மதி - மெய் ஒளியின் நிழல்காணும் ஆடி - கண்ணாடியின்மேற்படும் ஒளிபோல, உண்மையில் ஞாயிற்றினுடைய ஒளி மதியின்மேற் படுவதே, இங்கு மதியின் ஒளியாகக் காணப்படுவதன்றி மதிக்குத் தனிகயாக ஒளியில்லை என்பதும், மதியின் முகத்தில் காணப்படும் கறைபோன்ற தோற்றங்கள் ஆங்குள்ள மிக உயர்ந்த மலைகள் முதலிய மேடுகளின் நிழல்களே என்பதும், இன்ன பிறவும் இந்நாளில் வானநூற் கலைஞர்கள் மிக முயன்று கண்ட வுண்மைகள். இவ்வுண்மைகள் யாவும் இங்கு மிக எளிதில் புலப்படுமாறு வைத்த உவமத்தின் திறம் கண்டு களிக்கத்தக்கது. வையமகள் - கை - நீல வலயங்களின் அலைய, விரலின் நகஞ்சிறப்ப, ஆடியென - மதியை - அணைத்தாற்போலச் - சோலை - உயர்வ - என்று கூட்டிமுடித்துக்கொள்க. ஆடியெனக் கை அணைத்தாற்போல என்றது தற்குறிப்பேற்றமும், சோலை - மகள் - கை அணைத்தாற்போல உயர்வ என்றது தொழிலும் மெய்யும்பற்றி வந்த உவமமும் ஆம். வையமகள் - உருவகம். நிலமகள் - பூமிதேவி முதலியனவாக நிலத்தைப் பெண்ணாகக் கூறும் மரபும் காண்க. கையமைத்தால் - என்பதும் பாடம். 9 1275. | எயிற்குலவும் வளமபதிக ளெங்குமணந் தங்கும்வயற் பயிர்க்கண்விய லிடங்கள்பல பரந்துயர்நெற் கூடுகளும் வெயிற்கதிர்மென் குழைமகளிர் விரவியமா டமுமேவி மயிற்குலமு முகிற்குலமு மாறாட மருங்காடும். |
10 (இ-ள்.) வெளிப்படை. மதில்கள் சூழ்ந்து விளங்கும் நகரங்களில் எங்கும் மணமுடைய வயல்களிற் பயிர் செய்யப்பட்ட அகன்ற இடங்கள் பலவற்றினும் பரந்து உயரும் நெற்கூடுகளிலும், ஒளி வீசும் குழையணிந்த மென்மகளிர் உள்ள மாடங்களிலும் பொருந்தி, மயில்களும் முகில்களும் எதிரெதிராகுவனபோலப் பக்கங்களில் ஆடுவன. (வி-ரை.) இதுவரை. பெண்ணை நதியின் வளனும், அதனால் நாடெங்கும் விளைவு தரும் நிலவளமும், வயல் - சோலை முதலியவற்றின் சிறப்பும், அவற்றினை அடுத்து, நகரினை அணுக உள்ள வாவிகள் - மலர்ச்சோலைகள் இவற்றின் சிறப்பும் கூறிவந்த ஆசிரியர், இப்பாட்டினாலும், இன்னும் நாட்டினுள்ளே நணுகச் சென்றால் காணப்படும் புறநகர்ச் சிறப்புக்களைக் கூறுகின்றார். நகரங்களின் சிறப்பு 1277-ல் கூறுவர். எயிற்குலவும் வளம்பதிகள் எங்கும் - பதிகளில் எங்கும்...ஆடும் என்று முடிக்க. பதிகள் - (நாடு) எங்கும் (உள்ளன); அவற்றுள் - என்றுரைத்துக் கொள்ளுதலுமாம். ஊர்கடொறும் (1270) என்று கூறியவிடத்துக் கரும்புப்பயிர்கள் முதலியனவாய்ச் சேய்மைக்கண் உள்ள காட்சிகளைக் கூறினார். "கரும்படு கட்டியின்" என்றமையின் அவை நீண்ட கரும்புப் பயிர்களிடை மக்கட் கூட்டம் தொழில் செய்து வதியும் கருப்பாலை முதலிய சாலைவீடுகள் பொருந்திய புறநகர்களின் சிறப்பு என்பதறியப்படும். இப்பாட்டில் நகரங்களின் பக்கம் இன்னும் அணுகியனவாய் நுண்பயிராகிய நெல்விளை நிலங்களையும், அத்தொழிற்பாட் டிடங்களையும் கூறுகின்றார். வயற்பயிர்க்கண் வியலிடங்கள் பல என்றது காண்க. எயிற்குலவும் வளம்பதிகள் - எயில் - நகரப் பாதுகாவலின் பொருட்டு இடும் மதிலரண். மணம் தங்கும் - வயல்களிலும், அருகில் உள்ள கால்களிலும் பூக்கும் தாமரை, செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களின் மணமும், அடுத்துள்ள கமுகஞ்சோலை, மலர்ச் |