பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்143

 

வேறு

1376.

பாசத்தொடை நிகளத்தொடர் பறியத்தறி முறியா
மீசுற்றிய பறவைக்குலம் வெருவத்துணி விலகா
ஊசற்கர மெதிர்சுற்றிட வுரறிப்பரி யுழறா
வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர் வருமால்.

111

(இ-ள்.) பாசத்தொடை ...... முறியா - கயிற்றுப்புரியும் சங்கிலித் தொடரும் அறும்படி தறியை முறித்து; மீசுற்றிய ... வெருவ - மேலே வட்டமிட்ட பறவைக் கூட்டங்களும் அஞ்சும்படி; துணிவிலகா - எதிர்க்கும் தடைகளுக்குச் சிறிதும் விலகாமல்; ஊசற்கரம் ... சுற்றிட - ஊசல்போல அசையும் துதிக்கையானது முன்னேசுற்ற; உரறி - கோபத்துடன் ஒலித்து; பரிஉழறா - ஓடிக் கலக்கி; வாசக்கட மழை ... வருமால் - வாசங்கமழும் மதநீராகிய மழை முன்னே பெருக மதமுடைய மலைபோன்ற யானையானது எதிரில் வருகின்றது.

(வி-ரை.) பாசத்தொடை - கழுத்திற் கட்டிய முறுக்கிய கயிறு. நிகளத் தொடர் - காலிற் கட்டிய சங்கிலி. யானைகளை நடத்திச் செல்லும் வழியில் அவை துதிக்கை வீசிக் கோடுவிளைக்கா வண்ணம் கையில் ஒரு சங்கிலியைக் கொடுப்பதும் உண்டு.

மீசுற்றிய பறவைக் குலம் - அந்தயானை மதமிகுந்து செல்கின்றபடியால் பலரையும் கொல்ல நெரும்போது படும் பிணங்களைத் தின்னக் கருதிக் கழுகு முதலிய பறவைக் கூட்டங்கள் மேலே வட்டமிட்டுச் சூழ்கின்றன. குலமும் - என உயர்வு சிறப்பும்மை தொக்கது.

துணி - களிமண் ணுண்டை. துணிவிலகா என்றது யானை செல்லும் வழியில் பக்கத்துள்ளோர் அது தம்மிடமாகத் திரும்பி வராதபடி எறியும் களிமண்ணுண்டை முதலிய தடைகளுக்குச் சிறிதும் விலகாதபடி.

ஊசற்காம் - ஊசல்போல் இங்குமங்கும் எப்போதும் ஆடிக்கொண்டிருக்கின்ற துதிக்கை. துதிக்கையை அசைத்துக்கொண்டு செல்வது யானைகளின் வழக்கம்.

பரிஉழறா - ஒரு சொல் நீர்மைத்தாய் ஓடிக்கலக்க என்ற பொருளில் வந்தது. துணிபால் விலகாத குதிரைகளை ஒன்றோடொன்று மோதும்படி தள்ளி என்றுரைப்பாருமுண்டு. பரிக்ாரரை உழக்கி என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை.

வாசக்கட மழை - யானையின் மதநீர் வாசனை கமழ்வது. கடமழை - பெருகி வருவதால் மழை என உருவகம் செய்தார். முற்பட - முன்பு பெய்ய. கடம் - மதநீர்.

மதவெற்பு - மதத்துடன் கூடிவரும் ஒருமலை. வெற்புப்போல்வதனை வெற்பு என்றது உருவகம்.

யானைச்செலவு முடுகுந்திறத்தை முடுகிய சந்த விருத்தத்தால் யாத்தது கவித்திறம்.

உதறிப்பறி - உலறிப்பறி - துனிவிலகா - துளிவிலகா - என்பனவும் பாடங்கள்.

1377.

இடியுற்றெழு மொலியிற்றிசை யிபமுட்கிட வடியிற்
படிபுக்குற நெளியப்படர் பவனக்கதி விசையிற்
கடிதுற்றடு செயலிற்கிளர் கடலிற்படு கடையின்
முடிவிற்கன லெனமுற்சின முடுகிக்கடு கியதே.

112

(இ-ள்.) இடியுற்று......உட்கிட - இடிபோல எழுகின்ற ஓசையினால் திசை யானைகள் அஞ்ச; அடியில்......நெளிய - காலின் மிதித்த சுவடு நிலத்தில் பொருந்தப் பூமி நெளியவும்; படர் ..... கடிதுற்று - ஓடுகின்ற காற்றுப் போன்ற வேகத்தில்