நாலாயிர திவ்ய பிரபந்தம்

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி

ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்
1921காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து
போது மறுத்து புறமே வந்து நின்றீர்-
ஏதுக்கு? இது என்? இது என்? இது என்னோ?             (1)
   
1922துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவர் ஆக முடித்து கலிக் கச்சுக் கட்டி
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்-
இவர் ஆர்? இது என்? இது என்? இது என்னோ?            (2)
   
1923கருளக் கொடி ஒன்று உடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடம்-அது உறுக்கி நிமிர்த்தீர்
மருளைக்கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என்? இது என்? இது என்னோ?             (3)
   
1924நாமம் பலவும் உடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து-இது என்? இது என்? இது என்னோ?            (4)
   
1925சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்-
எற்றுக்கு? இது என்? இது என்? இது என்னோ?            (5)
   
1926ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்-
ஏனோர்கள் முன் என்? இது என்? இது என்னோ? 6
   
1927மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை
சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்-
எல்லே இது என்? இது என்? இது என்னோ?            (7)
   
1928புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக் காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர்-
எக்கே இது என்? இது என்? இது என்னோ?            (8)
   
1929ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடி திரு மா மகள் மண்மகள் நிற்ப-
ஏடி இது என்? இது என்? இது என்னோ?            (9)
   
1930அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி
எல்லிப் பொழுது ஊடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார்-அவர் துக்கம் இலரே            (10)