சித்திரக் கூடப் படலம்
 
சாசனை நீபகனை மயக்குதல்
 
1843“வாள் அணி கயல் கண் மின்ன,
  மணி அணிக் குழை வில் வீச,
நீள் அணி தயங்கி நாற,
  நிறத் துகில் ஒளிகள் விம்ம,
காள் அணி ஏறி வேல் சாயல்
  கனிவு உகுத்து உயிர் உண் தீம் சொல்
வேள் அணி திலதம் ஒத்தாள்,
  வீணை நல் குரலில் சொன்னாள்:
44
   
 
1844“மடங்கல் ஏறு உன்னை என்றார்;
  மடங்கலின் கொடியன் ஆனாய்
தடம் கையே கொலையில் விஞ்சித்
  தளர்ந்த என் உயிர் கொன்றாய், என்
குடங் கையே மறந்தாய், உன்னைக்
  குணித்து நான், தேட முன்னி,
முடங்கலே விளை கான் வந்தேன்;
  முற்றவோ இரங்காய்‘ என்றாள்.
45
   
நீபகன்போயின்தந்திரம்என எண்ணுதல்
 
1845“மட்டு உயிர்ப் பதும வாயாள்
  வயிரக் குன்று உருகத் தேம்பி,
நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி,
  நெய்த்து இடை துவண்டு வாட,
‘அட்டு உயிர்ப் பசை உண் பேய்கள்
  அருந் தவம் தவிர்க்க மாயை
நட்டு உயிர்ப்பன‘ என்று எண்ணி
  நரபதி தேறினானே.
46
   
சாசனை வெட்ட முயல்தல்
 
1846“தேறினான், ‘சுழற்றும் வாளால்,
  சிதைவு உக முளைத்த சாகி,
நூறி நான் துமிப்பல்!‘ என்ன,
  நுண் இடை அணங்கும், ‘தீம் தேன்
ஊறி நான் தெரிந்த சாந்தம்
  ஒழியவோ செய்வாய்!‘ என்று
கூறினாள்; ஒருங்கு கையால்
  கொழும் தருத் தழுவினாளே.
47
   
 
1847“பூங் கணை உழுத நெஞ்சம்
  புண்பட உருவிப்பின்னர்
பாங்கு அணை மரம் கொய்து, ஒக்கப்
  பகைத்த சாசனையும் கொல்வாய்,
தீங்கு அணை கொடியோய்!‘ என்றான். செல்வனும்
  நகைத்து, உன் மாயை
ஈங்கு அணை கொடுமை கற்றேன்‘
  என்று, வாள் வீசினானே.
48
   
சாசனை பேருருக்கொள்ளல்
 
1848“நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள், கொண்மூ
கீறுமை உருவம் காட்டிக் கிளைத்த தோள் இரு நூறு ஆக்கி,
நூறு கை வடியாள் வீச, நூறு கை கிடுகை ஏந்த,
சீறு நெய் எயிற்று நீண் கூன் திங்களே தோன்ற நின்றாள்.
49
   
நூறு மாதரும்அரக்கராய் மாறுதல்
 
1849“பண் கிளைத்த இசையின் பாடல்
  பணித்த மற்று அரிவையாரும்
கண் கிளைத்து எழுந்த செந்தீக்
  கதத்த நூறு அரக்கர் ஆகி,
விண் கிளைத்த இடிஏறு எஞ்ச
  விபுலை சூழ் நடுங்க ஆர்த்து,
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர்
  பொழி படை ஏந்தி நின்றார்.
50
   
நீபகன் கலங்குதல்
 
1850“கார் எழும் தன்மை வான் செய்
  கதிர் புதைத்து இருள, வான்மேல்
போர் எழும் தன்மை மின்னிப்
  புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப,
நேர் எழும் தன்மை பூங்கா
  நிரயம் நேர் வெருவு வீங்கச்,
சூர் எழும் தன்மைத்து அஞ்சா
  துளங்கினான், வயிர நெஞ்சான்.
51
   
மரத்தை வெட்டி வீழ்த்தல்
 
1851“உன்னிய தவத்தைப் பேண,
  ஒழிந்த தீ இனிமை வெஃகேன்;
துன்னிய இடுக்கண் அஞ்சேன்;
  சுருதி இது எனக்கு‘ என்று ஓங்கி,
மன்னிய துணிவில், தோர்ற்ற
  மண்ணைகள் நரகில் வீழ்க,
மின்னிய வடிவை வாளால்
  வியன் தரு வீழக் கொய்தான்.
52
   
 
1852“கொல் வினை அலகை போய்த் தன்
  கொள்கையில் கானம் தோன்ற,
புல் வினை அறுப்ப நோற்றான்
  பொலிந்த நீபகன் என்பானே,
நல் வினை பகைத்த பேய்கள்,
  நயமொடு வெருவு காட்டி
மல் வினை ஒழிக்க ஓர்ந்த
  மாயையே இன்றும் எஞ்சா.
53
   
அந்த நீபகன்அமைத்த சித்திரக் கூடமே இத்
 
1853“வெங் கண் நேர் இரவி ஒத்த
  விடலையே, நெடு நாள் நோற்ப
இங்கணே உறைந்த போழ்தில்,
  இவை எலாம் வரைவித்தான் ஆல்,
அங்கண் நேர் எழில் பார்த்து அல்லால்,
  அறிகிலேம் அறிதியேல், வெண்
திங்கள் நேர் தெளித்த நூலோய்,
  செப்புதி“ என்றான் மூத்தோன்.
54
   
சூசை அங்கு வரையப்பட்ட சித்திரங்களின்வரலாறு கூறுதல்
 
1854“பண் கால் இசை படுத்திப்
  பகர்ந்த உரை வளன் கேட்டு,
மண் காவலற்கு ஆய முறையில்,
  அறம் மலி நீரார்,
விண் காவலன் அருளால்,
  வினை கொள்ளார் எனக் காட்ட,
தண் கா எழுதியவை சாற்றுதும்“
  என்று உரை கொண்டான்:
55
   
இவை என் குலத்து முன்னோர் சரிதை எனல்
 
1855“மின் ஆர் கதிர் தெளித்து ஈங்கு
  ஓவியமாய், வேந்து, எழுதிப்
பொன் ஆர் மணிக் குப்பை
  போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும்
இன்னார், என் குலத்து முந்தையர் ஆம்.
  இவர் சரிதை,
முன்னார் மொழி பிறழா,
  மொழிகுதும் நான், கேண்மின்“ என்றான்.
56
   
யாக்கோபு
 
1856“ஐ ஐஞ் ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர்,
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா,
மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வரத் தொகையான்,
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான், யகோபு என்பான்.
57
   
ஆணரசன்(யோசோப்பு) கனாத்திறன்உரைத்தல்
 
1857“சீர் ஆர் புகழ் மிக்கோன்
  செய் தவத்தோன் முன் கொண்ட
தார் ஆர் அணங்கு அளித்த
  தனயரும் ஈர் ஐந்து, பினர்,
கார் ஆர் பின் குழலாள்
  களித்து ஈன்ற இருவரினுள்,
ஏர் ஆர் மூதுனன் ஆய்
  ஆணரன் என்ற இவன் தானே.
58
   
 
1858“அறம் கொண்டு இவன் வளர்ந்தே,
  ஆங்கு வரைந்திட்டன போல்,
உறங்கும் பொழுது, ஈர் ஐந்து
  ஒரு மீனும் இரு சுடரும்
இறங்கும் தன்மையில் வந்து,
  இறைஞ்சுவ போல் இணைத் தன்தாள்,
பிறங்கும் கதிர் வாழும்
  பெற்றியை ‘கண்டேன்‘ என்றான்.
59
   
ஆணரனைச் சகோதரர்கிண்ற்றில் வீழ்த்தல்
 
1859“தெரியா, நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட
எரி ஆர் சுடர் தொழுதது!‘ எனப் பகைத்தார் மூதுனரே;
‘பெரியார் உடைச் செல்வம் காண் சிறியார் பெரும் பகையே
உரியார் ஆவர்‘ என உரைத்தார் நூல் உடை நீரார்.
60
   
 
1860“தேறாப் பகை முற்றித்திலத்து அவனை வரக் கண்டே,
‘ஈறாய்க் கண்ட கனவு எவன் செய்யும்? காண்மின்!‘எனா
ஆறாச் சடத்து அன்னார் அவனை இட ஓர்ந்து, பினர்,
கோறா கொல்வதற்குக் கூவலினுள் வீழ்த்தினரே.
61
   
 
1861“அழுவான்,அடி விழுவான்,
  அயர்ந்து ஒருங்கு கை கூப்பித்
தொழுவான்; நனி துதிப்பான்;
  சுழன்று ஏங்கி விம்முவன் ஆம்;
விழுவான் என உதைத்து, வேங்கை அனார்
  வெகுண்டு, அற நூல்
வழுவானைத் தூக்கி வற்றிய தாழ்
  குழிப் பெய்தார்.
62
   
வாணிகர்க்கு ஆணரனை விற்றல்
 
1862“இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின்,
அப்பால் வரித்த படி, அதர் வர வாணிகர் கண்டு,
‘துப்பால் ஈங்கு ஒழிந்தால், துரும் பொலிசை யாது? இவர்க்கு
விப்பாம்‘ என எடுத்து, விற்று அளித்தார் அக் கொடியார்.
63
   
தந்தையிடம்பொய்உரைத்தல்
 
1863நிந்தைக்கு அஞ்சாதார், ஆணரன் முன்
  நீடு உடுத்த
விந்தைக்கு எழுதிய தூசு இற்று, உதிரம்
  மேல் சிதறி,
தந்தைக்கு அது காட்டித் ‘தம்பி உடையோ
  இதுச் எனா,
சிந்தைக்கு இரங்கினர் போல், ‘சினப் புலியோ
  செறித்தது என்றார்.
64
   
 
1864“ஆங்கு பொறித்த படிக்கு,
  அவை கேட்ட முதிர் தாதை,
தீங்கு பொறித்த துகில்
  திளைப்பக் கண்ணீர் பொழிய,
பாங்கு பொறித்த முகப்
  பாலனுக்கு அன்று இரங்கி அழும்;
ஈங்கு பொறித்த முறை காண்மின்“
  என்றான் இணர்க் கொடியான்.
65
   
அத்திட்டன்ஓர்ஓவிய வரலாறு கேட்டல்
ஆணரன் பூத்திமானுக்கு அடிமையாதலும் சிறைப்படுதலும்
 
1865ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க,
  “இன மணித் தவிசின் மேல் எழுந்து,
தூங்கு எழு நுரை அம் பூந் துகில் குழையத்
  துளி மதுப் புயல் குழல் குழைய,
பாங்கு எழு மணிகள் குழைய, வாய் குழைய,
  பதும வாள் முக நலம் குழைய,
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர்?“ என்று
  அதிட்டன் கேட்டு, இவை வளன் சொன்னான்:
66
   
பூத்திபான்ஆளாய் ஆணரன்உயர்வு பெறுதல்
 
1866“விரை உமிழ் நெடுங் கான் வாணிகர் கடந்து,
  விளை திரு எசித்து நாடு அடைந்து,
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த
  மாடம் நீள் கோன் நகர் தன்னில்,
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று,
  திருத் தகும் பூத்திபாற்கு ஆள் ஆய்,
புரை உமிழ் துயர் நீத்து, அறத் துணை பிரியாப்
  புவி நுதல் திலதமாய் வளர்ந்தான்.
67
   
 
1867“திடம் புனைந்து அமைந்த அறம் தரும் பயனே,
  செய்தவர்க்கு அன்றியும், அவர் தம்
புடம் புனைந்தவர்க்கும், வான் சுடர் ஒளியால்
  பூமியும் ஒளிர்ந்து என, தகும் ஆல்;
படம் புனைந்து என்ன, ஆணர் ஆணரன் அப்
  பதி அகத்து எய்திய பின்னர்,
தடம் புனைந்து உயர, பூத்திபான், தானும்,
  சால்பு உயர் திருப் பயன் அடைந்தான்
68
   
 
1868“பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம்
  பயக்கும் ஆம் முடவர்க்கும் போல,
கோள் நெறி வழுவாது இலங்கு அறத் தொகுதி
  குணிக்க அரும் ஆணரன் மாட்சி
சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு,
  சிறந்த அன்பு இயல்பில், ஓர் மகவின்
மாண் நெறி வழுவாத் திருந்திய செல்வம்
  மனை எலாம் அவன் கையில் பணித்தான்.
69
   
 
1869பூத்தோள் கடைந்து அழுத்தி அணி மணிச் சாயல்
  துளங்கிய ஆணரன் மாமை,
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி,
  மருள் உறக் கண்டு கண்டு, உளத்தை
வேள் கடைந்து அழுத்தி ஏவிய கணையால்
  விருப்பு உறீஇ, கற்பு எழில் சோர,
கோள் கடைந்து அழுத்திக்கொழும் சுதைக் கோலம்
  கொண்ட மண் பாவையோடு ஒத்தாள்.
70
   
 
1870“பணி நிறத்து அருகில் மருவிட விளித்து,
  பணித்தவை அவன் செயும் காலை,
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில்
  மயல் நிறத்து அருந்திய நஞ்சால்
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா,
  பெண்மையின் காணி ஆம் நாணம்
அணி நிறத்து அமைந்த சால்பினால் பேசா
  அயர்ந்து நெட்டு உயிர்ப்பொடு சோர்வாள்.
71
   
பூத்திபான் மனைவி ஆணரனோடு களிக்க முயல்தல்
 
1871“வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம
  வெந் தழல் வீக்கலும், ஆற்றாது
ஏங்கிய தன்மை, விரை கமழ் மதுப் பெய்
  இள முகைச் சேக்கையில் சாய்ந்து,
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன்
  சாய்த்து வீழ்ந்தும் உவா என, நாணம்
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த
  நினைவு உணராது, அவன் சேர்ந்தான்.
72
   
 
1872“பார்த்தனள்; பார்த்த உவப்பொடு நாணி,
  பகைத்த நாணமும் சினந்தாற் போல்
கூர்த்து அனல் பொங்கி, முகம் எலாம் சிவந்து,
  குயிலினும் குழலினும் இனிதாய்
நீர்த்தன குதலைச் சொல் கொடு, நெடு நாள்
  நினைத்தவை மறைவு அறச் சொன்னாள்.
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு,
  ஆணரன்உரைத்தான்நாணி நொந்து உரைத்தான்:
73
   
 
1873“ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன்,
  அனைத்துமே உனை அலாது அளித்த
சீர் முகத்து, இன்னாது அவற்கு நான் கருதச்
  சிந்தையும் இயலுமோ?‘ என்று, இப்
போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி
  புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி,
கார் முகத்து ஒளித்த மின் என ஒல்கி
  கரந்து உய்யல் கருதினான் மாதோ.
74
   
பூத்திபான் மனைவியின்வேட்கை கண்டு ஆணரன்வருந்துதல்
 
1874“பூங் கணையாய் என் நெஞ்சம் ஈர்த்தன பின்,
  புகர் விழி ஒளிப்பவோ!‘ என்னா,
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து, அவன் தன்
  உடைத் துகில் சிக்கெனப் பிடித்தாள்
பாங்கு அணை துகிலும் பகை என எறிந்து,
  பகழியும் பின்ற முன் ஓடித்
தீங்கு அணை மடவாட்கு, இரங்கியது அல்லால்,
  செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான்.
75
   
பூத்திபான் மனைவியின்கோபம்
 
1875நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று,
  நசை கெடப் பெரும் பகை வீங்கி,
‘முகைத்தன தன்மைத்து என் முகம் வெறுத்து,
  முயங்கலும் மறுத்த தீக் கொடியான்,
பகைத்தன தன்மைத்து, என்னையே எண்ணிப்
  பணிகுவான் எனக் கொடிது உணர்ந்தாள்,
அகைத்தன தன்மைத்து, அன்பிற்கும் பகைக்கும்
  அளவு இலாப்பொங்குவர், மடவார்.
76
   
பூத்திபானிடம் பொய்உரைத்தல்
 
1876“வேட்கையும் சிதைந்த நாணமும் சோர்ந்த
  மேனியே, அறத்தின் சோர்ந்து என்னப்
பூட்கையும் எஞ்சக்கொடிய வெஞ் சினத்தாள்,
  புருடன் முன், குழல் நலம் சிந்தி,
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது,
  ‘இந்தோ, பிரிய நின் தொழும்பனே, எம் தம்
வாட் கையும் புகழும் எஞ்ச, இன்று என்னை
  வழு உற நினைத்தனன்!‘ என்றாள்.
77
   
ஆணரன்சிறைப்பாடல்
 
1877“முற்றுபு கனன்ற முகத்து எழும் வெகுளி
  முரண் கொடு, பூத்திபான், ஆர்த்து,
‘பற்றுபு சிறையில் கதும் எனப் பெய்மின்,
  பகைவரின் கொடியனை!‘ என்னச்
சொற்றுபு, கொடியார், மாசு இல் ஆணரனைச்
  சுளித்து அடித்து, இழிவு உறக் கச்சின்
சுற்றுபு கொடு போய், சிறையினுள், திங்கள்
  துளி முகில் புக்கு எனப்புக்கான்.
78
   
கதை கேட்ட முனிவர்கள்வருந்துதல்
 
1878“மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை
  விளம்பிய மங்கை தான் அங்கண்
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய்
  கசடு இல ஆணரன் எழுதி,
இன் நிறத்து இலங்கக் காண்மின்நீர்“் என்ன,
  இவை வளன் இசைத்தஉளி, எவரும்
சொல் நிறத்து அழன்று, ‘பெண்மையைப் பெண்மை
  சொற்றிலீர்; கொடியதே!‘ என்றார்.
79
   
 
1879“மட நடை பெண்மை நட்பு என உரைத்தார்,
  வளர் உணர்வு உயரிய நீரார்.
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச,
  சால்பு அவள் அன்பு காட்டிய பின்,
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள்;
  வினை இதேல், இனிது எனப்பெண்மை
பட நடை எழிலை விரும்பிலீர்!“ என்னப்
  பாணிக மாமுனி சொன்னான்.
80
   
 
1880“முன் பட உரைத்த தன்மையின், அல்லோ,
  முழுவதும் நாடு ஒழிந்து அல்லால்,
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய
  வினை?“ என அதிட்டனும் கூற,
“மல் பட நிமலன் செய் அருள் தன்னால்,
  வரும் பகை, திரு நலம் பயத்தல்
நல் பட அருளிக் கேண்மின் நீர்“ என்ன
  நறு மலர் உயர்த்தனன் நவின்றான்.
81
   
சிறையில்ஆணரன்
 
1881நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த கால்;
சிறை பட்டு, அச்சிறை பட்டு இல, தேர் அறத்
துறை பட்டு, ஆணரன், தானும் துளங்கினான்;
குறைபட்டார் எவர்க்கும் குறை ஆற்றினான்.
82
   
 
1882தேர் எழும் சுடர் சேர் அவ் இடம்
பேர் எழும் கதிர் பெற்று விளங்கும் ஆல்;
ஏர் எழும் கதி வீட்டின், இன்னான் உறை
சூர் எழும் சிறை, தோன்றியது ஆம் அரோ.
83
   
 
1883“ஒளி படப் பசும் பொன் உலை பெய்து என,
தெளி படச் சிறை பெய்தன ஆணரன்,
களி படக் கருத்து ஏந்திய காட்சியால்
அளிபடக் கனிந்து, உம்பர் ஒத்து ஆயினான்.
84
   
 
1884“நீர் புதைத்து ஒளி நேமி எழுந்து அவிர்
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ,
ஏர் புதைத்த இவ் ஓவியத்து ஈங்கு, அவன்
கார் புதைத்த மின் ஒத்து எழக் காண்மினே!
85
   
ஆணரன் விடுதலை பெறல்
 
1885மன்னன் அன்று மனம் கெடக் கண்டுஅவை
சொன்ன தன்மையின், தொல் உரை நூலினர்,
தன் அமைச்சர், தபோதனர், கேள்வியர்
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார்.
86
   
 
1886குலைய மன்னவன், நூல் குரவர் தமின்
மலைய, முன் சிறை வைகிய மைக்குணன்,
கலை அது இந்து என, ஆணரன் கண்டு அறிந்து,
உலைய வேண்டு இல‘ என்று, மற்று ஓதினான்.
87
   
 
1887தூய தன்மை உளத்து உறும் காட்சியால்,
ஆய தன்மையில், ஆவது அறிந்தவன்,
தீய தன்மை இலாச், சிறை பட்டு உறை
நேய ஆணரன் கூவுமின் நீர்‘ என்றான்.
88
   
 
1888மன்னன் உட்பட, வையகம் வாழ்வு உற,
அல் நவத்து எழும் எல்லை ஒத்து, ஆணரன்
சொன்ன அச்சிறை நீத்து தொழக்கலன்
மின்ன, மிக்கு எழும் வேந்தன், விளம்பினான்
89
   
மன்னவன்தன்கனா உரைத்தல்
 
1889“ஒளிபட்டு ஒள் பளிங்கு ஒத்து, இழிவு இன்றி நீ
களி பட்டு ஏற்றிய தேவன் செய் காட்சியால்,
தெளி பட்டு ஈங்கு இவர் தேர் இல, கண்டவை,
வெளி பட்டு ஓத விளம்புதல், கேள்‘ என்றான்
90
   
 
1890பூ மலிந்து பொழில் கணின் மேய்ந்த ஏழ்
ஆ மலிந்தது கண்டது; அவ் ஆ எலாம்,
ஈ மலிந்து மெலிந்த பின் ஏழ் பசு
கா மலிந்து விழுங்கல் கண்டேன்‘ என்றான்.
91
   
ஆணரன்கனாப்பொருள்உரைத்தல்
 
1891“பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய், எலாம்
பழுது இலா உணர் உம்பர நாதன் செய்
வழுது இலாத் தெருளால், வகுப்பேன்‘ எனாத்
தொழுத ஆணரன், பின் இவை சொற்றினான்:
92
   
 
1892“பருத்தது என்று முன் பார்த்த ஏழ் ஆ எனில்
கருத்தகும் புயல் காலம் பொய்யாமையால்,
உருத்தகும்விளைவு ஓங்கி, ஏழ் ஆண்டு ஒரு
வருத்தம் இன்றியும் வாழும் இந்நாடு அன்றோ.
93
   
 
1893“மெலிவொடு உற்ற பின் ஏழ் நிரை வேய்ந்து, தாம்
மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால்,
பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியைக்
கலியொடு உற்ற ஏழ் ஆண்டு கறிக்கும் ஆல்.
94
   
 
1894“கண்டது எண்ணிக் கலக்கம் அற்று ஆற்றலே
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ;
அண்ட மன்னன் அளித்த இக் காட்சியைக்
கொண்ட தன்மையின், கோது அற ஆள்மினே.
95
   
 
1895“மலிந்த ஆண்டினில் ஈட்டலும், மற்று அவை
மெலிந்த ஆண்டில் வகுத்தலும் மிக்கு உறும்;
பொலிந்த ஆண்மை பொருந்திடத் தேருதி,
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான்.
96
   
ஆணரன்எசித்து நாட்டுத் துணைக் காவலனாகித் தன்
இனத்தாரைக் காப்பாற்றுதல் மன்னன்செய்த சிறப்பு
 
1896நூல் வழி உரைத்த தீம் சொல்,
  நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல்,
வேல் வழி மின் கை வேந்தன்,
  வியப்பினோடு இமிழின் கேட்டு,
பால் வழி நுரை அம் பைம்
  பூப் பழித்த பொன் துகிலைப் போர்த்து,
நால் வழி அணிகள் பூட்டி,
  நயப்பு எழத் தழுவினானே.
97
   
 
1897உன் அலால், தெய்வம் அல்லால்,
  உணர்வு அரும் பயன்கள் சொன்னாய்;
நின் அலால் பிறர்கள் யாரே
  நிறைந்து இவை செலுத்தும் பாலார்?
என் அலால், பிறர்கள் யார்க்கும்
  இறைவன் நீ உலகம் காக்க,
மன் அலால், எவையும் தந்தேன்,
  வாய்ந்த நூல் வடிவோய்!‘ என்றான்.
98
   
 
1898“வார் வளர் முரசின் சாற்றி,
  வளர் சிறப்பு இயற்றி, பின்னர்,
போர் வளர் சேனை சூழப்
  புகர் முகத்து எருத்தின் பைம் பொன்
நீர் வளர் தவிசின் ஏற்றி,
  நிரையின் ஈங்கு எழுதப்பட்ட
சீர் வளர் வண்ணத்து, அங்கண்
  சிதைவு இலான் தோன்றினானே.
99
   
ஆணரன்அமைதி
 
1899அருள் ஒன்றும் சார்ந்த நல்லோன்,
  அருஞ் சிறை பட்ட போழ்தும்,
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சிப்
  பொருனனாய்ப் பொலிந்த போழ்தும்,
மருள் ஒன்றும் புலம்பல் தானும்
  மகிழ்வும் உள் தோன்றல் இன்றித்,
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன்
  திருவுளம் என உள் தேர்ந்தான்.
100
   
ஆணரன் நாட்டிற்குச் செய்த நற்செயல்
 
1900“பொலம் தரு வளர்ந்த தன்மை
  புடை எலாம் நிழற்றும் போல,
நலம் தரு மணி செய் பைம் பொன்
  நல் தவிசு உயர்ந்த தானும்,
வலம் தரு செல்வத்து அன்பும்
  வளர்ந்து, எலா உயிர்கள் பேணி,
நிலம் தரும் இனிமை உண்டு
  நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான்.
101
   
 
1901பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய்,
  பசி உயிர் உணும் கால் ஆகி,
கால் கலந்து ஒழுகும் மாரி
  கான்ற ஓர் துளியும் இன்றி,
நூல் கலந்து உரைத்த வண்ணம்,
  நொந்து உயிர் எவையும் எஞ்ச,
சேல் கலந்து இழி நீர் நாட்டில்,
  சேர்த்தவை வகுத்தல் செய்தான்.
102
   
ஆணரன் தமயன்மார்இருவர்வருதல்
 
1902பார் முழுது உண்ணும் கூர்த்த
  பசிதனை உண்ணும் அன்னான்,
சீர் முழுது அகன்ற அன்பின்
  சிறப்புற அளித்த நாடே,
சூர் முழுது அழுங்கு மற்றத்
  தொலைத்த நாடு உய்ய எய்தி,
தார் முழுது இலங்கு மார்பன்
  தமையர் ஆங்கு இருவர் உற்றார்.
103
   
ஆணரன் அறி வினாக்கள்
 
1903உற்றவர் தம்மைத் தானே
  உணர்ந்து கண்டு இருப்பத், தன்னை
மற்று அவர் உணர்கிலாமை
  மதித்தனன்; எவர் நீர்?‘ நும்மைப்
பெற்றவர் எவர்? எந்நாடு?
  பிறந்தது எத்துணை?‘ என்று ஓத
விற்றவர் கேட்டுத் தாளை இறைஞ்ச
  வீழ்ந்து, ஒருவன் சொன்னான்:
104
   
ஒருவன்மறுமொழி
 
1904“எல் கொண்ட கனய நாட்டில்
  யூதர் நாம், யாக்கோபு என்பான்
முன் கொண்ட குழலாள் ஈன்ற
  முளைகள் ஈர் ஐந்தும் ஆனோம்,
பின் கொண்ட நல்லாள் தந்த
  பிள்ளை ஒன்று அகன்றான்; பின்னர்
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள
  ஒன்று உதித்தது‘ என்றான்.
105
   
ஆணரன், நும்இளையவனைக் கொணர்க
என ஒருவனை அனுப்புதல்
 
1905“இனையன கேட்டுத், தன்னை
  ஈன்றனள் பின்னர் ஈன்ற
தனையனைக் காணத் வெஃகி,
  ‘தந்த பின்மகன் வந்து அல்லால்
உனை அன நாட்டில் போக்கேன்;
  உணவு இனி அளியேன்‘ என்னா
அனையன செல்வன் கூறி,
  அழுங்கி மற்று ஒருவன் போனான்.
106
   
யாக்கோபு இளமகனை அனுப்புதல்
 
1906வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில்
  விளைந்த நோய் கேட்ட தந்தை,
பொறி பட்டால் அலர் பூ நையும்
  போல் உளம் அழுங்க வாடி,
‘மறி பட்டான் மீட்க, வேண்டும்
  மறு உணவு அடைய, வை வேல்
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன,
  இள மகன் போதல்‘் என்றான்.
107
   
ஆணரன் விருந்தளித்தல்
 
1907“எஞ்ச நொந்து அழத்தாய் தந்தை,
  இரிந்த தம் நாளில் வந்த
பெஞ்சமின் என்னும் தோன்றல்,
  பெயர்ந்து போய், பவளக் குப்பை
அஞ்ச மின் முகத்து நிற்ப,
  ஆணரன் முகமன் நோக்கி,
விஞ்ச அன்பு உருகிப்பின்னர்
  விருந்து இவர்க்கு ஓம்பினானே.
108
   
பெஞ்சமினைக் கள்வன்எனப்பிடித்து வைத்தல்
 
1908“ஓம்பிய விருந்தில் வைத்த
  ஒளி மணிக் கலமும், அன்னார்
சாம்பிய விலையின் பொன்னும்
  தம்பிகண் ஒளித்து வைப்ப,
காம்பிய அவரும் போகில்,
  ‘களவர் கைப் பிடிமின்!‘என்ன,
கூம்பிய படைஞர் மொய்ப்ப,
  குழைவு உறக் குலைந்து நின்றார்.
109
   
 
1909“புரந்த நாடு ஒழியேம்‘ என்பார்;
  பொதி எலாம் நோக்கீர்‘ என்பார்;
கரந்த நாம் அல்ல என்பார்;
  களவனைக் கொல்மின்! என்பார்.
பிரந்த மானவர் சூழ் நாடிப்,
  பெஞ்சமினிடைக் கள்வு உண்டு ஆய்,
பரந்த மா முகில் விட்ட ஏறு
  பட்டு என மயங்கி நின்றார்.
110
   
சகோதரர்புலம்பல்
 
1910“தணர்ந்த இம் மகனும் போகின்,
  தாதை தாய் உய்யார்!‘ என்பார்;
‘புணர்ந்த எம் கொடுமையால், முன்
  புலம்பி ஆணரன், கை ஏற்றி,
உணர்ந்த சொல் கேளேம்!‘ என்பார்;
  ‘உயிர் கொல்லாக், கொன்றேம்!‘என்பார்;
மணர்ந்த எம் செயிர்க்கு இது! என்பார்;
  ‘வந்த தீங்கு உரியது!‘என்பார்
111
   
 
1911“பேர் நலம் பொறித்த குன்றில்
  பெரு விளக்கு ஆக, பைம் பொன்
ஆர் நலம் பொறித்த சீய அணையில்
  ஆணரன் நின்று, ஓங்க
தார் நலம் பொறித்த மார்பில்
  தழல் சினம் புழங்கினாற் போல்,
‘கூர் நலம் பொறித்த அன்பின்
  கொடுத்த நன்று ஒழிந்தீர்!‘ என்றான்.
112
   
 
1912“உய் வகை இன்றி அண்ணர்,
  உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி,
பொய் வகைச் செயிர் இதேனும்,
  புகர் இல் ஓர் தம்பி நோக,
மை வகைக் கொடுமையால் யாம்
  வஞ்சமே முடித்த பாவம்,
மெய் வகைப்பயத்த தீமை
  விளைந்தது இன்று, ஐயா!‘ என்றார்.
113
   
ஆணரன் தன்னை வெளிப்படுத்தல்
 
1913“மணித் திறத்து எழுந்த தோளான்,
  மயங்கு இவர் துயரம் கண்டு,
பிணித் திறத்து இசைத்த சொல்லும்
  பெட்பு எழக் கேட்டு, தானும்,
அணித் திறத்து இலங்கு மார்பில்
  அன்பினை ஒளிக்க ஆற்றா,
துணித் திறத்து அலர்ந்த பூங் கண்
  துளித்த நீர் தூறிற்று அன்றோ.
114
   
 
1914“அட்டு என நீவிர் விற்ற
  ஆணரன் அவன் தான் நான்! என்று
இட்டென, துணுக்கென்று அன்னார்,
  இடித்த கார் கிழித்த ஏறு
பட்டென உயிர் பட்டாற் போல்
  பாசறை குளிப்ப, இன் நீர்
மட்டு என மலர்க் கண் தூவ
  மார்பு உறத் தழுவினானே.
115
   
 
1915“தீது நீர் விதைத்த வேலி
  செல்வ நீர் விளைத்தது அன்றோ?
கோது நீர் நினைத்த வண்ணம்
  கோது நான் குணிக்கல் செய்யேன்
தாது நீர் ஒழுகும் சாகி தனைக்
  கொய்வார் நிழற்றும் போல,
யாதும் நீர் அஞ்சல் வேண்டா;
  இயல்பு உற அளிப்பல்‘ என்றான்.
116
   
ஆணரன்தாய்தந்தையை வருவித்து வணங்குதல்
 
1916“தூம்பு உடைத் தடக் கை மாவும்,
  துரகமும், தசமும் சாடும்,
கூம்பு உடைச் கொடிஞ்சித் தேரும்,
  கொடி, குடை, பலவும் போக்கி,
வீம்பு உடைப் புலமை நீரான்,
  விளித்த தாய் தாதை தம் தாள்
தேம் புடைக் கண்ணி சாற்றி,
  தெண்டனிட்டு, உவப்பச் செய்தான்.
117
   
அரசன்சிறப்புச் செய்தல்
 
1917“தான் மலர் முகத்தில் ஓடி, தாதை தாய் தமர்கள் யாரும்,
கோன் மலர் அடி முன் காட்ட, கோன், தமராக நோக்கி,
தேன் மலர் மருத வேலிச் சிறப்பு எழும்நாட்டைத் தந்து,
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார்.
118
   
ஆணரன்கதை, நாட்டிலிருந்தே நல்லவர்செய்ய
முடியும்என்பதை விளக்குகிறது
 
1918“பணி முகத்து உரைத்த நீரால்,
  பைங் கதிர் தெளித்த கோலால்
மணி முகத்து எழுதப்பட்ட
  வளம் கதை ஒழுங்கின் நோக்கீர்;
பிணி முகத்து இறைவன் செய்யும்
  பெரும் பயன் அருளின் நாட்டில்
அணி முகத்து ஒருவன் செய்த
  அறம் உலகு அளித்தது“ என்றான்.
119
   
சூசையின் உரை கேட்ட முனிவன் உளம் தெளிந்து பலவாறு கூறுதல்
 
1919சேற்று உறை தாமரை விரி செவ் ஏடு, வான்
வீற்று உறை வெம் கதிர் விழுங்கிற்று ஆம் என,
நூல் துறைப் புலமையோன் நுண் தன் வாய் உரை
ஊற்று உறை இனிமை, அம் முனிவர் உண்டு உளார்.
120
   
 
1920உண்ட தேன் அருகு நின்று உகுத்து, யாழ் ஒலி
கொண்ட தேன் இனிது இசை பாடும் கொள்கை போல்,
கண்டு அதே உணர்ந்து எனக், கனிந்து கேட்டன
பண்டு அதே உணர்ந்து, பல் பலவும் ஓதினார்:
121
   
 
1921“கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம்,
கான் செயும் வனம் சுடும், அமிழ்தும் காளம் ஆம்,
வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல்,
ஊன் செயும் கோட்டு இடை உய்வது ஆம்“ என்பார்.
122
   
 
1922“வீடு உற வேண்டில் நீ விதித்த நூல் அலால்
காடு உற ஒளிக்குதல், கயம் குளிக்குதல்
நீடு உற விழு சடை நீட்டல், மற்றவை
ஈடு உறப் பயன் இலா வெளிறு இது ஆம் என்பார்.
123
   
 
1923“சடை வளர் உருக் கொடு, தவிர்கு இல் நீர் குளித்து,
அடை வளர் வனத்திடை அகன்று இலாத்திரிந்து,
இடை வளர் கனிகளோடு இளங் கிழங்கு உணும்
முடை வளர் கரடிகள், முனிவரோ?“ என்பார்.
124
   
 
1924“சுரத்திடைத் தழலொடு துறும் புறாக்களும்,
மரத்திடைத் தூங்கி நல் கனி உண் வாவலும்
உரத்திடைத் துறவரோ? உளத்தின் மாண்பு அலால்,
பரத்திடைக் கிளர் வினை பரியுமோ? என்பார்.
125
   
 
1925“செம் பொறிச் சினத்த போர்ச் செறுநர்க்கு அஞ்சலால்,
பைம் பொறி எயிலின் வாய் படியப் பூட்டி, உள்
வெம் பொறி எழத் தமை வெட்டி வீழ்த்து எனா
ஐம் பொறி அடக்கி உள் அவாக் கொண்டால்“ என்பார்.
126
   
 
1926“கோலமே வீண், அடா, குளித்தல் வீண், அடா,
சூலமே வீண், அடா, துறவு வீண், அடா,
காலமே மந்திரம் கதைத்தல் வீண், அடா,
சீலமே கெட நசை செகுத்து இலால்!“ என்பார்.
127
   
 
1927“புரை வளர் பகை நமைப் புழுங்கிப் போர் எழ,
விரை வளர் வனத்திலும் வினை செய்து, உள் சுடும்,
கரை வளர் கடல்கணும் கலக்கம் இல்லது ஆல்,
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த கால்“ என்பார்.
128
   
சூசை பல அந்நெறிகள்கூறினார்எனல்
 
1928பல் நெறி இசைத்த சொல் பயன் கண்டே, வளன்,
முன் நெறி ஒழிந்த அம் முனிவர் யாவரும்
நல் நெறி அடைந்தன நயப்பில், கோது அறும்
மன் நெறி உறுதிகள் வகுத்துக் காட்டினான்.
129
   
கதிரவன் மறைவு
 
1929காட்டிய உறுதியும், கதிர் தெளித்து அவண்
தீட்டிய சரிதையும் செய்த ஞானம் உள்
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என,
கோட்டிய கதிர்கள் போய் நிலம் குளிர்ந்ததே.
130
   
இரவில்சூசை திருமகனை வேண்டினான்எனல்
 
1930அவ்வியம் ஒழிந்து, அவர் அசைவு தீர்ந்தனர்,
வவ்விய நெறி விடா மனம்நிலை பெற,
நவ்விய முகத்து உறை நாதன் வேண்டினான்,
செவ்விய உளம் புரை தேன் பெய் கோலினான்.
131
   
மூவரையும்முனிவர்கள்வழியனுப்புதல்
 
1931ஞானமே தெளித்து, இவர் மனத்தின் ஞாயிறு
வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின்,
‘ஈனமே ஒழித்தி!‘என்று எவரும் ஏற்றி, அக்
கானமே கழிப்ப நேர் வழியைக் காட்டினார்.
132
   
 
1932தொல் முகத்து அதிட்டனும், தொகைத்த மோனரும்,
பொன் முகத்து அடைந்த இம் மூவர் போதலால்,
மின் முகத்து இடி என அரற்றி விம்மி, மேல்
செல் முகத்து எழுந்த காக் கடந்து செல்கின்றார்.
133