நித்தல் பூசனை புரிந்தெழு நியமம் - சிவபூசை நித்தம் நியமமாகச் செய்ய வேண்டியது ஆன்மாக்களின் கடமை என்பது குறிப்பு. "அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்" என்றும், "உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில் - அளியற்றார்பிறந்தவா றேதோ வென்னிற், பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே" (தேவா) என்றும் வரும் திருவாக்குக்கள் இதன் இன்றியமையாமையை வற்புறுத்தற் கெழுந்தன. புரிந்தெழு நியமம் - எழுந்து புரியும் நியமம் என்று மாற்றுக. சிவபூசனையாவது எழுந்தவுடன் முதற் கடமையாகச் செய்யற்பாலது என்பதும் குறிப்பு; நியமம் - கடமை; எக்காரணம் பற்றியும் கைவிடலாகாத ஒழுக்கம். "தொழுதெழுவாள்" (குறள்). நியமமும் செய்தே...பணிகளும் ஏற்று எதிர்செய்வார் - அடியார் பணி செய்வார் பூசை நியமமும் செய்தார் என்ற உம்மை, இவ்விரண்டினுள் அடியார் பணியை முதன்மையாய்க் கொண்டார் என்பது குறித்தது. அத்தரன்பருக்கு அமுது செய்விப்பது - அன்பர் - அடியவர். அன்பருக்கு என்றலே அமைவுடைத்தாயினும் அத்தர் அன்பருக்கு என்றது அன்பருள்ளிருந்து அத்தரும் அவ்வமுதினை உண்கின்றார் என்று குறித்தற்கு. அத்தருக்கு என்று குவ்வுறுபை முன்னும் கூட்ட நின்றது. அமுது செய்விப்பது முதலா - தொண்டர் பணி பலவற்றுள்ளும் முதன்மை பெற்று விளங்குவது அவர்களை அமுது செய்விப்பதுவேயாம் என்பது. முதலா எத்திறத்தன பணிகளும் - அவர் வேண்டும் பணிகள் ஏனை எத்தன்மையுடையவாயினும் அவற்றை யெல்லாம். எத்திறத்தனவும் என்றதனால் அவை உலகியல்பிற் பொருந்துவனவும் பொருந்தாதனவும் என்று எவ்வியல்புடையன வாயினவும் என்பது குறிப்பு. உம்மை முற்றும்மை. ஏற்று - பிறர்பால் விடாது தாமே மேற்பூண்டு. எதிர்செய்தலா வது குறிப்பறிந்து செய்தல் - முன்னே செய்தல் முதலாயின தன்மைகள். இப்பாட்டினும் முன்பாட்டினும் கூறிய இரண்டிற், சிவன்பூசை நியமம் ஒரு திருவாதிரைநாளில் தமது நித்த பூசை முடித்து அயவந்தி நாயனாரை அருச்சனை செய்யப்புக்க சரித விளைவினாலும், அடியார் பணி எத்திறத்தனவாயினும் தமது ஏற்று எதிர்சய்தல் பின்னர் திருநுல கண்ட யாழ்ப்பாணரும் பத்தினியாரும் நடுமனை வேதியின்பாங்கர்ப் பள்ளிகொள்ள சரிதவிளைவினாலும் உலகறிய நிகழ்வன. 6 1834. (வி-ரை.) ஆதிரை நாளின் - திருவாதிரை சிவபெருமானுக் குகந்த நாள். "ஆதிரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்த வம்மானே" (தேவா). திருவாதிரை நாளில் சிவபெருமானுக்கு விசேட பூசை செய்தல் சிறந்த பயன்தரும். அந் நாளில் அடியார் பூசையும் செய்துவந்த நரசிங்க முனையரைய நாயனார் சரிதம் இங்கு நினைவுகூர்தற்பாலது. ஆதிரை நாளில் - அருச்சனை புரிந்திட - நயந்தார் என்று கூட்டுக. மேய பூசனை நியதி என்பது நித்தல் செய்த ஆன்மார்த்தமான சிவபூசைக் கடமை. பூசைனைநியதியை முடித்து அருச்சனை - புரிந்திடபூசனை நியதி என்பது நித்தியம் என்றும், ஆதிரைநாளில் அருச்சனை புரிந்திட என்பது நைமித்திகம் என்றும் கூறுவது மரபு. நைமித்திகமாவது நிமித்தம்பற்றிச் செய்யப்படுவது. விதியினால் - விதிப்படி. விதி - பான்மை - நியதி என்று கொண்டு, பின்வரும் விளைவு உண்டாகும் விதியினால் என்று உரைத்தலு மொன்று. |