வாமன் ஆட்சிப் படலம்
 
மக்களின் மாசகற்றிய சூசை
 
2653தண் தவத்து அனைய பைம் பூந்
  தருத் திரள் நிழற்றிக் கவ்வும்
மண்டபத்து ஒரு நாள் வைகி,
  மது நலம் பொழி வாய்க் கஞ்சம்
விண்டு, அவத்து எழியும் மாந்தர்
  வீடு உறச் செப்பம் காட்டி,
ஒண் தவத்து இறைவன் சூசை
  உரை விரித்து இமிழின் சொல்வான்.
1
   
 
2654போது வாய் மலர்ந்த போது
  பொதிர்த்து அளி மிடைதல் போல,
ஓது வாய் மலர்ந்த நல் நூல்
  ஒழுகிய அமிர்தத் தீம் தேன்
காது வாய் அருந்தல் வெஃகிக்
  கணம் கொடு எவரும் கேட்ப,
கோது வாய் கிழிந்த புண் மேல்
  குளும் மருந்து உறழச் சொல்வான்.
2
   
வாமன்மன நிலை
 
2655படம் புனைந்து எழுதப் பட்ட
  பங்கயம் எழு வாய் பைம் பூந்
தடம் புனைந்து உறைந்து எஞ் ஞான்றும்
  சைவலம் சிவை கொள்ளா போல்,
வடம் புனைந்து ஒளிறும் மார்பின்
  வடுப் புனைந்து இருண்ட நெஞ்சோடு
உடம் புனைந்து அனைத்தும் கேட்டு.
  ஒத்து ஒழுகிலான் வாமன் என்பான்.
3
   
 
2656சிலை வளர் தடக் கை வீரன்
  செரு முகத்து அசனி அன்னான்;
கலை வளர் உணர்வின், காமம்
  காய் முகத்து அனுங்க மாழ்கி,
உலை வளர் அழல் முன் பைம் பூ
  உலந்தென மனதில் சோர,
விலை வளர் மகளிர் போரில்
  வீரம் அற்று எஞ்சும் நெஞ்சான்.
4
   
 
2657விது முகத்து எறித்த கற்றை மிடை
  இருள் மூழ்கிற்று அன்ன,
பொது முகத்து உரைத்த யாவும்
  பொது அறத் தனக்கு என்று உள்ளி,
மது முகத்து உணர்த்தும் நூலால்
  மனத்து அறம் விரும்பி, பின்றை,
முது முகத்து உருத்த காமம்
  முதிர் வினை ஆற்றா நொந்தான்.
5
   
 
2658பொறி குலாய்க் கிடந்த மார்பில்
  புண்ணியம் ஒரு பால் ஓர் பால்
செறி குலாய்க் கிடந்த காமம்
  செருப் பட, நடுவில் பட்ட
வெறி குலாய்க் கிடந்த மாலை
  விகன்றென நெஞ்சம் சோர,
நெறி குலாய்க் கிடந்த சீல நிலை
  விழைந்து உரைக்கல் உற்றான்.
6
   
கேட்டவண்ணம்செய்தரிது என வாமன்கூறல்
 
2659“சுருதி நூல் உயிர் பெற்று அன்ன
  சுடர்த் தவத்து உணர்வின் மிக்கோய்,
கருதி நூல் உரைப்பக் கேட்டுக்
  களிப்பு உறின், சிலம்ப வீரத்து
இருதி நூல் முடவன் கேட்டது
  என்ன நான் கனிந்தது அல்லால்,
பொருது இந் நூல் ஒழுக்கத்து அஞ்சா
  போதலே ஆற்றாது“ என்றான்.
7
   
மனத்துணிவும்பழக்கமும் வேண்டும்
என்பதை சூசை விளக்குதல்
 
2660துறை கெழும் அரு நூற்
  கேள்விச் சுருதியின் வடிவோன் கேட்டு,
நறை கெழும் அலங்கல் மார்பன்
  நயப்பு உற முகமன் நோக்கி,
நிறை கெழும் அரிய காட்சி
  நிலைமையால் உளமும் கண்டு,
முறை கெழு வழுவா நீதி முகைத்த
  நூல் மொழிந்தான் மன்னோ
8
   
 
2661“கற்ற நூல் எளிய தோன்றிக்
  கற்கும் முன் அரியது அன்றோ?
மற்ற நூல் போல வாய்ந்த
  மறை நெறி ஒழுகல். வில்லால்
பெற்ற நூல் வீர வல்லோய்,
  பிறந்த போது அறிந்தாய் கொல்லோ?
உற்ற நூல் உறும் முன் நீ அஃது
  உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ?
9
   
 
2662“வில் செய்வார் கொண்ட ஆறும்,
  வெங் கணை தொடுத்த ஆறும்,
கல் செய் தோள் இருந்த ஆறும்,
  கண் பொருத்துகின்ற ஆறும்,
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும்
  குறிப் படல் அன்றிக் காணா,
மல் செய்வார் தொழிலைக் கண்டார்,
  மைந்தர் செய் தொழிலோ‘ என்பார்.
10
   
 
2663“புகன்ற அம்பு எழுதும் ஆறும்,
  பொருது அவை விலக்கும் ஆறும்,
இகன்று அமர் நீந்தும் ஆறும்,
  எஃகினுள் காக்கும் ஆறும்,
அகன்று அமர் வளைக்கும் ஆறும்,
  அதிர வாள் சுழற்றும் ஆறும்
விகன்று அமர் காணார் கண்டால்,
  வியந்து உளம் மாழ்வர் அன்றோ?
11
   
 
2664“சூல் புறத்து அழல மின்னிச்
  சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து
மேல் புறத்து எழும் கார் ஒத்த
  வேழம் மேல் எதிர்த்த போழ்தில்,
கால் புறத்து ஒளிக்கும் ஆறும்,
  கைப் புறத்து இரியும் ஆறும்,
வால் புறத்து ஒழுகும் ஆறும்
  வாய் உரை வழங்கும் ஆறோ?
12
   
 
2665“நிரப்பு அற நெடுந் தேர்ப் போரும்,
  நிண மருப்பு இபத்தின் போரும்,
பரப்பு அற இவுளி பாய்ந்து
  படர் துகள் போரும், மற்றக்
கரப்பு அறக் கற்ற போரும்
  கடிது உனக்கு இவையே தோன்றாது
உரப்பு அறசர் உளம் மூழ்கி
  ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய்!
13
   
 
2666“ஏர் விளை மணியின் சாயல்,
  எண்ணிய அளவில், சொல்லும்
சீர் விளை இனிய யாப்பில்
  செய்யுளைப் பொருத்துவாரும்,
கூர் விளை துறையின் நல் நூல்
  கொளும் முனர், அன்னார் தாமே
பார் விளை குன்றம் தாங்கல்
  பாடலின் இனியது என்பார்.
14
   
 
2667“ஆடகம் ஒளிறும் ஆணி
  அலமரத் திண் கொண்டு, எங்கும்
மாடக நரம்பை நோண்டித்
  மாத்திரை நிறைய வீக்கி,
தோடு அகடு இழி தேன் கீதம்
  தொகு விரல் உலவி ஆர்க்கும்
நாடகம் கண்ட யாரும்,
  ‘நமக்கு எளிது‘என்பார் கொல்லோ?
15
   
 
2668“பகை படக் கலந்த வண்ணம்
  பழுது இல் ஓவியம் தோன்று ஆறும்,
நகை படப் பசும் பொன் வீக்கி
  நவிர் அணி அமைக்கும் ஆறும்,
வகை பட நரம்பின் பாலால்
  வந்த நோய் உரைக்கும் ஆறும்
தொகை படப் பழகாத் தன்மை
  தொழில் எலாம் அரிய அன்றோ?
16
   
 
2669“பல் தொழிற்கு எல்லாம் இஃதே
  பால் எனின், அறத்தின் தூய
நல் தொழிற்கு இதுவும் அன்றி,
  நசைக்கு இணை பயன் உண்டாம் ஆல்
சில் தொழில் பல நாள் கற்றும்
  திருந்து இலாரேனும், இன்ன
மல் தொழில் பயன்பட்டு ஓங்க
  மனத் துணிவு ஒன்றே சால்பு ஆம்.
17
   
 
2670“வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா.
சிந்தையில் சான்றோர் எள்ளும் தீ வினை ஒன்றை நீக்கி,
நிந்தை இற்று இனியதூ ய் நல் நெறி உறத் துணிதி“ என்றான்.
18
   
பெண்ணாசையை ஒழித்தலரிது என வாமன்மீண்டும்உரைத்தல்
 
2671“துணியும் பாங்கு அரியது அன்றோ,
  தூய நல் சுருதி வேடம்
அணியும் பாங்கு அறத்தின் வாளால்
  ஐம்பொறி முழுதும் கோறிக்
கனியும் பாங்கு அரிய நோன்பின்
  கடவுளோய்?“ என மீண்டு உள் நோய்
தணியும் பாங்கு உயிர்ப்பு வீக்கிச்
  சழுக்கு அற வாமன் சொன்னான்:
19
   
 
2672“நரம்பை என்பி நிரை பின்னி,
  நல் செம் புனல் தோய்த்துப்,
பரம்பை போர்த்து, உள் தசை நிரப்பி,
  படம் மேல் மயிர் பொலிய
வரம்பை அகல் பொற்பு இழைத்து,
  ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர்
குரம்பை செய்தான் பெருந் தச்சன்.
  குறை என்பவர் உண்டோ?
20
   
 
2673“ஆதலேனும், நாறிய வெந்த
  அகில் பூம் புகை தவழ்ந்து,
காதல் செய் நல் சுதை மூழ்கி,
  கதிர் செய் மணிக் கலன் பெய்து,
ஊதல் செய் வண்டலம் சூடி
  உயிரின் பேணினும், ஊன்
ஈதல் செய் நாறு உடற்கு
  உயிரை இறுகப் பிணித்தனனே.
21
   
 
2674“மெய்யால் உயிரே உணர்வு
  எய்த, மெய்யும் தான் உணரா
பொய்யால் உயிரே கெட மலி பல்
  புரைகள் மூழ்கி, உடல்
மொய்யால் உயிர் கொல் பகை அல்லால்,
  முனைந்தோர் வேண்டுவதோ?
அய்யா, உயிர் உய் வகை அரிது உள்
  அடும் இப் பகை வினையால்!
22
   
 
2675“உள்ளே வைகும் இப் பகையோடு
  உடன்பட்டு, எப் புறமும்
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து
  இகல் செய் முறை அரிதே
தெள்ளே வைகும் கவின் காட்டித்
  தீம் பால் கலந்த விடம்
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி
  வதை செய் பகை அதுவே.
23
   
 
2676“சொன்ன பகையும் யாது என்னின்,
  சூட்சி நலம் மிக்கோன்
இன்ன உடம்பின் துணையாக
  எழில் பூங் கொடிச் சாயல்
மின்ன எழுதிச் சுரி குழலார்
  மிளிர்ந்த இனம் செய்தான்.
அன்ன இனம் தான் உயிர் அற நூல்
  அனைத்தும் கொல் பகையே.
24
   
 
2677“மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து
  ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து,
ஒன்னார் வெம் போர் கடந்து, உரும்
  ஒத்து உள்ளத்து அஞ்சா நான்,
பொன் ஆர் மணிப் பூண் அணிச்
  சாயல் பூங் கொம்பு அனையார் போர்
முன் ஆர் நிற்பார்!‘ என்று எண்ணி
  முரிந்து உள் குழைகிற்பேன்.
25
   
 
2678“முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி
  முயல் நல் வினை உணர்கால்,
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால்,
  எரி பூண் தூங்கி மின்ன,
கதிர் செய் குழை வில் வீச, இரு
  கண் செந் தீப் பொழிய,
பொதிர் செய் எரி முன் மெழுகு என உட்
  புலன் நைந்து உருகும் அன்றோ?
26
   
 
2679“இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும்
  இயல்பு உற்று அவிர் கூந்தல்,
மரு விஞ்சு அகில் பூந் தவிசு
  இருளே வகை துஞ்சு இடம் என்பார்.
செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரைச்
  செகுக்கும் காடு அதுவே;
கரு நஞ்சு அதுவே; உயிர் உண்ணும்
  கடுங் கூற்று அது தானே!
27
   
 
2680புருவ வில்லால் கண் கணைகள் புண்பட்டு உள் உயிரும்
உருவ விட்டால், பல நாளும் உற்ற உணர்வு அழிந்து,
வெருவ நெஞ்சம் உள் கலங்கி, விளைந்த புண் காட்டி
வருவது அல்லால், இச் சமரின் மருளாது எவர் உண்டோ?
28
   
 
2681“கடலைக் கடைய அமிர்தமொடு
  கடுவும் பிறந்தது எனப்
படலைக் கதையாய் அறிந்தது அலால்,
  பயனாய்க் கண்டது இலை.
மடலைக் குடைய ஊறிய
  தேன் வதைத்த சொல் அமிர்தத்து
உடலைக் கொலை செய்து உயிர்
  உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே.
29
   
 
2682“குழலால் பிறழாது உயிர் விசிப்பார்;
  குரலால் நஞ்சு உயிர்ப்பார்;
கழலால் சிலம்ப மருட்டிடுவார்;
  கண்ணால் கணை தொடுப்பார்;
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார்;
  நிறை தம் உறுப்பு எல்லாம்
அழலால் சுடச் சுட்டு, உயிர் உண்டு உண்டு,
  ஆற்றாப் பசி கொள்வார்.
30
   
 
2683“போது அம் கையார் உளரிய
  பண் புழுங்கிச் செய் கொலையோ
ஏதம் கொண்டார் எண்ணுவர்; மற்று
  எண்ணும் பாங்கு அரிதே.
கீதம் பாலாய்ச் சுரந்தெனத்தீய்க்
  கிளையோ, வேலோ, நச்சு
ஓதம் கொல்லோத் இரு செவி
  ஊடு ஊட்டி உயிர் கொல்வார்.
31
   
 
2684“என்னே மற்றது யான் உரைப்பேன்?
  எரி விண்டு இடித்த அசனி
மின்னே துடராக் கால் உளதேல்,
  மின் பெண் நசைக்கு இறுதல்
பின்னே துடராக் காலம் இலை
  பெரும் புண் நீர் ஒழுக
அன்னே அறிவேன் நான் அல்லால்,
  அறியாய், பொறி வென்றோய்!
32
   
 
2685“சாதல் மிகவே கார் முக வெஞ்
  சரத்தின் மழை பனிப்பது
ஆதல் மிகவே கணைக் கண்ணார்
  அணிப் பூஞ் சாயலின் மேல்
காதல் மிகவே, கற்ற பல
  கல்வி எவன் செய்யும்,
ஓதல் மிகவே நூல் துறை நீத்த
  உணர்வோய்? எனத் தொழுதான்.
33
   
சூசை மீண்டும்கூறத்தொடங்குதல்
 
2686“காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும்
  கல்வி நலம் என்றாய்
நாதன் மிக்க நீதி வளர்
  நரகத்து எய்தியகால்,
சாதல் மிக்க இன்பு உண்டார்
  தாம் ஆங்கு எவன் செய்வார்,
வீதல் மிக்க மிடல் வேலோய்?“ என்றான்
  வினை வென்றான்.
34
   
 
2687என்றான் சூசை; என்று இரங்கி,
  எரி தன் நோய் காட்டி
நின்றான் அவனைத் தழுவி, அழல்
  நிகர்த்த காம் அவிப்பத்
தன் தாரை அம் கண்ணீர் ஆட்டி,
  சாற்றிக் காட்டிய புண்
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன
  நயந்தே மீண்டு உரைத்தான்:
35
   
காமநோயின்கொடுமையும்தீர்க்கும்வழிகளும்
 
2688“கை வளர் மருத்துவர் அன்றி, காய்ந்த நோய்,
மெய் வளர் பிணி உளர் அறிதல் வேண்டிலா,
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்திக் கொண்டனர்
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ?
36
   
 
2689“புனம் செயும் பங்கமே புனம் ஒழித்து என,
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின்,
தினம் செயும் புகர் வினை தெரிகிலார் அறத்து
இனம் செயும் பயன் பட ஈட்டல் ஏலுமோ?
37
   
 
2690“நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய
புகை வழி உளத்து இருள் பொதுள, கொண்ட நோய்க்
தொகை வழி உணர்வு அரிது எனினும், சூழ்ந்த அவ்
வகை வழி அறிதி நீ. அறிந்தும் மாழ்கல் ஏன்?
38
   
 
2691“அள்ளிய இருள் அறும் அலங்கல் வேலினோய்,
தெள்ளிய இடத்திலும் தெளிந்து நஞ்சு உணல்
உள்ளிய பேதையர் ஒப்ப, சிந்தையில்
எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன்?
39
   
 
2692“நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால், இமிழ்
விஞ்சு அமிழ்து ஆகுமோ? வினை கொள் நல் உயிர்
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும்,
நெஞ்சு அமிழ்ந்திய நசை நீக்கு இல் ஆவது ஏன்?
40
   
 
2693“காதலே பாசம் ஆய்க் கால் கை வீக்குதல்
ஆதலே, பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய்;
காதலே பாசம் ஆய், காதல் மிக்கு உளத்து
ஆதலே, நாள் தொறும் இறுக்கல் ஆவது ஏன்?
41
   
 
2694“கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து,
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய்;
கொந்து என எரிந்த தீ தூண்டிக் கொண்டு, நீ
அந்து இல நசைக்கு அறல் ஈட்டல் ஆவது ஏன்?
42
   
 
2695“பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால்,
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய்;
பாங்கு எழும் காஞ்சிரப் பழன் விரும்பி உண்டு,
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன்?
43
   
 
2696“நெடிது நாள் உற்ற நோய் மருந்தின் நீர்மையால்
கடிது தீர் தரல் அருங் கருமம் ஆம் என்றாய்;
நெடிது நாள் உற்ற நோய் நீள, மீண்டு உயிர்
கடிது மாய்ந்து ஒழிதர, கடு உண்பு ஆவது ஏன்?
44
   
 
2697“கோட்பு அரும் எழில் எனக் கோதையார் முகம்
மீட்பு அரும் விடம்; அதை விழித்து உய்யார் என்றாய்.
கோட்பு அரும் எழில் உயிர் குழைய, நாள் தொறும்
மீட்பு அரும் விளிவு உற, விழித்தல் ஆவது ஏன்?
45
   
 
2698“மால் வளர் விரக நோய் வழங்கும் போரினை
வேல் வளர் சமரில் நீய் நோக்கல் வேண்டு இலா.
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல்; இவண்
கால் வளர் ஓட்டமே வெற்றி காக்கும் ஆல்.
46
   
 
2699“பட்டு இலாக் கடை இலாப் பாவையார்கள் தம்
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய்;
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது
வெட்டு இலால் கொல்லுமோ, வெயில் செய் பூணினாய்?
47
   
 
2700“வள் உறப் பகைத்து உயிர் வருத்தும் மெய் அலால்,
அள் உறக் கொடுமை கொண்டு அடும் புறப் பகை
உள் உறக் கண் முதல் உள்ள வாயில் ஐந்து
எள் உறத் திறப்பது ஏன், எரிசெய் வேலினோய்?
48
   
நிலையாமை உணர்வு
 
2701“இருண்ட இருங் கனத்திடை எரிந்த மின் என
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம்
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை; அது ஓர்ந்து உளம்
தெருண்டு இருந்து இமத்திடைக் காண்மின் தேறவே.
49
   
 
2702“பகைத் தகத் துகிர் துறை படலை முத்து எனும்
தகைத்து அகப் பல் இதழ், பதவில், தார் விழி,
நகைத் தகப் பிறை நுதல், நளின வாய் என
மிகைத் தகத் துகள் தரும் விழைந்த பொற்பு இதோ!
50
   
 
2703போது என மலர்ந்து எழில், போதின் வாடி அக்
கோது என மெலிவன மூப்புக் கொண்ட கால்.
ஈது என உணர்கிலாது, இன்பம் வேண்டுவர்
தீது என விளைத்த பின் தீயது எய்துவார்.
51
   
 
2704“இன்று உளார் நாளையே இறப்பர், அன்றி, மற்று
அன்று உளார் விழைந்தவை அருகில் போகிலா
நின்று, உள் ஆய்செய் துகள் நெருங்கிப் பின் உறச்
சென்று, உளாய் விளை துயர் செப்பவோ?“ என்றான்.
52
   
 
2705“ அளி முகத்து இனையவும் பலவும் ஆரியன்
ஒளி முகத்து உரைத்தவை அவன் உணர்ந்த பின்,
வளி முகத்து அலைஎன மனத்து அலைந்து அலால்,
தெளி முகத்து உறுதி ஓர் துணிவு தேர்ந்து இலான்.
53
   
பாவமொழிக்க நாக நினைவுண்டாக்குதல்
 
2706“கைக்கும் ஓர் மருந்து பாலர்
  கனிய உண்டு, உயிரும் உண்ண
இக்கும் ஓர் விளிம்பின் நீவி
  இட்டு என, இயம்பல் என்னோ?
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற
  உடன்ற அழல் வேண்டும்‘ என்ன
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை
  மறை நலோன் வகுத்தான் மீண்டே:
54
   
 
2707“புள் முழுது இறைஞ்சும் கோட்டுப்
  புழங்கிய களிற்று ஏறு அன்னோய்,
விண் முழுது இறைஞ்சும் வேதம்
  விலக்கிய தீமை நீங்கி,
உள் முழுது இருள் அற்று ஊக்கத்து
  ஒழுகவே துணிந்தால் அல்லால்,
மண் முழுது இவர் தீது ஒவ்வா
  மலி துயர் நிரையம் சேர்வாய்.
55
   
 
2708“தொல்லை இம் மருளின் ஊழ்த்த
  துகள் விடத் துணிதல் ஒன்றோ
ஒல்லை இந் நசை நீங்காதேல்
  ஊழலில் வேதல் ஒன்றோ,
எல்லை இவ் இரண்டில் ஒன்றே
  இயாவரும் தவிராது என்ன,
வல்லை இவ் உணர்வில் தேர்தி,
  மாற்றலர் வணங்கும் வேலோய்!
56
   
 
2709“மீய் முகத்து உடையில் தோன்றும்
  விசும்பு சூழ் வரையில் தூங்கி
தூய் முகத்து அலைகள் ஓட்டித்
  துள்ளி வீழ் அருவி போல,
வேய் முகத்து இனிமை காட்டி
  விரைவில் ஓடும்இளமை நம்பேல்,
காய் முகத்து அதிர்கால் வீசக்
  காய் முதல் வீழும்“ என்றான்.
57
   
மக்கள்நரகத்தைப் பற்றி விளக்குமாறு கேட்டல்
 
2710காய் நரகு என்ற போழ்தில்
  கணம் கொடு நின்றார் சொல்வார்:
“தீய் நரகு என்பது அல்லால், தீ
  நரகு எந் நாடு? எப் பால்?
நோய் நரகு அரசர் பேயோ?
  நுகர்ச்சியும் நிலையும் யாதோ?
போய் நரகு உறைவர் யாரோ?
  புலமையோய், விரித்துச் சொல்வாய்.
58
   
 
2711“வீய் முதிர் மதுவின் தீம் சொல்
  விரித்த நூல் கல்வி மிக்கோய்,
தீய் முதிர் உணர்வின் தீய
  செருக்கொடு எம் உயிரை உண்ணும்
பேய் முதிர் குலம் யாதோ? அப்
  பேய்கள் செய்தவன் ஆர்? செய்த
நோய் முதிர் கருமம் யாதோ?
  நுவன்று இவை பணியாய்“ என்றார்.
59
   
சூசை நரகத்தைப்பற்றி விளக்க முற்படுதல்
 
2712“இனியவே கேட்டீர். இந் நாள்
  எய்திய உணர்வின் தாழ்ந்து
முனிய வேம் அள்ளல் புக்கு
  முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின்,
கனியவே பொன்றுங் கால் அக்
  கனல் உறாது உவப்பீர்“ என்னப்
பனிய வேய் அலர்ச் செவ் வாயான்
  பணித்து, மற்று இதனைச் சொன்னான்.
60
   
 
2713“ஆடிய கடவுள் அன்றி
  அனைத்துமே படைப்பு உண்டாகி,
நீடிய உலகம் மூன்றும்
  நிமலனாம் ஒருவன் செய்தான்.
கோடியது எவையும் கோதால்
  கோடியது அன்றி, முற்பால்
வாடிய குறை ஒன்று இன்றி
  வனப்பு உற முடித்தது அன்றோ?
61
   
 
2714“கண் புலத்து உருவில் புல்லாக்
  கவின் நலம் தீட்டி, வாய்ந்த
உள் புலத்து உடலம் இல்லா
  உயிர் என விழுப்பம் ஓங்க,
மண் புலத்து இணை ஒன்று இல்லா
  மனங்களை எண் இல் நாதன்
விண் புலத்து இறைவற் சூழும்
  வீரர் என்று அமைத்தான்“ என்றான்.
62
   
தேவர்களும்சம்மனசுக்களும்ஒரேகுலமா என வாமன்கேட்டல்
 
2715“கடவுளர் தேவர் என்னும்
  களி கெழுங் குலமே தானோ,
தடவு உளர் வணங்கும் நல் நூல்
  தகுதியோய்?“ என்ன வாமன்,
“முடவு உளர் பறக்க வெஃகும்
  முயல் என, பித்தர் காட்டும்
அடவு உளர் மருள் என்? கேண்மின்,
  அறைகுதும்“ என்றான் சூசை.
63
   
சூசை,அவர்,பெயரால்தான்விண்ணவர்-தேவர்அல்லர் எனல்
 
2716“விண்ணவர், அமரர், உம்பர்,
  மேலினர், அமுதர், அய்யர்,
பண்ணவர், வானோர் என்னும்
  பல் பெயர் தகுவது; அல்லால்,
திண் அவர் படைப்பு உண்டு
  ஆகித்தேவர் என்று உரைக்கல் வேண்டா.
நண் அவர் வணங்கும் தேவ
  நாயகன் துணை அற்று ஒன்று ஆம்.
64
   
 
2717“வான் உறை குலத்தோர் ஆகி,
  வரங்களும் வயமும் மிக்கார்,
கோன் உறை கோயில் வைகிக்
  கோக் கணம் என்னத் தோன்றின்,
கான் உறை உலகில் நாம்
  கொள் கசடு அற வரம் தந்து ஒம்ப
மான் உறை வளம் இல்லாராய்,
  வணக்கு உரித் தேவர் அல்லார்.
65
   
வானோரின்செயலும், தேவர்களுக்கும்
வானோர்க்குமுள்ள வேற்றுமையும்
 
2718“வரம் தரும் தன்மைத்து எல்லா
  வையகத்து ஒன்று ஆம் நாதன்
புரந்த அருங் குணம் தன் பாலாய்,
  புகன்று அவன் ஏவும் தன்மைத்து
உரம் தரும் உறுதி சொல்லி,
  உதவிய வரங்கள் கேட்டு
சுரந்து, அருந் துயரில் தேற்றும்
  துணை செயல் வானோர் பாலே.
66
   
 
2719“விண் எனும் பதியோர் ஆகி,
  மேவி நீர் உரைக்கும் தன்மை
மண் எனும் பதியோர்க்கு அன்றி,
  வானவர்க்கு ஒவ்வாப் பால் ஆய்,
கண் எனும், இமையார் என்னும்,
  கடி மலர் வாடாது என்னும்,
பெண் எனும், ஆணும் என்னும்
  பெயர் தகாது உரு இலார்க்கே.
67
   
 
2720“திருத் தகும் தேவர் என்று,
  செயிர் தகும் நுமது காமத்து
உருத் தகும் கதைகள் வீக்கி,
  உளத்து உளை விரக நோயின்
கருத் தகும் வினைகள் பாவிக்
  கைப் படை பலவும் தோற்றி,
செருத் தகும் பகையும் தம்மில்
  திளைத்து உளம் மெலிவார் என்பீர்.
68
   
 
2721“சிட்டு இடை வான் நின்ற உங்கள்
  தேவர் பொன் உலகம் தன்னில்
நெட்டு இடை நெறிகள், நீண்ட
  நெற்றி அம் குன்றம், குன்றா
மொட்டு இடை மலர்ந்த பொய்கை,
  மொய் திரைக் கங்கை, கான் விள்
மட்டு இடை மலர்ந்த சோலை
  வகுத்து மண் ஒப்பச் சொல்வீர்.
69
   
 
2722“இனையவே பலவும் கூறி,
  இரு விழிக் குருடர் யானை
அனையவே, முசலம் திண் கை,
  அடி உரல், செவிகள் சூர்ப்பம்
வனையவே உரைத்த வண்ணம்,
  வடு மனுக் குலத்தின் சாயல்
புனையவே உயர்ந்த வானோர்
  புன்மையில் வளைதல் நன்றோ?
70
   
 
2723“ஒக்க அளவு அகன்று, மின் மீன்
  ஒத்து இராப் புறத்து நீக்க,
தொக்கு அளவு அகன்ற சீர் கொள்
  சுடர் உலகு உரிமை அங்கண்
புக்க அளவு அறிதல் அன்றிப்
  புன் கரத்து உளரும் தன்மை,
நக்கு அளவு அஃகும் இச் சீர்
  நயத்து அளவு உணர்தல் ஆமோ?
71
   
வானோருட் சிலர்பேய்களானார்எனல்
 
2724“உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு
  உய்த்து உம்பரைப் படைத்த பின்னர்,
தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம்
  சிலர் உறீஇ, இறைவன் ஏவிக்
கொள்ளும் ஆறு அகன்ற தீய்மை
  குணித்த அளவு உரைத்த சாபத்து,
எள்ளும் ஆறு அகன்ற வானோர்
  எரி உழிப் பேய்கள் ஆனார்.
72
   
 
2725“பேய் வினை வெருவக் கண்டு, ‘அப்
  பேய்கள் செய்தவன் ஆர் என்றார்.
தூய் வினை வயத்தோன் செய்த
  தொழில் கெட உண்ர்ந்த பாவம்
போய் வினை கொணர்ந்து, பேய் தம்
  புழுங்கு இனம் செய்தது என்னா,
தீய் வினை உளத்துள் புக்கால்
  செய் பகை அறிதீர்“ என்றான்.
73
   
 
2726“வானவர் ஆக வான்மேல்
  வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டு
தானவர் ஆகச் செய்த
  தகுதி மேல், கொடிய பாவம்
ஊன் அவர் எமைப் பகைத்தால்
  வறும் சிதைவு அளவோ?“ என்று ஆங்கு
ஆனவர் அஞ்சிக் கூற,
  அருந் தவன் இனைய சொன்னான்:
74
   
அசுரே பேய்கள்
 
2727“வானவரை உரைக்குங் கால்
  வாய்மை அற உணர்ந்தது போல்,
தானவரை என்னுங் கால்
  தடம் நீங்கி மயல் வேண்டாம்.
ஆனவரை வேறு எண்ணி
  அழல் கிடக்கும் வெறி வேறு ஆய்,
நான் அவரை மறை விதித்த
  நல் நூலால் எண்ணேனே.
75
   
 
2728“விண்ணோர்க்குப் பகை செய்து
  வெல் அறியா, அறம் குன்ற
மண்ணோர்க்கு வினை செய்து
  மன் உயிர்கள் நரகு உய்ப்ப,
புண் நோய்க்கு வைத்தன தீப்
  புழுங்கும் என, தாம் கதி நீத்த
உண் நோய்க்குத் தகப் பகை
  ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே.
76
   
அசுர ர்க்குக் கூறுவன பேய்களைக்குறிப்பன
 
2729“நல் செய்கை அனைத்தும் அற
  நலம் பகைத்தோர், தூய தவம்
தன் செய்கை நெடு நாளும்
  தாம் முடிப்ப வரம் பெற்று,
வில் செய்கை அமர் பூட்டி
  விண்ணவரைப் புண்படுத்தி,
மல் செய்கை வழங்கு அசுரர்
  என்று அறைதல் மருள் அன்றோ?
77
   
பேய்கள்வாழும்நரகம்
 
2730“வீடு இழந்த தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா,
வீடு இழந்த தன்மை, எரி பிளிர்ந்து இடித்துப் பிளந்த முகில்
நீடு இழந்த அசனிகள் போல், நீதி பரன் வயப் பயத்தால்
சேடு இழந்த நரகு ஊழித்தீ வீழ்ந்து புதைந்தனவே.
78
   
 
2731“திரை உடுத்த பார் அகட்டுச்
  சேண் படர் தாழ் குழி தோண்டிக்
கரை உடுத்த கடல் பொங்கிக்
  கடந்து எழுவ போல் அலைகொண்டு,
உரை உடுத்த நிகர் கடந்த
  ஊழித்தீ குடி வைகப்
புரை உடுத்த உருக்கொடு பேய்ப்
  புதைத்து அலறும் நரகு அன்றோ?
79
   
 
2732“இடிகள் தவழ் ஓதை மறுத்து
  எரிந்து அயர்வோர் ஓதை எழ
குடிகள் தவழ் இடும்பையொடு
  கொடியது எலாம் மொய்த்து அடர
நொடிகள் தவழ் போழ்து பல
  நூறு ஆண்டு என்று உண்ர்ந்து அலற,
கடிகள் தவழ் இருள் தவழ் தீக்
  காணி எனும் அருஞ் சிறையே.
80
   
பேயோடு பாவிகள்உறும்துயரம்
 
2733“கண் மல்கும் துயர் பணித்த
  கலுழி அவியாக் கனலாய்,
மண் மல்கும் துயர் வெள்ளம்
  வாழ்வு உருவாய் இனிது!‘ என்ப
உள் மல்கும் துயர் ஆற்றாது
  உளைந்து அழத் தாம், மற்று உயிரைப்
புண் மல்கும் துயர்ப் படுத்தல்
  புதவு இடத்துப் பேய் அரசே.
81
   
 
2734“ஓர் என்பான் தனை ஏத்தார்,
  ஒன்று ஆம் மெய்ச் சுருதி வழி
சீரின் பால் நடவாதார், சினம்
  காமம் களவு கொலை
பாரின்பால் நச்சி அடும்
  பாவம் முடித்தவர் எல்லாம்
சூரின்பால் நரகு எய்திச்
  சோகு இனத்தோடு உளைந்து எரிவார்.
82
   
 
2735“வீய்த் துணையும், அகித் துணையும்,
  வேழமுடன் அரித் துணையும்,
தீய்த் துணையும், செயிர்த் துணையும்,
  சீறிய தீயோர் துணையும்,
நோய்த் துணையும், சினத் துணையும்,
  நூறி அடித்து உரம் சினந்த
பேய்த் துணையும் அன்றி, நலம் பெறும்
  துணை அற்று, இருப்பு அரிதே.
83
   
 
2736“புல்லு அவையே பூரியராய்,
  புழுங்கிய வெஞ் சினத்தினராய்,
கொல் அவையே குணுங்கு இனங்கள்
  கொந்து அழலின் சீறி உடன்று,
அல்லவையே செவி கேட்பது அல்லது,
  அடும் துயர் ஆற்ற
நல்லவையே ஒன்று உரைக்கும்
  நல் துணை அற்று, இருப்பு அரிதே.
84
   
 
2737“இத் துணை கொண்டு உளம் மாழ்கி,
  எய்திய தன் செயிர் செய்யும்
அத் துணை கொண்டு ஒழியாதால்
  அலைந்து அலைந்து உள் துயர் பொங்க,
மைத் துணை கொண்டு, இருண்ட புகை
  மண்டி எழும் இருள் சிறையாய்
மொய்த் துணை கொண்டு, எரிப் பீடை
  முறை மொழிவ கேண்மின் அரோ:
85
   
நரக நெருப்பும்உலக நெருப்பும்
 
2738“நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை
  நுதலின் உள் பனிப்பவே, ஊழித்
தீய் நிலை என்றால், உதவிய இன்ன
  தீ என உணர்தலும் வேண்டா
வேய் நிலை வரையை நக்கினால் அத் தீ
  வெந்து, கண் இமைக்கும் முன் உருக
காய் நிலை கொண்டு, நாரலை நிலையில்
  காய் கொழுந்து எழுந்து எரி தீயே.
86
   
 
2739“ஆதி தன் அருள் இத் தழலை நல்லவர்க்கும்
  ஆதர உதவியின் படைத்து,
நீதி தன் மலிந்த சினத் திறம் காட்டி
  நெறி தவிர் தீயரைத் தீக்க
பூதி தன் அழலைப் படைத்தனன் என்றால்,
  பொருவ இவ் இரு தழல் நோக்கின்,
சோதி தன் முகத்து மின்மினி போன்று
  அச் சுடர் முகத்து இச் சுடர் நிலையே.
87
   
நரக வேதனை
 
2740“பொறிப் படப் புழுங்கிக்கொழுந்து விட்டு எரிந்து,
  புகைத் திரள் இருண்டு எழ மண்டி
நெறிப் படச் சுடரா, சுடச் சுடச் செந்தீ
  நீறும் ஆகாது எலாம் வெந்து,
குறிப்படப் புணர்ந்த செயிர் அளவு உடற்றி,
  குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு,
செறிப் படத் திரண்டு, வெளிப்பட கண் வாய்
  செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவாா
88
   
 
2741“படுப்பதற்கு அமைந்த பூ அணை தீயே;
  படும் பசிக்கு உணவுகள் தீயே;
உடுப்பதற்கு அணியும் கலிங்கமும் தீயே;
  உயிர்ப்பு உளி ஆவியும் தீயே;
கடுப்பதற்கு எரிந்த தீய்ப்புனல் ஆட்டிக்
  கனல் கடல் நீங்கு இல நீந்தி,
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி,
  அலைந்து அலைந்து, எரிந்து உளைந்து அயர்வாா
89
   
 
2742“சூளையில் அடுக்கித் துறுவிய கல்லோ,
  சுழன்றன பூட்டையில் திலமோ,
மூளையில் புதைமுள் பிணங்கலோ, நாணி
  முறுக்கு அதோ, கதிரினுள் கழையோ,
பாளையில் துவன்ற முகைகளோ தம்மில்
  பதைப்ப உள் நெருங்கிய தன்மை
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழாப்,
  புதவு எரி புதைத்து வெந்து எரிவார்.
90
   
 
2743“தூய் வளர் மலர்ப் பூஞ் சேக்கையைப் பரப்பிச்
  சூழ் அகில் நறும் புகை தோய்த்து
மீய்வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின்
  வினையினால் நரகு உறீஇ, அங்கண்
தீய் வளர் சுள்ளை புதைத்துளி கால் கை
  திருப்பவும் நீட்டவும் ஆற்றா
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால்
  நுதலி நான் இயம்பிடல் தேற்றேன்.
91
   
பேய்கள்தரும்தண்டனை
 
2744“மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு பால்,
  மிடைந்தன குணுங்கு இனம் ஒரு பால்
அடைந்து தாம் உடற்றிச் சீறிய பகையோடு,
  ஆகுலக் கடல் கரை அனைத்தும்
உடைந்து பாய் வெள்ளம் முனிவொடு தீயோர்
  உடல் பதைத்து உளைந்து அதிர்ந்து அலற,
விடைந்து பாய் வெறிகள் படுத்திய பீடை
  விட்டு ஒழியாது, எரிந்து உளைவார்.
92
   
 
2745“சொரிவன மழை போல் அழல் விட ஒரு பால்,
  தோல் உரித்து எரிப்பன ஒரு பால்;
எரிவன அணை மேல் விரிப்பன ஒரு பால்,
  ஈய நீர் ஆட்டுவது ஒரு பால்;
கரிவன உடல்கள் துமிப்பன ஒரு பால்,
  கனல் திரள் ஊட்டுவது ஒரு பால்;
திரிவன உருவால் வெருட்டுவது ஒரு பால்,
  தேறு இல பகைத்தன பேயே.
93
   
 
2746“வாச நெய் என்ன உருக்கிய ஈயம்
  வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி,
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி,
  கொந்து எரிச் சய மெய்ப்பை போர்த்து,
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து,
  பூந் தவிசு உச்சி வாழ்க! என்ன
வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி
  விரகரை வருத்துவது அன்றோ.
94
   
 
2747சொறி படர் அரியும் உரகமும் மலமும்
  சுடச்சுட அமிர்து என ஊட்டி,
வெறி படர் மலர்ப் பூந் துகில் கொடு பைம் பூ
  மெல் உடல் நீவுதும் என்னப்
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால்
  புண்பட உடல் எலாம் கீறி,
செறி படர் விரக நோய் மருந்து என்னச்
  சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே.
95
   
 
2748“அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு
  அலகைகள் வருத்திய வண்ணம்
உள்ளும் ஆறு அகன்று, நூலின் ஆறு அகன்று, ஆங்கு
  உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று,
தெள்ளும் ஆறு அகன்று, ஈங்கு அவனவன் செய்த
  செயிர் அளவு ஆகுலித்து, அங்கண்
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும்
  இரும் பகை அன்று தோன்றுவதே.
96
   
பாவிகள்நரகில்ஐம்பொறித்துன்பங்களும்அனுபவிப்பர் எனல்
 
2749மெய் முதல் பொறி ஐந்தொடு மேவிய
பொய் முதல் புரை பூரியர் பூத்து என,
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர்
மொய் முதல் புதவு ஆகுலம் மொய்க்குமே.
97
   
 
2750“நாறு பூம் புகை நாறும் அகில் புகை,
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு
ஏறு காமம் வளர்த்த இயற்கையால்,
பாறு பூதி படர் கடல் மூழ்குவார்.
98
   
 
2751‘பூதி நாறு புகைத்திரள்நாசி ஊடு
ஊதி ஊதி, உலகம் உலாம் மலம்
ஆதி நாறும் யாவும் அலைக் கொடு
மோதி மோத, உள் தீயரும் மூழ்குவார்.
99
   
 
2752“கோதின் வாய் உளம் கோட இன்பு என்று, அடும்
தீதின் வாய் வளர் தீ உரை கேட்டன
காதின் வாய் கடுங் கோல் கடுத்து ஏற்றிய
போதின், வாய் வழி பொங்கு அழல் ஊற்றும் ஆல்.
100
   
 
2753“மாழ்வர் ஓதையும், எள் மலி ஆர்ப்பொடு
சூழ்வர் ஓதையும், சுட்டு எரி ஆழியை
ஆழ்வர் ஓதையும், அங்கணின் நாள்தொறும்
தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ?
101
   
 
2754இனிய உண்டலும் இன்னல் உரைத்தலும்
கனிய இன்பொடு காசு மலிந்த வாய்
நனி அழன்று, நஞ்சு உண்டு, பகைத்த பேய்
முனிய, வந்த துயர் முடியாது அரோ.
102
   
 
2755“கைத்த யாவையும், காய் கடுவும் புழு
மொய்த்த ஊத்தையும், முற்றிய பூதியும்
துய்த்த வாய் இரத்தம் சொரியத் துமித்து,
உய்த்த தீ உமிழ்ந்து, ஓவி அரற்றுவார்.
103
   
 
2756“காவிக் கண் வழிக்காமம் உண்டார் என,
வாவிக்கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய்
தாவிக் கண் கிழித்து, ஊடு தழல் பொறி
தூவிக்கண் அருங் கண் துயர் தோன்றுமே.
104
   
 
2757“அஞ்சி வீமம் அழுங்கு உருக் காண்டலும்,
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும்,
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும்
விஞ்சி, நேர் இல வெய்து உறீஇ மாழ்குவார்.
105
   
 
2758“நால் வகைப் பொறி நண்ணி, ஐந்தாம் பொறிப்
பால் வகைப் புரை விஞ்சிய பான்மையால்,
சால் வகைப் புதவு எங்கணும் சாற்று உரை
மேல் வகைத் துயர் மெய்த் துயர் ஆகும் ஆல்.
106
   
முடிவிலாத துயர்
 
2759“ஈறும் ஒன்று இல இன்னணம் தீயரே
மாறும் ஒன்று இல மாழ்கி, அழுங்கு உளம்
தேறும் ஒன்று இல தீக் கடல் மூழ்குவார்,
காறும் ஒன்று இல வேக எக் காலுமே.
107
   
 
2760“உலை கொள் தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து,
அலை கொள் தீயில் அமிழ்ந்தி அமிழ்ந்தியே,
கொலை கொள் தீ உகம் கோடிகள் கோடி போய்,
புலை கொள் தீயவர் பூதியில் வேகுவார்.
108
   
 
2761“பாடி ஆடி இன்பு ஆதல் பகல் பல
நீடில், ஆகுலம் ஆம் என நீங்குவாய்.
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து, உகம்
கோடி கோடி பொறுப்பது கொள்கையோ?
109
   
 
2762“இலைகள் எண்ணி, முகில் துளி எண்ணி, நீர்
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை
புலை கொள் பூதியில் ஆண்டுகள் போயினும்
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார்.
110
   
 
2763“நல்லது ஒன்று இல, ஆகுலம் நல்கியது
அல்லது ஒன்று இல, அவாவிய மேல் கதிச்
செல் அது ஒன்று இல, தீவினை செய் பகை
வெல் அது ஒன்று இல யாண்டையும் வேகுவார்.
111
   
 
2764“வேக வேக, விளிவு உற வேண்டுவார்,
நோக நோகவும் பொன்று இலர்; நோன்று இலர்;
ஏக ஏக அருந் துயர் எஞ்சு இலா
ஆக, ஆகுலம் ஆற்று இல விம்முவார்:
112
   
நரகத்தவர் பாவிகளின்புலம்பல்
 
2765“அந்தோ, அந்தோ! வீட்டை இழந்து, ஈங்கு அழல் மூழ்க
வந்தோம்; அந்தோ! புண் இமிழ் நக்கி, வரைவு இன்றி
வெந்தோம்; அந்தோ! மாறு இல வேவோம்; வினை முற்றி,
எம் தோம், அந்தோ, இப் பகை ஈட்டிற்று!“ என ஆர்ப்பார்.
113
   
 
2766“கெட்டோம், அந்தோ! மின் என ஒல்கிக் கெடும் நன்றி
இட்டோம், அந்தோ! ஈட்டு அதின் இஃதே பயன்? அந்தோ!
பட்டோம், அந்தோ! புன் நயன் நக்கிப் பர வீட்டை
விட்டோம், அந்தோ! வேகுதும், அந்தோ! என வேவார்.
114
   
 
2767“கண் மேல் வைத்த மாசு என, ஆசை
  கவர் உள்ளம்
விண் மேல் வைத்த வான் திரு எண்ணா
  வெருள் வீங்கி,
மண் மேல் வைத்த வைத்த வாழ்வினை ஈட்ட,
  மலிகள் வாய்ப்
புண் மேல் வைத்த தீத் திரள் சேர்த்தோம்
  புதவு!‘ என்பார்.
115
   
 
2768“ஆறு ஆக் கொண்டேம் வெம் பகை, ஆறாது அடு கோபம்
தேறா கொண்டேம்; வெங் கொலை செய்தே பழி தீர்ந்தேம்.
ஈறு ஆக் கொண்டேம் தீ நரகு; அந்தோ, எரிகின்றேம்!
மாறா கொண்டேம் பேய்ப் பகை!‘ என்றே மருள்கிற்பார்.
116
   
 
2769“காதல் மிக்கு ஆல்க் கற்றவை கண்ணா, கசடு உள்ளத்து
ஆதல் மிக்கு ஆப் பற்றிய காமத்து அமிழ்கின்றேம்.
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்திச்
சாதல் மிக்கு ஆ வேகுதும்‘ என்றே தளர்கிற்பார்.
117
   
 
2770“மெய் ஆர் நல் நூல் வேதம் நகைத்து, விழைவு ஒத்த
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்கப்
பொய் ஆர் மை ஆர் தேவரோடு, அந்தோ, புதவு எய்தி,
மொய் ஆர் தீயில் மூழ்கினம்!‘ என்று உள் முரிகிற்பார்.
118
   
 
2771“ஆய்வார் எண்ணா, நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார்
நோய் வார் நஞ்சு உண்பார்; பசி ஆற்றார்; நுகர்வு ஆற்றார்
காய்வார்; ஆர்ப்பார்; வீழ்ந்து எரி ஆழ்வார்; கரை காணாது
ஓய்வார்; நீந்தார்; ஊழியும் வேவார்; துகள் தீயார்.
119
   
சூசை வாமனை நோக்கிக் கூறுதல்
 
2772“அணியும் பாங்கே காமம் அறுத்து ஈங்கு அறம் எய்தத்
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய். சுடும் ஊழற்கு
அணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய், கணை வார் வில்
பணியும் பாங்கோடு ஒன்னலர் ஏற்றும் பரிசு அன்னோய்?
120
   
 
2773“நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ,
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது“ என்று
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான்.
121
   
நரக நினைவே, பாவ வழிகளை விலக்க வல்லது என மக்கள்கருதல்
 
2774விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல்
கொண்டார் அன்னார்; கொண்டவை உள்ளிக் குழைகின்றார்;
கண்டார் என்னாக் கண்கள் புதைத்தார் கலுழ்கின்றார்;
“மண்டு ஆர் வேட்கைத் தீ அற இஃதே வழி“என்பார்.
122
   
 
2775“இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல்,
துன்பால் கொண்ட நோன்பு இனிது“ என்பார்; “துகள் மல்கிப்
பின்பால் கொண்ட ஆகுலம் எண்ணார். பிறழாத ஓர்
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது“ என்பார்.
123
   
 
2776“பொன் நேர் ஒள் பூஞ் சாயலை வெஃகல் புதவு உய்த்தேல்,
அந் நேர் உண்டோ ஓர் பகை, காதல் அலது?“ என்பார்;
“மின் நேர் ஒல்கி மாறிய இன்ப வினை காட்டிக்
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை“ என்பார்.
124
   
 
2777“நரகம் கொண்ட தீ நிலை இஃதேல், நனி ஓர்ந்தால்,
விரகம் கொண்ட தீயை அவிக்கும் வினை“ என்பார்;
பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல்
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம்“ என்பார்.
125
   
 
2778என்ன நொந்தார்; நொந்து உணர்வு எய்தி, எரி அத் தீ
உன்ன உள் ஆர் தீ அற, உள்ளத்து உறு தண்ணம்
துன்ன வாழ்ந்தார்; நல் அறம் எய்தத் துணிவு உற்றார்,
மின்ன விண்ணில் வீழ் துளி ஒப்ப விழி நீரார்.
126
   
வாமன்கண்ணீர்சொரிந்து சூசை முனிவரை வணங்குதல்
 
2779மதுக் கலத்து அலர் பூ வாயான்,
  வழிந்த தேன் ஒத்த சொல்லால்,
விதுக் கலத்து இழிந்த வில் போல்,
  விரித்த நூல் அனைத்தும் கேட்டுப்
புதுக் கலத்து எரித்த தீம் பால்
  பொங்கல் போல், உளத்தில் பொங்கி,
ஒதுக்கல் அற்று, அருவிக் கண்ணீர்
  உயிர்த்தனன் வாமன் மாதோ?
127
   
 
2780நூல் கடல் துறையின் கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல்
பால் கடல் பதுமம் அன்ன படர்ந்த கண் இமையாக் கேட்டு,
மேல் கடல் திரைகள் பொங்க மேல் வளி அடித்ததே போல்,
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான்:
128
   
 
2781“தீயவர் செல்லும் செந்தீத்
  தேக்கு இருள் நிலத்தைக் காட்டி,
தூயவர் செல்லும் வீட்டைத்
  தொடர் வழி காட்டல் செய்தாய்,
காய் அவர் குளிர்ப்பத் தண் அம்
  கருணையோய்! என, அங்கண் வான்
மீ அவர் உவப்பத் தாள் மேல்
  வீழ்ந்து நீர் ஆட்டினானே.
129
   
 
2782விழுந்து உற எடுத்து, உள் தாபம்
  விளைத்த கண் கலுழிப்போற்றி,
அழுந்து உறத் தழுவி, மெய்யோடு
  ஆர்வமும் உயிரும் ஒன்ற
செழுந் துறவு இறைவன் சொன்ன தேறிய
  உணர்வில் தேறி
எழுந்து, உறத் தெளிந்த நெஞ்சான்
  இதனை மீண்டு உரைத்தான் மாதோ.
130
   
வாமன்சூசை முனிவரை நோக்கிக்கூறிய அன்பு மொழி
 
2783“கான் முழுதும் இறைஞ்சும் நோன்பின்
  கடல் கரை கண்ட நல்லோய்,
தேன் முழுது இறைஞ்சும் தீம் சொல்
  தேறலைத் துளித்து, நீயே
வான் முழுது இறைஞ்சும் நல் நூல்
  வழங்கிய ஓதி கேட்க,
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின்
  உவா மதம் மாறிற்று அன்றோ“
131
   
 
2784“உள் உறத் தெளி நூலால், கீழ்
  உலகமே சுடும் தீ என்றாய்;
அள் உறக் காமத் தீயை
  அவித்த தண் பொய்கை அன்றோ?
வள் உறப் புகை மொய்த்து அங்கண்
  மண்டு இருள் தவழும் என்றாய்;
தெள் உறக் கண் முன் இட்ட
  திரு விளக்கு ஆயிற்று அன்றோ?“
132
   
வாமன்தன்நெஞ்சை நோக்கிக்கூறியவை
 
2785“சுழல் தரப் புகைகள் நாறும்
  தூய் மலர்த் தவிசில், தேம் பூ
நிழல் தரத்தொடலைக் கூந்தல்
  நீர்மையார் தோள்மேல் துஞ்சி,
அழல் தரக் கனன்ற மஞ்சத்து
  அழன்று அழன்று, ஊழி காலம்
புழல் தரப் புண்பட்டு, அங்கம்
  பொடி படல் இனிதோ, நெஞ்சே?
133
   
 
2786“உலை வைத்த பொறிச் செந் தீயோடு
  உடன்ற வேல் உருவிப் பாய,
மலை வைத்த அருவிக் கண்ணீர்
  மலிந்து அழல்இனியது என்றோ,
சிலை வைத்த பகழிச் சாயல்
  திரு நுதல் விழியை வெஃகி,
விலை வைத்த மகளிர் வஞ்ச
  வினைக் கொடு மருண்டாய், நெஞ்சே?
134
   
 
2787தீய்த் திரள் தளிர்த்த நோயால்
  தீயவர் புலம்பும் ஓதை
பேய்த் திரள் தளிர்த்த ஓதை
  பிளந்த காது உணல் இன்பு என்றோ,
வீய்த் திரள் தளிர்த்த தேன் போல்
  விளம்பிய சொல் என்று எண்ணிப்
போய்த் திரள் தளிர்த்த பொய்யின்
  போழ்ந்த வாய் விழைந்தாய், நெஞ்சே?
135
   
 
2788“அலை விரவு ஊழல் வைகி,
  அரவின் நஞ்சு அயின்று, எஞ்ஞான்றும்
கொலை விரவு ஊழிச் செந் தீக்
  குளித்தலே இனியது என்றோ,
வலை விரவு அணியின் பின்னி
  மலர் தவழ் கூந்தல் வெஃகிப்
புலை விரவு உணர்ந்த காமப்
  புணரியில் குளித்தாய், நெஞ்சே?
136
   
 
2789“கோடு இழந்து அழியும் பைம் பூங்
  கொள்கை வாடு எழிலைப் பேணி,
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல்
  இயைந்த புல் இன்பம் நக்க,
வீடு இழந்து ஊழிச் செந்தீ
  வீழ, நல் அறங்கள் செய்யும்
பீடு இழந்து ஒழுகுவாரில்
  பேதையர் இல்லை, நெஞ்சே!
137
   
 
2790“கால் வழி காயும் பூவும்
  கடியும் என்று இளமை நம்பா,
மால் வழி தளிர்த்த காம
  வழி வளர் நிரையம் தந்த
நூல் வழி ஒழுகல் விள்ளா,
  நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி,
சூல் வழி சனித்த பாவத்
  தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே!
138
   
 
2791“வள்ளி உருவம் தீமுன்
  வல்லையே உருகும் வண்ணத்து,
உள்ளிய அருமை யாவும்
  ஊழல் முன் கரைந்து நீங்கி,
எள்ளிய உள்ளம் கொள் மாசு
  இசைத்த நூல் பளிங்கில் கண்டு,
தெள்ளிய தவ நீர் ஆட்டிச்
  செயிர் அறத் தெளிதி, நெஞ்சே!
139
   
 
2792“தொல் வினை இனிய என்று
  துகள் உறத் தோன்றும் காலும்,
நல் வினை அரிய என்று
  நலம் கெடத் தோன்றும் காலும்,
கொல் வினை நிரையச் செந் தீக்
  குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து,
வல் வினை ஊக்கம் பூண்டு,
  மருளல், என் நெஞ்சே!“ என்றான்.
140
   
சூழ நின்ற சொல்லிய புகழ்ச்சி
 
2793என்ன இயம்பின கால்,
உன்ன அரும் இன்பம் உறீஇத்
துன் அவர் சூழ் மகிழ்வு
பன் அரும் பான்மையதே.
141
   
 
2794“இனைய இயற்றிய நூல்
அனைய எமக்கு அளவோ?
வனைய வரும் சுடரைப்
புனைய ஓர் பூண் உளதோ?
142
   
 
2795“ஐ வழி ஆசு தரும்
பொய் வழி போக்கி, அற
மெய் வழி மேவி, நரகு
உய் வழி ஒன்று உளதே.
143
   
 
2796“காதல் அலாது கடும்
சாதல் இலாது; தகும்
ஓதல் ஒளித்து, நரகு
ஆதலும் வித்து அதுவே.
144
   
 
2797“இறந்தனர் வேகும் எரி
பிறந்தனர் ஓர்ந்து பெறின்,
துறந்தனர், துஞ்சு உளி வான்
சிறந்தனர் சீர்த்து உவப்பார்.
145
   
 
2798என்றனர்; என்று எவரும்
கன்றினர்; காட்சி உறீஇ
நின்றனர்; வீட்டு நெறி
சென்றனர் சீர் பெறவே.
146
   
 
2799அள்ளிய வாமன் அரில்
எள்ளிய யாவருமே
தெள்ளிய சீர் இறுதி
உள்ளி அன்று ஓதினர் ஆல்.
147
   
 
2800செல்வர் உறும் செயிரும்,
வல் வரும் மாண்பு அறமும்,
எல் வரும் ஒத்து, எவணும்
சொல் வரு தோற்றம் அதே.
148
   
சூசை ,வாமனுக்கு உபதேசம்செய்தல்
 
2801தெளித்த கால் உரைத்த விஞ்சை
  சிறப்பு உற, உழுத பூழி
துளித்த கால் விதைத்தல் என்ன,
  துணிவு உறத் தெளிந்த வாமன்
களித்த கால் உணர்ந்த ஞானம்
  காய்ந்த கால் சிதையுமோ என்று,
அளித்த கால் இது என்று ஆய்ந்த
  அருந் தவன் இனிதின் சொன்னான்:
149
   
 
2802“ஐம் பொறிப் பகை கண்டு அஞ்சி,
  அடக்கலின் ஆமை போல்வாய்
வெம் பொறிப் புதவை ஓர்ந்து,
  விளை பகை சிறிது என்று எண்ணேல்
பைம் பொறிப் பாந்தள் தன் கூர்ப்
  பல் பட மத நீர்க் குன்றின்
செம் பொறிப் புகைக் கண் யானை
  சிதைத்து உயிர் மாளும் அன்றோ?
150
   
 
2803“பிரிந்தது என்று ஒழித்த பாவம்
  பெறும் இடத்து அணுகேல், வேலோய்!
அரிந்தது என்று உறங்கும் ஆசை
  அமைதியால் விழித்துக் கொல்லும்.
எரிந்த நின் காமத் தீயை
  இற்று அற அவித்தது என்னேல்.
கரிந்தது என்று இருந்த பல் கால்
  கால் முகத்து எரியும் தீயே.
151
   
 
2804“அசும்பு இடை ஒளித்த செந்தீ
  அறல் என எடுத்தார் யூதர்.
தசும்பு இடை எடுத்த நீரைச்
  சமிதை மேல் தெளித்து, வாரி
விசும்பு இடை நீங்கி வெய்யோன்
  வெங் கதிர் படத் தீப் பற்றிப்
பசும் பிடி சூழ வாட்டிப்
  படர் நெருப்பு ஆயிற்று அன்றோ
152
   
 
2805“தண் உறும் குணம் கொண்டாலும்,
  தழலும் தன் குணத்தைக் காட்டி,
விண் உறும் கதிர் ஒன்று உண் கால்
  வெங்கனல் எரிந்ததே போல்,
கண் உறும் கனல் அம் காமம்
  ஓர் கவின் முன் காய்ந்து
புண் உறும் கசடு உள் ஆகப்
  புழுங்கி வெந்து எரியும் அன்றோ?
153
   
 
2806“குலம் புரி கொடிய பேய்கள்
  கொலைத் தொழில் கருவி சூழ்ந்து,
சலம் புரி வலையை வைக்கத்
  தளைப் படின், பிரிதல் ஆற்றா,
வலம் புரி தவத்தின் நாம் அவ்
  வலை உறா விலகல் வேண்டும்,
கலம் புரி பைம் பூ மூழ்கிக்
  கதிர்த்த பொன் குன்றின் மார்போய்!
154
   
 
2807“முன் பட உரைத்த விஞ்சை
  மொழிகுதும் தளிர்ப்ப மீண்டே:
வில் பட எதிர்த்துச் செய் போர்
  வினை இது நோக்கல் வேண்டா.
மல் பட வெற்றி வேண்டின்,
  மருள் படாது ஒடுங்கல் வேண்டும்.
கற்பு அட ஆவி சால்பு
  காண் எனத் தெளிக, வேலோய்!
155
   
சூழ நின்றார்க்குக்கூறுதல்
 
2808“கச்சு ஒன்று இட்டு உணர்வோடு ஊக்கம்
  கட்டி, மெய்ச் சகட்டை ஓட்டி,
நச்சு ஒன்று இட்டு, ஏதச் சேற்றுள்
  நல் உயிர் அச்சு இற்றாய், மற்று
அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது,
  அழும் பலர்க் கணடீர். நல்லோர்
மெச்சு ஒன்று இட்டு, அச்சு இறா
  முன் வீடு உற ஊர்மின், பாகீர்!
156
   
உபதேச பயன்
 
2809விண்டஉளி, கமழக் கஞ்சம் வெங் கதிர் உண்டதே போல்,
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும்
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல்,
பண்டு உளி மருள் நீத்து, ஓதி பரிந்து, அறம் ஆகச் செய்தார்.
157
   
 
2810கயல் பொருது உகளிப் பாயக்
  கலங்கிய குமரி அன்னம்
அயல் பொரு சேவலோடும்
  அதிர்ந்து எழச் சாய்ந்த செந் நெல்
வயல் பொருவு ஒழிந்த நாடு,
  வளன் தரும் ஓதி தன்னால்
புயல் பொருது உயர் வான்
  வீட்டைப் புகும் மறுகு ஆயிற்று அன்றோ.
158
   
சூசை உரையை மக்கள்புகழ்தல்
 
2811தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல,
வேய் அணி ஆக ஏய்ந்த வேத நூல் துஞ்சு மார்பன்,
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி,
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ.
1
   
 
2812ஏழ்வரும் கதிரைத் துய்ப்ப
  ஏடு அவிழ் கமலம் போல,
சூழ்வரும் குழாத்து யாரும்
  சுருதி நூல் செவியின் மாந்தி,
கேழ்வரும் பதுமம் பெய் தேன்
  கீடம் உண்டு இமிரும் போல,
தாழ்வரும் புரைகள் நீக்கிப்
  தகவு உறீஇத், புகழ்ந்து நின்றார்.
2
   
சுரமி எனும்கிழவி இகழ்தல்
 
2813கூன் உருக் கோலின் ஊன்றிக்
  குலுங்கிய சென்னி ஆட்டி,
ஊன் உருக் கழிந்த நீண் தோல்
  உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி,
மீன் உருக் கழிந்த கண் புண்
  மெலி முகச் சுரமி என்பாள்
வான் உருத் தவத்தோன் சொன்ன
  மறை மொழி பழித்துச் சொன்னாள்:
3
   
 
2814“விள்ளிய புதுத் தேன் பைம் பூ
  விரும்பி, நல் கனி நீத்து அன்ன,
தெள்ளிய தவத்தின் பல் நாள்
  தேடிய பயன்கள் யாவும்
எள்ளிய அவத்தின் நீங்க,
  இறைஞ்சிய தேவர் நீக்கி,
உள்ளிய நவ நூல் எண்ணி
  ஒழுகலோ உறுதி? என்றாள்.
4
   
சூசையின்அறிவுரையும் சுரமியின்குதர்க்கமும்
 
2815“குடக்கு நேர் வைகும்
  குணித்தனர், செப்பம் மாறி,
வடக்கு நேர் நெடு நாள் செல்ல,
  ‘வழி அது அன்று‘என்று கேட்கின்,
துடக்கு நேர் தடம் செல்லாதால்
  துயர் அலால், காட்டுகின்ற
கிடக்கும் நேர் நெறி செல்லாரோ
  கேள்வியர்?“ என்றான் சூசை.
5
   
 
2816“நின் நெறி கதியைச் சேரும்
  நெறி என அறிய நாங்கள்,
என் நெறி வழாமை செல்லும்‘
  என்னில் நீ சால்போ?“ என்றாள்.
“நல் நெறி உரையில் கேட்கின்
  நணுகலீர்; உரைத்த ஞானத்து
அந் நெறி உரியது என்றால்,
  அறிந்து, உளம் தெளிக“ என்றான்.
6
   
 
2817“பண் மறைத்து இனிதின் நீயே
  பணித்த சொல் மறுக்கல் ஆற்றாக்
கண் மறைத்து இருட்டும்மாயைக்
  கட்டு எனத் தோன்றும்“ என்றாள்.
“புண் மறைத்திட்ட பாலால்
  புண்அற, மாயை என்றோ?
உள் மறைத்து ஒளித்த நன்றி
  உறும் பயன் காட்டும்“ என்றான்.
7
   
சுரமி கண்ட கனவும் கேட்டவர்நகைத்தலும்
 
2818“சுனை வளர் குவளை ஆதி
  சொரி மது மலர்கள் வாடி,
நனை வளர் பொய்கை வற்ற
  நான் இன்று கனவில் கண்டேன்.
வினை வளர் நவங்கள் நாட்டி
  விரித்த நின் சொல்லைக் கேட்டுப்
பனை வளர் நாடு நைந்த
  பரிசு இதே!“ என்றாள் மூத்தாள்.
8
   
 
2819“தெருள் தவழ் பகலின் நோக்கச்
  சிதைந்த கண் கிழவி இல்லாது
இருள் தவழ் இரவின் நோக்கல்
  இயல்பு!“ என எவரும் நக்கார்.
மருள் தவழ் சினங் கொண்டு அன்னாள்,
  “வடிவு உறும் கனவும் பொய்யோ?
பொருள் தவழ்கிலதேல், தோன்றப்
  பொருட்டு என்னோ? சொன்மின்!“ என்றாள்.
9
   
சூசை கனவு தோன்றும்காரணங்களை விளக்குதல்
 
2820“சினவு இடை, மருண்ட உள்ளம்
  தெளிவு அறப் பொங்கல் வேண்டா.
கனவு இடை உணர்ந்த காட்சி,
  கனவு இடை அடைந்த பொன் போல்
மன இடை எண்ணின், கொன்னே
  வடு அலால் பயன் ஒன்று உண்டோ?
என விடை உரைத்த சூசை,
  இயல் பட விரித்துச் சொன்னான்:
10
   
பகலிந் கண்டவை கனவில்தோன்றும்
 
2821“படம் புனைந்து எழுதினாற் போல்,
  பகல் இடை இரு கண்ணோடு ஐந்து
இடம் புனைந்து உணர்ந்த யாவும்
  எழுதிய நினைவில் தோன்றி,
கடம் புனைந்து அதிர் கைம்மாவும்
  காகமும் கண்ட பின்பு
சடம் புனை கனவில் யானை
  தலைக்கு மேல் பறக்கக் காண்பார்.
11
   
மனத்தில்மிகுந்த எண்ணம்கனவாம்
 
2822“தெருள் புறம் கொண்ட அத்தம்
  சேர்ந்து அடுத்தவற்றைக் காட்டும்.
மருள் புறம் கொள் கனாவும்
  மனம் கடுத்தவற்றைக் காட்டி,
அருள் புறம் கொண்ட தாயே
  அகன்ற தன் மகவைக் காண்பாள்;
வெருள் புறம் கண்ட பேதை
  வினைப் படை எதிர்ப்பக் காண்பான்.
12
   
ஏக்கமும்எண்ணமும்விளைந்து கனவில்உருப்பெறும்
 
2823“காய்ந்த ஓர் சுரம் மெய் நொந்தார்
  கடி மலர்ச் சுனைகள் காண்பார்;
வேய்ந்த ஓர் பழியைக் கொண்டார்
  வினைப் பகை முரியக் காண்பார்;
தீய்ந்த ஓர் மிடியின் மிக்கார்
  திரு நலம் மருவக் காண்பார்,
வாய்ந்த ஓர் பற்றல் பாலால்
  வரும் கனவு உருவம் மாதோ.
13
   
பித்த மிகுதியால்ஒழுங்கற்ற கனவுண்டாம்
 
2824“இருள்படப் புகை மொய்த்து
  என்ன, எஞ்சிய அறிவு குன்றும்
மருள்படப் புகைந்து மண்டி
  மலிந்த பித்து ஏறும் காலை
தெருள்படத் தெளிந்ததே போல்
  சீர் இல கனவு காட்டி,
வெருள்படப் பதைத்து உள் அஞ்சி
  வினை கொள்வார் பித்தர் அன்றோ?
14
   
 
2825“விஞ்சிய காலைப் பித்து
  வினையினால் பித்தர் செம்மை
எஞ்சிய நினைவு உற்று, ஆயாது,
  இழிவு உறப் பிதற்றும் சொல்லும்,
துஞ்சிய காலை மெய் போல்
  தோன்றிய கனவும் ஒன்று ஆம்,
அஞ்சிய உளத்து இஃது எண்ணில்,
  அறிவு இதோ என்றான் சூசை.
15
   
கேபமுடன்கிழவி செல்லுதல்
 
2826நோய் உடை இரு கண் வெய்யோன்
  நோக்கு இலா மூடிற்று என்ன,
தாய் உடை அன்பின் சூசை
  தந்த நூல் உளத்தில் கொள்ளா,
தீ உடை வெகுளி பொங்க
  சீறிய சுரமி சாய்ந்து
போய், உடை வஞ்சம் உள்ளிப்
  புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ.
16
   
 
2827காழ் வளர் தருவின் கோட்டம்
  கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா;
ஊழ் வளர் புண்ணும் ஆறா:
  ஊழ் உழிக் கிழவர் கொண்ட
தாழ் வளர் கசடு மாற்றார்:
  சாற்றிய அவரின் ஊங்கும்,
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து
  அறிவு இலார் என்றும் தேறார்.
17
   
தன்தேவர்க்குற்ற இழிவு கண்ட சுரமி புலம்பிச்சேர்தல்
 
2828விரை வாய்ப் பூந் தாழை முகைகள் விண்ட வெறி விம்மும்
கரை வாய்ச் சங்கங்கள் கதிர் முத்து ஈன்ற கடல் சூழும்
தரை வாய்பூண் ஒக்க, எசித்து நாட்டில் தகவு உய்க்கும்
உரை வாய் கதிர் வெள்ளம் ஒளிப்ப சுரமி உணர்ந்தாள்,
18
   
 
2829“உள்ளம் காய்ந்து உளைய பசும் பொற்
  கோயில் ஒருங்கு, அந்தோ!
பள்ளம் காண் அடியே வீழக்
  கண்டேன்; பழிப்பு உய்க்கும்
கள்ளம் காட்டிய ஓர் மறையும்
  யாரும் கனிந்து உள்ளி,
வெள்ளம் காட்டு அழிவும் இனிக் காண்
  பேனோ மெலிந்து?“ என்பாள்.
19
   
 
2830“பொன் ஆர் உலகு ஒப்பப் பசும் பொன்
  இஞ்சிப் புகை தவழ
மின் ஆர் மணம் தேக்கித் தொழுத
  தேவர் வெறுத்து, அந்தோ!
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன்
  மாயைக் கொடுஞ் சொல்லால்
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது
  இந் நாடு ஒருங்கு“ என்பாள்.
20
   
 
2831“எந் நாடு, எக் குலம், எம் முறை ஒன்று
  அறியாது, இரந்து ஒருவன்
சொல் நாடினன். அஃதே சுருதி
  யாகத் தொடர்ந்து எண்ணி,
முன் நாள் துணை இல்லா வாமன்
  தானும் முயங்குகின்ற,
பின் நாள் தொடரார் ஆர்? பொறுக்கும்
  தன்மை பிழை“ என்பாள்.
21
   
 
2832என்ன வஞ்சனைகள் பலவும் கூறி,
  “ஈர்த்து அற, நான்
அன்ன நவ மறைக்குக் கேடு இன்று உய்ப்பேன்
  அரிது“ என்று
சொன்ன தன்மைத்தே, வெகுளி விம்மும்
  துகள் பொங்கி,
முன்னம் மெலிந்து அலைந்த பின்னர்ப் பள்ளி
  முயங்குகின்றாள்.
22
   
பேய்,சுரமி முன்தோன்ற அவள்வணங்குதல்
 
2833முன் நாள் உற்ற அரசு இழந்த பேய், அம் முனி தன்மேல்
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை, பழிப்பு இன்றி
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன, கனவில் தான்
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே.
23
   
 
2834வரிந்த மயில் அகவி, மலர்ந்த முகை
  வாய் மது ஊழ்த்துச்
சொரிந்த நெடும் பொழிற்கண், மெலிந்து வாடும்
  துயர் முகமாய்
திரிந்த வண்ணம், தான் இறைஞ்சும்
  தெய்வம் சென்று எதிர்ப்ப
கரிந்த கனவு இடையில் கண்டாள்;
  கண்டு கை தொழுதாள்.
24
   
 
2835“உலகிற்கு அளி செய்தோய், துயரம் பூத்த
  உணர்வு என்னோ?
அலகு இற்ற அருந் திறலோய், பகை நிற்கு என்னோ?
  அரிது என்னால்
விலகித் தவிர் தன்மை என்னோ?“ என்ன
  விழுந்து இறைஞ்சி,
இலகித் தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு
  இயம்பிற்றே:
25
   
சுரமி கனவில்பேய்கூறுதல்
 
2836“மின் உயிர்த்து எரி விளக்கு ஏற்றி, வெந்து அகில்
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ்
பொன் உயிர்த் தட மணிக் கோயில் போல், எனை
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ.
26
   
 
2837“நாடு இல, குலம் இல, நயந்து வாழ்வு செய்
பீடு இல முனிவரன் பிதற்றும் சொல்லினால்,
கோடு இல உனை அலால், குழைந்து நோக நான்,
நீடு இல அனைவரும் என்னை நீக்கினார்.
27
   
 
2838பெய்த ஓர் மாரியால் பெருகும் வெள்ளம்முன்
செய்த ஓர் அணை என, திளைத்த தீது எலாம்
கொய்த ஓர் உதவி நீ குணித்துச் செய்கு இலால்,
எய்த ஓர் பயன் இனி இலை“ என்றிட்டதே.
28
   
சுரமியின்அழுகை
 
2839கொல்என அலறி உள் குலைந்து எழுந்தனள்;
வில்என, உரு என ஒன்றும் வேய்ந்து இலாது,
அல்என இருண்ட நெஞ்சு அழுங்க நொந்தனள்,
ஒல்என அருவி நீர் ஒழுகும் கண்ணினாள்.
29
   
 
2840“ஒளித்த தன் உயிர் உடல் தேடும் ஒத்து, அவா
அளித்த பல் உணர்வு எலாம் ஆய்ந்து, தேறிலள்;
சுளித்த நெஞ்சு உளைந்த பின், தோன்றும் சூட்சியால்
களித்த தன் உளத்து இவை கனியக் கூறினாள்:
30
   
சுரமியின்சூழ்ச்சி
 
2841விண் தொழும் விதி என வளன் விளம்பிய
பண் தொழும் உரைக்கு உரை மறுக்கும் பாலதோ?
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால்
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ.
31
   
வீரன் நாகவனால் சூசையைத்தண்டிக்கக்கருதுதல்
 
2842“பூ அகல் மாலையோடு ஊக்கம் பூண்டு, கோல்
தூவு அகல் முகில் கையான், சுளித்த நெஞ்சினான்,
நாவகன் என்னும் நல் நாம வேல் ஒரு
சேவகன் உறுதியால் செயம் கொள்வாம் அரோ.
32
   
 
2843“நூல் முகத்து உரை நலம் நுதல்கிலான்; ஒளி
வேல் முகத்து எரிந்த முன் வெகுளி நீதியான்,
வான் முகத்து அசனியான்; மனத்தில் ஓர்ந்தவை
கோன் முகத்து உகந்தனாய் முடிக்கும் கொள்கையான்.
33
   
 
2844“ஆயினான் அருகு போய், அழுது காட்டிய
நோயினால் இரங்கு உளம் நுழைந்து, வெஞ் சினத்
தீயினால் அழற்றுதும்“ என்று தேறியே,
போயினாள் அரும் பகை புழுங்க நெஞ்சினாள்.
34
   
சுரமி நாவகனிடம்சென்று புலம்புதல்
 
2845சுதை ஒளி உச்சி ஆடும்
  சுடர்க் கொடி மாடத்து ஏகி,
புதை ஒளி பரப்பி நாறும்
  பொன் மணித் தவிசில் சாய்ந்த,
ததை ஒளி வை வேல் வல்லோன்
  தாள் முனர் அழுது வீழ்ந்தாள்,
உதை ஒளி முன்னர் வீழ்ந்த
  ஒருங்கு இருள் அருந்தும்நெஞ்சாள்.
35
   
 
2846சென்று வீழ் சுரமி நோக்கிச்“ செப்புதி கொடிய வந்த“
என்று நாவகனும் கேட்ப, எழுந்து, கூன் உடல் கோல் ஊன்றி
நின்று, பேர் உயிர்ப்பு வீக்கி, நீர் மழை இரு கண் தூவிக்
கன்றுவாள்; சோர்வாள்; வஞ்சம் கக்கியே இனைய சொன்னாள்:
36
   
 
2847“சிலை வைத்த பகழி மாரி
  சிந்துபு கடந்த வெம் போர்க்
கொலை வைத்த குருதிக் கோட்டுக்
  குஞ்சரத்து அன்னோய், முன் நாள
அலை வைத்த உலகம் காத்தாய்.
  அவிர்ந்த பொன் உலகம் காக்கக்
கலை வைத்த உணர்வோய் இன்று
  கருதலே வேண்டும் அன்றோ?
37
   
 
2848“முந்து அழல் தறுகண் தூவ
  முரண் படை முரிக்கும் யானை
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய
  வீர வல்லோய்,
சிந்து அழலுடன் நின் ஒன்னார்
  சிதைத்தனை, தேவர்க்கு உற்ற
கொந்து அழல் ஒன்னார் தம்மைக்
  கொன்று இனி வெல்வாய் அன்றோ?
38
   
 
2849வேய் நிறக் கரும்பு நக்கும் விரி தலைக் கதலி ஊழ்த்துத்
தூய் நிறத் தேறல் பாய்ந்து, துணர் வயல் விளை இந் நாடே
தீய் நிறக் கரிந்து வாடத்தேவரை ஒருங்கு நீக்கி,
நோய் நிறக் கருத்தில் யாரும் நூதனம் அணுகினாரே!
39
   
 
2850“முனி உருக் காட்டி, யாரோ முறை குலம் ஒன்றும் இல்லான்,
பனி உருக் காட்டித்தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும்
கனி உருக் காட்டித்தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி,
நனி உருக் காட்டித்வாய்ந்த நால் மறை ஒழியச் செய்தான்!
40
   
 
2851“மாகையோ, மயலோ, யாதோ? வறுமையான் உரைகள் வெஃகி,
ஓகையோடு எவரும் போய் வேறு ஒரு மறை விரும்பிக் கேட்ப,
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்னக்கோயில்
ஈகையோடு, இனி எம் தேவர்!“ என்று அழுது உரை சோர்ந்தாளே.
41
   
நாகவன் பதில்
 
2852வீங்கிய துயரில் சோர்ந்து வீழ்உளி சுரமி, கையால்
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான், உறுதி சொன்னான்,
ஏங்கிய உளத்தில் தேற, “இரவலர் ஈனர் நால்வர்
நீங்கிய தன்மைத்து என்னை நீ அழுது அயர்வாய்?“ என்றான்.
42
   
சுரழியின் கோள்
 
2853“பூமனும், உணர்வில் தேர்ந்த புரட்டனும், செல்வத்து ஓங்கும்
தாமனும், சிரீத்தான் தானும், தரும் புகழ் கடந்த வீர
வாமனும், பலரும் சேர்ந்து மாரி நாள் வெள்ளம் ஒத்தார்,
காமனும் எஞ்சப்பைம் பூங்கவின் நலோய்! என்று சொன்னாள்
43
   
சுரமி தான்கண்ட கனவைக்கூறி வேண்டுதல்
 
2854“துஞ்சிய கனவில் தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சித் தோன்றி,
அஞ்சிய என்னை நோக்கி, அனைவரும் தன்னை நீத்து
விஞ்சிய மாயை ஈர்தல் வேண்டும் என்று இரங்கிச் சொல்ல,
எஞ்சிய பின்னர், நின்னை எண்ணி உள் தேறினேனே.
44
   
 
2855“பொன் வளர் உலகத் தேவர் பொருந்தி ஈங்கு உனக்குத் தந்த
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும்
கொன் வளர் செல்வமாகத் கொடுத்ததோ? கொடுத்த தேவர்க்கு
இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே.
45
   
 
2856“நூல் வழி போதல் வேண்டா,
  நுண் மதி முனிவன் வெல்வான்.
வேல் வழி குருதி பாய
  வேந்தனே வெகுளி காட்டின்,
கால் வழி தழைகள் என்னக்
  கலங்கிய எவரும் மீண்டு,
கோல் வழி வில்லோய், தேவர்
  கொண்ட வெம் பகையைத் தீர்ப்பாய்.
46
   
 
2857“பண் முழுது இறைஞ்சும் நின் சொல்
  பார்த்திபன் மறுக்கல் செய்யான்.
மண் முழுது அயிலால் காத்தாய்;
  வளம் கொள் இம் மறையும் நீத்தால்
விண் முழுது இன்று காப்பாய்.
  வேண்டுமேல், அரிது ஒன்று இன்றி,
உண் முழுது உணர்ந்த தன்மை
  ஒல்லும்“ என்று இறைஞ்சினாளே.
47
   
நாவகன்உறுதி மொழி
 
2858தொல் நெறி வாமன் நீக்கிச்
  சூசை ஆங்கு உணர்த்தும் ஓதி
நல் நெறியாகக் கொண்ட
  நவத்தொடு பலவும் ஓர்ந்தே,
“உன் நெறி போதி, எம் தாய்
  உவப்ப நீ செய்வேன்“என்னச்
செல் நெறி அசனி ஒத்தான்
  சிந்தையில் பொங்குகின்றன்.
48
   
நாவகன்தந்தை குண்ணன்,மகனுக்கு அறிவுரை கூறல்
 
2859கள் ஆர் மலர் மணமோ
  கனல் ஆர் புகையோ, கடுத்து ஒருவன்
உள் ஆர் வினை முக மேல்
  உருவும் தன்மைத்து, அவன் உணர்ந்த
எள் ஆர் வினை இரு கண் படம்
  மேல் கண்டான் இவன் தாதை,
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய்க்
  குன்றாக் குண்ணன் என்பான்.
49
   
 
2860பால் செய் கடல் கிடந்து நுரை சூழ்
  பவளக் கட்டை எனக்
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய்
  கலைப் பூந் தவிசு எழுந்து,
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின்
  நோன்று ஈன்ற
வேல் செய் திற நம்பி வினை கண்டு, “அற்க“என
  விளித்தான்.
50
   
 
2861“நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன,
  நின் முகமும்
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன
  நல்கும.் அதே,
அஞ்சேல், எனக்கு உரைமோ. அரி கண் இட்ட
  அஞ்சனம் போல்,
செஞ் சேடு உருவோய், தன் செயிர் ஆர் காண்பார்
  தெளிந்து?“ என்றான்.
51
   
 
2862இடக் கைத் தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி,
தடக் கை விரலால் வாய் புதையாச் “சாற்றுது அடிகள்!“என,
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று, இரு தாள்
படக் கை தொழுது, “இனிச்செய் பணியே பணிப்ப!“என நின்றான்
52
   
 
2863“ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது“என்றாற்கு,
  இளையோன், “மற்று
ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு
  உரைத்து, நவத்
தீங்கு கொய்தல் நல்லது“ என்றான். அணை மேல் சேர்த்து
  இருத்தி
வீங்கு கேள்வி நலோன் மெலியாத் தீம் சொல்
  விரித்து உரைத்தான்:
53
   
 
2864“விள்ளா அரும்பு ஒப்ப விளை நல் நாகின்,
  வேல் கடல் முன்
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில்
  இருந்தேன் நான்“
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அந்
  நாள் அருகே
உள்ளா வயத்து உற்றது உரைப்பப், போற்றி
  உணர்க“ என்றான்.
54
   
குண்ணன் யூதர்களின் பெருமையைக்கூறுதல்
அசீரிய மன்னன்சினக்கரன்ஆட்சி
 
2865கனக் கரம் தழுவ மேல், கதிர் கொள் குன்றின் வீழ்
புனல் கரம் தழுவ மேல், பொலி அசீரியம்
எனக்கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள்
சினக்கரன் எனும் பெயர் சிறந்த வேந்தர் கோன்.
55
   
 
2866மாற்று அரசு இனம் எலாம் வணங்கும் வாகையான்;
வேற்று அரசு இனம் முடி விளக்கும் தாளினான்,
ஏற்று, அரசு இனம் கொணர் இறை கொள் கையினான்,
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான்.
56
   
 
2867“ஓடை மால் மத கரி உயர்த்த வாகையான்;
கோடை நாள் அசனியைக் குழைத்த வில்லினான்;
பாடையாய் இகல் உரம் பழக்கும் வாளினான்;
வாடையால் வரு விசை வாட்டும் தேரினான்.
57
   
 
2868ஆலமும் அழலும் விட்டு அதட்டிச் சீறினால்
ஞாலமும் நடுக்கிய நச்சுக் கண்ணினான்;
மாலமும் மறலியும் வஞ்ச மாலையும்
சீலம் ஒன்று இலது, அவை செறிந்த, நெஞ்சினான்.
58
   
 
2869அருள் இடு மொழி மறுத்து அழன்ற வாயினான்,
வெருள் இடு பொய்ப் புகழ் விழுங்கும் காதினான்,
பொருள் இடு முடியொடு புன்கண் பூத்தவர்த்
திரள் இடு முறை எலாம் சுமந்த சென்னியான்.
59
   
 
2870ஆற்று நீர், அலையின் நீா,் அலந்தை நீர் எலாம்
சேற்று நீர், உவர் குழைவு எனச் செகுத்து அவன்
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார், விழி
ஊற்றும் நீர் ஒன்றினை, உவப்பு என்று ஆடுவான்.
60
   
 
2871‘கின்னரம் பயில் யாழ் பொன் மாடக
இன் நரம்பு உளரலும் இனிது அன்று‘ என்று, தன்
வில் நரம்பு ஒலிக் கணை வினையின,் கைமையார்
துன்னரம் பயில் ஒலி ‘சுவை‘என்று ஆவுவான்.
61