பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்361

காவி அம் கண் கிளர் வியப்பான் இமையா நோக்கிக் கனிவு ஓங்கி,
ஆவி அங்கண் உண்டு எனினும், நெடு நாள் மோனர் அண்டியதால்,
ஓவியங்கள், மோனம் உறீஇ, அவை கண்டாரும் ஓவியமாய்
மேவி, அம் கண் பிறழாது, விளைத்த இன்பால் வியப்பவரே.

     அங்குள்ள ஓவியங்கள் குவளை மலர் போன்ற தம் கண்களில்
கிளர்ந்தெழுந்த வியப்பினால் ஒன்றையொன்று இமையாமல் நோக்கிக் கனிவு
மேலோங்கியும், உயிர் தம்மிடத்து உண்டெனினும், நெடு நாட்களாய்
முனிவர்கள் தம்மை அணுகியமையால் தாமும் அவர்கள் போல் மௌனம்
கொண்டிருந்தன. அவற்றைப் பார்த்தவர்களும் ஓவியமாய் மாறி, அழகிய தம்
கண்கள் அசைந்து பிறழாமல், அவை விளைவித்த இன்பத்தால் வியந்து
அசையாது நிற்பர்.

                    துறவு பற்றிய உரையாடல்

                      20
அணிச்சாய லீரறஞ்சேர்த் தணிந்த மார்பேந் தருந்தவத்தோன்
பணிச்சாயல் வரைந்தவுருப் பலவுஞ் சூழப் பார்த்தனகாற்
பிணிச்சாயல் வாட்டியமெய்ப் பிணைவின் மாண்பார் நூறடிகள்
துணிச்சாயல் மலர்முகத்துத் துன்னி யாசி சொற்றினரால்.
 
அணிச் சாயல் ஈர் அறம் சேர்த்து அணிந்த மார்பு ஏந்து அருந்
                                           தவத்தோன்,
பணிச் சாயல் வரைந்த உரு பலவும் சூழப் பார்த்தன கால்,
பிணிச் சாயல் வாட்டிய மெய்ப் பிணைவின் மாண்பு ஆர் நூறு
                                           அடிகள்,
துணிச் சாயல் மலர் முகத்துத் துன்னி, ஆசி சொற்றினர் ஆல்.

     அழகின் சாயலாக இல்லறம் துறவறமென்னும் இரண்டு அறங்களையும்
சேர்த்து அணிந்த மார்பைக் கொண்ட அரிய தவத்தோனாகிய சூசை,
அணிகலன் வடிவமாக வரைந்த சித்திர உருவங்கள் பலவற்றையும் சுற்றிலும்
பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நோயின் சாயலாகத் தவத்தால்
வாட்டிய உடலோடு பொருந்திய மாண்பு கொண்ட நூறு முனிவர்கள்,
ஒளியின் சாயல் கொண்டு மலர்ந்த முகத்தோடு அங்கு வந்தடைந்து, ஆசி
கூறினர்.