்                                   அதுகேள்.
100
   
4293.
நிறையும் இந்துவைப் பட வராக் கவர்ந்து என நிகளச்
சிறை படுத்தியே அமரரை வருத்தினை செய்யும்
மறை ஒழுக்கமும் நீக்கினை உலகம் ஆள் மன்னர்
அறமும் அன்று இது வீரர் தம் செய்கையும் அன்று ஆல்.
101
   
4294.
தாதை ஆகியோன் காசிபன் ஆங்கு அவன் தனயன்
ஆதலால் உனக்கு அமரரைச் சிறை செய்வது அறனோ
வேத மார்க்கமும் பிழைத்தனை சிறு பொருள் விழைந்தாய்
நீதியால் உலகு அளிப்பதே அரசர் தம் நெறியே.
102
   
4295.
உலத்தின் மாண்ட தோள் சலந்தரன் அந்தகன் ஒருங்கே
கலத்தல் இல்லது ஓர் புரத்தவர் ஆதி ஓர் கடவுள்
குலத்தை வாட்டலின் இமைப்பினில் வீந்தனர் கொடியோய்
நிலத்தின் உம்பரை வருத்துதல் அழகிதோ நினக்கே.
103
   
4296.
மெய்மை நீங்கியே கொலை களவு இயன்று மேல் உள்ள
செம்மை யாளரைச் சீறியே அணங்கு செய் தீயோர்
தம்மில் ஆற்ற அரும் பழி சுமந்து ஒல்லையில் தமரோடு
இம்மை வீடுவர் எழுமையும் துயரின் ஊடு இருப்பார்.
104
   
4297.
இங்ஙனம் திரு நீங்கியே துயர் உழந்து இறப்பர்
அங்ஙனம் பெரிதாய் இருள் மூழ்குவர் அதன் பின்
உங்ஙனம் பிறந்து அயருவர் என்று மீது உலவார்
எங்ஙன் உய்வரோ பிறர் தமக்கு அல்லல் செய்திடுவோர்.
105
   
4298.
தீது நல்லன ஆயிரு திறத்தவும் தெரிந்தே
ஏது இலார்க்கு அவை செய்வரேல் தமக்கு உடன் எய்தும்
பேதை நீரையாய் அமரரைச் சிறை செய்த பிழையால்
மா துயர்ப் படல் அன்றியே இறுதியும் வரும் ஆல்.
106
   
4299.
அண்டர் ஆற்றலை வவ்விய தாரகன் ஆவி
உண்ட கொற்ற வேல் இருந்தது விடுத்திடின் உனையும்
கண்ட துண்டம் அது ஆக்கும் ஆல் அறநெறி கருதித்
தண்டம் வல்லையில் புரிந்திலன் இத்துணை தாழ்த்தான்.
107
   
4300.
கெடுதல் இல்லது ஓர் அமரர்கள் சிறை இடைக் கிடப்ப
விடுதல் செய்தனை பல் உகம் அவர் தமை இன்னே
விடுதல் உய்வகை ஆகும் ஆல் மறுத்தியேல் விரைந்து
படுதலே நினக்கு உறுதி ஆம் முறையும் அப் பரிசே.
108
   
4301.
ஆண்டு அளப்பில நோற்றனை வேள்வி நின்று ஆற்றி
மூண்ட தீ இடை மூழ்கினோய்க் கெந்தை முன் அளித்த
மாண்டிடாத பேர் ஆயுளைத் திருவொடும் வாளா
ஈண்டு ஒர் புன்னெறி ஆற்றியே இழுக்குவது இயல்போ.
109
   
4302.
சைய மேல் படு வளத்தொடு நீயும் நின் தமரும்
உய்ய வேண்டுமேல் அமரர் தம் சிறையினை ஒழித்து
வைய மேல் அறத்து இயல்புளி வாழி மற்று இதனைச்
செய்யலாய் எனின் ஈங்கு வந்து அடுவன் ஆல் திண்ணம்.
110
   
4303.
என்று மற்று இவை யாவையும் வரைபக எறிந்தோன்
உன் தனக்கு அறைக என்றனன் நீங்கு நீ உம்பர்
வன் தளைச் சிறை நீக்கியே அறத்தின் இவ் வளத்தை
நன்று துய்த்தனை நெடிது நீ வாழ்க என நவின்றான்.
111
   
4304.
மறம் அகன்றிடா வீரன் இங்கு இனையன வகுத்தே
அறையும் வாசகம் கேட்டலும் வெகுளி மூள் அகத்தன்
பொறி உமிழ்ந்திடு கண்ணினன் புகை உமிழ் உயிர்ப்பன்
எறியும் அங்கையன் இறந்திடும் முறுவலன் இசைப்பான்.
112
   
4305.
மேலை ஆயிரத்து எட்டு எனும் அண்டமும் வென்றே
ஏலு கின்றது ஓர் தனி இறை ஆகிய எனக்குக்
கோல வால் எயிறின்ன முன் தோன்றிலாக் குதலைப்
பாலனே கொலாம் இனையன புந்திகள் பகர்வான்.
113
   
4306.
விறலின் மேதகும் அவுணர் ஆம் வலி இலார் மிகவும்
வறியர் ஆகிய தேவர் ஆம் மேலவர் மழலைச்
சிறுவராம் தனி முதல்வற்கும் அமைச்சியல் செய்வார்
எறியும் நேமி சூழ் உலகத்து வழக்கம் நன்று இதுவே.
114
   
4307.
நறை கொடார் முடி அவுணர் தம் குலத்தினை நலித்து
வறுமை செய்தனர் கடவுளர் அவர் திரு மாற்றிக்
குறிய ஏவலும் கொண்டனன் ஒழுக்கமும் கொன்றேன்
சிறையும் வைத்தனன் எம் குடித்து அமர் முறை செய்தேன்.
115
   
4308.
நெடிய மால்மகன் உறங்கு நாள் ஆணையை நீங்கித்
தொடு பெரும் கடல் உலகு எலாம் கொள்ளினும் சுரரை
விடுவன் அல்லன் யான் வீடரும் சிறையினை விண்மேல்
உடைய அண்டத்தின் உச்சியின் ஒருதலை உய்ப்பேன்.
116
   
4309.
தப்பல் செய்திடு மகபதி முதலினோர் தமையும்
இப் பதிக் கணே கொணர்ந்தனன் சிறை செய இருந்தேன்
கைப்புகும் சிறை விடுவனோ விடுகிலன் கண்டாய்
ஒப்பு அரும் திறல் சூரன் என்று ஒரு பெயர் உடையேன்.
117
   
4310.
மின்னு வச்சிரப் படிவமும் வேறு பல் வரமும்
முன் ஒர் ஞான்று தன் தாதை எற்கு அளித்திடும்                                 முறையைப்
பின்னர் யாவரே பெயர்ப்பவர் பெரும் சமர் இயற்றி
என்னை ஆற்றலால் வென்றிடு நீர்மையோர் எவரே.
118
   
4311.
தான மா முகத் தாரக எம்பியைத் தடிந்த
மான வேல் படை அவன் மிசை வருவது வலித்தேன்
பானல் வாய்ச் சிறு சேயொடு நீ அமர் பயிறல்
ஊனமே எனத் தடுத்தனர் ஆதலால் ஒழிந்தேன்.
119
   
4312.
தூங்கு கையுடைத் தாரக இளவலைத் தொல்லை
ஓங்கல் தன்னொடும் அட்டது நென்னலே உணர்ந்தேன்
பாங்கி னோரை அப் பாலன் மேல் உந்தி என் பழியும்
வாங்கு கின்றனன் நாளையே காண்டியான் மன்னோ.
120
   
4313.
அரிகள் எண் இலர் இந்திரர் எண் இலர் அல்லாச்
சுரர்கள் எண் இலர் அண்டங்கள் தொறும் தொறும்                                     இருந்தார்
செருவின் ஆற்றலர் வழுத்தியே போயினர் சிவன் கண்
நெரு நல் வந்திடு சிறுவனோ என் எதிர் நிற்பான்.
121
   
4314.
ஓதி என் பல அமரரை விடுகிலன் உணர்ச்சி
ஏதும் இல்லது ஓர் மகவு தன் புன் மொழி ஏற்றுப்
பேதை ஆதலின் ஒற்றனாய் வந்தனை பிழைத்துப்
போதி நின் உயிர் தந்தனன் யான் எனப் புகன்றான்.
122
   
4315.
அகிலம் ஆள்பவன் இங்கு இவை மொழிதலும் ஐயன்
வெகுளி வெம் கனல் சிந்திட உளம் சுட வெகுண்டு
புகையும் அங்கியும் உயிர்ப்பு உற மயிர்ப் புறம் பொடிப்ப
நகையும் வந்திடச் சிவந்திட விழி இவை நவில்வான்.
123
   
4316.
உய்யல் ஆவது ஓர் பரிசினை உணர் உறாது உழலும்
கைய கேண்மதி கட்செவி மதியொடு கலந்த
செய்ய வார் சடைப் பரம் பொருள் திருநுதல் விழிசேர்
ஐயன் மேதக உணர்ந்திலை பாலன் என்று அறைந்தாய்.
124
   
4317.
மானுடத்தரைத் தேவென்பர் வானகத் தவரை
ஏனை முத் தொழிலவர் என்பர் இருவர் தங்களையும்
நால் நிலத்தினில் பரம் பொருள் இவர் என நவில்வார்
ஆன சொல் திறம் முகமனே சரதம் அற்று அன்றால்.
125
   
4318.
ஆய புல்லிய புகழ்ச்சி போல் கொள்ளலை அறிவோர்
தேயம் ஆவது யார்க்கும் எட்டாதது தெளியில்
தூய வீடு பேறு அருளுவது உப நிடதத் துணிவாம்
வாய்மை ஆவது புகலுவன் கேள் என வகுப்பான்.
126
   
4319.
மண் அளந்திடு மாயனும் வனச மேலவனும்
எண் அரும் பகல் தேடியும் காண் கிலாது இருந்த
பண்ணவன் நுதல் விழி இடைப் பரஞ்சுடர் உருவாய்
உள் நிறைந்த பேர் அருளினான் மதலையாய் உதித்தான்.
127
   
4320.
முன்னவர்க்கு முன் ஆகுவோர் தமக்கு முற்பட்டுத்
தன்னை நேர் இலாத ஈசனாம் தனிப் பெயர் தாங்கி
இன் உயிர்க்கு உயிராய் அரு உருவமாய் எவர்க்கும்
அன்னை தாதையாய் இருந்திடும் பரமனே அவன்காண்.
128
   
4321.
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்
ஆசிலான் அவன் அறுமுகத்து உண்மையால் அறி நீ
பேசில் ஆங்கு அவன் பரனொடு பேதகன் அல்லன்
தேசுலா அகன் மணியிடைக் கதிர்வரு திறம் போல்.
129
   
4322.
பூதம் ஐந்தினுள் கீழ் நிலைத்து ஆகிய புவியுள்
ஓது கின்ற பல் அண்டத்தின் ஓராயிரத்துத் எட்டும்
கோது இல் ஆக்கமும் படைகளும் உனக்கு முன்                                      கொடுத்த
ஆதி ஈசனே அவன் எனின் மாற்றுவது அரிதோ.
130
   
4323.
ஏதம் இல் புவி அண்டங்கள் பெற்றனம் என்றே
பேதை உன்னினை சிறிது அவன் தன் அருள் பெறுவோர்
பூதம் மைந்தனும் ஏனைய திறத்தினும் புறத்து
மீதும் ஆம் அண்டம் எவற்றிற்கும் வேத்தியல் புரிவார்.
131
   
4324.
ஆதி ஆகிய குடிலையும் ஐவகைப் பொறியும்
வேதம் யாவையும் தந்திரப் பன்மையும் வேறா
ஓத நின்றிடு கலைகளும் அவ் அவற்று உணர்வாம்
போதம் யாவையும் குமரவேள் பொருவிலா உருவம்.
132
   
4325.
எங்கணும் பணி வதனங்கள் எங்கணும் விழிகள்
எங்கணும் திருக் கேள்விகள் எங்கணும் கரங்கள்
எங்கணும் திருக் கழல் அடி எங்கணும் வடிவம்
எங்கணும் செறிந்து அருள் செயும் அறுமுகத்து இறைக்கே.
133
   
4326.
தாமரைக் கணான் முதலிய பண்ணவர் தமக்கும்
ஏமுறப்படு மறைக்கு எலாம் ஆதி பெற்று இயலும்
ஓம் எனப்படும் குடிலையே ஒப்பிலா முருகன்
மா முகத்துள் ஒன்றாம் அவன் தன்மையார் வகுப்பார்.
134
   
4327.
முக்கண் மூர்த்தியும் ஆங்கு அவன் முண்டகா சனனும்
சக்கரப் படை அண்ணலும் ஆங்கு அவன் தானே
திக்குப் பாலரும் கதிர்களும் முனிவரும் சிறப்பின்
மிக்க தேவரும் ஆங்கு அவன் யாவர்க்கும் மேலோன்.
135
   
4328.
ஈட்டு மன்னுயிர் எவற்றிற்கும் இருவினைப் பயனைக்
கூட்டு வானவன் ஆங்கு அவை துலை எனக் கூடின்
வேட்ட மேல் நிலைக் கதிபுரி வானவன் மேலாய்க்
காட்டுவான் முதல் திறம் எலாம் ஆங்கு அவன் கண்டாய்.
136
   
4329.
சிறுவன் போல் உறும் குரவனே போல் உறும் தினையில்
குறியன் போல் உறும் நெடியவன் ஆகியும் குறுகும்
நெறியின் இன்னணம் வேறு பல் உருக் கொடு நிலவும்
அறிவர் நாடரும் கந்தவேள் ஆடல் ஆர் அறிவார்.
137
   
4330.
சிவனது ஆடலின் வடிவமாய் உற்றிடும் செவ்வேள்
அவனது ஆணையின் அன்றியே பெயர்கிலாது அணுவும்
எவர் அவன் தனி ஆற்றலைக் கடந்தவர் இவண் நீ
தவ மயங்கினை அவன் தனி மாயையில் சார்வாய்.
138
   
4331.
எல்லை இல்லாது ஓர் பொருள் எலாம் ஆகுறும் யாவும்
அல்லன் ஆகியும் இருந்திடும் அருவமும் ஆகும்
பல் வகைப் படும் உருக் கொளும் புதியரில் பயிலும்
தொல்லை ஆதி ஆம் அநாதியும் ஆகியே தோன்றும்.
139
   
4332.
வாரி வீழ் தரும் புல் நுனித் துள்ளிகண் மான
நேரிலாது அமர் குமரவேள் நெடிய பேர் உருவின்
ஓரு ரோமத்தின் உலப்பு இலா அண்டங்கள் உதிக்கும்
ஆர் அவன் திரு மேனியின் பெருமையை அறிவார்.
140
   
4333.
தொலைவு இலா உயிர்த் தொகுதியும் தொல்லை ஐம்                                        பூதத்து
அலகில் அண்டமும் ஏனவும் ஆதி அம் குமரன்
நிலை கொள் மேனியின் நிவர் தரும் உரோமத்தின்                                        நின்றே
உலவை இன்றி முன் உதித்திடும் இறுதி நாள் ஒடுங்கும்.
141
   
4334.
ஆவது ஆகிய வடிவத்தின் அகிலமும் செறிந்து
மேவும் அந்நிலை அனையனே அல்லது வேறு இங்கு
ஏவர் கண்டனர் அவ் உரு இயற்கையை எம் கோன்
தேவர் யாவர்க்கும் காட்டிடக் கண்டனர் சிறிது.
142
   
4335.
தண்டல் இல்லது ஓர் ஒன்று ஒரு மயிர் நுனித் தலையின்
அண்டம் எண் இல கோடிகள் கோவை பட்டு அசையப்
பண்டு மேருவில் கந்த வேள் கொண்டது ஓர் படிவம்
கண்டிலாய் கொல் ஆம் கணிப்பு இலாப் பவம்புரி                                    கடியோய்.
143
   
4336.
அன்று கந்தவேள் அமைந்தது ஓர் பெருவடிவம் அதனுள்
ஒன்று ரோமத்தின் இருந்து அதற்கு ஆற்றிடாது உனதாய்த்
துன்றும் ஆயிரத்து எட்டு எனும் அண்டம் ஆம்                                      தொகையும்
இன்று நீ அது தெரிகிலை சிறுவன் என்று இசைத்தாய்.
144
   
4337.
அளப்பரும் குணத்து ஆதி ஆம் எம்பிரான் அமரர்
தளைப்படும் சிறை மாற்றவும் சதுர்முகன் முதலோர்
கொளப் படும் துயர் அகற்றவும் கொடியரை அறுத்து
வளப்படும் பரிசு உலகெலாம் போற்றவும் வந்தான்.
145
   
4338.
வாழி ஆன நின் ஆயுளும் வன்மையும் வரமும்
கேழில் சுற்றமும் படைகளும் வான் தொடக் கிளர்ந்து
பூழியால் உயர் மால் வரைச் சூழலில் புகுந்த
ஊழி மாருதம் போல் அடும் எம்பிரான் ஒருவேல்.
146
   
4339.
ஆகையால் இவை உணர்ந்திலை இணை இலாது அமர்ந்த
ஏக நாயக முதல்வனைப் பாலன் என்று இகழ்ந்தாய்
சே குலாவிய மனம் உடைக் கற்பு இலாச் சிறியோய்
போக போக யாம் இவ்வொரு தவற்றையும் பொறுத்தாம்.
147
   
4340.
நொய்ய சொற்களால் எந்தையை இகழ்ந்தனை நொடிப்பின்
வெய்ய நாத்தும் இத் துன் உயிர் வாங்குவம் விடுத்த
ஐயன் ஆணை அன்று ஆதலின் அளித்தனம் அதனால்
உய்தி இப்பகல் வேல் படைக்கு உண்டியாய் உறைவோய்.
148
   
4341.
உறுதி இன்னம் ஒன்று உரைக்குவம் நீயும் உன் கிளையும்
இறுதி இன்றியே எஞ்சுதல் வேண்டுமேல் இமையோர்
சிறை விடுக்குதி இகலினைத் தவிருதி செவ்வேள்
அறை கழல் துணை அரணம் என்று உன்னியே அமர்தி.
149
   
4342.
என்று இவை பலப் பல இகப்பு இல் பெரு மாயைக்
குன்று எறி படைக் குரிசில் கொள்கை அது இயம்பப்
புன் தொழில் படைத்து உடைய பூரியன் உணர்ந்தே
கன்றினன் உயிர்த்து இனைய கட்டுரை செய்கின்றான்.
150
   
4343.
கூர் எயிறு எழாத குழவிச் சிறுவன் உய்த்த
சார் என நினைந்து உனது தன் உயிர் விடுத்தேன்
பேரலை அவன் பெருமை பின்னும் மொழிகின்றாய்
வீரமும் உரைக்குதி என் வெய்ய சினம் உன்னாய்.
151
   
4344.
கொஞ்சு மொழி கொண்ட குழவிச் சிறுவன் மேலாய்
எஞ்சல் இலது ஓர் முதல்வனே எனினும் ஆக
அஞ்சிடுவனோ சிறிதும் அண்ட நிலை தோறும்
விஞ்சி அமர் பண்ணவர்கள் யாவரையும் வென்றேன்.
152
   
4345.
சேண் புரம் அது ஆகி அமர் தேவர் சிறை தன்னை
வீண் படு கனாவினும் விடுக்க நினை கில்லேன்
ஏண் பல பகர்ந்தனை எனக்கு எதிர் இருந்தே
காண்பன் எலாம் ஒரு கணத்திலின் இனி என்றான்.
153
   
4346.
கொற்றம் மிகு சூரன் இவை கூறி அயல் நின்ற
அற்றம் அறும் ஆனவருள் ஆயிரரை நோக்கி
ஒற்றுமை செய்தோன் உயிர் ஒறுத்தல் பழி வல்லே
பற்றி இவனைச் சிறை படுத்திடுதிர் என்றான்.
154
   
4347.
என்னலும் அவ் ஆயிரரும் ஏற்று எரி விழித்துத்
துன்னு கனலைப் புகை சுலாவுவது மானப்
பொன்னின் மிளிர் பீடிகை அமர்ந்த புகழ் வீரன்
தன்னை வளை குற்றனர் தருக்கினொடு பற்ற.
155
   
4348.
மிடல் தகுவர் சூழ்வரலும் வீரன் எழுந்து அன்னோர்
முடிச் சிகை ஓர் ஆயிரமும் மொய்ம்பின் ஒருகையால்
பிடித்து அவுணர் மன்னன் அமர் பேர் அவை நிலத்தின்
அடித்தனன் நொடிப்பில் அவர் ஆவி முழுது உண்டான்.
156
   
4349.
மார்பு உடைய மொய்ம்பு ஒசிய வார் குருதி சோர
ஓர் புடையின் யாவரையும் ஒல்லை தனின் அட்டே
சூர் புடையின் முன்ன நனி துன்னும் வகை வீசிச்
சீர் புடைய நம்பி இவை செப்பல் புரிகின்றான்.
157
   
4350.
எந்தை நெடு வேல் உனை இனித் தடிதல் திண்ணம்
அந்தம் உறும் முன்னம் உனது ஐம் புலனும் வெஃக
வந்த பல துப்புரவும் வல்லை பெரிது ஆர்ந்தே
புந்தி தெளிவாய் அமர்தி போந்திடுவன் என்றான்.
158
   
4351.
சீய விறல் அண்ணல் இவை செப்பி அகல் காலை
ஆயவன் இருந்திடும் அரித்தவிசு தானும்
மீயுற எழுந்து விசும்பின் தலையின் ஏகி
மாயை என ஒல்லையின் மறைந்து படர்ந்து அன்றே.
159