இளவல் மாட்சிப் படலம்
 
திருக்குழந்தை எசித்துக்குச்செல்ல காரணம்கூறத் தொடங்குதல்
 
1339“அவ்வாறு ஒரு சூரலைக் கொண்டு
  அவை யாவையும் செய்தவனோ,
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து
  அந் நாடு ஏகுகின்றான்,
செவ் ஆறு உளத்தோன், பயந்து
  அத் திசை தேடுவனோ என்னா,
ஒவ்வா எசித்தார் உணர்வார் என,
  மீட்டு உரைத்தான் வானோன்:
75
   
எசித்தார்செய்த நற்செயலால்இறைவன்செல்கிறான்எனல்
 
1340கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை
மிடல் உடை வலியொடு விளங்கச் செய்தவன்,
உடல் உடை இளவலாய், ஒளித்த பான்மையால்,
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான் அரோ.
76
   
சகோபுவை எசித்தார்பேணிய செய்தி
 
1341“தீய் வினை செய்த போது எசித்துச்சீர் கெட
நோய் வினை செய்தனன், நுனித்து, அந் நாடர் தாம்
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால்,
போய், வினை அறுத்து, அருள் பொழிய உள்ளினான்.
77
   
 
1342“விண் துளி இலாமையால், வியன்ற பார் மிசை,
பண்டு உளி, அனைத்திலும் பசி பரந்து உயிர்
உண்டு உளி, சகோபு தன் உயர் குலத்தொடும்
அண்டு உளி எசித்தனர் அருள் செய்தார் அரோ.
78
   
 
1343“வேதம் ஒன்று அறிந்திலார், வேதம் கொள் குலம்
கேதம் ஒன்றியது எனக்கிளர்ந்த அன்பொடும்,
ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர்;
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார்.
79
   
 
1344“தோல் முதல் உடைமை சால் தொகுத்து, அங்கு ஓச்சு செங்
கோல் முதல் அளித்த கோன் பேணும் கொள்கையால்,
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன்
கால் முதல் இனம் எலாம் கரை இல் வாழ்ந்ததே.
80
   
 
1345“இக் குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா,
அக் குலத்தினர் உவந்து அருள் கைமாறு உற,
மைக் குலத்து ஒளி நலம் வகுப்பப் போய் அவண்,
மெய்க் குலத்து அறிவு இட அன்று மேவினான்.
81
   
 
1346“மேவிய கருத்து அறிந்து, அரிய வேத நூல்,
ஏவிய விதியினோர், இவன் அங்கு ஏகிய
தூவிய முகில் எனத் தோன்றுவான் என்றார்;
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான்.
82
   
 
1347“உள்ளிய அருள் நலம் ஒளித்துச் செய்குவான்
தெள்ளிய அமைதி ஈது என்று, தீ உளத்து
எள்ளிய அரசு செய் இகல் பெயர்ப் பட,
விள்ளிய உளத்து உணர் வினை முடிக்குவான்.
83
   
மிக்கயேல்திருக்குழந்தையை வணங்குதல்
 
1348“மெல்லிய உருக் கொடு, மிடலினோன், உணர்
கல்லிய கருணையின் கருத்து இது ஆம்“ எனச்
சொல்லிய மிக்கயேல், தோன்றல் தூய் அடி
புல்லிய வணக்கொடு பொலியப் போற்றினான்.
84
   
சூசை இன்பத்துள்மூழ்குதல்
 
1349பெய்த கான் மது மழைப்பெருக்குற்று ஓடிய
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி, இன்பு எழ,
பொய் தகாச் சுருதி நூல் பூத்த வாகையான்,
கொய்த காய் இடர் கெடக் குளித்து உள் ஆடினான்.
85
   
 
1350“தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும்
மன் உயிர் காத்து அருள் மலி பிரான், தனது
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய்,
அன்ன உயிர் காக்கவோ அயர்வு உற்றான்!“ என்றான்.
86
   
 
1351“தெவ் உலகு அருட் படத் தெரிந்த சூழ்ச்சி, வான்
அவ் உலகினர் உணர்ந்து அறிகுவார் அலால்,
இவ் உலகு உணர்குவார் எவர்கொல்?“ என்று, அருள்
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது, பாடினான்.
87
   
சூசை திருமகனைப்புகழ்ந்து பாடுதல்
 
1352“தனை வேண்டிப் போய் ஒளித்த தன்மை, பிறர் கொள்
வினை வேண்டித் தான் உள் மெலிந்து அழுவான் யாரே?
வினை வேண்டித் தான் உள் மெலிந்து அழுதே, இங்கண்
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே?
88
   
 
1353“புள் வழியே, நீர் மேல் புணை
  வழியே ஆய்ந்து, அடைந்தால்,
உள் வழியே நீத்து, அடையா,
  ஓங்கு இயல்பான் தான் யாரே?
உள் வழியே நீத்து, அடையா,
  ஓங்கு இயல்பான், வான் அரசு ஆய்,
முள் வழியே, ஈங்கு இடருள்
  மூழ்கி அழும் நீ அன்றே?
89
   
 
1354“காய்ந்தால் உலகு எரிக்கும் கண்ணால், கருணை முகந்து
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் தான் யாரோ?
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் நீஅன்றோ?
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர்அறிவார், ஆர் உயிரே!
90
   
காபிரியல் தந்த படைப்புச் செய்தி வானவன் காபிரியேல்,
இறைவன் நீதி விளங்கக்கோபித்த செய்தியைக்கூறத்தொடங்குதல்
 
1355பாடினான் வியந்து; உளத்தில்
  பெருகும் இன்பப் பரவையில் தான்
ஆடினான்; அழும் கண்ணீர்
  ஆட்டித் தேம்பூ அடி தொழுதான்;
சூடினான்; சுவை விள்ளான்
  பினர், முந்நீர் மேல் துறும்வெள்ளம்
ஓடினால் எனத், தொழும்
  காபிரியல், இன்புற்று உரை உற்றான்.
91
   
 
1356“உடல் வண்ணத்து இளவல்
  என இங்கண் தோன்றி உதித்த பிரான்,
கடல் வண்ணத்து எக் குணமும்
  உளனாய், முன் நாள் கடு நீதி
அடல் வண்ணத்து எசித்து அறியும்
  அல்லால், இங்கண் ஆர் அறிவார்,
மிடல் வண்ணத்து எழும் கதத்தில்
  இவன் தன் நீதி வெகுண்டன கால்?
92
   
உலகெலாம் படைத்தவன்இறைவன்
 
1357“செய்ப் பட்ட வான் உலகும்,
  வான் மீன் திங்கள் செஞ் சுடரும்,
மொய்ப் பட்ட நீர் உலகும்,
  நீரில் துப்பும் முத்து அணியும்,
ஐப்பட்ட பூ உலகும், புனலும்
  வெற்பும் ஐந் திணையும்,
கைப்பட்ட எவ் உலகும் செய்தான்,
  இந் நல் காதலனே.
93
   
பூவுலகின் செல்வம்அளவில்
 
1358“சீர் ஆரும் மணி இனமும், பைம்
  பூ முப் பால் திளை இனமும்,
பார் ஆரும் கூழ் இனமும், கனியும்
  தீம் தேனும் பல் இனமும்,
ஏர் ஆரும் நிறத்து இனமும், இன்பு
  உய்த்து ஆரும் இசை இனமும்,
நீர் ஆரும் பூ உலகின் செல்வம்
  கூறும் நிலை இலதே.
94
   
 
1359“கூறு உற நான் கூறுங் கால்
  கூற்றுங் குன்றக், குவிந்த திரு
வேறு உற வேறாய்ப் பரப்பி,
  மண் மேல் நீர் மேல் விண் திசை மேல்
பாறு உற வாழ் புள் இனமும்,
  நீர் வாழ் மீன்கள் பல் இனமும்,
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண்
  அற்று ஈட்டி வகுத்தனனே.
95
   
 
1360“மட்டு அற்ற புல் உயிர்கட்கு
  அரசன் ஆக, வானவர் போல்
கட்டு அற்ற வேண்டுதல் வேண்டாமை
  வல்ல கருத்து உயிரை
நட்டு, அற்றம் நிகர் கடந்த உருவின்
  மாமை ஞாயில் பொறித்து
இட்டு, அற்றம் இன்றி மனுக்
  குலத்தை ஈன்றான், இத் திறத்தான்.
96
   
 
1361“இற்று எல்லாம், கலை முகந்த கற்றோர் எஞ்ச,
  ஈட்டிய பின்,
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள், இன்னா
  அருந்தும் அவா
உற்று, எல்லாம், அழுக்கு உற்றது என்று நாதன்
  உடன்றன கால்,
முற்று எல்லாம், அழிப்ப முனிவு உணர்ந்த தன்மை
  மொழிகிற்பேன்.
97
   
பாவமலிந்த உலகை இறைவன் கோபித்தல்
 
1362“மாயிரத்து அவிர் புவி வகுத்தும் ஆயனம்
ஆயிரத்து ஆறு நூற்று ஐம்பத்து ஆறும் ஆய்,
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால்,
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான்.
98
   
 
1363“மறை நெறி நீங்கிய மனிதர், உள் கெட,
நிறை நெறி நீங்கிய காம நீர் குளித்து,
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடைக்
கறை நெறி நீங்குப கழுவல் உள்ளினான்.
99
   
 
1364உள்ளிய வாய்ச் செய உளத்தின் ஏவலால்,
எள்ளிய உலகு எலாம் எஞ்ச, கார் முகில்,
விள்ளிய கண் பக, மின்னி ஆர்த்து இடித்து,
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே.
100
   
வெள்ளப் பெருக்கம்உலகின்துயரும்
 
1365“வரை உழி வரைவு இலா வடிந்த ஆறு என,
புரை உழி முகில்கள் நீர் பொழிய, நாழிகை
அரை ஒழியா முனர் அகன்று, யாண்டையும்
தரை உழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன.
101
   
 
1366“ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும்,
ஆறொடும் ஆறு மொய்த்து, அதிர்ந்து எழும் திரை
பாறொடு பாறு எனப் பொருது, பார் எலாம்
பாறொடு பாறு நீர் படர்ந்து மொய்த்ததே.
102
   
 
1367“கரை கொலும் கடல் எழீஇக் கழறி, வாங்கிய
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ,
புரை கொலும் முழக்கு எழீஇ, புவனம் எங்கணும்
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே.
103
   
 
1368“நீர் எழும் ஓதையும், நீர் பெய் ஓதையும்,
கார் எழும் ஓதையும், கால் செய் ஓதையும்
சூர் எழும் ஓதையும், துதைந்து வீழ் மனை
பேர் எழும் ஓதையும் பெருகி மாறும் ஆல்.
104
   
 
1369“புதைத்து இருள் கிளர்த்தலும், புயல் பனித்தலும்,
துதைத்து அடுத்து இடித்தலும், கடல் சுளித்தலும்,
சிதைத்த அலைப் பெருக்கமும் திளைப்பக் கண்டனர்,
பதைத்து இரைத்து, உகப்பு இடைப் பனிப்பு உற்று ஓடுவார்.
105
   
 
1370“மாடம்நீள் முகட்டு உயர், மரத்தின் கொம்பு உயர்,
கூடம்நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர்,
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம்
ஓட நீள் நீத்தமோடு ஒழியக் காண்பரே.
106
   
 
1371“கவிகையும், கொடிகளும், கதிர் செய் மஞ்சமும்,
சிவிகையும், தளிமமும், திகழ்ந்த கோசிகக்
குவிகையும், குஞ்சமும், கோல வட்டமும்,
புவி கை உண் பெருக் கொடு போகக் காண்பரே.
107
   
 
1372“ஏர் முகப் புதி மணத்து இணைந்த காந்தனும்,
ஓர் முகத்து அன்னையும், உலந்த தாதையும்,
சீர் முகத் துணைவரும், இனிய சேயரும்,
நீர் முகத்து அமிழ்ந்தி, மேல் ஞெமுங்கக் காண்பரே.
108
   
 
1373“கண்டு கண் புதைக்குவார்; கலங்கி ஆர்த்து, இடர்
உண்டு, கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார்;
வண்டு கண் விசை வரும் வாரி மேட்டு மேல்
கொண்டு கண்டு, அங்கணார் குழைந்து அமிழ்ந்துவார்.
109
   
உலக அழிவு
கவிக்கூற்று
 
1374“ஏர் அணி வலியின் நீதி இறையவன் முனிந்த காலை,
நீர் அணி அரணம் ஆகா; நெடு மதிள் அரணம் ஆகா;
சீர் அணி அரணம் ஆகா; சேண் வரை அரணம் ஆகா,
பேர் அணி அரணம் ஆகப் பெற்ற நல் வினை இலார்க்கே.
110
   
 
1375“எல் இரா பனிப்ப மாரி,
  எழுந்து இராக் கதிரில் பாய்ந்த
இல் இரா, புரிசை ஓங்கும்
  எயில் இரா, புணர்ந்த நாவாய்
வல் இரா கவிழ்ந்து மூழ்க,
  வரை இரா பெருக்குள் மூழ்கா,
கொல் இரா உயிரும் இல்லாக்
  குழைந்து உலகு அழிந்தது அன்றே.
111
   
மக்கள்மடிதல்
 
1376“ஆதியைப் பழித்துக்காமத்து அசனி பட்டு எரிகின்றாரும்,
நீதியைப் பழித்து எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும்,
ஓதியைப் பழித்த பாவத்து உணவு இல சோர்கின்றாரும்,
சேதியைப் பழித்த மாடம் சிதைந்து வீழ்ந்து அழுங்குவாரும்.
112
   
 
1377“இடி முகத்து ஊற்றும் மாரி,
  இடைவிடா நால் பான் நாளும்,
படி முகத்து எழுந்த வாரி,
  பருப்பதத்து உயர்ந்த எல்லா
முடி முகத்து எழுந்து, மூ ஐம்
  முழத்து எழீஇ, எவரும் மாண்டு,
மடி முகத்து அழிந்த ஞாலம்
  வயின் தொறும் நீத்த வாரி.
113
   
விலங்குகள்மடிதல்
 
1378“பிடி நலம் தழுவி நீந்தும் பெருங் கரி வரை என்று எண்ணி,
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி,
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க,
அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவ போன்றே.
114
   
 
1379“பயம் மிக, பகை தோன்றாது,
  பசு வரிப் புலியின் மேலும்,
அயம் மிகச் சிங்கம்மேலும்,
  மான் கலை யாளி மேலும்,
அயம் மிக, சடுதி நீந்தி,
  அயர்ந்து சோர்ந்து, உள மா யாவும்
கயம் மிகு அப் பெருக்குள் மாண்டு,
  கயற்கு இனம் விருந்து உண்டாமே.
115
   
பறவைகள்மடிதல்
 
1380“மயில் கிளி புறவு பூவை
  மட அன்னம் குறும்புள் நாரை
குயில் கொடி சிரவம் கூகை
  கொக்கு இனம் முதல் புள் யாவும்,
பயில் துளி விடாமையானும்,
  பருக ஒன்று இலாமையானும்,
துயில் சிறிது இலாமையானும்
  தொறும் தொறும் துஞ்சிற்று அன்றே.
116
   
கவிக்கூற்று
 
1381“வாயு முன் தூமம் போலும்,
  மாலி முன் கங்குல் போலும்,
தீயின்முன் பூளை போலும்,
  திடனின் முன் பொய்யும் போலும்,
வீயு முன் உழைகள் போலும்,
  விமலன் உள் முனிந்த நீதி
நோயு முன் எதிர்த்துத் தாங்க
  நுனித்த பீடு உடையார் யாரே?
117
   
உயந்தவர்இவர்எனல்
 
1382“நூல் வரும் சுருதி வேலி நொறில்தவம் விளைத்த சீலம்
சால் வரும் மாட்சி நோவன் தானும், தான் தவத்தில் ஈன்ற
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக
நால்வரும், நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே.
118
   
நோவேயின்படைக்கலம் ஆருமேனிய நாட்டு மலையை அடைதல்
 
1383“எண்மரும், இறைவன் நூலால்
  இயைந்த நவ்வி ஏறி, மீண்டும்
மண் மருவு இனங்கள் விண்மேல்
  மருவு இனம் விடாமை ஏற்றி,
விண் மருவு அமலன் தானே
  விரும்பி மீகாமன் ஆய் பார்க்
கண் மருவு அளவு இல் வாரி
  கடந்து மேல் மிதந்து நின்றார்.
119
   
வானவில் பற்றிய செய்தி
 
1384“அணி வளர் ஆருமேனி
  ஆகிய நாட்டில் அங்கண்
மணி வளர் குன்றத்து உச்சி
  வதிந்த பாறு இழிந்த வேலை,
பிணி வளர் இன்ன தன்மை
  பின்னர் பெயாது ஆணையாக,
பணி வளர் வான் வில், பெய்கால்,
  பரப்புவல்“ என்றான் நாதன்.
120
   
வானவன்இக்கருணையின்வடிவே நீதியின்இறைவன்எனல்
 
1385“சோதியின் வடிவாய், ஞானம்
  தொடர் குணத்து எஞ்சான், கோப
வீதியின் வடிவாய் நீத்தம்
  விட்டு, உலகு அஞ்சி எஞ்சி
நீதியின் வடிவாய் நின்ற
  நிமலனே, கருணை பூத்த
சாதியின் வடிவாய் இங்கண்
  தனயன் ஆம் இவன்தான்“ என்றான்.
121
   
மரியாள்தேவ மகனைப்பாடத்தொடங்குதல்
 
1386பொன் கலத்து ஏந்தித் தந்த
  பொழி அமுது அனைய, வானோன்
சொல் கலத்து ஏந்து இக் காதை
  தூற்றிய இருவர், உள்ளம்
தன் கலத்து ஏந்தும் இன்பம்
  சால்பினால், அன்னை தன் கை
எல் கலத்து ஏந்து தேவ
  இளவலைப் பாடினாளே:
122
   
மரியாளின் துதிமொழிகள்
 
1387மருள் தரு மறு அற, மழை தரு மடிவு அற
அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை!
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின்
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும்.
123
   
 
1388“சின வழி தெரிகு இல, தயை வழி தெரிகு இல,
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை!
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின்
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும்.
124
   
 
1389“மெலி உலகு அழிவு உற, வெருஇட வெகுளினை.
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை!
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின்
வலி உலகு உணர்வு உற மலர் அடி தொழுதும்.“
125
   
மரியும்சூசையும் ஒரு குளத்தங்கரையை அடைதல்
 
1390பாண் நெறி பலவையும் பகர்ந்து, உவப்பு எழீஇ,
கோள் நெறி ஒளி முகக் குழவி ஏந்தினர்,
சேண் நெறி கடந்து போய், தெளிந்த வாவியைக்
காண் நெறி எய்தி, அக் கரையின் அண்மினார்.
126
   
சாம்பல்மேடு கண்ட சூசை வினாதல்
 
1391புல் அம் கரை வதிந்தனர், புடை அகன்றது ஓர்
நிலம், கரை இலாது, ஒரு நிழல் இலாது, நீறு
இலங்கு அரை உயர் மலை எனக் கண்டு, உம்பரை
அலம் கரை வாகையான் அழைத்து, “அஃது ஏது“என்றான்.
127
   
மிக்கயேல் சோதுமநாட்டு ஐந்து ஊர்அழிந்த
செய்தியைக்கூறத் தொடங்குதல்
 
1392இன்னவை மிக்கயேல் இறைஞ்சிக் கேட்டு, அவண்
பல் நவை மிடைந்த ஐம்புரத்தில் பண்டு நாள்
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று,
“அன்னவை கேண்மின்“என்று அணுகி, கூறினான்:
128
   
பாவமலிந்த சோதுமநாடு அக்கினிக்கு இரையாதல்
அக்கினி மழை பொழியக்காரணம்
 
1393“கான் ஊறு நேமி காணாது மூடு
  காவாத வாறு கழிவு ஆய்,
நானூறும் ஆக நால் மூன்றும் ஆக
  நால் ஆண்டும் ஆகி, நவை ஆர்
ஊன் ஊறு, சோதுமத்தாரது ஐந்தும்
  ஊர் உற்ற, பாவம் ஒழிய,
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக
  வான் வாரினான் இம் மகனே.
129
   
ஐந்து ஊர்களை அக்கினி மழை எரித்தல்
 
1394“மறை ஒன்று இலாது, தவம் ஒன்று இலாது
  மருள்கின்ற சீலம் மடிய,
நிறை ஒன்று இலாது, நிரை ஒன்று இலாது
  நெகிழ்கின்ற நீதி அகல,
முறை ஒன்று இலாது, வரைவு ஒன்று இலாது
  முறிகின்ற காமம் முதிர,
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு
  திளைகின்ற தீயின் இரை ஆம்.
130
   
 
1395“முடி கோடி கோடி கதிர் காலும் ஏக முதல் ஏவல் ஆகி, அசனி
இடி கோடி கோடி எரியோடு வீழ, எதிர் ஓதை சீற, எரி வான்
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே,
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய.
131
   
 
1396“புரி வாய் பிளந்த இறையோன் உடன்று
  புரி சாபம் என்று, கடிதே
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த
  இடி ஏறு அதிர்ந்து படலான்,
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த
  முடி மாடம் எங்கும் முரிய,
விரி வாய் பிளந்த முகில் காலும் அங்கி
  விளியாது எரிந்து பொழிய,
132
   
தீமழையோடு காமம் முதலாம் தீவும்கலந்து பரத்தல்
 
1397“பட்டு ஈயும் எங்கும் எழ ஓதை,
  பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ,
விண் தீயும், எங்கும் இழி காமம் முற்றி
  விளை சோதுமத்தர் விரகத்து
உள் தீயும், எங்கும் வெருவோடும்
  உற்ற உள வேகம் முற்றி உருகும்
கண் தீயும் எங்கும் விரவே கலந்து,
  கடி மாகம் மொய்ப்ப எழுமே.
133
   
அனைவரும் மடிதல்
 
1398“மேகங்கள் வேக, இடு மீன்கள் வேக,
  இடி ஏறு வேக, மிளிரும்
மாகங்கள் வேக, ஒளி வேந்தன் வேக
  மனம் அஞ்சி மேகம் மறைய,
ஆகங்கள் வேக, விழி கண்கள் வேக
  அறை நாவும் வேக, அலை கொள்
வேகங்கள் வேக, நதி வேக, வேக
  வெரு ஆக வேலை அகல.
134
   
 
1399“நாலோடு நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய,
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு
ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர்,
மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார்.
135
   
 
1400“வீழ்ந்து ஆரும் ஏறு, படுவாரும் உண்டு;
  வெருவு ஆகம் உண்டு, மனையின்
தாழ்ந்து, ஆரும் ஆவி விடுவாரும் உண்டு;
  தழல் மாடம் உண்டு தகர,
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு;
  வயின் யாவும் உண்டு, வடியாச்
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு;
  சுடு மாரி உண்டது இலை யார்?
136
   
 
1401“விரகம் கொள் தீய மிறை யாவும் வேக,
  விரி நீதி தூண்டும் விளியா
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி
  நனியாக விட்ட இவனே,
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம்,
  உரு ஆகி, மாறு கருணைச்
சிரகம் கொள் தூய முகிலாக, இன்று,
  திரி நாதன்“ என்று தொழுதான்.
137
   
வானவர் திருக்குழந்தையைத்துதித்தல்
 
1402மெய்ந் நூல் திறத்துள், இவை யாவும், இன்பம்
  மிக உம்பர் கேட்டு, விரிவாய்,
கைந் நூல் திறத்து நிகராத மாலை,
  கடிது ஆக, வாச மலரை
இந்நூல் திறத்து வடிவாக வீக்கி,
  அடிமேல் இறைஞ்சி, அணிய
எந்நூல் திறத்தும் இணையாத ஆசி
  இனிது அன்று பாடி இடுவார்.
138
   
 
1403“மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி,
  மாற்றாரை ஆற்ற மனு ஆய்,
ஏற்றாரை ஏற்ற அடு காலம் நீக்கி,
  ஏற்றாரை ஏற்ற இழிந்தே,
தேற்றாரை ஆற்ற அழுது, ஆவி வாழ்தல்
  தேற்றாரை உய்ப்ப மடிவாய்;
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து, யார் உன்
  அரு வீர ஆண்மை அறிவார்?
139
   
 
1404“ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும்,
  ஒரு மூவர் என்று பெயர் ஆய்,
குரு ஆகி வந்து, தணவாது அகன்று
  குறுகாதும் எங்கும் உளன் ஆய்,
பொருள் ஆதி என்று பொருள் தோறும் நின்று,
  பொருள் தோறு அழிந்து சிதையாய்.
அரு ஆகி நின்றும் உருவோய், யார் உன்
  அரு வீர ஆண்மை அறிவார்?
140
   
 
1405“வினை ஒன்றும் இன்றி, வினை செய்து,
  செய்த வினை தன்னில் ஒன்றும் விழையாய்;
நினைவு ஒன்றும் இன்றி, மறவு ஒன்றும் இன்றி
  நிகிலம் தெரிந்த நிலவு ஆய்,
முனைவு ஒன்றும் இன்றி முனிவாய்; முனிந்தும்
  முதிர்கின்ற அன்பு முயல்வாய்;
அனை ஒன்றும் இன்றி உயர்வோய், யார் உன்
  அரு வீர ஆண்மை அறிவார்?
141
   
கதிரவன் மறைதல்
 
1406தேன் ஆர்ந்த நறும் பாகில்,
  தெள் அமுதில் தீம் சொல்லால்,
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ்,
  விழைந்து இளவல் துதி பாட,
கான் ஆர்ந்த மலர் வாவி
  கடிந்து அன்னார் நெடு நெறி போய்,
வான் ஆர்ந்த கதிர் சாய்ந்து
  வாருதி நீர் ஒளித்ததுவே.
1
   
சோர்தான்நதிக்கரையிலுள்ள ஒரு சோலையை அடைதல்
 
1407நீர் ஒளித்த சுடர் எழு முன், நின்று எழுந்த நிறை நீரார்,
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி, துயர்க்கு எஞ்சா,
கார் ஒளித்த மின்கள் எனக் கடுகிப் போய், நெடு நெறியின்
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே.
2
   
 
1408முளைத்து எழுந்த முழு மதி போல்
  அரச அன்னம் முதிர் தூவி
வளைத்து எழுந்த குடை விரிப்ப,
  வான் உச்சிச்செஞ் சுடரோன்
திளைத்து எழுந்த கதிர் வீசி,
  தேன் துளித்த பூஞ்சினைகள்
விளைத்து எழுந்த மலர்ச் சோலை
  மிடைந்து அடைந்தார் வினை வென்றார்.
3
   
 
1409நீர் தவழும் செந் தீயோ, நில மகள் தன் துவர் வாயோ,
கார் தவழும் மின் இனமோ, கமல மலர்த் தடம் ஒரு பால்,
வார் தவழும் புவிச் சிலம்போ, மணி வரன்றி ஒலித்து ஓடிப்
பார் தவழும் யாறு ஒரு பால் பணிக் கை போல் தழுவினவே.
4
   
இறைவனின்ஆண்மைக்கு ஒரு வரலாறு கூறுமாறு சூசை கேட்டல்
 
1410அத் தலையார் அந் நிழல் கா
  அகட்டு உறைந்தார், மாதவனும்,
“மைத்து அலை ஆர் முகில் உலகின்
  வான் உலகின் மேல் உயர்ந்தோன்,
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி,
  முற்று எளியன் உருக் கொண்டான்;
இத் தலையான் ஆண்மையை, வான்
  எய்தினரே, சொல்மின்“ என்றான்.
5
   
மிக்காயேல்கூறத்தொடங்குதல்
 
1411செய்ப் பட்ட வானவரும்
  திற முனி சொல் கேட்டு உவந்து,
மெய்ப் பட்ட மறை முதலோன்
  மெல் அடியைப் பணிந்து ஏற்றி,
கைப் பட்ட படை வீரர்
  களத்திடை முன் இவன் காட்டும்
மெய்ப் பட்ட வலி காட்ட,
  மிக்கயேலே மொழி உற்றான்:
6
   
 
1412“அலை ஈன்ற முத்து என ஈங்கு
  அயர்வு உற்றோன், முன் நாளில்,
மலை ஈன்ற இம் மணிப் பூம் புனலிடத்தும்,
  மறை பகைத்த
கொலை ஈன்ற வேல் வல்லார்
  குழைந்து அற, இந் நாட்டிடத்தும்
கலை ஈன்ற சொல் கடந்து
  காட்டியவை கேண்மின்“ என்றான்:
7
   
கோசுவன் வரலாறு
கோசுவன்தலைமையில்யூதர்சோர்தானை அடைதல்
 
1413கல்லில் தீட்டி வரைந்த மறை
  கடவுள் தந்து, மலை இறங்கி,
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து
  எழு மோயிசன், செல் கதி சேர்ந்து,
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த
  வேல் சோசுவன் அக் குலத்து அரசு ஆய்,
வல்லின் தீட்டி வளர் தெய்வ
  மாட்சி காட்டும் உரு ஆனான்.
8
   
 
1414“கார் தாவு அசல மேல் மேல் பிறந்து,
  கதிர் சால் தும்மு மணி வரன்றி,
தார் தாவு என்னச் சூழ் தயங்கி,
  தண் தாது அலரில் தவழ்ந்து உலவி,
சீர் தாவு இந் நாட்டிடைப் பரந்து,
  செல்வாய் எல்லாம் திருச் செலுத்தும்
சோர்தான் என்னும் இந் நதியைத்
  துன்னி யூதர் எய்தினரே.
9
   
பத்துக்கட்டளைப் பலகையை ஏந்திய
யூதர்களுக்குச் சோர்தான்வழியிடல்
 
1415“தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த
  செல்லே மின்னித் திரண்டு ஆர்த்து,
கண் அம் குன்றத்து உயர் நெற்றி
  களிப்பப் பொழிந்த வெள்ளமொடு,
தண் அம் கந்த மலர் முல்லைத்
  தடத்தில் பெருகி, அந் நாளில்,
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க,
  வரைவு அற்று ஒழுகும் மா நதியே.
10
   
 
1416“கரை மேல் திரண்ட யூதர் கொணர்,
  கதி நூல் பேழை சேர்ந்தனகால்,
நிரை மேல், கீழ் நின்றன திரைகள்
  நெறி போய் ஓட, மேல் வரு நீர்த்
திரை மேல் திரை நின்று, அதிசயித்த
  சீர் போல், அடுக்கி நின்று இனிதாய்ப்
புரை மேல் களித்த யூதர் எல்லாம்
  போய் அக் கரை சேர்ந்து எய்தினரே.
11
   
 
1417“இவ்வாறு அவ் ஆறு அவர் கடந்த
  எல்வை, எவரும் உள் வியப்ப,
செவ் ஆறு அடிகள் தம் பொறி போல்
  சிதறாது ஒதுங்கி நின்ற திரை,
ஒவ்வா மறையைத் தொழும் தன்மைத்து,
  உவந்து ஒல்லென வீழ்ந்து, உலகு அறிய
அவ் ஆறு உற்றது உரைத்து என்ன,
  அதிர முழங்கி ஓடினவே.
12
   
எரிக்கோ நகரை அழிக்கச்சோசுவன்கட்டளையிடல்
 
1418“அமிர்தம் பாய்ந்து, மதுப்பாய்ந்து, ஆர்
  அன்னம் பாய்ந்த வயல் கடந்து,
துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து
  துள்ளும் கமலத் தடம் நீக்கி,
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த
  செழும் பூஞ் சோலை புடை மருவ,
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த
  நேரார் வைகும் நகர் கண்டார்.
13
   
 
1419“செல்லே வரையைத் தழுவுதலோ,
  செல்லைத் தாங்கும் வரை தானோ,
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர்
  ஏந்தும் கன்னி அம் புரிசை,
வல்லே வளர் வேல் யூதர் எலாம்
  மகிழக் கண்டு ஆர்த்து, அம்பு விசை
ஒல்லே வெல்லப் போயின போது,
  உரை உற்று அறைந்தான் சோசுவனே:
14
   
 
1420“செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப,
  செல்லச் செல்லும் எல்லை செலும்
வெல்வேம் வெல்லும் வல்லமையோ,
  வீர வில்லில் மாரியினோடு
எல் வேல் வல்லது அல்லது என,
  இறைவன் தான் தன் வலி காட்ட,
கொல் வேல் இல்லாது, இந் நகரைக்
  குலையச் சிதைத்தல் காண்மின்!“ என்றான்.
15
   
யூதர்எழுமுறை நகர்வலம்வந்து பகைவரை வெல்லுதல்
 
1421“ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து,
  இறைவன் பணியால், மறைப் பேழை
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து, ஒரு சொல்
  விளம்பா, வெல் வேல் ஏந்தி விரைந்து,
ஆறா அழல் பெய் அரி அன்னார்,
  ஆறு நாளைக்கு ஒரு காலை
மாறா வரவே, மருண்டு ஒன்னார்,
  மனம் உள் பதைப்ப வியப்பு உற்றார்.
16
   
 
1422“கோள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றைக்
  காணக் குணக்கில் எழ, ஏழாம்
நாள்உற்று, ‘அம்பின் கடிது ஓடி,
  நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து,
வாள் உற்று, எவரும் வான் அதிர
  வாய் விட்டு ஆர்த்து வருக,‘ என,
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும்
  சோசுவன் தான், பணித்திட்டான்.
17
   
 
1423“ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றார்
  அன்றே ஏழாம் முறை வர, கார்
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர
  இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே
பார்த்தார் ஒன்னார் பதைத்து அஞ்சப்
  பாய்ந்தார் யூதர் வாள் பசியைத்
தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம்
  சிறந்த வெற்றி நலம் கொண்டார்.
18
   
எரிக்கோ நகரத்தாரும்காபன நாட்டாரும்சோசுவனை
அடைக்கலம் புகுதல்
 
1424பொருவு அற்ற விதத்து உயர் பொற்ப நகர்,
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா
வெரு உற்ற வியப்பில், ஒருங்கு எவரும்
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே.
19
   
 
1425விண் காவலன் ஆர் மிடல் அஞ்சினராய்,
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய்,
தண் காவில், அடைக்கலமே தா என்று,
ஒண் காபன நாடர், ஒடுங்கினர் ஆல்.
20