நாலாயிர திவ்ய பிரபந்தம்

மூன்றாம் ஆயிரம்
இயற்பா
திருமழிசை ஆழ்வார்

இராமானுச நூற்றந்தாதி
2674பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே            (1)
   
2675கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)
   
2676பேர் இயல் நெஞ்சே அடி பணிந்தேன் உன்னை பேய்ப் பிறவிப்
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர்
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே   (3)
   
2677என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த
முன்னைப் பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னித் தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே (4)
   
2678எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மனக் குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர்
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இனக் குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே             (5)
   
2679இயலும் பொருளும் இசையத் தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே            (6)
   
2680மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே             (7)
   
2681வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே             (8)
   
2682இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே             (9)
   
2683மன்னிய பேர் இருள் மாண்டபின் கோவலுள் மா மலராள்
தன்னொடும் ஆயனைக் கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள்
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே     (10)
   
2684சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழப் பாண்பெருமாள் சரண் ஆம் பதுமத்
தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே   (11)
   
2685இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே   (12)
   
2686செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே   (13)
   
2687கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்கத் தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னைச் சோர்விலனே             (14)
   
2688சோராத காதல் பெருஞ் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும்
பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே?             (15)
   
2689தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்மின் அரங்கர் மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே   (16)
   
2690முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே             (17)
   
2691எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனைச் சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே   (18)
   
2692உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும்
வெறி தரு பூமகள் நாதனும் மாறன் விளங்கிய சீர்
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே   (19)
   
2693ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் அமுதத் திருவாய்
ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம்
சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரிப் பருகும் இராமாநுசன் என் தன் மா நிதியே   (20)
   
2694நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம்
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னைக் காத்தனனே   (21)
   
2695கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என் தன் சேம வைப்பே   (22)
   
2696வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே?             (23)
   
2697மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்தொறும் மூத்து அதனால்
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன்
பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவியக்
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே   (24)
   
2698கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் உன்
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே   (25)
   
2699திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம்
மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர்
எக் குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்
அக் குற்றம் அப் பிறப்பு அவ் இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே   (26)
   
2700கொள்ளக் குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன்
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே   (27)
   
2701நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்
பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் பாதம் நண்ணா
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய்
கொஞ்சிப் பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே     (28)
   
2702கூட்டும் விதி என்று கூடுங்கொலோ தென் குருகைப்பிரான்
பாட்டு என்னும் வேதப் பசுந்தமிழ் தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர்
ஈட்டங்கள் தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே?   (29)
   
2703இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? எண் இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? தொல் உலகில்
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே   (30)
   
2704ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப்
பூண்ட அன்பாளன் இராமாநுசனைப் பொருந்தினமே   (31)
   
2705பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால்
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அருந் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே     (32)
   
2706அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும்
புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே   (33)
   
2707நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை நினைப்பு அரிய
பெலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென்
புலத்தில் பொறித்த அப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின்
நலத்தைப் பொறுத்தது இராமாநுசன் தன் நயப் புகழே     (34)
   
2708நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தைப்
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர்த்தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே?            (35)
   
2709அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே     (36)
   
2710படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே   (37)
   
2711ஆக்கி அடிமை நிலைப்பித்தனை என்னை இன்று அவமே
போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு? புண்ணியர் தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே   (38)
   
2712பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே?   (39)
   
2713சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல்
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண்மிசையே   (40)
   
2714மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப் பொழுதே
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே            (41)
   
2715ஆயிழையார் கொங்கை தங்கும் அக் காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே   (42)
   
2716சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமினே   (43)
   
2717சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண் அரும் சீர்
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே   (44)
   
2718பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி என்று இப் பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே   (45)
   
2719கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே   (46)
   
2720இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ் உலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே            (47)
   
2721நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின்கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே?   (48)
   
2722ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூங் கமலத்
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்
தான் அதில் மன்னும் இராமாநுசன் இத் தலத்து உதித்தே   (49)
   
2723உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே     (50)
   
2724அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர்
முடியப் பரி நெடுந் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப்
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே     (51)
   
2725பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப் பார் முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத் தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே     (52)
   
2726அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும்
நற்பொருள் தன்னை இந் நானிலத்தே வந்து நாட்டினனே   (53)
   
2727நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே   (54)
   
2728கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை இறந்த
பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித்தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே   (55)
   
2729கோக் குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே   (56)
   
2730மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள்
உற்றவரே தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நல் தவர் போற்றும் இராமாநுசனை இந் நானிலத்தே
பெற்றனன் பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே   (57)
   
2731பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு
ஆதிப் பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய்ம் மதிக்கடலே   (58)
   
2732கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே   (59)
   
2733உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குலக் கொழுந்தே   (60)
   
2734கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே   (61)
   
2735இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர்த் தாள்
பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெருந் தேவரைப்பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே   (62)
   
2736பிடியைத் தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இப்
படியைத் தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே.   (63)
   
2737பண் தரு மாறன் பசுந் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் மெய்ம்மை
கொண்ட நல் வேதக் கொழுந் தண்டம் ஏந்தி குவலயத்தே
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே   (64)
   
2738வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அந்
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே   (65)
   
2739ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அத்
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே   (66)
   
2740சரணம் அடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ் ஆர் உயிர்க்கே?   (67)
   
2741ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய
பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே   (68)
   
2742சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள்
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என் தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே   (69)
   
2743என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண் இல் பல் குணத்த
உன்னையும் பார்க்கில் அருள் செய்வதே நலம் அன்றி என்பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னைச் சார்ந்தவரே?     (70)
   
2744சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்தது அத் தாமரைத் தாள்களுக்கு உன் தன் குணங்களுக்கே
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால்
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே   (71)
   
2745கைத்தனன் தீய சமயக் கலகரை காசினிக்கே
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம்
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே     (72)
   
2746வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இத் தாரணியோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும்
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே   (73)
   
2747தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே   (74)
   
2748செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் திரு அரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே   (75)
   
2749நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொன்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த் தாள்
என் தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே   (76)
   
2750ஈய்ந்தனன் ஈயாத இன்னருள் எண் இல் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம் மறைப் பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே?     (77)
   
2751கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே   (78)
   
2752பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே   (79)
   
2753நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே (80)
   
2754சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன்
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே   (81)
   
2755தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது வெம் தீவினையால்
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில்
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ
தெரிவு உற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே?   82
   
2756சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம்
ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே     (83)
   
2757கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய்
விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டுகொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே             (84)
   
2758ஓதிய வேதத்தின் உட்பொருளாய் அதன் உச்சி மிக்க
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும் பெரியோர்
பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே   (85)
   
2759பற்றா மனிசரைப் பற்றி அப் பற்று விடாதவரே
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல்
கற்றார் பரவும் இராமாநுசனைக் கருதும் உள்ளம்
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே             (86)
   
2760பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்கு
உரியசொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர்
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில்
புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை பொரும் கலியே   (87)
   
2761கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம்
புலி மிக்கது என்று இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே   (88)
   
2762போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர் தனக்கு ஓர்
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே   (89)
   
2763நினையார் பிறவியை நீக்கும் பிரானை இந் நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை இருங் கவிகள்
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே   (90)
   
2764மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருள் ஆம்
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்கத் தன் ஈண்டிய சீர்
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே   (91)
   
2765புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு
எண் அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இக் காரணம் கட்டுரையே   (92)
   
2766கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி
வெட்டிக் களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே?     (93)
   
2767தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியாப் பிறவிப்
பவம் தரும் தீவினை பாற்றித் தரும் பரந் தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே   (94)
   
2768உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே
பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும்
விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே     (95)
   
2769வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன்
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே   (96)
   
2770தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால்
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே     (97)
   
2771இடுமே இனிய சுவர்க்கத்தில்? இன்னும் நரகில் இட்டுச்
சுடுமே? அவற்றைத் தொடர் தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே? சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே     (98)
   
2772தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொல் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே   (99)
   
2773போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் அதுவே
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும்
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே     (100)
   
2774மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே   (101)
   
2775நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ்
வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே?   (102)
   
2776வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்று ஆய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என் தன் மெய்வினை நோய்
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே   (103)
   
2777கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழுங் கொண்டலே   (104)
   
2778செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக்கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே   (105)
   
2779இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே   (106)
   
2780இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்பு உற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே   (107)
   
2781அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்னத் தழைத்து நெஞ்சே நம் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடிப் பூ மன்னவே   (108)