காட்சிப் படலம்
 
ஆண்டவனது கருணைச் செயல்
 
1088துன்பால் இங்கண் ஆம் குலைவு
  எல்லாம், துகள் தீர்த்தோன்,
தன்பால் என்றே, தான் அயர்வு உற்றான்;
  தனை உற்றார்
இன்பால் எஞ்சா வாழ்வது தம் பால்
  என விட்டான்,
அன்பால் அஃகாது ஓர் உயிர் அன்னான்,
  அமுது அன்னான்.
86
   
வானவர் இயேசு நாமத்தைப் போற்றி வணங்கிய செய்தி
 
1089அணிக் கலத்து அழகு அழுந்திய
  உருக் கொடு அமரர்,
மணிக் கலத்து அமுது உய்த்து என, வணங்கி,
  ஆங்கு உய்த்த
பிணிக் கலத்திடைக் கிடந்து உறை குழவி
  தன் பெயரைப்
பணிக் கலத்திடைப் படைத்து, உலகு உய்ந்து
  எழப் பகர்வாம்.
87
   
இயேசு பிறந்த எட்டாம் நாள் வானவர் குகையிற் குழுழதல்
 
1090மட்டு வாய் விளா மணிமுகை மணம் உயிர்த்து அன்ன,
கட்டு வாய் விளாக் கன்னி தன் மகவினை ஈன்ற
எட்டு நாளும் ஆய், இரவி ஆயிரர் என, இரவி
சிட்டு வான் எழா முன்னர், ஆங்கு அமரரே திளைத்தார்.
88
   
வானவர் ஆடைமேல் இயேசு நாம்ம் நளிர்தல்
 
1091வம் பொன் ஆடை மேல் செம் பொனால்
  வரைந்தன வண்ணத்து,
அம் பொன் மார்பின் மேல், அழல் கொழுந்து
  அழற்று என அணிந்த
செம் பொன்னால் திரு நாமமே,
  செறிந்த பேர் அணியாய்ப்
பைம் பொன் மேனியர், பரப்பு ஒளி
  பருகி, வில் செயும் ஆல்.
89
   
வானவர் இயேசுவைப் பணிதல்
 
1092அங்களைத் தெளித்து, அகல்
  நறு மலர் கொடு, மார்பில்
திங்களைத் தெளித்து இட்டு
  என நாமம் பூண் தியங்க,
“எங்களைத் தெளித்து உயர்த்திய
  இறைவ!“ என்று இறைஞ்சி,
மங்களத் தெளித் திருப் புகழ்
  வழங்குபு வதிந்தார்.
90
   
மிக்கயேலும் கபிரியேலும் இயேசு நாம்ப்பொற கேடயம் ஏற்துதல்
 
1093ஆர் அணிக்கு எழு மிக்கயேல்
  கபிரியேல், அன்ன
பேர் அணிக்கு இரு தலைவரின்
  பெற்றியின் தோன்றி,
தேர் அணிக்கு, இருஞ் செஞ் சுடர்
  அழகு உறத் தீட்டும்
ஏர் அணிக்கு இணை, ஏமம் மேல்
  திருப் பெயர் அணிந்தார்.
91
   
 
1094தகடு வைத்த பொன் பரப்பின்
  வாய் முத்து அணி தயங்க,
முகடு வைத்த பைம் மணியொடு
  குரு மணி முடியாய்,
அகடு வைத்த வால் மணியினால்
  அழகு எடுத்து அழுத்தி,
துகள் துடைத்தவன் தூய்
  திரு நாமம் வேய்ந்ததுவே.
92
   
மிக்கயேல் இயேசுவே என வானவர் அனைவரும் வணங்குதல்
 
1095மவருந்த மாசு உடை மனுக் குலம்
  புரந்திடல் இவனால்
பொருந்தல் ஆம் என, புரவலன் என்று
  ஒக்கும் நாமம்
திருந்த, ‘யேசுவே!‘செப்புதீர்“ என
  மிக்கயேல், ஆங்கு
இருந்த வானவர் இடையிடை விருப்பு
  எழீஇத் தொழுதார்.
93
   
மண்ணும் விண்ணும் மகிழ நரகம் நடுங்குதல்
 
1096முருடொடும் திசை முழுவதும் பல் இயம் முழங்க,
அருள் தொடும் திசை அந்தரம் அளவு இல களிப்ப,
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப,
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே.
94
   
மனியும் சூசையும் இயேசு நாமத்தை வணங்குதல்
 
1097பிணத்து இனங்களை நடுக்கு உறும்
  பெற்றி மா தவனும்,
கணத்து இனங்களை முடி புனை
  கன்னி அம் தாயும்,
குணத்து இணங்கிய குரு மணி
  திருந்திய நாமம்
மணத்து இணங்கவின் வணங்கினர்,
  மிக்கயேல் உரைப்பான்:
95
   
மிக்கயேல் இயேசு நாமத்தின் பெருமையை விளககிக கூறதல்
 
1098“இத் திறத்திலும், இத் தகை
  ஏந்திய நாமம்,
கைத் திறத்திலும், களிப்பு உற,
  கூப்பியர், உரைப்ப,
மைத் திறத்தில் உள் மயங்கிய சிதைவு
  எலாம் கடிந்து,
மெய்த் திறத்திலும் விளைந்த நன்று
  இயம்புதல் பாலோ?
96
   
 
1099“பொய்யும் போவன; போவன
  பொருந்திய புரைகள்;
ஐயும் போவன; ஆகுலம்
  போவன; அலகை
மொய்யும் போவன; முதிர்ந்த நோய்
  போவன; மற்றும்
மையும் போவன, வகுத்த இத் திருப்
  பெயர் வயத்தால்!“
97
   
 
1100“நோயும் ஒக்குமேல், நுகர்ந்து
  உயிர் தரும் மருந்து ஒக்கும்;
பேயும் ஒக்குமேல், வெற்றியைப்
  பெறும் படை ஒக்கும்;
தீயும் ஒக்குமேல், தீர்த்து,
  அருஞ்செல் கதி உய்க்கும்;
தாயும் ஒக்குமே, தருமன்
  அன்பு உய்க்கும் இந்நாமம்!
98
   
 
1101இன்ன இன்பு உறும் இனிய இத் திருப் பெயர் தன்னைப்
பன்ன, இன்பு உறும் பன்னிய வாயும்; உள் வணங்கி
உன்ன, இன்பு உறும் உன்னிய உன்னமும்; அதனைத்
துன்ன இன்பு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ!
99
   
 
1102“வான மேலவர் வணங்கிய இப் பெயர் தன்னால்,
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து,
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து, உயிர் பிரிதல்
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம்!“ என்றான்.
100
   
வானவர்பாடி, பூமாரி பொழிதல்
 
1103என்ற காலையில், இன் இசை மகர யாழ் உளரி,
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து, ஆசியை நவின்று,
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல்,
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர்.
101
   
குருக்களை அழைத்து வந்து திருக்குழந்தைக்கு
இயேசு எனும பெயரிடல்
 
1104மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய்,
பன்னு மா மறை பயில்வரை விளித்து, அரும் அன்பின்
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளைத் தவிரா,
துன்னு மாண் உடைத் தூய் திரு நாமம் இட்டனரே.
102
   
மூவரசர் வருகை
 
1105வையத்தார் திரு விரும்பி மறு உற்றார்
  என்று, எளிமை வடிவம் பூண்டு
மெய்யைத் தான் உலகு உணர்த்த விருப்பமொடு
  மனு ஆய விசைய வேந்தன்,
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில்
  தோற்றுவிப்ப, புகழ் உற்று, ஆய்ந்த
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரைத் தன்
  தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம்
103
   
வானில் ஒருபுதிய நட்சத்திரம் தோன்றதல்
 
1106விண் எழுந்த வெண் மதியம் மிதித்து ஒளிரு
  மெல் அடியாள் விரும்பி ஈன்ற
ஒண் எழுந்த திரு மகற்கே உரிகொடி ஆம்
  என, மறையோர் உரைத்த வண்ணம்,
கண் எழுந்த கவின் காட்டிக் கதிர் பொங்கு
  நவ மீனை, கடவுள் தானே,
மண் எழுந்த நாளில், அரு மறை நாப் போல்
  தோற்றுவித்து, வழங்கல் செய்தான்.
104
   
புதிய விண் மீனைக்கண்டு அரேபியா,பெர்சியா,
சபதெ நாட்டு மன்னர் மகிழ்தல்
 
1107நறு நானம் நறிய புகை நாறு நறும்
  அராபிய நல் நாட்டு வேந்தும்,
பெறுமான மணிப் புனல் சேர் பேர்சிய நாடு
  ஆண்டு அருளைப் பிளிர்ந்த வேந்தும்,
செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும்
  சப நாட்டுச் சிறந்த வேந்தும்
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு
  உள் அறிவு எய்தித் தொய்யல் உற்றார்.
105
   
கையுறைகளுடன், சுவதரித்த இறைவனைக்காண வருதல்
 
1108தனத்து இனத்துத் துணிவு எய்தி, தாரகையைக்
  கொடி கொண்ட தரணி வேந்தை
மனத்து இனத்துத் தொழுது, “அடியை வணங்குவல்“என்று
  அவனவனும் மனத்தில் தேறி,
இனத்து இனத்துக் கடல் தானை இணைந்து வரக்
  கோ வேந்தை இறைஞ்சப் போகில்,
கனத்து இனத்துத் தாழ்ந்து ஒளியைக் கான்று உடுவே,
  அரிய சுரம் காட்டும் அன்றோ.
106
   
மூவரும் ஒரிடத்திற் கூடுதல்
 
1109மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால்
  ஓர் உடுவே வழியைக் காட்ட,
வேறு இன்றி, தடம் ஒன்றை மேவிய
  மூ அரசர் ஒன்றி, விழுப்பம் ஓங்கி,
காறு இன்றிக் களிப்பு உற, தம் கருத்து எல்லாம்
  உணர்ந்து உணர்த்தி, கருணை ஆர்ந்த
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை
  இறைஞ்சுவதற்கு இணைந்து போனார்.
107
   
படைகள் புடைசூழச் செல்லுதல்
 
1110மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும்
  பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம்,
குடை அடைந்த பரிகளொடு, குன்று அருவி
  மதம் மாறாக் கும்பி ஈட்டம்,
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன்
  உமிழ் வடி வேல் படையர் ஈட்டம்,
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து
  நெருங்கிற்றே வையம் எல்லாம்.
108
   
விண் மீன் நின்ற நலைகண்டு குகையை அடைதல்
 
1111குழல் எடுத்து மாகதர் தேன் படப் பாடி,
  பல் இயம் கார்க் குரலின் ஆர்ப்ப,
நிழல் எடுத்துச் சுடர் இமைக்கும் முடி வேந்தர்
  நெட்டு இடை பல் நெறிகள் நீக்கி,
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரைக்
  கடந்து ஏகி, சோகு இனங்கள்
அழல் எடுத்துச் செய்த துயர் ஆற்ற இறையோன்
  உறைந்த இடம் அடைந்தார் அன்றோ
109
   
 
1112மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என,
  அங்கண் உடு வதிந்து நிற்ப,
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான்
  விலங்கு இனங்கள் அடையும் அன்ன
கந்தரமே தெரிந்தது எனக் கண்டு, உளத்தில்
  வியப்பினொடு களித்த மூவர்
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து, அருத்தி
  எழுந்து உவந்து, உள் இறைஞ்சிப் புக்கார்.
110
   
குகையிலுள்நுழைந்த இறைவனைக் காணல்
 
1113அழிவு இன்றிக் கன்னித் தாய் அரிதில் அவண்
  திரு மகவு ஈன்று அளித்த ஆறும்,
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை
  ஒன்றுபட இசைத்த ஆறும்,
பழி இன்றி உருக் கொடு பற்பல உம்பர்
  புடை புடை தாள் பணிந்த ஆறும்,
விழி இன்றி, இறை ஈந்த மேதையினால்
  அறிந்து உளத்து வியப்பு உற்றாரே.
111
   
இறைவன் திருவடியில் வீழ்தல்
 
1114மும் மலை வீழ்ந்து என வீழ்ந்து, முச் சுடர் போல்
  மும் முடிகள் முகிழம் தாளில்
விம்மு அலை வில் உறப் பெய்து, மேவிய நெஞ்சு
  உருகி, கண் விடுத்த நீரால்
பொம்மு அலையின் பெருகு இன்பப் புணரியினுள்,
  மூவர் அங்கண், பொலிக மூழ்கி,
இம் மலையின், தொழத் தொழ வீழ்ந்து,
  எழுந்து எழுந்து, கோ வேந்தை இறைஞ்சிட்டாரே.
112
   
இறைவன் திருவடியில் காணிக்கை வைத்தல்
 
1115ஓர் ஆழி உருட்டலின், மூ உலகு ஆளும்
  தனி மன்னற்கு உரிய மாடை,
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும்
  அதற்கு உரிய நெய் கொள் மீறை,
ஆர் ஆழி அறத்து இறைவற்கு
  அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம்,
பார் ஆழி உடை மூவர், இம் மூன்றும்,
  பத மலர் முன் பணிந்து வைத்தார்.
113
   
அன்பினாற் கண்ணீர் கொரிதல்
 
1116“மண் களிப்ப மனு ஆனாய்; மனம் வருந்த, இத் துயர் கொள்
  வடிவு உற்றாயோ?
விண் களிப்ப, உவப்பு ஆனாய்; வெயில் வடிவம்
  மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ?
கண் களிப்ப உரு ஆனாய்; கசடு ஒழிப்ப
  உள் இரங்கிக் கலுழ்குவாயோ?
புண் களிப்ப மருந்து ஆனாய்; புண்பட
  மாள்வாய்கொல்?“ எனப் புலம்பி நின்றார்.
114
   
திருக்குழந்தை வரம் அருள்தல்
 
1117மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை
  வேந்து, இவரை முகமன் நோக்கி,
பூ உலகும் களி கூர, புகலா, பூங்
  கரத்து ஆசி புரிதலோடு,
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என
  வரங்கள் எலாம் மிடையத் தந்தே,
தே உலகு நிகர் நயத்து இம் மூவரும்
  எண் இல ஆசி செலுத்தினாரே.
115
   
திருக்குழந்தையை முத்தமிட்டுப் முறுதல்
 
1118அருத்தியொடு மனத்து ஓங்கி, அனிச்சையில் நொய்
  அடி சிரம் மேல் அணுகிச் சேர்த்தி,
கருத்தினொடு கண்ணில் ஒற்றி, கண் உகு நீர்
  முத்து எனக் கால் கழல் போல் மாற்றி,
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல்
  வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி,
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை
  இல்லை என, வரைவு இல் வாழ்ந்தார்.
116
   
இறைவன் அரசனாய்ப் பிறந்து எம்மை சுபிமைகொள்ளலாகாதோ என சூசையிடம் அரசர் வனவுதல்
 
1119மகோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின்,
  இத் துயரோ குளித்தல் வேண்டும்?
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற
  நாடு அடைந்து, பொது அற்று ஆண்டு,
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம்
  பணி செய்யா நின்றால் என்னோ,
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய்?“
  என வளனை விரும்பிக் கேட்டார்.
117
   
அறமும் அன்புமே இறைவன் விரும்பும் செல்வம்
எனசூசை புகல்தல்
 
1120“ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு
  இத் திருவோ உலகில் வேண்டும்?
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி,
  மற்று எவையும் கோது என்று ஓர்ந்து,
பின்றாத விதி முறையால் பிறந்த பிரான்,
  உமது ஆர்வப் பெற்றி ஒன்றே
பொன்றாத பொற்பு எனக் கொண்டு உவப்பன்“ எனப்
  புகன்று, ஆசி புரிந்தான் சூசை.
118
   
சூசை, மரியின் சொற்களில்மூவர்ரும் அங்கேயே தங்குதல்
 
1121வீங்கு ஒடியா விம்மிதத்து இவ் விதி கேட்டுப்
  புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற,
பூங்கொடியாய் அழிவு இன்றிப் பூ அனைய
  மகவு ஈன்ற பொருவு இல் தாயும்,
தேன் கொடியால் இம் மகற்குச் செகத்து அமைந்த
  கைத் தாதைச் சிறப்பு உற்றோனும்,
ஆங்கு ஒடியா உறுதிச் சொல் அருத்தியினால்
  இருத்தியர் போல், அயனம் உன்னார்.
119
   
வானவர் கட்டளைப்படி மூவரசரும் பிரிதல்
 
1122பணிப்பு அரிய குணத்து உம்பர், பரமன் தன்
  பணி என்னப் பயணம் கூற,
பிணிப்பு அரிய உடம்பு உயிரைப் பிரிந்தாற் போல்,
  உள் துயரம் பெருகலோடு,
தணிப்பு அரிய இம் மூவர் தாள் தொழுது, அம்
  மூ அரசர் தணந்து நீங்கி,
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடுப் பின்
  சென்று, தமது அகலுள் சேர்ந்தார்.
120
   
சூசையும் மரியும் அரசர் அளித்த பொருளை ஈந்த முறை
 
1123தேர்ந்து, அரிது ஓர் தெருளுடன், அச் செல்வ அரசர்
  ஈய்ந்த நிறை செம் பொன் யாவும்
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன,
  பேர் அருளோர், முப் பாலாய்ப் பிரிதல் செய்தே,
ஓர்ந்து அரிது ஓர் முறையில், தமக்கு ஒன்று இன்றி,
  மெய்ம் மறையை ஓதினார்க்கும்
ஆர்ந்து, அரிது ஒண் மணித் தேவாலயத்திற்கும்
  இரப்போர்க்கும் அளவில் ஈந்தார்.
121
   
பெத்திலேம் நகரில் ஒரு சிறு வீட்டை அடைதல்
 
1124உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய
  மன்னவர் வந்து ஒழிந்த பின்னர்,
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து,
  அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி,
மிடி ஒக்க எளிமை உற, வெயில் ஆர்ந்த
  கதிர் கரக்கும் விகத்தன் போலக்,
கடல் ஒக்கப் பெத்திலையேம் கடி நகருட்
  சிறு வீட்டில் கரந்து புக்கார்.
122
   
திருங்குகையை வானவன் காத்தல்
 
1125ஆனகத்தால் பல் இயம் சூழ் ஆர்த்து எழ, இம்
  முறை மூவர் அகன்று போகில்,
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல்
  பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து, எஞ் ஞான்றும்
கானகத்து ஆர் விலங்கு இனம் அக் கந்தரத்துள்
  புகல் செய்யா காவல் செய்து,
வானகத்தார் உறையுள் என்று ஆம்,
  மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ.
123
   
பெத்திலேம் நகர் நீங்கிய செய்தி கூறுவேம் எனல்
 
1126இந் நீர் அன்னார்க்கு எண் ஐந் நாள்
  இனிதில் அங்கண் போயின பின்,
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து
  விள்ளா முகை ஆம் திரு மகன், தன்
அந நீர் முகத்தின் துகள் துடைத்து இவ்
  அவனிக்கு எங்கும் பயன் பயப்ப,
முந்நீர் எழுந்த இளங் கதிர் போல்,
  மூது ஊர் புறம் வந்தது சொல்வாம்.
1
   
திருக்குழந்தையைக் கோவிலிற் காணிக்கை செலுத்தி
மீட்க க் காரணம்
 
1127நிறை நீத்து எசித்தார், பகை முற்றி,
  நெடு நாள் சிறை செய்து, யூதர்கள் தம்
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம்,
  விடைத்தார் என்னா, விடைத்து இறையோன்,
குறை நீத்து எல்லாத் தலை மகரை,
  குலைய ஒன்னார், தான் கொன்று,
சிறை நீத்து யூதர், அமுது ஒழுகும்
  திரு நாடு அமைத்தி, அருள் செய்தான்.
2
   
 
1128முன் நாள் செய்த அருள் மறவா
  முறை கொண்டு ஒழுகும் தன்மை என,
பின் நாள் பெறும் தம் தலை மகரைப்
  பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது
அன்ன நாள் சிறையைத் தீர்த்த பிரான்
  அவர்க்கு ஏவின பாலால், எவர்க்கும்
பின்நாள் சிறை தீர் தனி மகனை
  இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார்.
3
   
திருக்குழந்தையை எடுத்துச்செல்லுதல்
 
1129பிறை ஒண் வடிவம் தேய்த்து ஒளி சூழ்
  பிலிற்றும் அனிச்சப் பதத்தாளும்,
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி
  மலர்க் கோல் ஓங்கு மாதவனும்,
நறை ஒண் வடிவு அம் துணர்ப் பதத்தை
  நண்ணி ஏற்றி ஆசியைக் கேட்டு,
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல்
  உடல் கொள் இறைவன் ஏந்தினரே.
4
   
தாயின்கையில்செய்
 
1130விண்ணும் மண்ணும் பொது அற்று
  விதித்தும், அருளால் புரிந்து அளித்தும்,
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து
  இருமை ஏந்தும், எனை ஆள்வான்,
கண்ணும் கையும் அருள் புரிய,
  கருணைக் கடலோன், புறத்து ஏகி,
மண்ணும் விண்ணும் உவந்த நிலை
  வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே.
5
   
 
1131கான் தோய் மலர் மேல் தேன் துளியோ
  கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ
தேன் தோய் கமலத்து அனப் பார்ப்போ?
  சீர் தோய் பொன் மேல் துகிர்ச் செப்போ
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில்
  வேய்ந்தான், முகத்தில் வில் வீசி,
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன,
  மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான்.
6
   
கதிரவன்தோற்றம்
 
1132வேய்ந்தான் அன்னான் என, வானின்
  விழி போல் வேய்ந்தான் ஒளி வேந்தன்;
ஆய்ந்தான், கண்டான்; நீத்த கடல்
  ஆற்றா இன்பக் கடல் இனிதின்
தோய்ந்தான், மலர்த் தாள் கதிர்க் கையால்
  தொழுதான்; தொழா மற்றவர்க் கண்டு
காய்ந்தான் என்ன, கதிர்ச் சரங்கள்
  கடுகி வீசிக் கடுத்தனனே.
7
   
 
1133பைந் தார் பூண்ட பிறன் மனையாள்
  பற்றிச் சென்ற கண் மறுத்த,
செம் தார் நல்லோர் மாட்சி என,
  சிறுவன் நோக, தீண்டிய தீ,
வெம் தார் வெய்யோன், புழுங்கிய தன்
  வில்லைச் சுருக்கி, புது மகளிர்
தம் தார் மறைவில் நின்றது என,
  தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே.
8
   
இயற்கையின்மகிழ்ச்சி
 
1134கடுத்த பருதி கதிர்ச் சரங்கள்
  காத்த வட்டத்து இள முகிலோடு,
அடுத்த தென்றல் சாமரை இட்டு
  அனைய வீசி, நறும் பைம் பூ
உடுத்த வண்ணத்து, உள் உள பேர்
  உவகை பொறித்த முகத்து, உலகம்
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா
  தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே.
9
   
 
1135சிரை வாய்க் கனி யாழ் தும்பி செய,
  சிகிகள் ஆடும் நாடகமும்,
இரை வாய்க் குயில்கள் தீம் குரலும்,
  இணர் வாய்ப் பொழில்கள் பெய் நறவும்,
கரை வாய்ப் பொய்கை மலர்க் கரத்தில்
  கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும்,
விரை வாய்த் தடத்து ஆர்ந்து,
  எதிர் எதிரே விருந்து செய்யப் போயினர் ஆல்.
10
   
வானவர்மகிழ்ச்சி
 
1136பில்கித் தீம் தேன் துளி சுரக்கும்
  பிணையல் திரள் ஓர் மாரி என
நல்கி, தீம் சொல் பா இசைகள்
  நயப்பின் பாடி, மின்னின் நிறத்து
ஒல்கி, தீண்டின் கண்கனிய
  ஒளி செய்து, ஐயாயிரத்து இரட்டி
மல்கிக் காத்த உம்பர் அலால்,
  வந்தார் அன்று ஓர் எண் இலரே.
11
   
 
1137கற்பே அணி என்று ஓம்பி, மதுக்
  கரை ஆம் தண் தார் மாதர்கள் தம்
பொற்பே, கணவர் தமக்கு அல்லால்,
  புறத்துப் பயனே பயவாப் போல்,
வெற்பே எழும் செஞ் சுடர் நாண,
  விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற
பல் பேர் உரு, இம் மூவர் அலால்,
  பலரும் காணா தோன்றினரே.
12
   
வழிநடை காட்சிகள்
தோட்டம்
 
1138குரவம் நீள் வேலி கோலும் குடங்கையுள் துஞ்சி, தன்னைக்
கரவ நீள் பசும் பூ நெற்றிக் கரும்புகள் நிறுவி ஊக்கி
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான்
பரவ நீள் பல பூங்காவும் படு நெறி போயினாரே.
13
   
சோலை
 
1139சண்பகப் பூம் பந்து ஒத்த தனையனை ஏந்திப் போய், தம்
பண்பு அகத்து அனைய நீழல் படர்ந்து, கான் படரப் பூத்து
விண் பகப் பாய்ந்த கொம்பர் விட்டு கண்டு உலவ யூகம்,
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே.
14
   
மலை
 
1140மலைத்து அளி இரு பால்
  மல்கி மகர யாழ் இசைகள் செய்ய,
இலைத் தளிர் இரும் பூஞ் சோலை
  இடத்தில் இட்டு ஏகி, பின்னர்,
கலைத் திரிபு ஆகக் கோலிக்
  கதிர் மணி அருவி ஆர்ப்ப,
சிலைத்து இரி சிகிகள் ஆடும்
  திகிரியின் நலத்தைக் கண்டார்.
15
   
கண்ட அம்மலைக்குரியதோர்பெருமை
 
1141கண்டுளி, உளத்தில் ஓங்கக்
  களித்த பூங் கொடியோன் சொல்லும்:
“தண் துளி முகில் சூழ் வெற்பை,
  தகு மறை வடிவாய், நோக்காய்
பண்டுஉளி, அனைத்தும், எஞ்சாப்
  பசி சினந்து உயிர்கள் யாவும்
உண்டஉளி, உயிரைத் தந்த
  உயர் மலை வனப்பு இது“ என்றான்.
16
   
 
1142“கோல் அடி கோடி ஆய
  கொடுமையால், வருடம் மூன்றும்,
மேல் அடி மழையும் இன்றி
  மெலிந்து உலகு எஞ்சி நிற்ப,
கால் அடி தன்மைத்து ஓர் கார்
  காணத் தன் கோட்டில் தந்தே,
ஆல் அடி நிழற்றும் பொச்சை,
  அன்று உயிர் தந்தது“ என்றான்.
17
   
 
1143“நூல் வழிப் புகழே போன்று
  நொடிப்பினில் பரந்த மேகம்,
வேல் வழி ஒளியே போன்று
  மின்னி, ஆர்த்து, இறைவன் அன்பின்
பால் வழிப் பயனே போன்று
  பகல் இரா அளவு இல் தூவி,
கோல் வழிப் படமே போன்று
  கூ எலாம் கேழ்த்தது“ என்றான்.
18
   
மரியாளின் பதில்
 
1144“ஊன் நிலைக் குழவி தோன்றி,
  உலகு எலாம் அளிக்கும் அன்பின்
பால் நிலை இடம் மூன்று ஆற்றாப்
  பரிசு உடை இவனைக் காட்ட,
கால் நிலை தோன்றி அக் கார்
  கடல் நிலை பயத்தது“ என்று,
மீன் நிலை முடி தாள் சேர்த்தி,
  மெய்யனைத் தொழுதாள் தாயே.
19
   
குறிஞ்சி நில வருண்ணை
 
1145சுளகொடு சவரம் வீசும்
  தோற்றமே போன்று, வேழம்
புளகொடு மதத்தின் சீறிப்
  புடைத்த தன் செவி கால் வீச,
மிளகொடு படர்ந்த மெல் நீள்
  கொடியின்மேல் ஊஞ்சல் ஆடி
அளகொடு பொலி கூன் ஆர்க்கும்
  அத்திரி அணுகினாரே.
20
   
 
1146நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று,
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய்ச் சூழ்ந்த
நாக நீல் நெற்றி தோன்றி, நயன் தரு மறையின் சிந்தும்,
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார்.
21
   
முல்லை நிலம் அடைதல்
 
1147நிறை தவிர்ந்து உணர்ந்த காம
  நெறியில் கைப் பொருளே போன்றும்,
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும்,
  முனிகள் தம் முனிவு போன்றும்,
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும்
  புனல் நலம் எதிர் கொண்டு, ஆங்கு அத்
துறை தவிர்ந்து, இடத்து இட்டு ஏகி,
  துளித்த தேன் முல்லை சேர்ந்தார்.
22
   
முல்லை நிலத்திற்கண்ட ஒரு காட்சி
புறாக்களைக்குறிவைத்த வேடனுக்கும்புறாவுக்கும்நேர்ந்த முடிவு
 
1148நீழ் கிளர் மலரின் தண் பூ
  நிழல் கிளர் கொம்பில் புல்லி,
கேழ் கிளர் பொறித்த மாமைக்
  கெழுஞ் சிறை வகிர்ந்து பேணி
வாழ் கிளர் அன்பினாலும்,
  மணிக் கிளர் வனப்பினாலும்,
சூழ் கிளர் காவில் ஒவ்வாத்
  துணைப் புறவு இருந்தது, அம்மா!
23
   
 
1149உலை வளர் எரிச் செங் கண்ணான்,
  ஊன் எயிற்று ஊற்று வாயான்,
கொலை வளர் புலிப் பால் உண்டு
  கொலையொடு வளர்ந்த வேடன்,
இலை வளர் நிழல் பூங்காவில்
  எய்தி, அப் பறவை கண்டே,
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி,
  சிலை வளைத்து அணுகிச் சேர்ந்தான்.
24
   
 
1150ஓர் பகை இவன் கீழ் உள்ள,
  உலவி மேல் பருந்து தானும்
கூர் பகை உகிர் வவ்வா முன்
  கொடிய கண் இரையை வவ்வி,
பேர் பகை உணர்ந்து சூழ,
  பிறர் எலாம் தமைப் போல் எண்ணி,
சேர் பகை உணரா அப் புள் சிறுமை
  கண்டு இனைந்தான் சூசை.
25
   
 
1151சிட்டம் இட்டு எழுதப்பட்ட
  சிறகு ஒளி செகுப்ப, பாறும்
வட்டம் இட்டு இழிந்து பாய
  வருகையில், வேடன் வாளிச்
சட்டம் இட்டு எய்ய,
  சர்ப்பம் தனை மிதித்திடும் கால் தீண்டித்
தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான்,
  தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே.
26
   
வினை விதைத்தவன்வினை ஆறுப்பான் - சூசை
 
1152“வினையது விளைவு நோக்காய்;
  வினை பிறர்க்கு உணர்ந்த பாவம்,
தனை, அது, கொல் கூற்று ஆதல்
  தகவினார் உரையின் கேட்டேம்;
பினை, அது இன்று காணப்
  பெற்றனம்“ என்று சூசை
அனையது விளம்பி, போன
  அணி வளர் முல்லை சொல்வாம்.
27
   
திருமகன்வருகையால்முல்லை மலர்தல்
 
1153புதுப் பட வேந்து உறீஇ, பொலி தெருத் தொறும்
சதுப் பட, நகர் எலாம் சிறந்த தன்மை போல்,
விதுப் பட முகத்து வான் வேந்தன் எய்தலால்,
மதுப்பட மலர்ந்தன முல்லை வாய் எலாம்.
28
   
வளன் பூங்கொடிபோல்பூத்த மலர்கள்
 
1154வானகத் தகவினோர் மகிழ வேய்ந்து என,
மீன் நகத் தரு எலாம் முகைகள் விள்ளலே,
கானகத் தவத்தினோன் மணத்தில் கானொடு
தேன் அகத்து அலர்ந்த கோல் சிறப்புக் காட்டுமே.
29
   
கன்னி மரியாளும்திருமகனும்போல்இணைந்த மலரும்கனியும்
 
1155சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர்
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும்,
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி
கன்னியாய் மகன் பெறு மாட்சி காட்டுமே.
30
   
மேகங்கண்டு குயில்கள்பாட மயில்கள்ஆடுதல்
 
1156பரு இலார் மனம் என முகில் பரந்து, நூல்
கரு இலார் மனம் எனக் கருக அந்தரம்,
திரு இலார் மனம் எனத் தேம்ப மாங் குயில்,
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும் ஆல்.
31
   
மூவர்ஒலியைக்கதிரவன்ஒளியாய்க்கருதிய குயிலும்மயிலும்
 
1157ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால்,
கார் முகம் புதைத்த வெங் கதிர் உதித்தது என்று,
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்திக் கூய்க் குயில்,
சூர் முகம் புதைத்தன தோகை நாணியே.
32
   
பறவைகளின்மகிழ்ச்சி கண்டு சோலைகள்மலர்தல்
 
1158பொய் மறுத்து, இவர் எனப் பொலிந்த ஓகையால்,
ஐ மறுத்து, இரி மயில், ஆடி, மற்றையும்
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே,
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த கா எலாம்.
33
   
தென்றலின்உபசரிப்பு
 
1159புல்லிய பொழிற்கு இடைப் புறப்பட்டு எய்திய
மெல்லியது ஓர் வளி, விருந்து எதிர் கொளச்
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி, அங்கு
அல்லிய மலர் மணம் வாரிக் கக்கும் ஆல்.
34
   
காற்று எழுப்பிய இன்னிசை
 
1160சூழ் இசை மேல் வளி துதைந்து, அங்கு ஆடிய
காழ் இசை தருத் தழை கனியப் பாடலும்
கேழ் இசை மூவரை வாழ்த்தக் கின்னர
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே.
35
   
கன்றுகள்மூவரையும்தொடர்தல்
 
1161ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ,
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானுளும்ளும்ளும்
ஒன்றாய், அரும் அறிவு என அமர்ந்து நோக்கலின்
ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே.
36
   
மரங்களும்குளங்களும்தொழுதல்
 
1162அம்பு உகை வில் என அடி வணங்கின,
அம் புகைத் துகில் என அலர்ந்த பூந் தரு;
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின,
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ.
37
   
மலர்க்கொடிகள்வணங்குதல்
 
1163தழீஇயின கலன் பொறாத் தளர் நுசுப்பு என,
குழீஇயின மலர் பொறாக் கொடிகள் ஊசல் கொண்டு,
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல்
விழீஇயின, இணை பொறா விளங்க முல்லையே.
38
   
வண்டுகளின்முழக்கும்
 
1164காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என,
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண்
மேவில், மீது ஆடிய மிஞிறு, விம்மின,
பூவின் மீது ஆடிய புதுக் கள் நாடியே.
39
   
மயில்களின்ஆட்டம்
 
1165ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து, ஆர் நிழல்
தோய்ந்த கண் நாடி ஒண் மயில், தம் தோகைகள்
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று, ஆயிரம்
ஆய்ந்த கண் நாடி, வந்தவர்க் கண்டு, ஆடும் ஆல்.
40
   
மூவர்வருகை கண்டு மரஞ்செடி கொடிகள்பூத்தல்(வேங்கை
பவள மல்லிகை)
 
1166பைங் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என,
கொங்கு அயல் திமிசு சூழ் குளிரப் பூத்தன.
செங் கயிற்று அடி உறை திரண்ட முத்து என,
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ.
41
   
(பாதிரி, புளி, வெட்சி)
 
1167சிந்துரம் விழித்து எனச் சினைத்த பாடலம்.
சிந்துர முகை மணித் துகளின் தீர்ந்தன.
சிந்துரம் மணந்த நீர்க் குளித்த சீர்மை போல்,
சிந்துரம் மணத்தொடு முகைத்த சீலமே.
42