முதல் ஆயிரம் குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி
|
தேவகியின் புலம்பல் |
707 | ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடங் கண்ணினன் தாலோ வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழப் போதகம் அன்னவன் தாலோ ஏல வார் குழல் என்மகன் தாலோ என்று என்று உன்னை என் வாயிடை நிறையத் தால் ஒலித்திடும் திருவினை இல்லாத் தாயரிற் கடை ஆயின தாயே (1) | |
|
|
|
|
708 | வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள் பொலியும் நீர்-முகிற் குழவியே போல அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையிற் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே (2) | |
|
|
|
|
709 | முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே எழு முகிற் கணத்து எழில் கவர் ஏறே உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே. (3) | |
|
|
|
|
710 | களி நிலா எழில் மதிபுரை முகமும் கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும் தளிர் மலர்க் கருங் குழற் பிறையதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை-இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாயென நினைந்த அளவில் பிள்ளைமை-இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே (4) | |
|
|
|
|
711 | மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி அசைதர மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே (5) | |
|
|
|
|
712 | தண் அந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்ததோர் நடையால் மண்ணிற் செம்பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே (6) | |
|
|
|
|
713 | குழகனே என்தன் கோமளப் பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் ஒரு கையால் ஒரு முலை-முகம் நெருடா மழலை மென்னகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந் தன்னையும் இழந்தேன் இழந்தேனே! (7) | |
|
|
|
|
714 | முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே (8) | |
|
|
|
|
715 | குன்றினால் குடை கவித்ததும் கோலக் குரவை கோத்ததுவும் குடமாட்டும் கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டெனில் அருளே. (9) | |
|
|
|
|
716 | வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே (10) | |
|
|
|
|
717 | மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மால் அடி முடிமேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (11) | |
|
|
|
|