நகரப் படலம்
 
எருசலேம் நகர்ச்சிறப்பு
 
97மெய் வழி மறை நூல் நீங்கி,
  வியன் உலகு இனிது என்று, இன்னா
வவ்வு அழிவு உற்றது என்ன,
  வதிந்து எமை அளித்துக் காக்கச்
செவ் வழி உளத்த தூயோன்
  தெரிந்த மா நகர் இது என்றால்,
இவ் வழி பின்னர் உண்டோ
  எருசலேம் நகரை வாழ்த்த?
1
   
 
98ஆள் எனை உடைய நாதன்
  அவனியுள் மனு ஆய்த் தூய் தன்
தாள் இணை தாங்கிற்று என்னத்
  தாழ வானவரும், மாக்கள்
கோளினை உடை வான் வீட்டைக்
  குறுகவும் வழி ஈது என்றால்,
மீள் இணை வருந்தி நாடி
  வியன் நகர் புகழ்வார் ஆரோ?
2
   
 
99விண் புலன் அகன்று வாய்த்த வீட்டு இடை வழங்கு மாட்சி
கண் புலன் அகன்றது என்னக் கருதி ஓர் உவமை காட்ட
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி
உள் புலன் கடந்த நாதன், உயர் நகர் புகழும் ஆறே.
3
   
 
100நவ்வியம் கதிர் கொள் சூட்சி
  நாயகன் முதல், வானோரும்,
செவ்விய மதுரச் சொல்லால்
  சீரிய காட்சியோரும்,
அவ்வியம் அகன்று தேறும்
  அருந் தவத்தோரும் செய்த
குவ்விய புகழ் பின், உண்டோ
  கூறவும் மூகை யானே?
4
   
 
101தேன் அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின் சிந்தும்
மீன் நக இருளைச் சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர்
தான் நக முடியாய்ச் சூடி இத் தமனிய நகரம் பூண்ட
வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே.
5
   
 
102பயனினால் மறை நூல் ஒக்கும்;
  பகலினை மணியால் ஒக்கும்,
வியனினால் உலகம் ஒக்கும்;
  வேலியால் கன்னி ஒக்கும்;
முயலினால் அலையை ஒக்கும்;
  முனி முனிவு ஒன்னார்க்கு ஒக்கும்;
நயனினால் உயர் வீடு ஒக்கும்.
  நகரினை ஒக்கும் வீடே.
6
   
மதிலும் அகழியும்
 
103பொன் தங்கும் உலகம் தன்னைப்
  பொங்கு இருங் கடல் சூழ்ந்து என்ன,
வில் தங்கும் இரவி காலும்
  வெயில் பிழம்பு அனைய நாறி,
செல் தங்கும் மலையின் ஓங்கி,
  சேண் உறும் மதிலைச் சூழ்ந்த,
எல் தங்கும் அலையை மாறி
  இகன்று அகல் அகழித் தோற்றம்.
7
   
 
104பூவுலகு இயல்பு அன்று, அம் பொன்
  பொலி மணி நகரம், பொன் ஆர்
தே உலகு உரித்து என்று, அங்கண்
  தெளிந்து புக்கிடும் என்று, ஆழி
தாவு உலகு இருத்த, வெள்ளித்
  தாள் தளை இட்டதே போல்,
கோ உலவு இஞ்சி சூழ்ந்த
  குவளை நீள் அகழித் தோற்றம்.
8
   
அகழியின் தோற்றம்
 
105சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து,
பூரியார் நட்புப் போலப் புணர்ந்த சைவலம் மேல் ஆடி,
நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண்
வேரி ஆர் இதழைப் பூத்து வெறி எறி அகழித் தோற்றம்.
9
   
அகழியில் பேய்முதலைகள்
 
106ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண்
  இளம் பிறை தோன்ற, ஊனைச்
சோரும் வாய் விரித்து, கண் தீச்
  சொரிதர, அகழி தாழ்ந்து
பேரும் வாய் உருக்கொண்டு, அன்று
  பேய்க்குலம் வெரு உய்த்து எய்தி
ஊரும் வாய் என்ன, அங்கண்
  உழக்கிய இடங்கர் ஈட்டம்.
10
   
மதிலின் தோற்றம்
 
107ஓவல் இற்ற எழில் பூமாதே
  உவந்த நாள், செறிந்த கற்றை
தூவலின் பகல் செய் பைம் பொன்
  சுடர் முடி சூழ்ந்தது என்ன,
ஆவலின் கிளர் நன்று உட் கொண்டு
  அடிகள் தம் மனத்தைக் காக்கும்
காவலின், கது விடாத கனக
  மா மதிலின் தோற்றம்.
11
   
நகர்வாயில்
 
108கார் அணி பசும் பொன் குன்றின்
  காட்சி போல் மதிலைச் சூழ்ந்து,
சீர் அணி அனைத்தும் சேர்த்த
  செழு நகர் திறந்த வாயில்,
பேர் அணி எவையும் ஈட்டி,
  பின் அவை உவப்பின் காட்டி,
பார் அணிப் பேழை யாரும்
  பயன்படத் திறந்த போன்றே.
12
   
 
109நீதி நல் முறைகள் ஓதி, நீண்டு வீடு எய்தி வாழ
வீதி இது என்னக் காட்டி, விரித்த நுண் அரு நூல் வேதம்,
ஆதி வந்து, உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே
சோதி பெய் அறத்தின் பண்பால் சுடர் நகர் திறந்த வாயில்.
13
   
கோபுர கலசம்
 
110மீன் நிகர் வயிரத் தூண்கள்
  விண் புக நிரைத்து, வாய்ந்த
யா நிகர் அனைத்தும் நீக்கும்
  எரி மணிக் கோபுரத்தின்,
வான் நிகர் நிறுவும் சென்னி
  வைத்த பொன் தசும்பின் தோற்றம்,
கோன் நிகர் நகரம் சூடும்
  குளுஞ் சுடர் மகுடம் போன்றே.
14
   
 
111இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி,
சுட்ட நூல் அறிஞர் கல்வித் துணிவொடு வளர்த்த மாடம்,
சட்ட நூல் வீரர், கற்பின் தகை நலார் முறையும், மற்ற
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளிக்கல் உற்றேன்.
15
   
மாடங்களின் தோற்றம்
 
112மழைத் தலை விலகுப வளர்ந்த மாடங்கள்
இழைத் தலை அரிதினில் இழைத்த வெண் சுதை,
பிழைத் தலை அறுத்து ஒளி பிளிர, வெள்ளி அம்
தழைத் தலை மலைக் குழாம் தயங்கும் தன்மையே.
16
   
 
113பயிற்றிய முகில் இடை பரந்த பால் மதி
வெயில் தியங்கிய என, வெந்த அகில் புகை
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி
குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே.
17
   
மாடங்களின் மீது கொடிஆடுதல்
 
114புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால்
தலையின் ஆர் மனவினைத் தரித்த பூங் கொடி,
கலையினார் மன இணை வெளிறு கான்று உக,
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்ஆல்
18
   
 
115கோது அகன்று அளிக்குவார் அருத்திக் கொள்கை போல்,
‘தீது அகன்ற அருந் திரு நுகரச் சென்மின்!‘என்று
ஏது அகன்று அணிக் குலத்து இலங்கு மாடங்கள்
மீது அகன்று அசை கொடி விளிப்ப மானுமே,
19
   
வீதியிற் சில காட்சிகள்
மணித்தோரணங்கள்
 
116பேர்த்தன பருதி போய்ப் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அறத் தயங்கும் பொன் மணி,
கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம்,
ஆர்த்தன முகில் இடை அவிர் வில் மானுமே.
20
   
மலர்த்தோரணங்கள்
 
117தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள்,
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம்
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின்
ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்ஆல்.
21
   
படைமுழக்கம்
 
118கரி இனம் கரியொடும்; கலினம் பூண்டு பாய்
பரி இனம் பரியோடும், பரியைப் பூட்டிய
எரி இன மணி செறி ஏமத் தேர்களும்,
நெரியின நெருங்குப நெரிந்த வாய் எலாம்.
22
   
 
119பேர் ஒலி, முரசு ஒலி, பிளிர்ந்த சங்கு ஒலி,
தேர் ஒலி, மத மழை சிதறி யானைகள்
ஊர் ஒலி, இவுளிகள் ஒலி மயங்கி, மேல்
கார் ஒலி கடல் ஒலி கலங்க விம்மும்ஆல்.
23
   
பலவகை ஒலி
 
120பொதிர் படும் மணி ஒலி, பொருநர் சாய்தலோடு
எதிர் படும் முடி ஒலி, இரங்கு யாழ் ஒலி,
கதிர் படும் சிலம்பு ஒலி, கழல் குலாவு ஒலி
அதிர் படும் வெருவு அற இனிதில் ஆர்த்தன.
24
   
இருளும்ஒளியும்
 
121நெரிந்தன குடை கொடி நிசியைச் செய்ய, ஆங்கு
எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி
திரிந்தன வயின் தொறும் தெளிந்த நண் பகல்
புரிந்தன, புரி எலாம் பொருவு இல் வாழவே.
25
   
வண்டின் இசை
 
122சங்கு இட்ட விம்மிய தரளமோடு இயை
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது
பொங்கிட, விம்மிய அளி புசித்து, இசை
அங்கு இட விம்மிய இன்பம் அந் நகர்.
26
   
எங்கும்நறுமணம்
 
123நாறிய நானமும், நறும் அகில் புகை
ஊறிய கானமும், உரைத்த சந்தமும்,
வீறிய மது மலர் மிடைந்த வாசமும்
தேறிய வெறியொடு செறிந்த அந்நகர்.
27
   
 
124பூந் துறைத் தெரியல்கள் பொழிந்த தேறலும்,
காந்து உறைத் தசும்பு இடை கமழும் நீரமும்,
தேம் துறைக் குங்குமத் தெளிந்த சுண்ணமும்
ஆம் துறைத் திரள் மணத்து ஆர்ந்த அந் நகர்.
28
   
பலவகை மாடங்கள்
படுக்கைவீடுகள்
 
125தேசு சூழ் செந் துகிர் திருந்தும் காலின் மேல்,
காசு சூழ் தமனியக் கம்பலம், திரைத்
தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள்,
பாசு சூழ் மணிச் சுவர் படுக்கும் மாடமும்.
29
   
படைவீடு
 
126பொருந்தலர் உரத்து ஒளி புசித்த வாளொடும்,
விருந்து அமர் புள் இனம் விழைந்த வேலொடும்,
வருந்து அமர் கடந்த வில், மழுவினோடு, மற்று
இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும்.
30
   
நவரத்தினமாடம்
 
127நீல் மணி, மரகதம், நித்திலம், துகிர்,
வேல் மணி வயிரம், கோமேதகம், மிளிர்
பால் மணி, பரும் வயிடூரியம், படர்
வான் மணி மாணிக்கம் வைக்கும் மாடமும்.
31
   
பொன்மாடம்
 
128ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும்,
துன் அலர் மலைவயின் துதைந்த பைம் பொனும்,
மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம் பொனும்,
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும்.
32
   
பலவகைச்சாலைகள்
கலைபயில் சாலை
 
129அவ்வியம் ஒழித்து அருள் அளிக்கும் மா மறைத்
திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும்,
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி, உள்
வவ்விய பல கலை வகுக்கும் சாலையும்.
33
   
படைபயில்சாலை
 
130பெற்றி ஆர் குணில் கவண் பெரும் வில் நேமியோர்,
குற்று இலாக் குறிப் படக் குமுறுஞ் சாலையும்,
வெற்றி ஆர் அலங்கல் வாள் முதல் பல் வேல் படை
பற்று இலார் வெரு உறப் பழக்கும் சாலையும்.
34
   
இன்னிசைபயில்சாலை
 
131கான் நல கனியினும் கனிந்த யாழொடு
தேன் நல பல் இயம் திளைக்கும் சாலையும்,
பால் நலம் ஒழித்த பாப் பாடி ஆடி விண்
மேல் நலம் என ஒலி விம்மும் சாலையும்.
35
   
திறையளக்கும்சாலை
 
132மாற்று அரசு இனம் இறை வணங்குஞ் சாலையும்
வேற்று அரசு இனம் திறை விசிக்கும் சாலையும்,
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும்,
போற்று அரசு இனத்து மாண் பொருத்தும் சாலையும்.
36
   
தருமச்சாலை
 
133ஆம் உறை முகில் என, அளிக்கும் வான் பொருள்
மீ முறை திருந்திட விரும்பி, யாவரும்,
தாம் உறை இடம் எலாம் தருமச் சாலைஆய்,
ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே.
37
   
திருக்கோவிற்சாலை
 
134பணிச் சுவர்ச் சாலையும், பவளப் பந்திக் கால்
தணிச் சுவர்ச் சாலையும், தரளக் கொத்து உடை
மணிச் சுவர்ச் சாலையும் வளைத்த தேவ மா
அணிச் சுவர்க் கோவிலை அறையலாம் அரோ.
38
   
எருசலேம்திருக்கோயில்
 
135மண்ணிய முடியோ? முடியின் மா மணியோ?
  வான் இடை வயங்கு செஞ் சுடரோ?
புண்ணிய உடலத்து உயிர் கொலோ? முகமோ?
  பொலம் முகக் கண் கொலோ? யாதோ?
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த
  கடவுள், தான் உறைந்து அருள் காட்டப்
பண்ணிய அம் மாநகர் இடைப் பகலைப்
  பழித்து எரி பரந்த ஆலயமே?
39
   
 
136பொன் பொதிர் வயிரக் கால் மிசை,
  பவளப் போதிகை பொருத்தியது ஒரு பால்,
வில் பொதிர் துகிர்க் கால் மரகத மணியால்
  விளங்கிய போதிகை ஒரு பால்,
எல் பொதிர் நிதிக் கால் அமைந்த போதிகையாய்
  இன மணி கிடத்தியது ஒரு பால்,
செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின்
  செறிந்த பல் மண்டப நிலையே.
40
   
 
137செம் பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின்
  தீட்டிய அழகு என, தெளிந்த
அம் பொனால் இசைத்த மணிச் சுவர் ஏற்றி,
  அருந் தொழில் தச்சரும் நாணப்
பைம் பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்டப்
  பட்டு என, அவ் உலகத்தோர்
கம் பொனால் வனைந்த தொழிலை இவ் உலகில்
  கை விடாக் காட்டினர் போன்றே.
41
   
 
138வையகத்து உள்ளோர் ஏறவும், விரும்பி
  வானவர் இழியவும் வழி என்று,
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே,
  அந்தரத்து உயர் தலை சாய்ந்து,
கை அகத்து அதனைக் கடவுள் தான் தாங்க,
  களித்து யாக்கோபு என்பாற்கு, அங்கண்
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவத்
  தோன்றிய ஏணியைப் போன்றே.
42
   
 
139தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும்
  தூய பொன் தகட்டு மேல் படர்ந்த
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின்
  செறிந்த பல் அணி அணி கிளர்ந்த
பூண் தொடர் அணி ஆர் தனது உருக் கண்டு,
  பொருவு இல் தோற்று உட்கு எனச் சாய,
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன
  வயங்கும் அவ் ஆலயம் மாதோ.
43
   
 
140துன் அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும்
  சுருதி நூல் இனிதினிற் காட்ட,
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில்
  புடைத்து எழப் பல உருக் கிளம்ப
உன்ன அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த
  உயிர் பெறச் சித்திரம் தீட்டி,
இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும்
  இமைப்பும் இல் ஆயின மாதோ.
44
   
கோயில்விளக்குகள்
 
141வான் மணி விளக்கு ஓர் ஆயிரம், இழைத்த
  மரகதத்து இருள் அறக் கற்றை
கால் மணி விளக்கு ஓர் ஆயிரம், பவளம்
  கலந்த முத்து அணி அணி தயங்க
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம், பசும் பொன்
  நிலை விளக்கு ஆயிரம், வயிரப்
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம், எவணும்
  பகலவன் படப் பகல் செயும் ஆல்.
45
   
 
142தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி
  செறிந்த பல் மணிகளும், அகன்ற
வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி,
  வயின் வயின் எரிந்த பைம் பொன்னும்
ஆய் எரி திரண்டு, விழித்த கண் கூச,
  அகில் முதல் நறும் புகை நாளும்
மீ எரி சுடரை இள முகில் மூடி
  வேய்ந்து எனக் குளிர வேய்ந்தனவே.
46
   
பல்லியமுழக்கம்
 
143முருடு ஒடு பம்பை ஒலி, வயிர் ஒலி, வன்
  முரசொடு வளை ஒலி, ஒலித்த
தெருள் தொடும் இனிய குழல் ஒலி, வீணை
  செறி ஒலி, கின்னரத்து ஒலி, நல்
மருள் தொடும் மதுரப் பல் இயம் ஒலிப்ப,
  மாகதர் பா ஒலி இசைந்து, இவ்
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும்
  அரிய இன்பு இரு செவி மாந்த.
47
   
பத்தியின்நறுமணம்
 
144பூமழைத் திரளும், நாறிய கலவை
  பொழிதரக் கமழும் நீர்த் துவலைத்
தேம் மழைத் திரளும், ஆங்கு தம் சிறுமை
  தீர்த்த நாதனைப், புகழ்பவர் வாய்ப்
பா மழைத் திரளும், கன்னியர் இனியப்
  பா மழைத் திரளும் எஞ் ஞான்றும்
மீ மழைத் திரளும் மெலி தர விம்மி,
  விண்ணும் மேல் குளிர நாறினவே.
48
   
 
145மீ முறை ஒப்ப நாள் தொறும் குறை இல
  வேதியர் அருச்சனை திருத்தும்
மா முறை நலமும், வானொடு வையம்
  மருள நல் அற நெறி வழங்கும்
யா முறை அனைத்தும் இன்பு உறக் கண்டார்
  இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால்,
பா முறை நடத்தித் தொடைச் சரம் தொடுத்துப்
  பகர்ந்து அவை புகழ்வது பாலோ?
49
   
 
146உலகு எலாம் வணங்கும், பொது அறத் தனிக் கோல்
  ஓச்சிய, இறைவனை வணங்க,
அலகு எலாம் கடந்து பழுது அறப் பயத்த
  அற நெறி அருமையால், உவமை
விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள்
  விழைவொடு வதிந்தன தன்மைத்து,
இலகு எலா நகரை நிலத்திடைப் பழிக்கும்
  எருசலேம் என்னும் மா நகரம்.
50
   
மக்கள்பொழுதுபோக்கும்முறை
 
147இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின்
உன்ன அரும் எழில் நலம் உடைபெருங்கவினார்,
பன்ன அரும் அற நெறி பழுது அற இனிதாய்த்
துன்ன, அரு நயனொடு தொலைவன பொழுதே.
51
   
 
148ஆடுவர்; அமுதினோடு அலர் மது இகலப்
பாடுவர்; பொருள் நகு பயன் அமை கலை நூல்
நாடுவர்; நளிர் உற நறவு உறு மலரைச்
சூடுவர்; நயனொடு தொலைவன பொழுதே.
52
   
 
149மருக் கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து
உருக் கொடு மிளிருவர், எரியொடு, மண நீர்
திருக் கொடு மிளிரின தெரு இடை எறிய,
பெருக் கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே.
53
   
 
150இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால்
பந்தினை வனைகுவர்; படிகுவர்; எறிவார்;
வந்து இணை எதிர்குவர்; மறைகுவர்; நகுவார்;
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே.
54
   
 
151மீன் மலை மெலிதர மிளிர் அற வினையோர்,
பால் மலை மெலிதர இசையொடு பகல் போய்
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய்
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே.
55
   
 
152எழுது இனிது உரு என எழில் நலர், இழிவு ஆர்
வழுது இனிது இனிது அல, வழு இல இறையோன்
தொழுது, இனிது அற நெறி துறுவன நயனால்
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே.
56
   
 
153பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர்
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர்.
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர்
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே.
57
   
 
154அலையினோடு இகல்வன அரிது ஒலி நியமம்.
விலையினோடு இகல்வன விரி அணி மணிகள்.
கலையினோடு இகல்வன கடை இல நயம். ஓர்
வலையினோடு இகல்வன மலி திரு நகரம்.
58
   
 
155வளை ஒலி, வளைவு உடை வயிர் ஒலி, வளர் பா,
கிளை ஒலி, இசை ஒலி, குழல் ஒலி, கிளர் பல்
துளை ஒலி, நலம் ஒலி துறுவலொடு இனிதாய்
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும் ஆல்.
59
   
 
156கொடியொடு குடை உற, இறையவர் குழுவின்
அடியொடு அடி உற, விரிவன அணியம்
பொடியொடும் இருள் உற, நெரிவன பொருள் தேர்
முடியொடு முகில் உற முயல்வன நகரம்.
60
   
மன்னனும் மக்களும்
 
157கோடாதன உயர் கோலொடு குளிர் மாறு இல குடையும்,
வாடாதன தனி வாகையும், மதம் மாறு இல களிறும்,
ஓடாதன அடல் தானையும் உள கோனொடு, நகரம்
வீடாதன நெறி மாண் உறீஇ, மெலியா நலம் உளது ஆல்.
61
   
 
158சால் அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செங்
கோல் அன்பொடு தழுவும் குடி, குறை ஒன்று இல, நகரின்
பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ.
62
   
மக்களின் வருத்தம்
 
159இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்பு உற இடலால்,
பருந்தோடு உறும் நிழல் என்று, உயர் பயன் ஈன்றிடும்எனவே,
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர்,
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார்.
63
   
 
160தெள் வார் உரை முகிலும் கடல் திரையும் கெட, முகியா
வள் வார் முரசு அதிர் மா நகர் வயின் வாழ்பவர், கொடையைக்
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே
கள்வார் இல, கடையார் இல, கழிவார் இல நயவார்.
64
   
காலத்தைப்பயன்படுத்திய முறை
 
161கோ வீற்று உறை தனி நாதனைக் குறையாப் புகழ் இடவும்,
நா வீற்று உறை கலை ஆயவும், நறு மாண் அறம் செயவும்,
பா வீற்று உறை இசை பாடவும், பதம் ஆடவும், படரும்
பூவீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால்.
65
   
எருசலேமில்உள்ளவையும் இல்லாதவையும்
 
162நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது; புரி வான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே.
66
   
சரிநிகர்இன்பம்
 
163மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ?
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ? கலை புரி நூல்
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ? பொழி துளிகள்
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ?
67
   
மதில்,அரசன்,மாலை,நால்வகைப்படைகளின்சிறப்பு
 
164சிலை ஒத்தன நுதலார் மனச் சிறை ஒத்தன மதில்கள்.
கலை ஒத்தன உயர் மாலைகள். கனம் ஒத்தன கரிகள்.
மலை ஒத்தன இரதம். திரள் வளி ஒத்தன பரிகள்.
அலை ஒத்தன கடை வீதிகள். அலை ஒத்தனர் அபயர்.
68
   
நலமெலாம்நிறைந்த நகர்
 
165பா நாணுப இசை ஓதைகள். பகல் நாணுப மணிகள்.
பூநாணுப மது. ஆர் அருள் புயல் நாணுப கொடைகள்.
நா நாணுப கலை மாட்சிமை. நசை நாணுப நிறை சீர்.
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம்.
69
   
நகரும்அரசும்
 
166நளிர் பூஇடை மது நேர், முக நவியே இடை விழி நேர்,
ஒளிர் பூண் இடை மணி நேர், உடல் உருவே கிடை உயிர் நேர்,
குளிர் நாடு இடை புனல் நேர், அற வழியே இடை குரு நேர்
மிளிர் ஊர் இடை அரசு ஆகையில், மிடை கோ இயல் பகர்வாம்.
70