தெய்வயானையம்மை திருமணப் படலம்
 
7893.
காய்ந்திடு தம் பகை கடந்து பொன் நகர்
வேந்தியல் முறை அருள் வேல் கை வீரற்குக்
கூந்தல் அம் சிறு புறக் குஞ்சரம் தனை
ஈந்திட மகபதி இதயத்து எண்ணினான்.
1
   
7894.
விருத்த மதாகும் இவ் விழைவை இந்திரன்
திருத்தகு மால் அயன் தேவர் தேர்வுற
உறைத்தனன் வினவலும் உவகை பெற்று நின்
கருத்து நன்றால் எனக் கழறல் மேயினார்.
2
   
7895.
பன்னிரு மொய்ம்புடைப் பகவன் பாற்படப்
பின்னல் அம்சுரி குழல் பிடியும் பொய்கைவாய்
முன்னுற அருந்தவம் முயன்று வைத்தனள்
இன்னுழி அதன் பயன் எய்திற்றே கொலாம்.
3
   
7896.
கயல் உறழ் விழியுடைக் கடவுள் யானையை
வியல் வரை எறிந்திடு வேல் கை அண்ணலுக்கு
இயல் புளி வதுவையால் ஈதற்கு இவ் விடை
முயலுதி கடிது என மொழிந்து வைகினார்.
4
   
7897.
மற்று அது போழ்தினின் மகத்தின் செம்மல் ஓர்
ஒற்றனை நோக்கியே ஒல்லை மேருவாம்
பொற்றையின் மனைவியைப் புதல்வி தன்னுடன்
இற்றையில் விளித்தனை ஏகு நீ என்றான்.
5
   
7898.
என்றலும் தூதுவன் இசைந்து மேருவில்
சென்றனன் புலோமசைத் தெரிவை முன்புபோய்
நின்றனன் வணங்கினன் நினது சிந்தை போல்
ஒன்றிய கேள் என உரைத்தல் மேயினான்.
6
   
7899.
மாண்டனன் வெய்ய சூர் மதலை தன்னொடு
சேண் தொடர் அமரரும் சிறையின் நீங்கினார்
ஆண்டலை உயர்த்தவன் அனிகம் தன்னொடு
மீண்டனன் திருப்பரங் குன்ற மேயினான்.
7
   
7900.
நின்றிட அனையது நினது நாயகன்
உன்றனை மகளொடும் ஒல்லையில் பரம்
குன்றிடை இருக்கையில் கொண்டு செல்க எனா
இன்று எனை விடுத்தனன் ஏகு நீ என்றான்.
8
   
7901.
அம்மொழி வினவலும் அணங்கின் நல்லவள்
விம்மிதம் உற்றனள் விழுமம் நீங்கினாள்
எம்மையும் இல்லதோர் இன்பம் எய்தினாள்
கொம் என எழுந்தனள் குமரி தன்னொடும்.
9
   
7902.
புடை உற வணங்கினர் போற்றி மேருவின்
இடை உறு புலோமசை ஏமம் ஆகியே
அடல் அயிராவத வானை மேல் கொடு
மட மகள் தன்னொடும் வானத்து ஏகினாள்.
10
   
7903.
பொருப்பினுள் மேலதாய் புவியில் பேர் பெறும்
திருப்பரங் குன்றிடைச் சென்று தேவர் கோன்
இருப்பது ஓர் மந்திரத்து எய்தி வைகினாள்
மருப்பு இரண்டு உடையது ஓர் வாரணத்துடன்.
11
   
7904.
உறையும் அவ்வெல்லையின் உயர் மகேந்திரச்
சிறையினும் அகன்றிடு தெய்வத் தையலார்
இறைவியைப் பெற்றனம் யாம் உய்ந்தோம் எனா
முறை முறை வணங்கினார் முகிழ்த்த கையினார்.
12
   
7905.
சேண் உறும் எழிலிவாய் திறந்த மின்னுவைக்
காண் உறுகின்றது ஓர் கலாப மஞ்ஞை போல்
மாண் உறு புலோமசை வரலும் மாதரார்
ஏண் உறு கின்றனர் ஏமம் பெற்று உளார்.
13
   
7906.
கண்டனள் மதலையைக் கருணையால் தழீஇக்
கொண்டனள் மகிழ்ந்தனள் கொங்கை பால் உக
விண்டனள் கவற்சியை வெறுமை உற்று உளோர்
பண்டுள பெருநிதி படைத்த பான்மை போல்.
14
   
7907.
ஆடுறு பசியினோர் ஆக்கம் கண்டுழி
நீடு உறும் உவகையான் நிறைவு பெற்று என
மாடு உறு புலோமசை வடிவம் காண்டலும்
கூடினர் தன்மையும் குரிசில் எய்தினான்.
15
   
7908.
அப்போது வானோர் குழுவோடு அயிராணி கேள்வன்
செப்போது கொங்கை மகடூஉ மணம் செப்பல் முன்னி
ஒப்போதும் நீர்மை இலதாம் ஒருவன் கழற்கே
கைப்போது தூவிப் பணிந்து ஏத்திக் கழறல் உற்றான்.
16
   
7909.
கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை அட்டல் செய்தாய்
இந்நின்ற தேவர் சிறை மீட்டனை என் தனக்கு
முன் நின்ற தொல் சீர் புரிந்தாய் அது முற்றும் நாடிச்
செய்ந் நன்றி யாகச் சிறியேன் செயத் தக்கது உண்டோ.
17
   
7910.
முந்தே தமியேன் பெறு மங்கை இம் மொய் வரைக்கண்
வந்தே அமர்வாள் அவள் தன்னை வதுவை செய்து
கந்தே புரை நின் பெரும் தோளில் கலத்தி யாங்கள்
உய்ந்தே பிறவிப் பயன் பெற்றனம் ஓங்க என்றான்.
18
   
7911.
என்னும் துணையில் அமரேசனை எந்தை நோக்கி
அந் நங்கை தானும் மிக நோற்றனள் ஆதலால் நீ
முன்னும் படியே மண நாளை முடித்தும் என்னத்
தன்னும் கடந்த மகிழ்வு எய்தித் தருக்கி நின்றான்.
19
   
7912.
வடிக் கொண்ட ஒள்வேல் படை நம்பி தன் வார் கழற்கால்
முடிக் கொண்டு அடியேம் சிறந்தேங்கள் முதல்வ என்னாக்
கடிக் கொண்ட வாய்தல் புடை வந்து கணிப்பு இல் காதம்
நொடிக் கொண்ட போழ்தில் படர் தூதரை நோக்கினான்                                           ஆல்.
20
   
7913.
முன்னாகி உள்ள பலதூதர் முகத்தை நோக்க
அன்னார் எவரும் தொழுதே பொன்னடி வணங்கி
எந் நாயகனே தமியேம் செய்வது என் கொலோ என்னப்
பொன் நாடு உடையான் இஃது ஒன்று புகலல் உற்றான்.
21
   
7914.
மூவர்க்குள் மேலோன் கிரிசேர் முசுகுந்தன் ஆதிக்
காவல் கடவுள் தலைவர்க்கும் ககன மேவும்
தேவர்க்கும் ஏனைத் திசை யோர்க்கும் முனிவர் ஆயோர்
ஏவர்க்கும் எந்தை மண நாளை எனச் சொல்வீரால்.
22
   
7915.
கந்தக் கடவுள் மணத்தன்மை கழறி வல்லே
இந்தப் பொருப்பின் இடை யாவரும் ஈண்டும் வண்ணம்
தந்திட்டு இடுங்கள் என வாசவன் சாற்றலோடும்
அந்தக் கணத்தில் தொழுது ஒற்றர் அகன்று போனார்.
23
   
7916.
போன பொழுதில் புலவர் செம்மல் புலன்மிக்க
வானவர்கள் கம்மியனை வல்லையில் விளித்துக்
கான் அமர் கடம்பு புனை காளைதன் மணத்துக்கு
ஆன செயல் முற்று உற அமைத்தி இவண் என்றான்.
24
   
7917.
புலவன் அது உளம் கொடு பொருப்பின் ஒருசாரின்
நிலமிசை வரைப்பகல் நிதிக்கொடு விதித்துக்
குலமணி குயிற்றி நனி கோலம் அது இயற்றி
வலன் உயர் சிறப்பின் ஒரு மண்டபம் அமைத்தான்.
25
   
7918.
மேலை நில முற்றுற விதான வகை போக்கி
மாலையொடு பல் கவரிவான் துகில்கள் தூக்கி
ஆலய நனந் தலையில் ஆறு முகன் வைக
நூலின் முறை நாடி ஒரு நோன் தவிசு அமைத்தான்.
26
   
7919.
வேத நெறி தந்திடு விசாகன் அயல் வந்த
மாதவன் விரிஞ்சன் முதல் வானவர்கள் யாரும்
ஏதிலரும் வைக இயல் கின்ற இடை தோறும்
ஆதனம் வரம்பு இல அமைத்தனன் இமைப்பில்.
27
   
7920.
மன்றல் பயில்கின்ற வதுவைக் களன் மருங்கில்
குன்று புரை பல் சிகர கோபுரம் வகுத்தான்
அன்றி மணி மண்டபம் அளப்பில் அமைத்தான்
இன்றி அமையாப் பொதுவும் எண் இல இழைத்தான்.
28
   
7921.
காலம் வரையாது கருது உற்ற பொழுது எல்லாம்
சாலவெவர் கண்ணு நனி தம் பயன் வழங்கும்
சோலை மலர் வாவிகள் சுனைத் தொகை தொகுத்தான்
ஏலும் வதுவைக்கு உரிய ஏனவும் அளித்தான்.
29
   
7922.
அவ்வகை எலாம் புலவன் அங்ஙனம் வகுப்பச்
செவ்விது தெரிந்து வகை செய்து அமரர் செம்மல்
மெய் வதுவை ஆற்றும் வழி வேண்டு கரணங்கள்
எவ்வெவையும் அங்கண் ஒர் இமைப்பில் வருவித்தான்.
30
   
7923.
தேவர் முதல்வன் தனது செய்கை இது நிற்க
ஏவலர் இசைத்திடலும் இவ் வதுவை காணக்
கோவியல் புரிந்த முசுகுந்தன் எனும் நேமிக்
காவலன் வரும் பரிசு கட்டுரை செய்கிற்பாம்.
31
   
7924.
கல் அருவி தூங்கு கயிலைப் பொழிலின் மேனாள்
அல் உறழ் மிடற்றவனும் அம்பிகையும் ஆக
எல்லையின் மகிழ்ச்சியொடு இருப்ப முசு ஈட்டம்
வல்லுவ மரம் தொறும் வியன் சினையில் உற்ற.
32
   
7925.
முற்று உணர் கருத்தின் முனி வோர்கள் என முள் காந்து
உற்றிடு முசுக்கலையுள் ஒன்று இருவர் மீது
மற்று ஒரு வில்வத்திலை வரம்பு இல பறித்துத்
உற்றிடுவது என்ன நனி தூர்த்து உளதை அன்றே.
33
   
7926.
தூர்த்த ஒரு காலை தனில் சுந்தரி பொறாளாய்ச்
சீர்த்திடலும் ஆங்கு அவள் செயற்கை தனை அண்ணல்
பார்த்து நமை ஈண்டு வழி பட்டு உளது தன்னை
வேர்த்திடுவது என் இது விடுத்தி இனி என்றான்.
34
   
7927.
என்றிடலும் அம்பிகை இகல் சினம் இலாளாய்
நன்று அருள் புரிந்திடலும் ஞான வடிவானோன்
வன்திறல் முசுக்கலை மனத்து இருள் அகற்றி
ஒன்றி அமர்வால் உணர் ஒருங்கு உதவினான் ஆல்.
35
   
7928.
மெய் உணர்வு சேர்தலும் வியன் சினையின் நின்றும்
ஒய் என இழிந்து முசு உட்குவரல் எய்தி
ஐயனையும் ஆய்தனையும் ஆர்வமொடு தாழ்ந்து
பொய் அடியனேன் பிழை பொறுத்திர் எனலோடும்.
36
   
7929.
பிழை இது என அச்ச மொடு பேசல் எமை ஈண்டே
விழுமியது ஒர் கூவிளையின் மெல் இலைகள் இட்டு
வழிபடல் புரிந்தனை மனுக்குலம் உதித்து
முழுதுலகை ஆளுகென முன்னவன் மொழிந்தான்.
37
   
7930.
அம் மொழி தேர்தலும் ஆயது ஒர் கள்வன்
கைம் மிகல் உற்ற கலங்கஞர் எய்தி
விம்மி இரங்கி விதிப்பொடு எழுந்தே
எம் இறைவன் தொழுது இவ்விவை செப்பும்.
38
   
7931.
நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய்
இங்கு உறை கின்றது இகந்து நிலம் போய்
மங்குறு செல்வ வலைப் படு வேனேல்
எங்கள் பிரான் பினை எங்ஙனம் உய்கேன்.
39
   
7932.
என்னலும் அன்னதை எம் இறை கேளா
நின்னுளம் நன்று நிலத்து இடைவைகிப்
பின் இவண் மீள்குதி பேது உறல் எய்தி
முன்னலை யாதும் முசுக்கலை என்றான்.
40
   
7933.
பொய்ம் மறையான புலால் உடல் போற்றி
அம்மையில் வாழ்விடை அற்றம் உறாமே
இம் முகனோடு உற எற்கு அருள் என்னா
மெய்ம் முசுவின் கலை வேண்டியது அன்றே.
41
   
7934.
அற்றம் இல் அவ்வரம் ஐயன் அளிக்கப்
பெற்று அருள் கொண்டு பெரும் கயிலாயப்
பொற்றை அகன்று பொருக்கு என இம்பர்
மற்று ஒர் கணத்தினில் வந்தது மன்னோ.
42
   
7935.
ஆரஞர் மூழ்கியும் ஆக்கம் இழந்தும்
வாரி சுருங்கியும் வாய்மை நிறுத்தித்
தாரணி ஆள் அரிச்சந்திரன் என்போன்
ஓர் மரு மான் எனவே உதித்தது அன்றே.
43
   
7936.
மா முகமே முசு மற்று உள எல்லாம்
காமரில் ஏர் தரு காட்சியது ஆகிக்
கோமுறை சேர் முசுகுந்தன் எனா ஓர்
நாம இயற் பெயர் நண்ணியது அன்றே.
44
   
7937.
ஆய வழிப்படும் அம் முசுகுந்தன்
தூய பொலன் முடி தொன் முறை சூடி
மாயிரு ஞால வளாகம் அது உள்ள
தேயம் எலாம் ஓர் செகில் கொடு காத்தான்.
45
   
7938.
ஓவறு சீர்க் கருவூர் இடை மேவிக்
கோவியல் ஓம்பு உறு கொள்கையன் ஆகித்
தேவரை ஏவல் கொள் சீர் கெழு சூரன்
காவலின் ஆணை கடக்கலன் உற்றான்.
46
   
7939.
சொல் திறல் மேதகு சூர் எனும் வெய்யோன்
உற்றிடும் வைப்பினில் ஓர் இடை தன்னில்
மற்று ஒர் இளம் பிறை வைகிய வா போல்
கொற்றவனாம் முசுகுந்தன் இருந்தான்.
47
   
7940.
சூரனை எந்தை தொலைத்தது கேளா
ஆரஞர் நீங்கி அருஞ் சிறை பெற்ற
மேரு அது என்ன வியன் மிடல் பெற்றுச்
சீர் இறை மாட்சி செலுத்தி அமர்ந்தான்.
48
   
7941.
அமரும் எல்லையின் அரசன் முன்னரே
இமையவர்க்கிறை ஏவு தூதர் போய்க்
கமல மன்னபொன் கழல்கள் வாழ்த்தியே
தமது வன்மையால் சாற்றல் மேயினார்.
49
   
7942.
உனது நண்பனாய் உறு புரந்தரன்
தனது தூதர் யாம் தாவில் சீர் பெறீஇ
நினது சுற்றமும் நீயும் வாழி கேள்
இனிது மங்கலம் இசைப்ப எய்தினேம்.
50
   
7943.
அடாத தீமைசெய்து அமரர் தஞ்சிறை
விடாத சூரனை வீட்டி வேலவன்
வடாது பூமி வாய் வந்து கூடலின்
குடாது சேர் பரங் குன்றில் வைகினான்.
51
   
7944.
கொற்ற வேல் படைக் குமரற்கு இந்திரன்
தெற்று எனத் தரும் தெய்வ யானையை
இற்றை சென்ற பின் ஈகின்றான் இது
சொற்றிடும் படி தூண்டினான் எமை.
52
   
7945.
மாறு இலாத அவ்வதுவை காண நீ
ஈறு இல் சேனை யோடு எழுந்து தென் தமிழ்க்
கூறு சீர்ப் பரங் குன்றம் தன் இடைச்
சேறியால் எனாச் சிலதர் ஓதினார்.
53
   
7946.
ஓத அன்னவன் உவகை சிந்தையின்
மீது பொங்கு உற மெய் பனித்து எழீஇத்
தூதரைத் தழீஇச் சோபனம் இதற்கு
ஏதும் இல்லையால் ஈயு மாறு என்றான்.
54
   
7947.
ஈண்டை மாநிதியாவும் நல்குகோ
காண் தகும் குடை கவரி நல்குகோ
ஆண்டு இருந்த என் அரசு நல்குகோ
வேண்டுகின்றது என் விளம்பு வீர் என்றான்.
55
   
7948.
கோது இல் சீர் முசுகுந்தன் இந்தவாறு
ஓதும் எல்லையில் உவகை உற்றவன்
ஆதரத்தினது அளவை நோக்கியே
தூதர் ஆயினோர் வியந்து சொல்லுவார்.
56
   
7949.
சொல் வினைப் படும் தூதர்க்கு இவ்வெலாம்
ஒல்வது அன்றி இவை உதவிற்று ஒக்கும் ஆல்
வல் விரைந்து நீ வாசவன் முனம்
செல்வதே எனச் செப்பி போயினார்.
57
   
7950.
போய தூதுவர் புவியின் மன்னவர்
ஆயினோர்க்கு எலாம் ஆறு மாமுகச்
சேயவன் மணம் செப்பி மாதிரம்
ஏயினோர்க்கும் இங்கு இது விளம்பினார்.
58
   
7951.
அகல் விசும்பு இடை அல்கலும் படர்
பகலவன் முதல் பகவர் யாவர்க்கும்
இகலின் மாதவர் எவர்க்கும் இச்செயல்
விகலம் இன்றியே விளம்பி ஏகினார்.
59
   
7952.
ஆய காலையின் முசுகுந்தன் அப் பதி தன்னில்
மேயினார்களும் தன் பெரும் சேனையும் வேற்கை
நாயகன் மணம் காணிய முன்னரே நடப்பான்
பாய் மதக்கரி மிசை முரசு அறைந்திடப் பணித்தான்.
60
   
7953.
அந்த நீர்மையை வள்ளுவன் அகன் கருவூரில்
தந்தியின் மிசை ஏறியே தனி முரசு அறைந்து
முந்து சீர்க் கமல ஆலயத்து அரன் விழா மொழிந்தே
இந்திரன் திரிந்திடுதல் போல் திரிந்தனன் இசைத்தான்.
61
   
7954.
ஆனது ஓர் பொழுதில் அந் நகரின் மாக்களும்
சேனையின் வெள்ளமும் திசைகளின் புறம்
போனது ஓர் பெரும் புறப் புணரிக்கு ஏகுறும்
ஏனைய கடல் என எழுதல் உற்றவே.
62
   
7955.
எண்திசை ஆற்றுவ இபங்கள் ஆதலின்
அண்டமும் தாங்குவான் அயன் படைத்து என
விண் தொட நின்றிடும் வேழம் எண் இல
கொண்டல்கள் சூழி போல் குலவச் சென்றவே.
63
   
7956.
வால் கிளர் கற்றையும் மதர்வை நோக்கமும்
பால் கிளர் செவிகளும் பழிப்பு இல் சென்னியும்
கால் கிளர் செலவுமாய்க் கால்கள் சென்றென
மேல் கிளர் புரவியின் வெள்ளம் சென்றவே.
64
   
7957.
ஐ இரு திசையினும் அணிந்து செல்வன
கொய் உளை வயப் பரிக் குழாங்கள் பூண்டன
வெய்யவர் உதித்து என விளங்கு காட்சிய
வையம் எண் இல்லன வையம் போந்தவே.
65
   
7958.
வலிபுணர் யாக்கையர் வயம் கொள் வாகையர்
கொலை கெழு பல் படைக் கூட்டு உண் வாள் கையர்
புலி உறழ் மானவப் பொருநர் ஆயினார்
தலைவர்கள் தம்மொடு தழுவிப் போயினார்.
66
   
7959.
அடல் வலி மானவர் அங்கை ஏந்திய
படை வகை மின்னுவ பல் இயங்களும்
இடி ஒலி காட்டுவ ஈண்டு தானையுள்
கொடி நிரை விசும் தோய் கொண்டல் ஆயவே.
67
   
7960.
தாள் உறு கழலினர் சரம் பெய் தூணியர்
தோள் உறு வில்லினர் தொடையல் குஞ்சியர்
வாள் உறு தடங்கணார் மருங்கு மன்மத
வேள் என ஒருசில வீரர் ஏகினார்.
68
   
7961.
கறுத்திடு பல கை வாள் கையர் சாலிகை
பொறுத்திடு மெய்யினர் ஆகிப் போகுவார்
மறுத் தவிர் மதி முக மாதர் நாட்ட வேல்
ஒறுத்திடு நம்மை என்று உன்னினார் கொலோ.
69
   
7962.
அடைந்திடும் துன்பு எலாம் ஆற்றி அம்புவி
மடந்தை முன் செய்திடு மா தவத்தினால்
தொடர்ந்திடும் பிடி இனம் தொலையப் பூமிசை
நடந்தனர் வரம்பு இலா நகை மென் கொம்பனார்.
70
   
7963.
ஏர் அகல் மணம் தனக்கு எய்தும் ஆசையால்
வாரக முலை உடை மடந்தை மார் பலர்
பாரக மலிதரப் பரவிப் பேயினார்
தாரகை விண் நெறி படரும் தன்மை போல்.
71
   
7964.
இடை இடை கால்களும் யாறும் சேர்தலில்
படி மிசை நடந்திடு பாவை மார்களை
விடலைகள் ஏந்தியே மெல்ல ஏகினார்
கடலினும் பெரியதாம் காமம் மூழ்குவார்.
72
   
7965.
தந்திகளின் மிசைத் தையலார் உடன்
மைந்தர்கள் ஏகினார் மாநிலம் தனில்
அந்தம் இல் சீர் அயிராணி தன்னொடும்
இந்திரர் போவது ஓர் இயற்கை போலவே.
73
   
7966.
அதிர் குரல் தேர்களில் அரிவை மாருடன்
கதும் எனப் போயினர் கணிப்பு இல் காளையர்
மதி முகத்தார் உடன் வரம்பு இல் வெய்யவர்
முது வரைச் சிகர மேல் முடுகிச் சென்று என.
74
   
7967.
கூற்றினை வென்றிடும் கொலைக் கணார் சிலர்
ஏற்றம் இல் பிடி மிசை ஏறிப் போந்தனர்
ஆற்றல் அது இன்மையால் அவர் நடைக்கு முன்
தோற்றன நாணியே சுமத்தல் போன்றவே.
75
   
7968.
காமரு கொங்கையால் கரி மருப்பினை
ஏமுற வென்று உளார் யானைக் கோடுகள்
மா மருங்கு அடைதலும் மருண்டு அங்கு ஓடினார்
தாமுதல் செய்வினை தம்மைச் சூழ்ந்து என.
76
   
7969.
விரி தரு சேனையில் விண்ணில் பாய் தரு
பரிகளின் மடந்தையர் பலர் அங்கு ஏகினார்
கரை அறும் அமரர்கள் கடைந்த பாற்கடல்
திரை தனில் வரு பல திருவைப் போலவே.
77
   
7970.
மேகம் அது உற்றிடு மின்னின் மீ மிசைப்
போகிய சிலையொடும் போந்த தன்மை போல்
பாகினை அன்ன சொல் பாவைமார் நர
வாகனம் அவைகளின் மருவி ஏகினார்.
78
   
7971.
அவிகையில் முழுமதி அளிப்பப் பல் பொறி
குவிகையில் அம்புயம் குலவிச் சென்று எனக்
கவிகையில் ஆதபம் கரப்ப மூடு பொன்
சிவிகையில் ஏகினார் தெரிவை மார் சிலர்.
79
   
7972.
பரதனம் கவரும் அல்குல் பரத்தையர் தம்மைப் பாரா
விரத நன் முனிவர் தாமும் வேதியர் பலரும் ஈண்டிச்
சுரத நண்பு உடையர் ஆகும் கணிகையர் தோளால்                                     தாளால்
உரதனம் தன்னால் தாக்க உளைந்து உளைந்து ஒதுங்கிப்                                     போனார்.
80
   
7973.
வேண்டிய மாற்றம் கொள்ளாள் வெகுண்டு சென்றிடுவாள்                                      முன்னம்
ஆண்டு ஒரு மத மால் யானை அடர்த்து வந்திடலும்                                      அஞ்சிப்
பூண்டிடு புலவி நீங்கிக் கணவனைப் புல்லிக் கொண்டாள்
தூண்டரு தோளினானும் இபத்தினைத் தொழுது நின்றான்.
81
   
7974.
ஏமரும் கலாப மஞ்ஞை இனம் எனச் செல்லு மாதர்
மா மருங்கு இறுங்கொல் இற்றால் மதன் அரசு இறக்கும்                                       என்றே
காமரும் கவற்சி கொள்ளக் கரத்தினால் அவரைப் புல்லித்
தாம் மருங்காகப் போனார் தார் முடி இளையர் ஆனோர்.
82
   
7975.
கணவன் தன் பிழையை உன்னிக் கனன்றிடும் கணவன்                                       தோளை
அணை உறா நீர்மை உன்னி அழுங்குறும் அமலமூர்த்தி
மணவினை தன்னை உன்னி மகிழ்ந்திடும் இவ்வாறு ஆகிப்
புணர் கயிற்று ஊசல் போலும் புந்தி கொண்டு ஒருத்தி                                       போனாள்.
83
   
7976.
கை இலார் கைகள் பெற்றும் கால் இலார் கால்கள்                             பெற்றும்
மொய் இலார் மொய்கள் பெற்றும் மூங்கைகள்
                            மொழியைப் பெற்றும்
மையல் சேர் குருடர் ஆனோர் வாள் விழிப் பெற்றும்                             சென்றார்
ஐயன் மேல் உள்ளம் வைத்தார்க்கு அனையதோ அரிது                             மாதோ.
84
   
7977.
விடந்தரும் வேல் கண் நல்லாள் வெளிப்படும் கொங்கை                           தன்னைப்
படந்தனில் மறைத்தலோடும் பாங்கில் ஓர் காளை பாராத்
தொடர்ந்தனன் அவள் பின் போனான் துணை                           முலைப்படத்தில் சிக்கிக்
கிடந்ததன் மதியை மீட்கக் கிலேசமோடு ஏகுவான் போல்.
85
   
7978.
நெய்தலும் கமலப் போதும் நீலமும் நெடு நீர்ப் பொய்கை
கொய்தனர் குமரர் ஆனோர் கொடுங்குழை மடந்தை                                     மார்தம்
கை தனில் கொடுத்துச் செல்வார் கன்னி மீர் இவையோ                                     நுங்கண்
மைதிகழ் விழிக்குத் தோற்ற மலர் எனக் காட்டுவார்                                     போல்.
86
   
7979.
அரிசன மேனி நல்லாள் அணிதுகில் அசைவின் சீரால்
கரிசனம் அன்ன கொங்கை காண்டலும் தளர்ந்து ஓர்                                      காளை
தெரிசனம் தன்னில் ஈது என் சிந்தையைப் பிணித்தது                                      என்றால்
பரிசனம் தன்னில் என்னாமோ என்று உயிர் பதைத்து                                      நின்றான்.
87
   
7980.
கற்பக வல்லி அன்னாள் ஒருத்தி தன் காதல் மூழ்கி
அற் பகல் ஏவல் செய்வான் ஆங்கு அவள் செல்லும்                                     போதில்
பொற்பு உறு படாத்தின் நீங்கிப் பூண் முலை சிறிது                                     தோன்றப்
பற்பகல் நோற்று வேண்டும் பரிசில் பெற்றாரை ஒத்தான்.
88
   
7981.
ஒப்பு இலா ஒரு வேற் காளை ஒள் எயிற்று ஊறு தாங்கித்
துப்புறு பவளச் செவ்வாய் திறக்கலள் சொல்லும் ஆடாள்
அப்படி ஒருத்தி செல்ல அநங்க வேள் அமுதம் வைத்த
செப்பினில் குறி உண்டாம் கொல் திறக்கலீர் சிறிதும்                                    என்றான்.
89
   
7982.
புடைதனில் ஒருத்தல் புல்லப் போவது ஓர் பிடியின்                                    மேவும்
மடவரல் வெருவலோடும் மற்று அது கண்டோர் வள்ளல்
இடை அகல் தேரும் மாவும் யானையும் படையும்                                  கொண்டீர்
கட கரி ஒன்றற்கு அஞ்சும் காரணம் யாதோ என்றான்.
90
   
7983.
ஆழியில் அமுதம் பொங்கி அலை எறிந்து ஒழுகிற்று                                       என்ன
ஏழ் இசை நரம்பு கொண்ட மகர யாழ் இசையப் பண்ணி
வேழமும் தேரும் ஊர்ந்து விறலிய ரோடு பாணர்
நீழலும் பருந்தும் என்ன நெறிப் பட இசைத்து போனார்.
91
   
7984.
வெங்கரி நுதலில் அப்பும் வீர சிந்துரம் வில் வீச
மங்கையர் மைந்தர் பூணும் படைகளும் வயங்க மாடே
தொங்கலும் கவிகைக் காடும் துவசமும் இருளைச் செய்யக்
கங்குலும் பகலும் மாலைக் காலமும் போலும் மாதோ.
92
   
7985.
கொக்கரை படகம் பேரி குட முழாக் கொம்பு காளம்
தக்கை தண்ணுமை தடாரி சல்லரி நிசாளம் தாளம்
மெய்க்குழல் துடியே பம்பை வேறு பல்லியமும் தாங்கி
மைக்கடல் வாய் விட்டு என்ன வரம்பிலோர் இயம்பிப்                                      போனார்.
93
   
7986.
ஆரண முனிவர் தாமும் அமரரும் அகல்வான் செல்வார்
சீர் அணி முசுகுந்தன் மேல் திருமலர் சிதறல் உற்றார்
காரணம் இல்லா வள்ளல் கடி மணம் தாமும் காண்பான்
தாரணி தன்னில் செல்லும் தாரகா கணம் கொல் என்ன.
94
   
7987.
இன்னன சனங்கள் ஈண்டி எங்குமாய் ஏகும் எல்லைத்
தன் உறு கிளைஞர் தாமும் தந்திரக் கிழவர் யாரும்
முன்னொடும் பின்னும் பாங்கு மொய்த்துடன் செல்லத்                                     தானோர்
பொன் நெடுந் தேர் மேல் கொண்டு முசுகுந்தன் போதல்                                     உற்றான்.
95
   
7988.
அடவியும் இகந்தனன் அகணி நாட்டுடன்
இடை இடை அடுக்கலும் ஆறும் நீங்கினான்
படர்தலும் அவன் வழிப் பரிதி நாயகன்
நடு உறும் உச்சிமேல் நண்ணினான் அரோ.
96
   
7989.
அண்ணல் அம் படைகளும் அளப்பின் மாக்களும்
உள் நெகிழ் உவகை யோடு ஒல்லை வந்திடத்
தண் நிழல் வெண் குடைத் தரணி காவலன்
பண்ணவன் மேவுறு பரங்குன்று எய்தினான்.
97
   
7990.
முசு முகம் உடையவன் முன்னர் வந்துழி
வசு மதி இறை புரி மன்னர் ஏவரும்
அசை அறு திருவொடும் அனிகம் தன்னொடும்
திசை தொறும் திசை தொறும் சென்று அங்கு எய்தினார்.
98
   
7991.
முறை நெறி ஆற்றிடும் முசு குந்தன் முதல்
இறையவர் யாவரும் ஈண்டு தானையும்
குறை தவிர் சனங்களும் குன்றம் சூழ்ந்து உற
நிறுவினர் ஒன்றிய நெஞ்சம் கொண்டு உளார்.
99
   
7992.
புழை உறு கரங்களால் போதகம் சில
உழை வரு பிடி தனக்கு உம்பர் தாருவின்
குழைகளை முறித்தன கொடுத்துக் கோட்டினான்
மழை முகில் கீறியே வாரி நல்குவ.
100
   
7993.
படர் சிறை நீங்கிய பராரை வெற்பு எலாம்
அடிகளின் ஒற்றியே அசைந்து போந்து எனக்
கடி கமழ் மும்மதக் கரிகள் ஓர் சில
விடல் அரும் தளையொடு மெல்லச் சென்றவே.
101
   
7994.
மூடு உறு கண முகில் முழக்கு அறாதது ஓர்
கோடு உயர் குன்றினைக் குறித்து நோக்கியே
ஈடு உறு திசைக் கரி ஈது என்று உன்னியே
ஓடுவது அதன் மிசை ஒன்று ஒர் யானையே.
102
   
7995.
கலை அகல் அல்குலார் பால் காதலான் முயங்கி வல்லே
உலை உறு சேக்கைப் போரில் உடைந்திடு குமரரே போல்
மலை பொரு பிடிகளோடு மலைந்து தம் மதநீர் சிந்தி
நிலை அழிவு எய்தி வெள்கி நின்றது ஓர் நெடு நல்                                    வேழம்.
103
   
7996.
உடம்பிடி புரையும் ஒண்கண் மோகினி ஒருத்திக்கு ஆகத்
திடம்படும் அவுணர் யாரும் திரண்டு உடன் சென்றவா                                       போல்
மடம்படு பிடி ஒன்று ஏக மையல் மேல் கொண்டு மாடே
கடம்படும் ஒருத்தல் வேழம் கணிப்பில படர்ந்த அன்றே.
104
   
7997.
காழ் உற்ற தந்தம் மின்னக் கபோலத்து மத நீர் வீழ
ஊழிப் பேர் உருமுத் தன்னை உமிழ்ந்து என ஒலி மீக்                                      கொள்ளக்
கேழ் உற்ற மணிவில் என்னக் கிளர் நுதல் ஓடை பொங்க
வேழத்தின் நிரைகள் எல்லாம் மேகம் போல் உலாவுகின்ற.
105
   
7998.
இரு நெடு விசும்பில் செல்லும் எழிலியை எயிற்றால்                                   பாய்ந்து
சொரிதரு புனலை வாரித் துதிக்கையால் வீசுகின்ற
பரு மணி ஓடை யானை பாய்திரைப் பரவை ஏழும்
கரதலம் எடுத்துச் சிந்தும் கண்ணுதல் களிறு போலும்.
106
   
7999.
கன்றொடு பிடிகள் சூழக் கடாம் படுகைம்மா ஒன்று
நின்றிடு கந்தில் சேர்ந்து நிகளத்தோடு அமர்ந்த நீர்மை
குன்றுகள் புடையில் சுற்றக் குருமணி நீலப் பொற்றை
ஒன்று ஒரு தமியது ஆகி உற்றவாறு ஒத்தது அம்மா.
107
   
8000.
எருத்த மேல் இடிக்கும் பாகர் இசைக்குறி கொள்ளாது                                    ஆகி
மருத்தினும் விசை மேல் கொண்டு வன்கரித் தண்ட                                    நோக்கி
உருத்திடு கொடுஞ்சொல் தாயர் ஒறுக்கவும் ஒருவன்                                    மாட்டே
கருத்து உறு கணிகை நெஞ்சில் போவது ஓர் கடுங்கண்                                    வேழம்.
108
   
8001.
தூவகம் கொண்ட செங்கேழ் அங்குசம் தூண்டு பாகர்
நாவகம் கொண்ட சொல்லான் நவிற்று மந்திரத்தால்                                 வாக்கால்
பாவகம் கொண்ட பைங்கண் பாரிடம் வழிப்பட்டு
                                ஆங்குச்
சேவகம் கொண்ட பொங்கர் சேர்ந்தன சில கைம்                                 மாக்கள்.
109
   
8002.
அந்தம் இலாத செல்வத்து அவுணருக்கு அரசன் முன்னம்
வெந்திறல் கால்கள் தம்மை வியன் சிறைப் படுத்தி                                     என்னக்
கந்து இடைப் பிணிக்கப்பட்ட கடுநடைப் புரவி எல்லாம்
பந்தியில் ஒழுங்கு கொண்டு நின்றன பாங்கர் எங்கும்.
110
   
8003.
வீர வேல் தடக்கை வள்ளல் விழாவினைக் காண                                    விண்ணோர்
ஊரொடு திசையும் ஏனை உலகமும் ஒருங்கு உற்று                                    என்னக்
காரினும் ஒலிமேல் கொண்ட கலினவாம் புரவி பூண்ட
தேர் நிரை அநந்த கோடி செறிந்தன திசைகள் எங்கும்.
111
   
8004.
விடம் கெழு வேல் கணாரும் வெலற்கு அரும் வீரர்                                 தாமும்
தடம் கெழு தானை வெள்ளத் தலைவரும் ஏனையோரும்
இடம் கெழு துளைத் துன் ஊசி இழை தொடுத்து                                 இசைக்கப் பட்ட
படம் கெழு மாடக் கூடத்து ஆவணம் பரவிப் புக்கார்.
112
   
8005.
கன்னெடும் தாரை கான்ற கார் முகில் வளைப்பச்                                  செங்கண்
முன்னவன் நிரையைக் காத்த முதுவரை நிலையது
                                 என்னப்
பன்னிறப் பசுங்காய் சிந்தும் பழுமரக் காமர் காவுள்
பொன்னிவர் புனை மாண் கோயில் புரவலற்கு அமைந்த                                  அன்றே.
113
   
8006.
முத்தமும் துகிரும் பொன்னும் முழு மணிக் கலனும் சந்தும்
சித்திரப் படமும் மற்றும் தெற்றி மேல் நிரைத்துச் சீர் சால்
உத்தம வணிகர் உற்றார் உணர்ச்சியும் கற்பும் தூக்கி
அத்தகு பொருளை யார்க்கும் அளித்திடும் கொடையினார்                                       போல்.
114
   
8007.
மடப் பிடி மான்தேர் நீங்கி வான் இடைத் தவறி மின்னின்
கொடித்திரள் செல்லு மாபோல் குவலயம் படர்ந்து                                   பொங்கர்
இடத்தினில் ஒதுங்கி வெற்பின் எதிர் எதிர் கூவி மஞ்ஞை
நடித்திடும் ஆடல் நோக்கித் திரிந்தனர் நங்கை மார்கள்.
115
   
8008.
கோலொடு வில்லும் வாளும் குந்தமும் வயங்கப் பாத
சாலமும் கழலும் ஆர்ப்பத் தபனிய மணித்தார் தாழச்
சோலையின் உலவிச் சாரல் அருவியும் சுனையும் கண்டு
மால் கரி மலைவும் நோக்கி மடங்கலில் திரிந்தார்                                  மைந்தர்.
116
   
8009.
தார் இடைப் படிந்த வண்டு தடமலர்க் குவளை சேர
வார் இடைப் படிந்த கொங்கை மாதரும் மைந்தர் தாமும்
ஊர் இடைப் படிந்த செங்கேழ் ஆதவன் உருப்பம் தீர
நீர் இடைப் படிதல் வேட்டு நெடும் புனல் துறையில்                                    வந்தார்.
117
   
8010.
வெண் நிற முகிலின் உம்பர் விஞ்சையர் வேந்தர் தாமும்
ஒண் நுதல் அணங்கினோரும் ஒருங்கு உடன் திரண்டது                                       என்னக்
கண்ணகல் தடாகம் புக்க கனங்குழை மகளிர் மைந்தர்
தண் உறு புனல் பாய்ந்து ஆடித் தலைத் தலைத் திரிதல்                                       உற்றார்.
118
   
8011.
கழி உண்ட உவரிக் கானல் கடைசியர் நாட்டம் அஞ்சிப்
பழி உண்டு மறைந்த வா போல் ஒரு சிறை பயிலும்                                     நெய்தல்
குழி உண்ட போதை நோக்கிக் குரை புனல் தடத்துக்கு                                     அம்மா
விழி உண்டு கொல்லோ என்றே கொழுநரை வினவு                                     கின்றார்.
119
   
8012.
பங்கயம் வதனம் என்பார் பாசியை கூந்தல் என்பார்
செங்கிடை அதரம் என்பார் புள் ஒலி செப்பல் என்பார்
சங்கினைக் களமே என்பார் தடாகமும் ஒருத்தி அல்ல
மங்கையர் பலரே என்பார் திரைகளை மணித்தூசு                                       என்பார்.
120
   
8013.
தத்தையை அனைய சொல்லாள் ஒருத்தி தன் நீழல்                                      தன்னை
அத்தடம் தன்னில் நோக்கி அளியனை அறியா
                                     தீண்டோர்
மைத்தடம் கண்ணினாளை மருவினை என்று கேள்வன்
கைத்தலம் தன்னை விட்டு வெகுண்டனள் கரையில்                                      போனாள்.
121
   
8014.
குளத்து இடைப் புனல் வாய்ப் பெய்து கொப்பளித்து                           இடுவான் தன் மேல்
உளத்து இடை வெகுளி எய்தி ஊடினள் ஒருத்தி ஏகி
முளைத்திடு கமலக் கானின் முகம் அலா உறுப்பு முற்றும்
ஒளித்தனள் நிற்ப நாடிக் காண்கலன் உலைதல் உற்றான்.
122
   
8015.
தாம் பெரு கொழுநர் தம்மைத் தத்தமக்கு உரிய புத்தேள்
ஆம் பரிசு உன்னும் தன்மை ஐயம் அது இல்லை என்னக்
காம்பு உறழ் தடந்தோள் நல்லார் கணவர் மேல் கரத்தால்                                      அள்ளிப்
பூம்புனல் வீசுகின்றார் பூசனை புரிகுவார் போல்.
123
   
8016.
ஞெண்டொடு வராலும் சேலும் ஆமையும் நிலா வெண்                                      சங்கும்
புண்டரீகத் தடாகம் குடைந்திடும் பூசல் அஞ்சித்
தெண்திரை அமுதச் சொல்லார் சிற்சில உறுப்புத்                                      தன்னைக்
கண்டு கண்டு இரிவது என்னத் திரிவன கலக்கம் எய்தி.
124
   
8017.
ஏந்திழை மகளிர் தாமும் மைந்தரும் இருநீர் தன்னுள்
பாய்ந்தனர் ஆடும் எல்லைப் பங்கய விலைகள் தோறும்
சேர்ந்திடு திவலை ஈட்டம் சிறந்தவர் சேர்ந்தலாலே
பூந்தடம் பொய்கை யாக்கை பொடித்தன போலும் அன்றே.
125
   
8018.
நோக்கினும் நுழைகு உறாத நுண் துகில் மறைத்த
                            அல்குல்
தேக்கு தண் பொய்கை ஆடும் செவ்வியில் தெரியத்                             தோன்ற
நீக்க அரும் பெரு நாண் கொண்டு நின்றிடாது ஒருத்தி                             ஓடித்
தாக்கு அணங்கு என்னப் போய்த் தன் கொழுநனைத்                             தழுவி கொண்டாள்.
126
   
8019.
உட்டெளிவு இல்லா நங்கை ஒலி புனல் தடத்தின் ஆடும்
கட்டழகு உளது ஓர் காளை கவிர் இதழ் வெளுப்பு                                   நோக்கிக்
கிட்டியான் நிற்க உன்றன் கேழ் கிளர் அதரத்து எச்சில்
இட்டனள் யார் இங்கு என்னா வெகுளி கொண்டு இகலிப்                                   போனாள்.
127
   
8020.
வெளுத்தன சேயிதழ் விழி சிவந்தன
அளித்தொகை எழுந்தன அளகம் சோர்ந்தன
குளித்திடு மலர்த்தடம் கொடியனார்க்கு எலாம்
களித்திடு கணவரும் கள்ளும் ஒத்ததே.
128
   
8021.
பை அரவு அல்குலார் படியும் பான்மையால்
துய்யது ஓர் குமிழிகள் செறிந்து தோன்றுவ
வைய பூந்தடம் எலாம் அவரை நோக்குவான்
மெய் எலாம் விழிகளாய் விழித்தல் போன்றவே.
129
   
8022.
மன்னரும் மகளிரும் படிந்த வாச நீர்
செந்நிறக் குங்கும நானம் சேர்தலான்
மின்னொடு கூடிய முகிலும் மெல்லியல்
பொன்னொடு கூடிய மாலும் போலுமால்.
130
   
8023.
பூசு சாந்தமும் நானமும் பொய்கையில்
வாச நீர் எங்கும் ஆகி மணம் கமழ்ந்து
ஆசை எங்கும் உலாவி அவ்வானவர்
நாசி ஊடு மடுத்து நடந்தவே.
131
   
8024.
இன்ன தன்மையில் ஏர் கெழு மைந்தரும்
அன்ன மென் நடையார்களும் அத்தடம்
தன்னின் ஆடித் தடங்கரை ஏறியே
பொன்னின் மாண் கலை பூணொடு தாங்கினார்.
132
   
8025.
வெளிறு மென்னகை மெல்லியல் மாதரும்
ஒளிறு மேனி உவாக்களும் ஒன்றியே
பிளிறு மையல் பிடியும் பெருமதக்
களிறும் என்னக் கழி பொழில் ஏகினார்.
133
   
8026.
ஏகினார்க்கு அவ்விரும் பொழில் மீச்செறி
மேக சாலமும் மீன் தொகை ஈண்டிய
மாக நாடும் அவ்வானவர் வந்து சேர்
போக பூமிப் பொதும்பரும் போன்றதே.
134
   
8027.
பளிங்கு அடுத்திடு பாங்கரின் வேங்கை வீ
விளங்கு சாயையை மெய் என நோக்கி இக்
குளங்கொள் பூமலர் கொய்து நல்கீர் எனாத்
தளர்ந்து ஒருத்தி தலைவனை வேண்டினாள்.
135
   
8028.
அங்கு ஒருத்தியை நோக்கி ஒர் அண்ணல் உன்
கொங்கை ஒத்திடா கோங்கு அலர் கொள்க என
வெங்கை தன் முலைக் கொப்பு அது என்று எண்ணியோ
செங்கையால் பறித்தீர் என்று சீறினாள்.
136
   
8029.
மலர்ந்த வாள் முக மங்கையர் நோக்கலும் வறிதாய்ப்
புலர்ந்து நின்றிடு தருக்களும் பொலிவினை எய்தி
அலர்ந்தவே எனின் ஆடவர் தங்களை அன்னார்
கலந்த போதுறும் இன்பமார் கட்டு உரைத்திடுவார்.
137
   
8030.
மேல் தலத்து எழு தாரகை மேதினி வரைப்பில்
தோற்று காட்சியோ இங்கு இவை என்ன ஓர் தோன்றல்
கூற்றம் அன்ன வேல் கண்ணி நின் கூர் எயிற்றிற்குத்
தோற்ற முல்லையின் அரும்பு காண் இவை எனச்                                சென்னான்.
138
   
8031.
மலையும் வேல் கணாள் ஒருத்தி சொல் வினவி மற்று                                      ஒருத்தி
முலையின் மேல் விழி வைத்தவன் முறிகளும் முகையும்
இலையு மாப்பறித்து உதவலும் உமக்கு மால் ஈந்தாள்
தலையின் மேல் இவை சூட்டும் என்று எறிந்தனள்                                      தரியாள்.
139
   
8032.
காதல் மங்கைபால் வைத்த சிந்தையன் கரவீரப்
போது கொய்யலன் இலை கொய்து பொற் கரத்து அளிப்ப
ஏதிலாள நின் சேர்தலின் இங்கு இவை நுகர்ந்து
சாதலே தலை எனச் சினைத் தாள் ஒரு தையல்.
140
   
8033.
இங்கு உன் முலை நேர் குரும்பை இவை யாய் குயம்                                        போல்
தங்கும் மிளநீர் உவை அன்னவள் தன்னை ஈன்றாள்
கொங்கை நிகரும் அடல் பாளைக் குழு இது என்று ஓர்
மங்கை நகைப்ப அவை காட்டி ஒர் வள்ளல் நின்றான்.
141
   
8034.
ஓவாத தெங்கின் இளம் பாளையின் ஒன்று தன்னைத்
தாவா ஒருவன் கொடு வந்து ஒரு தையல் முன்போய்ப்
பாவாய் தமியேன் உயிரே நின் பணை முலைக்காங்கு
ஓவாத முத்தத் தொடையிங்கு இது கொள்க என்றான்.
142
   
8035.
மின்னார் தமக்கு ஓர் அரசே வெறி வேங்கை வீயும்
புன்னாக வீயும் கொணர்ந்தேன் புனைகிற்றி என்ன
மன்னா உனக்குப் பலர் உண்டு கொல் மாதர் என்னாத்
தன் ஆவி அன்னான் தனைச் சீறி ஒர் தையல் போனாள்.
143
   
8036.
பொன் பெற்ற மார்பன் ஒருவன் சில போது கொய்து
கொன் பெற்ற வேல் கண் மடவார் கைக்                               கொடுத்தலோடும்
பின் பெற்ற நங்கை வெகுண்டாள் பழுது என்று பேசி
முன் பெற்றவளும் அவை சிந்தி முனிந்து போனாள்.
144
   
8037.
அப்பூர் விழியாள் ஒரு மூவகைத்து ஆய பூவும்
மைப் பூங் குழலில் புனைந்தாள் ஒர் வள்ளல் நோக்கி
மெய்ப் பூவை அன்னாய் மருங்குல் முடிவு எய்த
                               மென்கார்
முப்பூ விளைந்த படி என் கொல் மொழிக என்றான்.
145
   
8038.
இத்தன்மை மைந்தர் பலரும் இகல் வேல் கணாரும்
மெய்த் தண் மலர்க் கா உலவா விளையாடி மீண்டு
தத்தம் பட மாளிகை புக்கனர் தானும் ஆங்கே
அத்தம் மய வெற்பு அடைந்தான் கதிர் ஆயிரத்தோன்.
146
   
8039.
ஏலக் காவின் மக்கள் புகுந்தே இனிது ஆடும்
கோலச் செவ்வி நோக்கினன் ஆங்கொல் குடபாலின்
மாலைச் செக்கர் வானம் அது ஆகும் மலி தண் பூஞ்
சோலைக்கு உள்ளே தானும் அடைந்தான் சுடர்                                    வெய்யோன்.
147
   
8040.
முந்தைச் செக்கர் ஆகிய புத்தேள் மொய்ம்பில் சூழ்
தந்திப் போர்வை போல் இருள் ஈட்டம் சார்வு எய்த
அந்தத் தேவன் மீ மிசை அண்டத்தவர் வீசும்
கந்தத் தண் போது ஒப்பன தாரா கணம் எல்லாம்.
148
   
8041.
படையா நேமிப் பண்ணவனார் பால் கடலுக்கு ஓர்
தடையாய் உற்றார் என்று இமையோர் தண் தயிர்வேலை
கடையா நிற்பவே திரள் வெண்ணெய் கடிதே வந்து
அடையா நிற்றல் போல உதித்திட்டது திங்கள்.
149
   
8042.
காணப் பட்டான் விண் மதி என்னக் காமத்தில்
பூணப் பட்ட மாமதி தோன்றப் புலர்வு எய்தி
யாணர்க் கிண்ணத்துள் நிறை தேறல் இனிது அட்டிப்
பாணிக் கொண்டே மேவுதல் உற்றார் பல மாதர்.
150
   
8043.
தூயது அன்று ஆகிய புனல் எல்லாம் நல்கியே சூழ்ந்த                              தெங்கின்
காயின் வந்திடு பயன் கொள்ளுவார் போல் சில                              காளைமார்கள்
ஆயதண் தேறலை அரிவை மார் நுகருவான் அருளி                              அன்னார்
வாயின் வந்து ஊறு மெல் அமிர்தினைக் கொள்வதற்கு                              உள்ளம் வைத்தார்.
151
   
8044.
தெள்ளு பேர் அமிர்த நேர் சொல்லினார் தேறல்                         பெய்கின்ற வெள்ளி
வள்ளம் ஆனவை எலாம் பொலிவன வானகத்து இடை                         உதித்த
வெள்ளிது ஆகிய மதி ஒன்றினை நோக்கி ஒண் புவியின்                         ஊடே
கொள்ளையாய் மதிபல மாறு மாறாய் எழுங் கொள்கை                         போலும்.
152
   
8045.
அளியினுக்கு உணவதாம் தேறல் வாய்க் கொண்டது ஓர்                            அரிவை ஆற்றக்
களி மயக்கு எய்துவாள் இந்துவை நோக்கி இக்கடிய                            தேறல்
துளியினைக் கோடியேல் உனது மாசு உள்ளதும்                            தொலையும் இன்னும்
ஒளியினைப் பெறுதி நின் ஊனமும் தவிர்தி என்று உரை                            செய்கின்றாள்.
153
   
8046.
கருதியான் உண்டிடு நறவினைக் கண்டு காமித்து நாளும்
திரிதியால் மதியமே நாணம் உற்றாய் கொலோ செப்பு                                     கில்லாய்
பரிதியார் தம்மின் வீறு எய்துவாய் அன்னதைப் பகிர்வன்                                     இங்ஙன்
வருதியால் என்றனள் தேறலால் தெளிவு இலா மையல்                                     பெற்றாள்.
154
   
8047.
என்னொடே தோன்றினாய் யான் எனும் தன்மையா
                          யாதும் வேண்டாய்
பின்னரும் முன்னும் ஆய் வைகலும் திரிகுவாய் பிரிகிலா                           தாய்
இன்னறா உண்கெனா உதவினும் கொள்கிலாய் என்று                           ஒருத்தி
தன்னது ஆம் நீழலோடு ஊடினாள் வாடினாள் தளர்தல்                           உற்றாள்.
155
   
8048.
அங்கை வள்ளம் தனில் மதுவை உண்டு அயருவாள்                                அன்னதற்குள்
செங்கயல் விழியையும் வால் இதழப் பொலிவையும் தெரிய                                நோக்கி
இங்கு எனைக் கூடியே கணவர் போயினர் கொலாம்                                என்று ஒருத்தி
பொங்கு சீற்றத்தளாய் ஓடினாள் நாடினாள் புலர்தல்                                உற்றாள்.
156
   
8049.
திருந்து இழைமார் சிலர் செவ்வித் தேறலை
அருந்தினர் வெறுத்தனர் அமுதம் தன்னையும்
பொருந்திடு கணவரைப் புணரும் ஆசையால்
வருந்தினர் தழல் என மதியை உன்னுவார்.
157
   
8050.
வாடுகின்றார் சிலர் மகிழ்நர் வந்திட
ஊடுகின்றார் சிலர் உவக்கின்றார் சிலர்
பாடுகின்றார் சிலர் பணிகின்றார் சிலர்
ஆடுகின்றார் சிலர் நறவம் ஆர்ந்து உளார்.
158
   
8051.
அந்தரப் புள்ளொடும் அளிகள் தம்மொடும்
வந்து அடுத்தவரொடும் மடந்தை மார் சிலர்
சுந்தரத் தேறலைத் துய்த்து வாமம் ஆம்
தந்திரக் கிளைஞர் போல் தம்மில் ஈண்டினார்.
159
   
8052.
விள் உறு நாணினர் வீழும் தூசினர்
உள் உறு களிப்பினர் உரை மயங்கினர்
தள் உறு தம் உணர்வு இன்றிச் சாம்பினார்
கள்ளினும் உளது கொல் கருத்து அழிப்பதே.
160
   
8053.
இத்திற மதுவினை இனிதின் மாந்தினோர்
மத்தரின் மயங்கினர் மனம் தெளிந்துழித்
தத்தமது இறைவரும் தாமும் கூடியே
அத்தலை முயங்கினர் ஆர்வம் மிக்கு உளார்.
161
   
8054.
ஏயுறு பரிசனம் இனைய தன்மையான்
மேயின இங்கு இது விளம்பினாம் இனி
ஆடை வந்திடும் அரசர் செய்கையும்
நாயகன் வதுவையும் நவிலுவாம் அரோ.
162
   
8055.
கொன்னுனை வேல் முசுகுந்தன் ஆதியாம்
மன்னவர் யாவரும் வையம் நீங்கியே
தன் நிகர் இலாதது ஓர் தலைவன் மேவிய
பொன்னிவர் குடுமியம் பொருப்பில் ஏறினார்.
163
   
8056.
ஏறினர் வெற்பின் மேல் எவரும் தெய்வத
நூறு எரி கம்மியன் நுனித்துச் செய்திடு
மாறு அகல் திருநகர் வளம் கண்டு இந்திரன்
சாறு அயர் வதுவையஞ் சாலை நண்ணினார்.
164
   
8057.
அம் முசுகுந்தனை ஆதி ஆகிய
வெம் முடி மன்னரும் இமையவர்க்கு இறை
செம் மலர் அடிகளைச் சென்னி சேர்த்தினார்
கைம் முறை தொழுதனர் களிப்பின் மேல் உளார்.
165
   
8058.
கயமலர் குவளையில் கண்கள் மிக்கு உளான்
அயல் உறும் அரசருக்கு அருளி ஆங்கு அவர்
செயல் முறை வினவியே சிறப்பின் ஆகிய
நய மொழி பலவுடன் நவின்று மேவினான்.
166
   
8059.
மேதகு கதியர் ஆய் விசும்பில் சென்றிடும்
மாதவன் மதி முதல் அமரர் யாவரும்
மாதிர இறைவரும் மா தவத்தரும்
பாதல வாணரும் பரங் குன்று எய்தினார்.
167
   
8060.
விண் தொடர் பிறங்கலின் மிசை இவர்ந்து போய்
அண்டரும் பிறரும் ஆய் அமரர் கோன் தனைக்
கண்டனர் தொழுதனர் களிப்பின் மாதவர்
எண் தகும் ஆசிகள் இயம்பி எய்தினார்.
168
   
8061.
விறல் வரை மாதரும் விண்ணின் மாதரும்
செறி புனல் மாதரும் திசையின் மாதரும்
உறுதவ மாதரும் உரக மாதரும்
மறுவகல் புலோமசை வயின் வந்து ஈண்டினர்.
169
   
8062.
சூரர மங்கையர் தொல்லை விண்ணவர்
பேர் அரசு இயற்றிய பிரான் தன் காதலி
சீர் அடி வந்தனை செய்து தெய்வத
வாரணம் என்பவள் மருங்கில் எய்தினார்.
170
   
8063.
தெய்வத யானை கேள் தீய சூர் உயிர்
வவ்விய வேலினான் மனைவி ஆதியால்
எவ்வுலகிற்கும் நீ இறைவி ஆம் என
அவ்வவர் அடிபணிந்து அன்பொடு ஏத்தினார்.
171
   
8064.
கயல் புரை நோக்கு உடைக் கடவுள் யானைபால்
இயல் படு திருநலன் இருக்கப் பின்னரும்
செயல் படு கோலமும் சிறிது செய்திட
மயல் பட உன்னினர் மட நல்லார் எலாம்.
172
   
8065.
பொன்னகம் அதனிடைப் புராரி சேயினைத்
தன்னக மிசை கொடு தவத்தை ஆற்றினாள்
பின்னக மயிர்முடிப் பிணையல் சூழலை
மென்னக விரல்களால் மெல்ல நீக்கினார்.
173
   
8066.
காசறை விரவிய கடிமென் கூந்தலில்
பூசினர் நாவி நெய் புதிய சாந்தமும்
மாசு அறு பனிதமும் மற்று நீவியே
நேசமொடு ஒண் பனி நீர் கொண்டு ஆட்டினார்.
174
   
8067.
சேந்தது ஓர் வெம்பணி சீற்றத்தால் கரும்
பாந்தளை வாய்க்கொடு பற்று மாறு எனப்
பூந்துகில் கிழி கொடு புனல் வறந்திடக்
கூந்தலை ஒற்றினர் குழைமென் கொம்பனார்.
175
   
8068.
மாந்தளிரே என வனப்பும் மென்மையும்
காந்தியும் எய்தியே கடவுள் தன்மையால்
தோய்ந்திடல் இன்றியும் துப்பின் வண்ணம் ஆம்
பூந்துகில் ஒன்றினைப் புனைந்து உடீஇயினார்.
176
   
8069.
ஈர் அறு கதிர்களும் இம்பர் சேர்தலின்
ஆர் இருள் யாவையும் அஞ்சி அவ்வை தன்
வாரொலி கூந்தலின் மறை புக்கால் எனக்
கார் அகில் நறும் புகை கமழ ஊட்டினார்.
177
   
8070.
பொலம் புரி உத்தியும் பொருத மஞ்ஞையும்
வலம்புரி மகரமும் மரபுஇல் வானவர்
குலம் புரி தவம் புரை கொம்பின் கூழையின்
நலம் புரி மங்கலம் நவின்று சாத்தினார்.
178
   
8071.
விரி இணர்க் கோங்கமும் வெட்சியும் செரீஇ
மருமலர் இதழ் இடை வைத்து வாச மார்
தெரியலும் தொடையலும் செறியச் சூட்டியே
சுரி குழல் முடித்தனர் சுழியத் தன்மையால்.
179
   
8072.
ஒரு முயல் முழுமதி உள் புக்கால் என
இரு விழி புருவம் ஆம் இனைய அவற்றொடு
கருநிறம் கண்டிடக் காமர் சாந்தினால்
திரு நுதல் அதன் இடைத் திலகம் தீட்டினார்.
180
   
8073.
ஊட்டிய நறும் புகை ஓதிநின்று ஒரீஇத்
தீட்டிய திரு நுதல் திலகம் சேர்தரப்
பூட்டினர் சுட்டியைப் புயங்கம் ஒன்று நா
நீட்டி நஞ்சு உமிழ் தரு நிலைமை ஈது என.
181
   
8074.
கோல் வளையம் நலார் குழையில் வல்லியம்
சூல் வளை மிடற்றினில் தொடையல் முத்து அணி
கால் வளை கஞ்ச நேர் கரத்தும் தோளினும்
வால் வளை தொடி இவை வயங்க சேர்த்தினார்.
182
   
8075.
கொட்டினர் கலவைகள் கொங்கையின் மிசை
மட்டு இமிர் பிணையலும் மணியின் கோவையும்
அட்டினர் படாமும் ஒன்று அதன் கண் சேர்த்தினார்
இட்டு இடை இடை தனக்கு இரக்கம் வைக்கிலார்.
183
   
8076.
மாடக யாழ் புரை மழலைப் பெண் பிளை
ஆடக விரை மலர் அனைய தாள்களில்
பாடகம் பரிபுரம் பாத சாலங்கள்
சூடக முன் கையார் தொழுது சூழ்வித்தார்.
184
   
8077.
தெய்வத மடந்தையர் திருவின் செல்வி பால்
இவ்வகை ஒப்பனை இயற்றி ஏத்தலும்
மைவிரி குவளை நேர் வடிவக் கண்ணினான்
அவ்விடை செய்திடும் அமைதி கூறுவாம்.
185
   
8078.
மேலை வானவர்க்கு இறையவன் விரிஞ்சனை நோக்கிச்
சாலை ஆகிய தெவ்வெலாத் தேவரும் சார்ந்தார்
மாலை தாழ் முடி எம் பெரு முதல்வற்கு மணம் செய்
காலை நாடியே இஃது எனக் கழறுதி என்றான்.
186
   
8079.
அப் புரந்தரன் மொழிதனை அம்புயன் வினவிச்
செப்பு கின்றது என் அறுமுகப் பரன் மணம் செய்தற்கு
எப்பெரும் பகல் ஆயினும் இனியதே எனினும்
ஒப் பகன்றிடு முகூர்த்த இவ்வெல்லை என்று உரைத்தான்.
187
   
8080.
ஈவதே முறையாய் உளாய் இப்பகல் சிறந்தது
ஆவதே எனின் யான் பெறும் அணங்கை ஈண்டு                               அளிப்பான்
தேவ தேவனாம் அறுமுகச் செம்மலைக் கொணரப்
போவதே கடன் எமக்கு எனப் புரந்தரன் புகன்றான்.
188
   
8081.
அனைய காலையில் அச்சுதக் கடவுளும் அயனும்
இனிது போதும் என்று இந்திரன் தன்னொடும் எழுந்து
முனிவர் யாவரும் தேவரும் சூழ்ந்து முன் படரப்
புனித நாயகன் ஆலயம் நோக்கியே போனார்.
189
   
8082.
போந்து மற்று அவர் பொலன் மணிக் கோயில் உள்                                      புக்குச்
சேந்தன் மாமலர் அடிகளை முடிகளில் சேர்த்திக்
காந்தள் மெல்விரல் மடந்தைபால் கடிமணம் புரிய
ஏந்தல் நீ அவண் வந்திட வேண்டும் என்று இசைத்தார்.
190
   
8083.
இன்ன வாசகம் வினவலும் இராறு தோள் உடையோன்
அன்னது ஆக என்று அருள்செய்து மடங்கல் ஏறாற்றும்
பொன்னின் மாமணி அணையினும் பொருக்கென                              எழுந்தான்
துன்னு வீரரும் பாரிட முதல்வரும் துதிப்ப.
191
   
8084.
எழுந்து முன் உறு மஞ்ஞை அம் சேவல் மேல் ஏறிச்
செழுந் தனிக் கமலத்தன் ஆதி ஆம் தேவர்
விழுந்து முன் பணிந்து ஏத்தியே விரை மலர் மாரி
பொழிந்து பாங்கராய் வந்திட வீதிவாய்ப் போந்தான்.
192
   
8085.
கொற்ற வெண் குடை எடுத்தனர் குளிர் பனிக் கவரிக்
கற்றை வீசினர் ஆல வட்டங்கள் கால் அசைத்தார்
ஒற்றை வாள் படை ஏந்தினர் உடுபதிக் கடவுள்
மற்றை ஆதவன் மருத்துவன் சலபதி மறலி.
193
   
8086.
ஆழி மால் அயன் உவணமும் அன்னமும் அழியா
ஊழி நாயகன் ஊர்தியின் ஒலி கொல் என்று உட்கக்
கேழ் இலா மலர்க் கிஞ்சுகச் சூட்டொடும் கிளர்ந்து
கோழி நீள் கொடி ஆர்த்தது எவ்வண்டமும் குலுங்க.
194
   
8087.
வேதர் ஆர்த்தனர் வேதமும் ஆர்த்தன விண்ணோர்
மாதர் ஆர்த்தனர் மாதவர் ஆர்த்தனர் வயவெம்
பூதர் ஆர்த்தனர் பூதம் ஐந்தும் ஆர்த்தன புடவி
நாதர் ஆர்த்தனர் நாதம் மிக்கு ஆர்த்தன நகமே.
195
   
8088.
திண்டி பேரிகை தண்ணுமை சல்லரி திமிலை
பண்டியில் பெயர் குட முழாக் காகளம் படகம்
தொண்டகம் துடி துந்துபி வலம் புரித் தொகுதி
அண்டம் விண்டிட இயம்பினர் பூதரில் அநேகர்.
196
   
8089.
அஞ்சில் ஓதியின் மேனகை உருப்பசி அரம்பை
கிஞ்சுகச் செவ்வாய்த் திலோத்தமை முதலினோர் கெழுமி
மஞ்ச மீதினும் மானத்தும் நின்று வாள் விழிகள்
நஞ்சு உமிழ்ந்திட அமுது எனப் பாடியே நடித்தார்.
197
   
8090.
யாணர் வண்டினம் சுரும்புடன் அலமரும் யாழும்
வீணையும் கரம் பற்றியே விஞ்சையர் முதலோர்
சேண் அரம்பையர் களி நடத்தோடு சீர் தூக்கும்
பாணியும் மிசை உற்றிட இசைத்தனர் பாடல்.
198
   
8091.
பொருவில் வீரரும் பூதரும் புரந்தரன் முதலாம்
சுரரும் மாதவர் யாவரும் பிறரும் ஆய்த் துன்னி
ஒருவர் மெய்யினை ஒருவர் மெய் நெருக்க உற்றிடலால்
தெருவும் முற்றமும் இடம் பெறா ஆயின சிறிதும்.
199
   
8092.
இன்ன தன்மைகள் இயல எல்லை தீர்
பொன்னின் வீதிவாய்ப் போந்து புங்கவர்
மன்னன் ஆற்றிய மணத்தின் சாலையின்
முன்னர் வந்தனன் முடிவு இல் முன்னையோன்.
200
   
8093.
ஆவது ஆகிய அண்ணல் தன் மிசைத்
தாவில் கும்பமேல் தருப்பை தோய்த்த நீர்
தூவி ஆசிகள் சொற்று மாதவர்
ஏவரும் திரண்டு எதிர் கொண்டு ஏத்தினர்.
201
   
8094.
செங்கை தன்னிடைத் தேவர் மாதவர்
நங்கை மார் எலாம் நால் இரண்டு எனும்
மங்கலங்களும் மரபின் ஏந்தியே
எங்கள் நாயகற் எதிர்ந்து போற்றினார்.
202
   
8095.
பஞ்சி தூய நெய் பளித நாவியாய்
விஞ்சு தீஞ்சுடர் மிளிர் பொன் தட்டைகள்
அஞ்சில் ஓதியர் அங்கை ஏந்தியே
செஞ் செவ்வேள் முனம் சிறப்பித்தார் அரோ.
203
   
8096.
காலை அங்கதிற் காலை அங்கதிர்
மேலை விண் முகில் விட்டு அகன்று எனக்
கோலம் செய்ய நம் குமர நாயகன்
நீல மஞ்ஞை மேல் நின்று நீங்கினான்.
204
   
8097.
ஏய மஞ்ஞை நின்று இழிந்து வேள்வி செய்
கோயில் முன் கடைக் குமரன் சேர்தலும்
ஆய போழ்தினில் அரம்பை மாரொடும்
தூயது ஓர் சசி தொழுது அங்கு எய்தினாள்.
205
   
8098.
எதிர் புகுந்திடும் இந்திராணி தன்
புதியது ஓர் பசுப் பொழிந்த தீய பால்
நிதியின் கொள் கலம் நிரப்பி வந்து வேள்
பத யுகங்களின் பரிவொடு ஆட்டினாள்.
206
   
8099.
ஆட்டித் தீம் பயன் அலரும் கண்ணியும்
சூட்டி மெல் அடி தொழுது பல்சுடர்
கூட்டி வைத்தது ஓர் கொள் கலம் தனைக்
காட்டி மும்முறை கடவுள் சுற்றினாள்.
207
   
8100.
இனைய தன்மைகள் இயற்றி இந்திரன்
மனைவி வெள்கியே மட மின்னார் ஒடும்
தனது மந்திரம் தன்னில் போதலும்
அனகன் கண்டு அதற்கு செய்து ஏகினான்.
208
   
8101.
கோல மா மணி குயிற்றிப் பொன்னரி
மாலை நாற்றியே வனப்புச் செய்திடும்
சாலை புக்கனன் தனக்கு வேறு ஒரு
மூலம் இல்லது ஓர் முதலின் வந்து உளான்.
209
   
8102.
பக்கமாய் அரி பங்கயன் ஆதியோர்
தொக்கு வந்திடத் தொன்மணி மண்டபம்
புக்கு நம்பி புரந்தரன் உய்த்திடு
மிக்க பீடத்தில் வீற்று இருந்தான் அரோ.
210
   
8103.
வீற்று இருந்த பின் வேதனும் மாயனும்
தேற்றம் மிக்க முனிவரும் தேவரும்
ஆற்றல் வீரரும் அண்ணல் தன் ஏவலால்
ஏற்ற ஏற்ற இடந்தொறும் வைகினார்.
211
   
8104.
அந்த எல்லை அவனியில் வாழ் முசு
குந்தனே முதல் கொற்றவர் யாவரும்
வந்து வந்து வணங்கி வழுத்திடக்
கந்தன் எந்தை கருணை செய்தான் அரோ.
212
   
8105.
ஆன காலை அரி அயன் நாட ஒணா
ஞான ஞாயகன் நங்கையும் தானும் ஓர்
மான மேல் கொண்டு மாயிருஞ் சாரதர்
சேனை சூழ்தரச் சேண் இடைத் தோன்றினான்.
213
   
8106.
அம்மையும் தன தத்தனும் வந்தது
செம்மல் கண்டு சிறப்புடை ஓகையாய்
விம்மிதம் கொண்டு மேதகும் அன்பினால்
இம் எனக் கடிதே எழுந்தான் அரோ.
214
   
8107.
கண்ணன் ஆதிக் கடவுளர் யாவரும்
எண் இலா முனிவோர்களும் எம்பிரான்
நண்ணினான் இங்கு நாம் உய்ந்தனம் எனாத்
துண் எனாத் எழுந்தார் கை தொழுது உளார்.
215
   
8108.
அனைய காலையில் ஆதியம் பண்ணவன்
இனிது மானத்து இழிந்து கணத்துடன்
புனித நீடு பொலன் மணிச் சாலையுள்
வனிதையாளொடும் வந்து புக்கான் அரோ.
216
   
8109.
அது கண்டு நடந்து அறு மா முகவன்
எதிர் கொண்டு விரைந்து இருவோர் பதமும்
முதிர் அன்பொடு தன் முடி சூடினன் ஆல்
கதிரும் கமலங்களும் மேவிய போல்.
217
   
8110.
வந்து அஞ்சலி செய்து வணங்கியது ஓர்
கந்தன் தனை அங்கு அவர் கை கொடு எடாத்
தம் தம் முரன் ஊடு தழீஇ முறையே
முந்து அன்பொடு உயிர்த்தனர் முச்சியையே.
218
   
8111.
முது வானவரும் முனிவோர் எவரும்
மது சூதனனும் மலர் மேல் அயனும்
சத வேள்வியனும் சகம் ஈன்றவர் தம்
பதம் மீ மிசை வந்து பணிந்தனரால்.
219
   
8112.
தாழ் உற்றிடுவோர் உமை சங்கரனைச்
சூழ் உற்று வலம் செய்து சூழ் வினை ஊடு
ஆழ் உற்றிடு புன்மை அகன்று அடியேம்
வாழ்வு உற்றனம் என்று வழுத்தினரால்.
220
   
8113.
உன்னற்கு அரிது ஆகி உயிர்க்கு உயிராய்
மன் உற்றவனை மலை மங்கை உடன்
பொன்னில் புனையும் புது மன்றல் மனை
தன்னில் குமரன் கொடு சார்ந்தனன் ஆல்.
221
   
8114.
ஆகியது ஒர் போழ்து தனில் ஆணை முறை தன்னால்
மாக நெறி வந்து ஒரு மணித் தவிசு நண்ணத்
தோகை உடை மஞ்ஞை உறழ் தோற்றம் உடை மாதோர்
பாகம் உற வாயிடை பராபரன் இருந்தான்.
222
   
8115.
மங்கை உமையும் சிவனும் வள்ளல் தனை நோக்கி
இங்கு வருக என்று பின் எடுத்து இனிது புல்லித்
தங்கள் வயின் வைத்து நனி தண் அளி புரிந்தார்
அங்கு அது தெரிந்து தொழுது அம்புயன் இசைப்பான்.
223
   
8116.
முன்னம் ஒரு வைகல் தனில் மூவிரு முகத்தோன்
தன்னை அசுரப் படை தடிந்திட விடுத்தாய்
அன்ன பரிசே அவுணராய் உளரை வீட்டி
நென்னல் இமையோர் சிறையும் நீக்கி அருள் செய்தான்.
224
   
8117.
நன்றி இதனைக் கருதி நாங்கள் புரிகைம் மாறு
ஒன்றும் இலை என்னினும் உளத்து எழும் விருப்பால்
வென்றி அசுரேசர் கிளை வீட்டு குமரேசற்கு
இன்று மகவான் மகளை ஈந்திட நினைந்தான்.
225
   
8118.
அற்றம் இல் இரக்கமுடன் ஆருயிர்கள் முற்றும்
நிற்றலும் அளித்து அருளும் நேர் இழையும் நீயும்
மற்று இது பகல் பொழுதில் வந்தனிர்கள் என்றால்
சிற்று அடியர் ஏங்கள் செயல் சீர் உளதை அன்றோ.
226
   
8119.
என்று இனைய நான்முகன் இசைத்திடலும் ஈசன்
நன்று என மகிழ்ச்சி கொடு நாமும் இது காண் பான்
மன்றல் மலர் கூந்தல்மலை மங்கையுடன் இங்ஙன்
சென்றனம் இதற்கு உரிய செய்க இனி என்றான்.
227
   
8120.
நாதன் இவை கூறுதலும் நன்கு மகிழ்வு எய்தி
மாதவனும் நான்முகனும் வாசவனை நோக்கி
வேத முறையால் முருகன் வேட்டு அருள உன்தன்
கோதை தனை அன்பொடு கொணர்ந்திடுதி என்றார்.
228
   
8121.
அந்த அமையம் தனில் அதற்கு இசைவு கொண்டே
பைந்தொடி நல்லார்கள் அமர் பாங்கர் தனில் ஏகி
நம் தமை அளித்து அருளும் நங்கை வருக என்னா
இந்திரன் விளித்திடலும் ஏந்திழை எழுந்தாள்.
229
   
8122.
கல் உயர் பொருப்பின் இடை காமர் அடி செல்ல
அல்லன கொல் என்று மணி நூபுரம் அரற்ற
மெல் இடை வருந்தும் என மேகலை இரங்க
எல்லவரும் உள் மகிழ எம்மனை நடந்தாள்.
230
   
8123.
பஞ்சிதனின் மெல் அடி பனிப்ப வரையின் பால்
குஞ்சரி நடந்த செயல் கூறு புதுமைத்தோ
செஞ்சுடர் வை வேலுடைய செம்மலர் அடி தீயேன்
நெஞ்சக அடுக்கலினும் நின்று உலவும் என்றால்.
231
   
8124.
தந்தி முன் வளர்ப்ப வரு தையல் மிக நொய்ய
செந்தளிர் ஓதுங்க மிளிர் சீறடி ஒதுங்கி
இந்திரையும் நாமகளும் ஏனையரும் ஏத்தப்
புந்தி களி கூர் தரு புரந்தரன் முன் வந்தாள்.
232
   
8125.
இன்ன எல்லையில் இந்திரன் தெய்வதக்
கன்னி தன்னைக் கடி மணச் சாலையின்
முன்னர் உய்ப்ப முனிவரும் தேவரும்
அன்னை வாழி என்றே அடி போற்றினார்.
233
   
8126.
கணங்கொள் பேரவை கை தொழ ஆண்டு உறும்
அணங்கு தன்னுடன் ஆதியந் தேவனை
வணங்கி வேல் உடை வள்ளலை நோக்கியே
சுணங்கு சேர் முலை துண் என வெள்கினாள்.
234
   
8127.
மங்கை தாழ்தலும் வாலிதின் நோக்கியே
அங்கண் நாதன் அருள் செய அண்ணலைக்
கொங்கையால் குழை வித்தவள் கோல்வளைச்
செங்கை யோச்சிச் சிறு புறம் நீவினாள்.
235
   
8128.
திருத் தகும் திறல் சேவையும் சேண் மிசை
அருத்தி பெற்ற அணங்கையும் முற்படும்
பெருத்த பொன் மணிப் பீடிகை மீமிசை
இருத்தி வைத்தனள் யாவையும் ஈன்று உளாள்.
236
   
8129.
அதிர் கழல் ஈசனொடு அம்மை இருந்து ஆங்கு
எதிர் எதிர் விம்பம் இலங்கிய வா போல்
வதுவை அணிந்திடு மைந்தனும் மாதும்
கதிர் மணி தோய் கனகத் தவிசு உற்றார்.
237
   
8130.
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
வெவ்வரி ஏற்ற றணை மேவுதல் காணா
வெவ்வெரும் தொழுது ஏத்தினர் ஈன்ற
அவ்வையும் அத்தனும் ஆரருள் செய்தார்.
238
   
8131.
அண்டர் தமக்கு இறை ஆங்கு அவர் கோலம்
கண்டு புகழ்ந்து கரம் தொழுது உச்சி
கொண்டு மிளிர்ந்து குளிர்ந்திடு தேறல்
உண்ட சுரும்பினும் உள் மகிழ்வு உற்றான்.
239
   
8132.
நெஞ்சம் மகிழ்ந்த நெடுந்தகை சொல்லால்
மஞ்சன மாமலர் மற்றுள முற்றும்
எஞ்சல் இலா வகை ஏந்தி அவைக் கண்
அஞ்சமும் அஞ்ச வரும் சசி வந்தாள்.
240
   
8133.
அன்னது ஒர் காலையில் அந்தர நாதன்
பன்னிரு மொய்ம்பு படைத்திடு புத்தேள்
முன்னர் இருந்து முறைப்பட அன்னான்
பொன்னடி பூசை புரிந்திடல் உற்றான்.
241
   
8134.
சொல்லரு நாணொடு தோகை மடந்தை
நல்லது ஒர் கன்னல் நறும் புனல் உய்ப்ப
எல்லவரும் புகழ் இந்திரன் ஐயன்
மெல்லடி பற்றி விளக்கினன் அம்மா.
242
   
8135.
செம்மல் பதங்கள் செழும் புனல் ஆட்டிக்
கைம் மலியும் களபந் தனை யூட்டி
அம் மலர் சூட்டி அகில் புகை காட்டி
நெய்ம் மலி பூஞ்சுடர் நீட்டினன் அன்றே.
243
   
8136.
இவ் வகை பூசை இயற்றுதலோடும்
அவ் வயிராணி அயில் படையோன் தாள்
செவ்விதின் ஆட்டிய தீர்த்திகை தன்னைக்
கை வகை ஏந்தி ஒர் காப்பிடை உய்த்தாள்.
244
   
8137.
அன்னுழி இந்திரன் ஆறு முகேசன்
தன் ஒரு கை இடை தந்தியை நல்கி
நின் அடியேன் இவண் நேர்ந்தனன் என்னாக்
கன்னல் உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான்.
245
   
8138.
மருத்துவன் மா மறை மந்திர நீரால்
ஒருத்தி பொருட்டினில் ஒண் புனல் உய்ப்பக்
கரத்து இடை ஏற்றனன் ஆல் கழல் சேர்ந்தார்க்கு
அருத்தி கொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன்.
246
   
8139.
செங்கமலத்து இறை சிந்தையின் ஆற்றி
அங்கையின் ஈந்திட ஆண்தகை கொண்ட
மங்கல நாணைக் மணிக்களம் ஆர்த்து
நங்கை முடிக்கு ஒர் நறுந்தொடை சூழ்ந்தான்.
247
   
8140.
மாவொடு வாழை வருக்கை கொள் பைங்காய்
தீவிய கன்னல் செறிந்திடு செந்தேன்
ஆவருள் பாலிவை அண்டர்கள் செம்மல்
மூவிருமா முகனை நுகர் வித்தான்.
248
   
8141.
வார்த் தொகை சூழ்தரு மத்தளி தக்கை
பேர்த்த வலம்புரி பேரி கலித்த
ஆர்த்தனர் வீரர் அருங்கண நாதர்
தீர்த்தனை வந்தனை செய்து களித்தார்.
249
   
8142.
தண்டு உள அண்ணல் சரோருக மேலோன்
எண் திசை பாலகர் இந்திரன் என்போன்
அண்டர்கள் ஏனையர் ஆங்கு அவர் கோலம்
கண்டு சிறந்தது கட் புலம் என்றார்.
250
   
8143.
ஆயது போழ்தினில் அம்புயம் உற்றோன்
காயெரி தந்து கலப்பைகள் கூவித்
தூய மணம் புரி தொன் முறை வேள்வி
நாயகனைக் கொடு நன்று செய்வித்தான்.
251
   
8144.
உலகு அருள் காரணன் ஒண் நுதலோடும்
வல முறையாக வயங்கனல் சூழ்ந்து
சிலை இடை அன்னவள் சீறடி தந்தான்
மலர் அயன் உச்சியின் மேலடி வைத்தான்.
252
   
8145.
மாலினி காளிகள் மா மலராட்டி
பாலின் நிறத்தி பராயினர் சூழச்
சாலினி மங்கலை தன்னொடு கண்டான்
வேலினின் மாவினை வீழ எறிந்தோன்.
253
   
8146.
இவ்வகை மன்றல் இயற்றிய பின்னைத்
தெய்வத மாதொடு செங்கதிர் வேலோன்
அவ்வை யொடு அத்தனை அன்பொடு சூழ்ந்து
வெவ்விதின் மும்முறை சேவடி தாழ்ந்தான்.
254
   
8147.
அடித்தலத்தில் வீழ் மக்களை இருவரும் ஆர்வத்து
எடுத்து அணைத்து அருள் செய்து தம் பாங்கரில் இருத்தி
முடித் தலத்தினில் உயிர்த்து உமக்கு எம்முறு முதன்மை
கொடுத்தும் என்றனர் உவகையால் மிக்க கொள்கையினார்.
255
   
8148.
மலை மடந்தையும் இறைவனும் மைந்தற்கும் மகட்கும்
தலைமை செய்து அருள் புரிதலும் சாலையுள் இருந்த
அலரவன் முதல் அமரரும் முனிவரும் அணங்கின்
குல மடங்கலும் அவரடி முடிமிசைக் கொண்டார்.
256
   
8149.
அறுமுகன் தனை அணங்கினை அவையுளோர் எவரும்
முறையில் வந்தனை செய்தலும் முழுது அருள் புரிந்து
கறை விளங்கிய கண்டனும் கவுரியும் கடிதின்
மறைதல் உற்றனர் பரிசனம் தன்னொடு மன்னோ.
257
   
8150.
மறைந்த காலையில் விம்மிதராய் மணச்சாலை
உறைந்த தேவரும் முனிவரும் உயிர்களுக்கு உயிராய்
நிறைந்த மேலையோர் நிலைமையை நினைந்து தம்                                       வாயால்
அறைந்து கை தொழுது அவர் பெயர் எடுத்து ஆர்த்தார்.
258
   
8151.
வரை படைத்தவர் மறைந்துழி வானவர் பலரும்
நிரை படைத்துள முனிவரும் கவன்றது நீத்தார்
திரை படைத்துள ஆழ் கடல் பட்டுளோர் சிறந்த
கரை படைத்து என அணங்கொடு குமரனைக் கண்டு.
259
   
8152.
உமையும் ஈசனும் இருந்திடு பீடிகை உம்பர்க்
குமர நாயகன் தெய்வதக் களிற்றொடும் கூடி
அமர அன்னது காண்டலும் மகிழ்சிறந்து அன்னார்
கமல மெல்லடி தொழுதனர் வழுத்தினர் களிப்பால்.
260
   
8153.
இனைய காலையில் அரியணைப் பீட நின்று இழியா
அனைவரும் தொழுது உடன் வர ஆறுமா முகத்துப்
புனித நாயகன் மங்கல இசையொடும் போந்து
தனது கோயில் உள் புக்கனன் இறைவியும் தானும்.
261
   
8154.
வேலை அன்னதில் குமரவேள் வேள்வி நாயகற்கு
மால் அயன் முதல் அமரர்க்கும் மற்று உளார் தமக்கும்
ஏலவே விடை தந்து தன் பரிசனம் எவையும்
ஆலயம் தனில் கடை முறை போற்றுமாறு அளித்தான்.
262
   
8155.
இன்ன தன்மையது ஆகவே எம்மை ஈன்று எடுத்த
அன்னை தன்னுடன் அறுமுகன் உறையுளின் அடைந்து
பொன்னின் மஞ்ச மேல் படுத்து மெல் அமளியில் புவனம்
மன்னு உயிர்த்தொகை உய்ந்திட முயங்கி வைகினன் ஆல்.
263
   
8156.
சேண் உதித்திடு தெய்வதக் களிற்றினைச் செவ்வேள்
நாணினில் கட்டி நகரிடைத் தந்து நல் கலன்கள்
பூணுதல் உறும் அங்குசம் கைக்கொடு புயமாம்
தூணுறப் பிணித்து அணைத்தனன் அருள் எனும்                                    தொடரால்.
264
   
8157.
மருந்து போல் மொழிக் குமரியும் குமரனும் மணந்து                                     ஆங்கு
இருந்த எல்லையில் விரிஞ்சனும் மாலும் ஏனையரும்
விரைந்து தத் தமக்கு இயன்ற தொல் இருக்கையின்
                                    மேவப்
புரந்தரன் பரிசனரொடும் தன் மனை புக்கான்.
265
   
8158.
முகில் உயர்த்தவன் முசுகுந்தனே முதல் உள்ள
அகில மன்னர்க்கும் தேனுவின் பல பயன் அருத்தித்
துகிலும் ஆரமும் அணிகளும் இரு நிதித் தொகையும்
விகலம் இன்றியே கொடுத்தனன் யாரையும் விடுத்தான்.
266
   
8159.
எல்லை அன்னதின் முசுகுந்தன் ஆதி ஆம் இறைவர்
கல் அகம் தனில் இழிந்து தம் சேனையின் கடலை
ஒல்லை கூடியே வேறு பல் புலம் தொறும் ஒருவித்
தொல்லை ஊர் புகுந்து இருந்தனர் வீடு உறும்                                  தொடர்பால்.
267
   
8160.
மன்னர் யாவரும் விடை கொடு போதலும் மகவான்
தன்னது ஆகிய கடி மனைக் கிழத்தியும் தானும்
இன்னல் தீர் தரு போகம் அது ஆற்றினன் இருந்தான்
அன்ன பான்மையில் சில் பகல் அகன்றன அன்றே.
268