சேதையோன் வெற்றிப் படலம்
 
மூவரம்களரிமாபுரம்எனும்ஊர்ப்புறமுள்ள மண்டபத்தில்நிற்றல்
 
1593கிணை நிலை முரசம் ஆர்ப்ப,
  கீத யாழ் தெளிப்ப, வேளில்
பிணை நிலைக் கரிகள் சீற,
  பிரி நிலைக் கறவை ஏங்க,
பணை நிலைப் புரவி ஆல,
  படர் ஒலிக் களரி மூது ஊர்த்
திணை நிலைப் புறத்தில் அன்னார்
  சிறந்த மண்டபத்தில் நின்றார்.
1
   
திங்களின் தோற்றம்
 
1594தாள் உறு வருத்தம் ஓம்பி,
  தலை விரி கதலி முற்றி
நீள் உறு கனிகள் மாந்தி
  நெடும் பசிப் பரிவும் ஆற்றி,
வாள் உறு கதிரால் எங்கும்
  மல்கிய இருளைப் போழ்ந்து,
கோள் உறு திங்கள், வான் மேல்
  குளிர் முகம் காட்டிற்று அன்றே.
2
   
காளமும் தீபமும் ஏந்திய பொற்பாவையைக்
கண்ட சூசை, யாதென வினவல்
 
1595கோள் கடைந்து அழுத்தினாற் போல்
  கொழு மணி அழுத்தி வைத்த
தாள் கடைந்து அழுத்திப் பைம் பொன்,
  தவழ் கதிர்ப் பவளத் தூணில்,
வாள் கடைந்து அருந்தினால்
  போல் மதி சொரி பசும் பால் கற்றை
பீள் கடைந்து அழுத்தி, பாயும்
  பெருங் கதிர் சூசை கண்டான்.
3
   
 
1596மணி நிலைப் புரத்தின் வாயில்,
  மணிக் கதிர்த் தூணும் நிற்ப,
அணி நிலைப் பவளத் தூண் மேல்
  அவிர் மணிப் பாவை நின்று,
பணி நிலைப் பசும் பொற் காளம்,
  பதி மணித் தீபமோடு,
துணி நிலைப் பசும் பூங் காந்தள்
  துணைக் கையில் தாங்கக் கண்டான்.
4
   
 
1597கதிர் எழும் உருவின் நின்
  கபிரியேல் தன்னை நோக்கி,
“பொதிர் எழும் பவளத் தூண் மேல்,
  பொன் மணித் தீபம் காளம்,
எதிர் எழும் அணி பொற் பாவை,
  ஏந்தியது உரைமோ“ என்ன,
பிதிர் எழும் கதிரின் வானோன்
  பிழி மொழி பிலிற்றிச் சொல்வான்.
5
   
சேதையோன் செய்த போரைக் குறிப்பது இது என வானவர் கூறல்
 
1598வான் முழுது இறைஞ்சு நாயகன்
  வலிமையின் உருவமாக,
தேன் முழுது உமிழ் பூந் தண் தார்ச்
  சேதையோன், மறை பகைத்த
ஊன் முழுது உடன்ற வேலார்
  ஒருங்கு அழிந்து அற வெம் போரில்
வேல் முழுது இல, கைக் கொண்ட
  விளக்கும் காளமும் இது“ என்றான்.
6
   
சேதையோன் போர் வரலாரை சூசை கேட்டல்
 
1599வான் சுவைத் தகவின் தேவ
  வாழ்த்து இரு செவியின் வாயால்
தான் சுவைத்து அல்லது, அல்லல்
  தரும் பசி ஆற்றா நீரான்,
“ஊன் சுவைத்து உடன்ற போரில்
  உற்றது சொன்மின்“ என்ன,
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால்
  செப்புதல் உற்றான் வானோன்:
7
   
வானவன், கபிரியேல், வரலாறு கூறுதல்
 
1600“சொல் வழங்கிய தகுதியால், சுருதி நூல் வழங்க,
செல் வழங்கிய துளியினும் கொடையொடு, சினந்த
வில் வழங்கிய விசய மா சோசுவன் வென்ற,
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே.
8
   
சேதையோனால் வெல்லப்பட்ட அரசர்கள்
 
1601“சாரன், ஆப்பகன், தாப்புவன், பெத்திலன், தாபிர்,
தோரன், யாக்கனன், சுடர் முடி இலேபுவன், எரிக்கோன்,
தேரிசானொடு, தேனகன், காசரன், உபரன்,
ஏரிமான் அவன், ஏருசலன், எரிதன், எரிமான்,
9
   
 
1602“ஏதில் ஏபிரன், இலக்கனன், எகிலன், சிமோரன்,
காதன், ஆயரன், கலகலன், காதரன், உதுலன்,
மாதன், ஆசுரன், மச்சதன், அக்கிசன், மகத்தன்
ஓது பேர் உள முப்பதோர் அரசர் வென்று ஒழித்தான்.
10
   
யூதர்கள் தாழ்வுரக் காரணம்
 
1603“ஒழிந்த மாற்றலர் உறைந்த
  பல் உழித் தொறும் உறைந்து ஆண்டு,
இழிந்த மாரியின் இருந் திரு
  யூதர்கள் பின் நாள்
விழிந்த தேவரை மேவலின்,
  அறமொடு விரதம்
அழிந்த பான்மையால், அடல்
  அழிந்து ஒளி அழிந்து அழிந்தார்.
11
   
 
1604“அறம் அகற்றினார்; அறப் பயத்து ஆண்டவன் அளித்த
திறம் அகற்றினார்; சிதைவு உற அறிவு உறீஇ, கொடிய
மறம் அகற்றினார், வணங்கிய இறைவனும் சிறுமை
புறம் அகற்றினான், பொருவு இல வலித் திறம் விளங்க.
12
   
இறைவன் யூதர் சிறுமையை நீக்க,
உழவனாகிய சேதையொனைத் தெரிதல்
 
1605“ஆளும் கோன் இல, அடல் படை வீரரும் இல, எந்
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து, இறை பிறர்க்கு
நீளும் கோடணை நிந்தையோடு அழிவு உடைக் குலத்தோர்
மீளும் கோது அறு மிடலினோன் உழுநனைத் தெரிந்தான்.
13
   
 
1606“ஓதை ஓங்கிய களத்து நெல் தெளித்து எடுத்து உறைந்த
சேதையோனிடைச் சென்ற வான் தூது, ‘உமைப் பகைத்த
கோதை வேலினர்க் கொல்ல வெம் போர் அமைக‘ என இப்
பேதையோ பகை பெயர்த்து அட“ என அயிர்ப்பு உற்றான்.
14
   
சேதையோன் படை கூட்டல்
 
1607“அரிய ஓர் தொழில் ஆண்டவன் ஏவிய காலை,
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால், ஊக்கம்
புரிய, ஓர் மதப் புகர் முகம் என எழுந்து ஐயம்
பரிய, ஓர் குலப் படை முகம் பண்ணுக‘ என்றான்.
15
   
 
1608“வேல் முகந்து இவர் வெஞ் சமர்க்கு அமைகுவர் என்னா,
மீன் முகந்து ஒளி விரி மணி முடிப் பல அரசர்,
ஊன் முகந்த கோட்டு உவாப் பரி தேர் பல பண்ணி,
நால் முகம் தகு ஞாலமும் நெளி தரத் திரண்டார்.
16
   
மதியான் அமலேக்கு முதலான அரசர்கள்
யூதரை ஒடுக்கத் திரள்தல்
 
1609“துதியால் நிகரா வலியான், சுடும் ஏறு வில்லான்,
திதி யாவும் எரிந்து கெடத் தழல் திக்கு கண்ணான்,
மதியான் எனும் மா பெயரான், வரையாத எண்ணில்
பதியாத படைக் கடல் பண்ணி, அதிர்ந்து எதிர்த்தான்.
17
   
 
1610“மலை ஈன்ற மணிப் புயம், மா புலி ஈன்ற மார்பம்,
கொலை ஈன்ற கரம், கொடிது ஈன்ற அழல் கொடுங் கண்
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து
அலை ஈன்ற படைத் திரளோடு அமலேக்கு எதிர்த்தான்.
18
   
 
1611“வாளித் திரள் ஓங்கிய தூணி வளர்ந்த தோளார்
கூளித் திரளோ, அடு கூற்றது தோழர் கொல்லோ,
யாளித் திரளோ, அவிர் கீழ்த் திசை யாவும் ஆளும்
ஓளித் திரளோரும் ஒருங்கு திரண்டு உடன்றார்.
19
   
பகைவரின் படை, வெள்ளமென திரள்தல்
 
1612“தாமக் கவின் இம் முடியாரொடு சாய்ந்த காலைத்
தூமக் கண் எரித்து அன தானைகளோ, துளித்த
காமக் கடம் ஆர் கரியோ, பரியோ, கவின் கொள்
சேமக் கடி தேர்த் திரளோ எவர் செப்ப வல்லார்?
20
   
 
1613“கரி ஏகுக, ஏகு இல கால் கடல் தானை; காலாள்
வரி ஏகுக, ஏகு இல வாய்ந்து எழு தேர்; தடம் தேர்க்
கிரி ஏகுக, ஏகு இல கேழ் கிளி வாசி; பாயும்
பரி ஏகுக, ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ
21
   
 
1614“நாட்டம் கண் இமைப்பின், நடிப்பு நடத்து பாய் மாக்
கூட்டம் கதி கொண்ட குரத் துகள், கோ விசும்பின்
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா, மதம் முற்று யானை
ஈட்டம் கட மாரி வழங்க, முன் ஏக விட்டார்.
22
   
 
1615“கார் வென்றன போர் முரசு ஆர்ப்பு ஒலி; காள கார் பெய்
நீர் வென்றன தோல் மத நீர்; உகள் என்னில், அச் சொல்
சீர் வென்றன பாய் பரி மா; திசை யாங்கணும் பல்
போர் வென்றன, பொன் பொறை வென்ற புயத்து வீரர்.
23
   
சேதையைன் படைத் திரட்டல்
 
1616“கண் தாவிய தீக் கனல்
  இக் கடல் தானை செல்ல,
விட்டு ஆவி விழுங்கு அயில்
  வேல் உடைச் சேதையோன், தன்
உள் தாவிய தே அருள்
  ஊக்கமொடு ஓங்கி, ஓர் நான்கு
எட்டாயிரம் சேவகரைக் கடிது
  ஈட்டினான் ஆல்.
24
   
கடவுள் கட்டளைப்படி சேதையோன வீரரைத் தேர்ந்த்தெடுத்தல்
 
1617“கவி மதத்து உயர் வலிக் கடவுள், கண்டு உளி,
குவி மதத்து இபம் முதல் கொலைப் படைக் கடல்,
செவி மதத்து உரு உறச் சிதைத்து நான் வெல,
சவி மதத்து எழுந்த இத்தானை வேண்டுமோ?
25
   
 
1618“சுட்ட அழல் சமர்க்கு உளம் துவள அஞ்சுவார்
விட்டு, அழல் சினம் முதிர் வீரர் நிற்ப‘ என்று
இட்டு, அழல் கதத்து எழுந்து, ஈர் ஐயாயிரம்
கண் தழல் திறலினோர், கனி நின்றார் அரோ.
26
   
 
1619“வாகை மிக்கு, ஒளி எனக்கு ஆக, மற்று நாள்
வேகம் மிக்கு உறீஇ, பகல் வேலை, ஆற்றிடை‘
தாகம் மிக்கு, அக்கனின் தன்மை நீர் உண்பார்
போக, மிக்கு அள்ளி உண் பொருநர்ச் சேர்க்க‘ என்றான்.
27
   
 
1620“நீர் முகந்து உண்ட முந்நூறு நின்ற பின்,
பார் முகம் தொழும் பிரான் பார்த்து, ‘நும் பகைப்
போர் முகம் தகும் செயம், இனி, பொலிந்த என்
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம்‘ என்றான்.
28
   
இறைவன் பகைவரிடையில் யூதரை அனுப்பிய முறை
 
1621“வவ்வு ஒரு வேல் இல, மாங்குல் நாப்பணில்,
கவ்வு ஒரு காளம், மண் கலம், விளக்கு இவை,
ஒவ்வொருவற்கு, இடுக‘ என உரைத்தனன்,
செவ் ஒரு திருவிளையாட்டுத் தேவனே.
29
   
 
1622“செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின், ‘செயல்
நும் முகம் தரும்,‘ என, நூறு நூறுமாய்
மும் முகம் பிரித்து, மூன்று இட்டு, மொய்ப் பகை
அம் முகம் வாய் விடாது அணுகினார் அரோ.
30
   
சேதையோன் படைப் புகுந்த போர்க்களம்
 
1623“எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை,
  இவர் எழுந்து, அரவம் இல உறீஇ.
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து, பிசை
  கவழுகின்ற பல கலமொடு,
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி
  புவி மறைந்த நிசி நடு, வலி
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி
  முறை பணிந்த சமர் முயல்குவார்.
31
   
 
1624“வீறு வீரன் இயை தாழி நூறி இடு
  வேலை, வேகமுடன் நூறொடு
நூறு நூறு கலம் நூறி, நூறுமொடு
  நூறு நூறு சுடர் தோன்ற, நூறு
ஏறு நூறுமொடு நூறு தாரை ஒலி
  ஈறு இலாதும் எழ, வானின் மேல்
சீறும் ஏறு பல கோடி கோடி அதிர்
  சீரின் நாலு திசை கூசவே.
32
   
பகைவர் வி.ழிந்துத் தம்முப் பொருது அழிதல்
 
1625“கனவு உடைந்த மருள், இரவு அடர்ந்த இருள்,
  கலம் உடைந்த ஒலி, சுடர் இடும்
வினவு உடைந்த ஒளி, மலி மலிந்த ஒலி,
  வெரு இயன்ற இவை மருளி, வெம்
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை
  வய முழங்கி, வளர் முகில் இடி
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர்
  பரி இனங்கள் உயர் ஏறினார்.
33
   
 
1626“மருள் முதிர்ந்த வெருவொடு, வளைந்த வினை
  வடு வளர்ந்த பொழுது அது என,
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என,
  செரு முதிர்ந்த பகையவர், தமை,
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சின
  மொடு துமிந்து கொலை இட இட,
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய
  அடல் விளங்க, அரிது அமர் செய்தார்.
34
   
 
1627“இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என,
  இழி முதிர்ந்த மத கரி பொர,
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு
  முனை இணைந்து இரதம் முனை செய,
கடி எழுந்த திரை எறி சினந்த கடல்
  என, எதிர்ந்த கதி இவுளிகள்
துடி எழுந்த பறை ஒலி முழங்க, அமர்
  தொடர் உடன்ற கொலை அளவதோ?
35
   
 
1628“பறை முழங்க, மத கரி முழங்க, வய
  பரி முழங்க, விடு பகழிகள்
உறை முழங்க, அவரவர் முழங்க, இகல்
  உழவர் என்று தமர் ஒழி தர,
நிறை நக்ந்த மது வெறி முதிர்ந்த நெறி
  யிலர் உடன்ற அமர் நிகர் என,
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர்
  பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ?
36
   
 
1629“வண்டு பட்டன, இபங்கள் பட்டன;
  அயங்கள் பட்டன வளர்ந்த தேர்
துண்டு பட்டன, கரங்கள் பட்டன,
  துமிந்து பட்டன பதங்கள், திண்
தண்டு பட்டன, சிரங்கள் பட்டன,
  சடங்கள் பட்டன, தடிந்த வாள்
கொண்டு பட்டனர் குணுங்கர், பட்டன,
  குணுங்கு பட்டில நயங்களே.
37
   
 
1630“உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய
  உகிர் உடன்ற வரி எனவும், முள்
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர்
  கனல் உடன்ற கதம் எனவும், எமன்
மழை நிகர்ந்த கணை, கனை மலிந்த வசி,
  வசி முனிந்த அயில் நுழை இடும்
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல்
  புறம் மறைந்த மருள் இரணமே.
38
   
பகைவரின் இருபடைத் தலைவரும் தம்முட்பொருது அழிதல்
 
1631“முருடொடு முரசம் ஆதி முனிந்த பல் பறைகள் ஆர்ப்ப,
இருள் தொடு நிசியில், ஆதி இறைவனைப் பகைத்த பாலால்,
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார்.
39
   
மிதயானும் அமலேக்கும் போர் புரிதல்
 
1632“கூன் பிறை எயிற்று மா போல்,
  கொற்றவர் இருவர், தம்மைத்
தேன் பிறழ் அலங்கல் மார்பின்
  சேதையோன் என்ன எண்ணி,
வான் பிறை உறழ் வில் வாங்கி,
  மறம் கொடு மயங்கி, தம் மேல்
ஊன் பிறழ் பகழி மாரி உதிர்த்து,
  அரிது அமரின் நேர்ந்தார்.
40
   
 
1633“கடு உண்ட எண் இல் பல்லம்
  கதம் உண்ட அமலேக்கு எய்தான்;
கடு உண்ட எண் இல் பல்லம்
  கான்று அவை மதியான் காத்தான்.
வடு உண்ட பிறையின் வாளி
  மறம் உண்ட மதியான் கோர்த்தான்;
வடு உண்ட பிறையின் வாளி
  வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான்.
41
   
 
1634“பொறிப் படப் பகழி மாரி
  போக்கினான் அமலேக்கு; அற்றை,
பொறிப் படப் பகழி மாரி
  புகுத்திய மதியான் தீர்த்தான்,
கறிப் படப் பகு வாய்ப் புங்கம்
  கதத்துடன் இவனும் ஏவ,
கறிப் படப் பகு வாய்ப் புங்கம்
  கடைத்து அவை அவனும் காத்தான்.
42
   
 
1635நச்சு அரவு ஒக்கும் வாளி
  நடுக்குற மதியான் தூவ,
நச்சு அரவு ஒக்கும் வாளி
  நவிழ்த்து அவை விலக்கி, மீட்டு
முச் சிரம் மொய்க்கும் வாளி
  முடுக்கினான், அமலேக்கு. அற்றை,
முச் சிரம் மொய்க்கும் வாளி
  முனிந்து விட்டு அறுத்தான் முன்பான்.
43
   
 
1636“ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடந் தேர் ஓடி,
பேர் இரு அசனி ஒத்தார், பெருஞ் சினத்து உடற்றி ஆர்ப்ப,
நேர் இரு வய வில் கோலி, நேர் அலால், தமில் தாழ்வு இன்றி
ஈர் இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும் பாலோ?
44
   
இருவர் தம் தேர்ப்பாகரும் மடிதல்
 
1637“பை மணித் தேரின் சித்தி
  பகழியால் அமலேக்கு ஈர்ந்தான்,
மை மணித் தேரின் சித்தி வாளியால்
  மதியான் அற்றான்,
செய் மணிந் தேரின் சாரன்
  சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான்,
ஐ மணித் தேரின் சாரன் அகலம்
  அற்று அவனும் மாய்த்தான்.
45
   
 
1638“சாரர் சார்பு இழந்த வாசி, தழல் படத் தவறித் தாவ.
தேரர் தேர் உளத்தின் சீறி, சீயமும் உருமும் தீயும்
நேரர், நேரலர் இலாதும், நெடு மருள் அறாதும், வீரப்
போரர், போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே.
46
   
இருவர் தேர்மேல் நின்று கடும் போர் புரிதல்
 
1639எரிக்கு ஒன்றும் சினக் கண் சேப்ப,
  இரைத்த வில் குனிய வாங்கி,
கரிக்கு ஒன்றும் கதத்த வீரர்
  கடுத்து, இளம் பிறையின் வாளி
பரிக்கு ஒன்றும் ஒன்ற ஏவி,
  பகப் படு பரிகள் வீழ்க
அரிக்கு ஒன்றும் சீற்றத்து ஒண் தேர்
  அசல மேல் இருவர் காய்ந்தார்.
47
   
 
1640“நிலை உண்ட தேரில் செந் தீ
  நிலை உண்ட மதியான் சீறி,
சிலை உண்ட பகழி போக்கி,
  திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான்
மலை உண்ட கவசம் ஈர்ந்தான்,
  மறம் உண்ட விழித் தீயோடு
கொலை உண்ட கணை ஒன்று ஏவும்
  கூற்று உண்ட அமலேக்கு என்பான்.
48
   
 
1641“வேல் நிகர் வடி வை வாளி
  வில்லிடை அவன் கோர்த்து எய்ய,
வான் நிகர் விலங்கல் தன்னை
  வான் உரும் அறுத்தாற் போல,
தோல் நிகர் அமலேக்கு ஆகம்
  துளைத்த கோல் உருவி, அப்பால்
கால் நிகர் மூடர்க்கு ஓதும்
  கலை எனப் போயிற்று அன்றே.
49
   
மதியானும் அமலேக்கும் மாய்தல்
 
1642“தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி,
  தன் உயிர் உயிர்க்கும் வேலை,
சினம் பழுத்து உயிரைத் தாங்கி,
  திங்களின் பாதி கோர்த்து,
கனம் பழுத்து இழி ஏறு ஒத்த
  கணையொடும் உயிரும் போக்கி
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி
  வலித்து அறுத்து, இருவர் மாய்ந்தார்.
50
   
போரில் மாய்ந்தவரும் மீந்தவரும்
 
1643“மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு, வீரர் ஓர் நூறு
ஆயிரரோடு நால் ஐயாயிரர் அன்றி, அங்கண்
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ ஐ-
யாயிரர் இன்னும் நிற்ப, அவிர் சிகன் முளைத்தது அன்றே.
51
   
எங்சியோர் வெருவி ஓடுதல்
 
1644“மண் மா மகள் போர்த்த
  இருளின் போர்வை வாங்கிட, தன்
ஒண் மா ஒளிக் கரத்தை நீட்டி
  வெய்யோன் உதித்தன கால்,
கண் மா இருள் கொண்ட மயக்கம்
  தீர்ந்த கடும் பகைவர்,
விண் மா இறையோன் தன்
  வலிமை கண்டு வெரு உற்றார்.
52
   
 
1645“தீ வை வேல் ஆடா வெருவி ஏங்கித் திறம் குழைந்து அம்
மூ ஐயாயிரரும் ஓட, யூதர் முடுகி, அவர்
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார், வியந்து எவரும்
நா ஐ ஐ இரட்டி அடையா வண்ணம் நடுக்கு உறவே.
53
   
போர்க்களம் களரிமாப்புரம் ஆயிற்று எனல்
 
1646“ஏமப் போர்க் களம் இது என்ன, இவ் ஊர், ‘களரி,‘என்றார்
தாமத் தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர்
வாமப் பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா
நாமத் திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன்.
54
   
சூசை மகி.ழ்ந்து திருக்குழந்தையைப் போற்றுதல்
 
1647மாலைத் தூண் உச்சி விரித்த நீல மணிப் படத்து,
வேலைத் தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர்க் கீழ்,
பால் ஐக் கதிர் மதியம் தீபம் ஏந்த, பணித் தூண் மேல்
கால் ஐக் கடவுள் திறல் கண்ட சூசை தகவு உற்றான்.
55
   
 
1648“மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால்
  வடி உதிரத்து,
ஏற்றார் அறிந்து ஏற்ற, அரிது உன் ஆண்மை
  எழுதிய பின்,
தேற்றார் என வருந்தி, துன்பத்து, இன்று, உன்
  திரு உடலத்து
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ?“ என்று,
  அடி பணிந்தான்.
56
   
 
1649“தணியா வலித் திறத்தை உலகம்
  கண்டு தாள் துதிப்ப,
மணியால் தவழ் சுடர் செய் தூண்
  மனன் ஆர வைத்து உயர்த்தார்;
கணியா நயன் செய் உன் ஆர்வம்
  காட்டும் கம்பம் என,
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ
  என்று, அடி பணிந்தான்.
57
   
 
1650“வினை அம் கடல் நீந்தி, வழி என்று அறியார்,
  மிளிர் பைம் பொன்
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த
  மணித் தூணே,
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க,
  நறும் பைம் பூ
அனை அம் கதிர் மேனி அணிந்தாயோ?“ என்று,
  அடி தொழுதான்.
58
   
வானவர் இசைக் கேட்டு சூசை பேரின்பமுறல்
 
1651தான் ஓர் களிப் பெருக்கின்
  பலவும் சூசை சாற்றிய பின்,
வானோர் அவை கேட்ட களிப்பின்
  பொங்கி மணிப் பண் யாழ்
தேன் ஓர் இசை தளிர்ப்பத் தாமும்
  பாடி, செயிர் நீக்க
ஈனோர் உடல் கொண்டான் நெடிது
  வாழ்த்தி இசை செய்தார்.
59
   
 
1652சிறந்த திருப் புகழ் ஆர் கீதம் கேட்ட
  செழுந் தவத்தோன்,
திறந்த மணிக் கதவம் புக்கு அம் வீட்டில்
  சென்றவன் போல்,
மறந்த மெய் உருக, மங்குல் எல்லாம்,
  வழி வருத்தம்
துறந்த துயில் ஆக, தொடுத்த தேவ
  துதி விள்ளான்.
60
   
மூவரும் மண்டபத்தினின்று புறப்படுதல்
 
1653பள்ளி அம் தாமரைப் பறவை ஆர்ப்பு எழ,
தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம்,
வெள்ளி அன்று உதித்து, இருள் படத்தை மேதினி
தள்ளி அம் முகம் தர, தடம் கொண்டு ஏகினார்.
1
   
மணி போன்ற மலர்ச் சோலையில் பறவைகள் பாடுதல்
 
1654புதை ஒளிப் பவளக் கால், பொலிய நீட்டிய
ததை ஒளி மரகதப் படத்துத் தைத்து, இருள்
வதை ஒளிப் பல மணி மான, வாய் எலாம்
துதை ஒளிப் பல மலர்ச் சோலை வண்ணமே.
2
   
 
1655திறை சுமந்து அடி தொழும் தெவ்வர் போல், மது
நறை சுமந்த இணர்க் குடம் சுமந்த நாள் மலர்
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம்,
பறை சுமந்து அடித்து என, பாடும் ஓதையே.
3
   
 
1656தேன் மொழிக் கிள்ளையும், செழும் பொற் பூவையும்
பா மொழிக் கையிலும், பண்செய் தேனொடு
பூ மொழித் தும்பியும் மருளிப் பொங்கு ஒலி,
நா மொழிக் கீதம் போல் நரலப் போயினார்.
4
   
மூவரும் வழி நடத்தல்
 
1657அள் இலைக் கமல மேல் அணிச் சங்கு ஈன்ற முத்து,
ஒள் இலைக் குவளை கண் விழித்து உகுத்த தேன்
நள் இலைப் புறத்து இழீஇ நழுவ, புள் எழ,
கள் இலைக் கொழுந் தடம் கடந்து போயினார்.
5
   
 
1658நவி வரி நகுலமும், நாவிப் பிள்ளையும்
கவி வரி நிபுடமும், கானக் கோழியும்,
சவி வரி நவிரமும், களபத் தந்தியும்
குவி வரி மலைச் சரி குதிப்பப் போயினார்.
6
   
ஒரு சோலையுள் தங்கி இளைப்பாறுதல்
 
1659மட்டு இடை அலந்தையும், மலர் பெய் சோலையும்,
நட்டு இடை அணி வயல் நாடும், குன்றமும்,
நெட்டு இடை நெறிகளும் நீந்தி, கான் பொழி
மொட்டு இடை நிழல் பொழில் முழைக் கண் எய்தினார்.
7
   
 
1660நண் பகல் நெற்றி வான் நடக்கும் காலை, ஆழ்
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூஞ்சினைச்
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல்
ஒண் பகல் ஒத்து ஒளிர்ந்து உவந்து வைகினார்.
8
   
 
1661அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய,
மணி முகக் குயில் இனம் மகிழ்ந்து பாட, ஒண்
பிணி முகத்து இனம் சிறை பிரித்து அங்கு ஆடலின்,
பணி முகக் கதலி நல் பழங்கள் மாந்தினார்.
9
   
திருமகனை வாழ்த்தினார் எனல்
 
1662தேன் சினை மலர் மதுத் தின்ற வண்டு அருகு
ஆம் சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல்,
தாம் சினை மலர்த் தொடை தாளில் பெய்து, பைம்
பூஞ் சினை முகத் திருப் புதல்வன் வாழ்த்தினார்.
10
   
சூசை, ஒரு பொன்மதில் சூழ்ந்த நகரைக்கண்டு யாதெனக் கேட்டல்
 
1663நூல் நிலம் கடந்த அந் நுண் புகழ்க்கு இசை
மீன் நிலம் திசையினோர் விரும்பிப் பாடலின்,
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம்,
கான் நிலம் கொடியினோன், கனி கண்டான் அரோ.
11
   
 
1664“தேன் நிரைத்து அலர்ந்த பொற் குன்றச் சென்னியின்
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என,
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண்
கோல் நிரைத்து அசை கொடிக் கோட்டம் யாது?“ என்றான்
12
   
அரஞ்செயன் என்னும் வானவர் காசை நகரின் வரலாறு கூறுதல்
 
1665ஆசை கொண்டு அறைந்த மாற்றம்,
  அறஞ்சயன் என்னும் வானோன்,
பூசை கொண்டு இறைஞ்சிக் கேட்டு,
  பொழி மது உரையின் சொல்லும்:
“மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன
  வயங்கும் அந் நகரை முன்னோர்
காசை என்றனர் முன் நாள் என்
  காவல் ஊர் அவ் ஊர்“ என்றான்.
13
   
 
1666“தோடு உண்ட மணிப் பைம் பூந்
  தார்ச் சூசையே, நீயும் திங்கள்
கோடு உண்ட பதத்தினாளும்
  குழவியாய்ப் பேணும் நாதன்
ஈடு உண்ட திறமும், பெண்மை
  இன்பம் என்று இருட்டும் ஆசை
கேடு உண்ட திறமும் காட்டக்
  கிளைத்தது ஈங்கு உரைப்பல்; கேள்மோ:
14
   
தலைமயிரில் பலம் பெற்றவன் சஞ்சோன்
 
1667“சேமம் சால் திறத்து நாதன்,
  சிறுமையின் பெருமை காட்ட,
வாமம் சால் மணியின் சென்னி
  மயிர்ப் புலத்து ஒத்தித் தந்த
தாமம் சால் திறத்தின் ஆண்மை
  தாங்கிய சஞ்சோன் என்பான்,
நாமம் சால் வழங்க, தோல்வி
  நவை பெறா வரம் பெற்று உற்றான்.
15
   
சிங்கத்தையும் வகிர்ந்து கொல்பவன்
 
1668“வல் அரிக் குழவி போன்றே
  வயத் தொடு பிறந்த தோன்றல்
செல் அரிது அடலோடு ஓங்கி,
  சிறுவன் ஆய்ச் சிறுமை இன்றி
புல் அரிது அகன்ற கானில்
  புடைத் துணை இன்றிப் போகில்,
கொல் அரி எதிர்ப்ப, கையால்
  கொறி என வகிர்ந்து கொல்வான்.
16
   
பீலித்தேயரையும் அவர் நாட்டையும் சஞ்சோன்அழித்த வகை
 
1669“தனித் திருத் தகவோன் தந்த
  தனித் திறல் அவன் மாற்றார் மேல்
இனித் திருத்திடல் நன்று என்ன,
  ஈங்கு உண்ட பீலித்தேயர்
பனித் திருத் தடத்துத் தந்த
  பழ மறை பகைத்தார் என்ன,
முனித் திருத் திறத்த சஞ்சோன்
  மொய் செய, அளவு இல் மாய்ந்தார்.
17
   
 
1670“கதிர் படும் வயலில் செந் நெல்
  காய்த்தன நாளில், ஓர் நாள்
எதிர் படும் நரிகள் முந்நூறு
  இவன் பிடித்து, இரண்டாய்ச் சேர்த்து
பொதிர் படும் வாலில் வாலைப்
  புணர்த்தலோடு, எரி தீப் பந்தம்
பிதிர் படும் பொறிகள் சிந்தப்
  பிணித்து, இகல் நாட்டில் விட்டான்.
18
   
 
1671“எண் திசை சம்பும் ஓட,
  எண் திசை பொறித் தீச் சிந்த,
மண்டு இசை வளியும் வீச,
  மண்டு இசை கொழுந்துத் தீயால்
விண் திசை மலர்த் தண் காவும்
  விண் திசை தவழ் நெற் போரும்
பண்டு இசை பகைவர் நாடும்
  பழி பழுத்து எரிந்தது அன்றோ
19
   
பீலித்தேயர் எதிர்த்தல்
 
1672“முனிப் பட்டார் பீலித் தேயர்
  மொய்ப்படை இன்றி ஓர் நாள்
தனிப் பட்டான் சஞ்சோன் என்ன,
  தாம் வய அரிகள் போல,
‘இனிப் பட்டான்!‘என்று சீறி, எண்
  இலார் அவனைச் சூழ்ந்து,
தொனிப் பட்டு ஆர்த்து, அரிய போரைத்
  தொடங்கினார், வயிரத் தோளார்:
20
   
கஞ்சோன் பகைவரைக் கழூதைவாய் எலும்பால் தாக்குதல்
 
1673“வீங்கினான் வெறுங் கைச் சஞ்சோன்;
  விளிந்த வேசரி வாய் என்பும்
வாங்கினான்; வயிரத் தண்ட
  வயப் படை என்ன, சீறி
ஓங்கினான்; அரும் போராக
  ஒன்னலர் படைகள் எல்லாம்
தாங்கினான்; அரி ஏறு அன்ன
  தாக்கினான் பகைவர் மாள்க.
21
   
 
1674“அதிர்த்தனன் அதிர வானம்,
  ஆர்த்தனன், தனி வல் மொய்ம்பான்;
விதிர்த்தனன் அரிய தண்டம்,
  வீசினன், எண் இல் ஆவி
உதிர்த்தனன்; உதிர வெள்ளம்
  ஓட, வெங் கதக் கண் வாயும்
கதிர்த் தழல் ஓட, ஓடி, கதக்
  கனத்து உருமின் மிக்கான்.
22