குணுங்கு மந்திரப் படலம்
 
 
2098“பெண் அம் காணியும், பெருமையும்,
  பேர் ஒளிப் பிறப்பும்,
திண் அம் வாழ்க்கையும் சிதையும் என்று
  இணங்கிலர் ஆகில்
வண்ணம் தீர்ந்து, உளம் வளைந்து, தீ
  நசை உறச் செய்வாய்;
தண் அம் வேர் கெடின், தரு எலாம்
  சாய்தலும் அரிதோ?“
96
   
 
2099மை முகத்து இவை வகுத்து, அரும் பழி கொலை களவும்
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி,
நை முகத்து உயிர் நவை உறிக் கேடு உறீஇ, அரசன்,
மொய் முகத்து அரு முரண் தொழில் நெடிது காட்டினன் ஆல்.
97
   
கரோதரன் என்னும் பேய் நகைத்துப் பொய்யநங்காட்டலே
சிறந்த வஞ்சனை வழி எனல்
 
2100கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான்
  கரோதரன், நக்கு இவை சொல்லும்:
“பொய் முகம் புதைத்த வஞ்சனைத் தொழிலால்
  புரை உற உணர்ந்த வாய் யாவும்,
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி
  விளங்கினேல், பயன் இலாது அன்றோ?
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல்
  வடுப் புகும் பெருந் தடம்“ என்றான்.
98
   
 
2101“நிறை தவிர் தீய கயவரும், நரகின்
  நிலை தவிர்ந்து, இன்ப வீடு, உடலின்
சிறை தவிர் காலை, எய்தலும் விழைவார்;
  செல் கதி எளிது எனக் காட்டி,
முறை தவிர் அறங்கள் நம்பு உளி, தாமே
  மூழ்கிய துகளின் ஆழ்ந்து, அஞ்சா,
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி,
  மாய்ந்து, எரி நரகிடை வீழ்வார்.
99
   
பாவத்தடங்கள்
 
2102“நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல்,
  நீர்த் துளி இறைத்து உயர் வாரல்
பேர் விளை ஓதல், பெருமணி தரித்தல்,
  பெருஞ் சடை நீடு உற வளர்த்தல்,
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல்,
  துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல்
ஏர் விளை கதி சேர் வழி எனில், பாவம்
  இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ?
100
   
 
2103“இவ் வழி எளிதில் புரை எலாம் தீரும்
  என்று உளி, புரையின் மேல் சாய்ந்து
செவ் வழி ஒழிந்த மன் உயிர் கெட, ஓர்
  செயிர் வழி காட்டவோ வேண்டும்?
மொய் வழி அருவி முன் உள இழிவில்
  முடுகி வந்து ஓடவும், நாமோ
அவ் வழி காட்டல் வேண்டும்?“ என்று உரைத்தான்
  அறிவு அளவு அருங் கொடுஞ் சடத்தான்.
101
   
சடக்கலி என்னும் பேயின் கூற்று
 
2104சடக்கலி எனும் பேய், மற்று எலாம், களிப்பில்
  சருக்கொடு, கருங் கடல் ஓதம்
படக் கலி தளிர்ப்ப, உகளி முன் பாய்ந்தான்;
  படர் இருள் முகில்தரும் அசனி
அடக் கலி எடுத்து ஆர்த்து, “அறிவு அறை போக்கி
  அழல் அறை அலகைகாள், நெஞ்சம்
கெடக் கலி என்னோ? மருட்டு உணர்வு என்னோ?
  கேதம் ஒன்று எசித்திடைக் காணேன்.
102
   
சூசையின் அறிவுறை கேட்டும் பாவம் மலிதலால், இறைவனுக்கு இகழ்ச்சியே எனல்
 
2105“மதி வளர் உணர்வு அற்று, எசித்தனர் முன் நாள்,
  வதை வளர் நரகிடை வீழ்ந்தார்
நிதி வளர் கோயில் வீழ்ந்து, நாம் வீழ்ந்த
  நிலைமையும், சூசை ஆங்கு உரைக்கும்
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து,
  துகளும் எண் மடங்கு எழச், சுடர் வான்
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும், நமக்கு ஓர்
  பழி வளர் களிப்பும் ஆம்“ என்றான்.
103
   
மகள் மெய்த்தவ நெறி நின்றால் என் செய்வது? எனச் சடக்கலியன் மீண்டும் கூறல்
 
2106“ஐ வகைப் பொறியும் வாட்டிய சூசை
  அறையும் நூல் உறுதியால், அன்னார்
மெய் வகைத் தவத்து நிலைபெறின், இன்பம்
  விளையுமோ நமக்கு?“ என, அரசன்,
“பொய் வகைச் சடத்து நான் புகுந்து எசித்தார்
  புரை உற அவன் மொழி பழித்துச்
செய் வகைத் திறத்து நிற்பரோ?“ என்னச்
  செப்பினான் சடக்கலி மீண்டே:
104
   
 
2107“கொக்கு அணி முடியும், கொடிச் சடைச் சிரமும்,
  குண்டலச் செவியும், வெண் பலியை
மிக்கு அணி நுதலும், பொறி அடும் தவத்து
  மெலிவொடு வாடிய முகமும்
அக்கு அணி மார்பும், தண்டொடு கரக
  அம் கையும் இவற்றொடு மறையைத்
தொக்கு அணி வேட முனிவரன் என நான்
  தோன்றி, ஆங்கு எவரையும் வெல்வேன்.
105
   
 
2108“தொல்லையில் அளித்த தேவரை நீங்கித்,
  தொழுபவோ புது இறை?“ என்பேன்;
‘எல்லை இல் முன்னோர் ஒழுகிய நெறியே
  இழிவு உறும் பழுது அதோ?‘ என்பேன்.
‘ஒல்லையில், நெடு நாள் தவப் பயன், பேதை
  உரைகள் கேட்டு, ஒருவவோ?‘ என்பேன்;
‘கொல்லையில் முளைத்த களை என, புல்லர்
  கொடு முறை, கொய்மின் நீர் என்பேன்.
106
   
 
2109“புன் குலத்து உதித்துப், பொலிசை அற்று எய்திப்,
  புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன்
சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள்
  சுருதியோ? நூல் மலி நாட்டில்,
நல் குலத்து உதித்த நீர், புற நீச
  நவ முறை ஒழுகவும் நன்றோ?
தன் குலத்து இழிவு இது என்று, உளம் மருட்டும்
  சடத் தொழிற்கு அரிது உண்டோ?‘ என்றான்.
107
   
எசித்தார் சூசையையும் அவன் நாட்டையும் நன்கு அறிந்தால் என் செய்வது என அரசன் கேட்டல்
 
2110“பொய் நிறத்து உரைத்தது இழிவு உற வெளி ஆய்,
  பூதலத்து ஒருப்படப் பிறந்து
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும்,
  விரி ஒளி மணி முடி வேந்தர்
செய் நிறக் குலத்தோன் அம் முனி என்றும்,
  திருப் புகழ் கலை நிறை மாட்சி
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில்,
  பிழை உனக்கு“ என்றனன் வேந்தே.
108
   
சடக்கலி, கிணற்றில் விழுந்த கடற்சுறாவின் கதை கூறல்
 
2111“எண் வழி தவறி உள்ளிய சூட்சி
  இது!“ என வெறி எலாம் இரட்ட,
விண் வழி அசனி ஒலி எழ நக்கு,
  வெவ் வினைச் சடக்கலி, விளம்பும்:
“கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள்
  காது இடும் உணர்வு, எவன் செய்யும்?
தெண் வழி உவரிச் சுறவு தன் காதை
  தெரிகு இலேல், கேண்மினோ“ என்றான்:
109
   
 
2112“வெள்ள மேல் எதிர்த்த இளஞ் சுறா, கூவல்
  விழ, ‘எவண் நீ?‘எனக் குழி மீன்
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று, ஆழ்ந்து,
  கொழு மணி கொழித்த நீண் புணரி
உள்ளமேல் சிறப்புக் கூற, இக் குழியோடு
  ஒத்தது உண்டோ?‘என நகவே, ‘இப்
பள்ளமே உறையும் காலை, நீர் உரைத்த
  பழி எலாம் செல்லும்‘ என்றதுவே.
110
   
எசித்து நாட்டில் தான் செய்யபோகும் செயல்களைக் கூறல்
 
2113“மீளவும் கரு வித்து அழியவும், அழியா
  வெண்ணையின் திரண்ட பின் கெடவும்,
நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும்,
  நின்று நல் கலைத் துறை உறுங்கால்,
மாளவும், மாளா நோயில் தீந்து இறவும்
  மக்களை வருத்து இன்னா செயுங்கால்,
ஆளவும் செய்வேன்; அத் துயர் தீர,
  அருச்சனை வழங்கவும் செய்வேன்.
111
   
 
2114“இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில்,
  இயன்று உறு நோய் துயர் இடுக்கண்
மற்றை யாவையும், தாம் ஒழிந்த தொல் தேவர்
  மனச் சினத்து அயர்ந்தவை என்பேன்.
அற்றை நான் செயுங் கால், அம் முனி உய்தல்
  அரியது ஆய், வீழ்ந்த அர்ச்சனை கொண்டு,
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய்“ என்ன
  உரைத்தனன் சடக்கலி மாதோ.
112
   
கவிக் கூற்று
 
2115மஞ்சொடு கடல் ஒலி மயங்க ஆர்த்த பேய்,
நஞ்சொடு வளர் சட நடையில், இன்ன ஆய்
அஞ்சொடு மும் மதி அளவும் போக்கி, வெம்
நெஞ்சொடு வளர் பழி நினைக்கும் தன்மையோ?
113
   
பேய்க்கரசன் பேசுதல்
 
2116இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும்,
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன்
ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கிக், கொம்பு அசைத்து,
அழுக்கு இயை எயிற்று வாய் அவிழ்த்துக், கூறினான்:
114
   
 
2117“செயல் கடல் கடந்த வெம் வஞ்சச் சேனைகாள்,
மயல் கடல் கடந்த நும் மந்திரத்து, அஞர்
இயல் கடல் கடந்து நான் நீந்தி, இன்பு உறும்
பயன் கடல் கடந்து என, பரிவு அற்று ஓங்கினேன்.
115
   
 
2118“காட்சியும், கருத்து எலாம் கடந்த மாயை தன்
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக, என்
மாட்சியும் கோன்மையும் மறுக்கல் ஆவதோ.
தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள்?
116
   
 
2119“இன்பு உறப் பால் கலந்து ஏதம் ஊட்டுதீர்;
துன்பு உற வெருட்டுதீர்; துதியை ஆடுதீர்;
அன்பு உற அணுகுதீர்; அனைவரும் கனல்
பின்பு உற வருந்துதீர்; பிழைப்பு எமக்கு இதே.
117
   
 
2120“உள்ளிய வஞ்சனை உதவ, அவ் இரு
தெள்ளிய அறிவினோர், திறம்பு இலாத் தவம்
விள்ளிய முறையொடு, வினை கொண்டால் அலால்,
எள்ளிய கசடு உகுத்து எசித்தில் ஆளவோ?
118
   
சூசை மரியை வெல்லுமாறு பேய்களை ஏவுதல்
 
2121“இத் திறத்து, ஆங்கு உறை இரண்டு யூதர்கள்
மைத் திறத்து உளம் கெடின், வழங்கும் வெற்றி என்று,
எத் திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம்,
பொய்த் திறத்து அவரை முன் பொருதல் வேண்டும் ஆல்.
119
   
 
2122“அனைவரும் ஓர் அணி ஆக ஆகவம்
நினைவு அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால்,
வினை வரும் முகத்து, அவர் மெலிய வென்ற பின்,
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம்.
120
   
 
2123“புல்வதற்கு அருஞ் சடம் புணர்ந்த சூட்சியால்,
வெல்வதற்கு அருஞ் சமர் வினை செய்வார்க்கு எலாம்,
ஒல்வதற்கு அரும் பயன் உதவுவேன்“ எனா,
சொல்வதற்கு அருஞ் சினத்து, அரசன், சொற்றினான்.
121
   
பேய்களின் ஆரவாரம்
 
2124அழுந்து விண் தரள் இடி அனைய, கொம்புகள்
கொழுந்து விட்டு அழன்று அரசு அடியில் கூர் பட
விழுந்து, விண் தரள் கெட, வெறி ஒருங்கும் ஆர்ப்பு
எழுந்து, விட்டு இரட்டின, எரியும் கூசவே.
122
   
 
2125கொக்கரித்து இரட்டிடக் குதித்து, உவப்ப அறா
மிக்கு, அரித் திரள் பட, “வெற்றி! வெற்றி!“என்று
எக்கரித்து, அழல் துளி இறைத்து இறைத்தன,
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம்.
123
   
கவிக்கூற்று
 
2126புகழ்ச்சி வந்து உற்ற கால், பொலிந்த மாண்பினார்,
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணிப், போற்றுவார்;
நெகிழ்ச்சி வந்து உதிப்பது நினைக்கிலாத பேய்,
மகிழ்ச்சி வந்து உவந்தன, கடையில் மாழ்கவே.
124