பக்கம் எண் :


திருநீலநக்க நாயனார் புராணம்1057

 

பெருந்தொண்டு - "நிறையினார் நீலநக்கன்" என்று ஆளுடைய பிள்ளையார் விதந்து பேசுவதற்குரிய பெருமை.

ஆகிய - ஆக்கம் சரிதக் குறிப்புணர்த்திற்று.

36

1864.

பெருகு காதலிற் பின்னெடு நாண்முறை பிறங்க
வருபெ ருந்தவ மறையவர் வாழிசீ காழி
யொருவர் தந்திருக் கல்லியா ணத்தினி லுடனே
திரும ணத்திறஞ் சேவித்து நம்பர்தாள் சேர்ந்தார்,

37

(இ-ள்.) பெருகு...மறையவர் - பெருகும் காதலினாற் பின்னர் நீண்ட நாள்கள் இவ்வாறே விளங்கும்படி நிகழவரும் பெருந்தவ வேதியராகிய நீலநக்கர்; வாழி.....கல்லியாணத்தினில் - எந்நாளும் வாழ்வுடைய சீகாழியில் அவதரித்த ஒப்பற்ற ஆளுடையபிள்ளையாரது திருக்கல்லியாணச் சிறப்பின்கண்; திருமணத்திறஞ் சேவித்து - அத் திருமணத்திறத்தினைக் கும்பிட்டபடியினால்; உடனே - அவருடனாக; நம்பர்தாள் சேர்ந்தார் - சிவபெருமான் றிருவடிகளைச் சேர்ந்தனர்.

(வி-ரை.) பெருகு காதலில் - முன் சொல்லியபடி ஒழுகிய காரணத்தால் காதல் பெருகிற்று என்பது. காதல் - "நண்பு மேம்பட" (1863) என்றது காண்க. தலைவன் தலைவியரிடத்து நிகழும் அன்பு போல்வது என்பது குறிப்பு.

முறை பிறங்கு வரு - முன்பாட்டிற் சொல்லியபடி பல முறையும் சென்று சென்று பயின்று வந்த. பெருந்தவர் - அவ்வாறு பிறங்க வருவதற்குக் காரணம் முன்னைப்பெருந்தவமாம் என்பது. பெருந்தவ மறையவர் - திருநீலநக்கர். சீகாழி ஒருவர் - ஆளுடைய பிள்ளையார். ஒருவர் - ஒப்பற்றவர். வாழி - இகரம் விரித்தல் விகாரம்.

திருமணத்திறஞ் சேவித்து -திறம் - பெருமை - காட்சி. சேவித்தல் - வழிபடுதல். இங்குத் திருநீலநக்கர் அத்திருமணத்தில் மறைவிதிப்படி வேள்விச்சடங்குகள் செய்வித்தமையும் குறிப்பு. "முதன்மறை முறையினோடு, மெய்த்தநம்பெருமான் பாத மேவுமுள் ளத்தாற் செய்ய" (திருஞான - புரா - 1239); "திருமணத்துடன் சேவித்து முன்செலுஞ் சிறப்பு"" (மேற்படி 1249) சேவித்து - சேவிக்கும் பேறு பெற்றதனால். காரணப் பொருளில் வந்த வினையெச்சம்.

உடனே -தாள்சேர்ந்தார் என்று கூட்டுக. பிள்ளையாரும் மற்றும் சேவித்தாரும் உடனாக என்றலுமாம்.

நம்பர் - சிவபெருமான்.

37

1865.

தருதொழிற்றிரு மறையவர் சாத்தமங் கையினில்
வருமு தற்பெருந் திருநீல நக்கர்தாள் வணங்கி,
இருபி றப்புடை யந்தண ரேறுயர்த் தவர்பால்
ஒருமை யுய்த்துணர் நமிநந்தி யார்தொழி லுரைப்பாம்.

38

(இ-ள்.) தருதொழில் திருமறையவர் - தொழில் தரும் திருமறையாவராகிய; சாத்தமங்கையினில்...வணங்கி - திருச்சாத்த மங்கையில் அவதரித்த முதன்மையுடைய பெரிய திருநீலநக்கருடைய திருவடிகளை வணங்கி (அத்துணையாலே); இருபிறப்புடையந்தணர் - இரண்டு பிறப்புடைய அந்தணராய்; ஏறு...உரைப்பாம் - இடபக் கொடியை உயர்த்திய சிவபெருமானிடத்து மன ஒருமைப்பாடுவைத்து உணர்கின்ற நமிநந்தியார் செய்த திருத்தொழிலினை உரைக்கப் புகுகின்றாம்.

(வி-ரை.) ஆசிரியர் தமது நியதியின்படி; இத்திருப் பாட்டால் இதுவரை கூறிவந்த சரிதத்தை நிறைவாக்கி முடித்துக்காட்டி; இனிக் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்.