அருகந்த வெவ்வினையாளரும் சென்று மேவிட - வினை மாக்களுடன் அமணர்போக வேண்டிய அவசியமில்லா திருந்தும் அவர்களும் அவர்களோடு சென்றது அவர்களுடைய உள்ளக் கொடுமையினையும் வன்மத்தினையும் விளக்குகின்றது. வினை மாக்களிடம் நம்பிக்கைக் குறைவினாலும் இச்செயலைத் தாமே நேரிற் கண்டு களிப்படையவும், எஞ்சியன இருப்பின் அவற்றைத் தாமே முடித்துவிடும் கருத்தாலும் கவலையாலும் அமணரும் உடன் சென்றனர். அரச காரியஞ் செய்வோர் சிலபோது ஆணையினின்று பிறழவும் கூடும் என்பதுபற்றிப் "பொருள் கொண்டுவிடாது" (1355) என்றவிடத்துரைத்தவை காண்க. செவ்விய திருவுள்ளம் சிறப்ப - திருவுள்ளத்தில் துன்பம் கவலை முதலியவை ஒன்றுமின்றிச் சிறந்த மகிழ்ச்சியும் உறுதியும் வர; செவ்விய - செம்மை நெறியில் நின்ற. மன்னவன் சொன்னபடி முடித்தார் - அடியார்க்கு வரும் ஏதத்தைத் தமது வாக்கினாற் சொல்லுதலும் தகாது என்றது ஆசிரியர் மரபு. ஆதலின் இவ்வாறு கூறினார். "தன் கருத்தே முற்றுவித்தான்" (647), "தான்முன் னினைந்தவப் பரிசே செய்ய" (481) முதலியவை காண்க. இச் செயலினையே முன் 1387 - 1388 திருப்பாட்டுக்களில் கூறியவையோ எனின்? அவை அமணரது கூற்றும், அரசனது கூற்றுமாவன; ஆசிரியர் தம் கூற்றாகச் சரிதம் சொல்லிப் போகும் நிலையில் தமது வாக்காகச் சொல்லார் என்பது. பதகர் - சண்டாளர்கள் - தீயகருமம் செய்வோர். பாதகர் என்பது பதகர் என வந்ததெனினுமாம். பத் - வீழ்தல் (பகுதிப்பொருள்). செவ்வியதாந் - என்பது பாடம். 124 1390. | அப்பரி சவ்வினை முற்றி யவரகன் றேகிய பின்னர், ஒப்பரு மாழ்கடல் புக்க வுறைப்புடை மெய்த்தொண்டர் தாமும் "எப்பரி சாயினு, மாக வேத்துவ னெந்தையை" யென்று செப்பியவண்டமிழ் தன்னாற் சிவனஞ் செழுத்துந் துதிப்பார். |
125 வேறு 1391. | "சொற்றுணை வேதிய" னென்னுந் தூமொழி நற்றமிழ் மாலையா "நமச்சி வாய" வென் றற்றமுன் காக்குமஞ் செழுத்தை யன்பொடு பற்றிய வுணர்வினாற் பதிகம் பாடினார். |
126 1390. (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு அச்செயலை முடித்து அவர்கள் நீங்கிப்போயின பின்பு, ஒப்பில்லாத ஆழமுடைய கடலினுள்ளே புக்க உண்மைத் தொண்டில் உறைப்புடையாராகிய திருநாவுக்கரசரும், "எவ்வாறாயின நிலைவரினும் நான் எந்தை பெருமானாகிய சிவனை ஆக ஏத்துவேன்" என்று துணிவு பூண்டு, சொல்லிய வளப்பமுடைய தமிழ்ப் பாட்டுக்களினால் சிவனுடைய திருவைந்தெழுத்தினைத் துதிப்பாராய், 125 1391. (இ-ள்.) வெளிப்படை. "சொற்றுணை வேதியன்" என்னும் தூய திருமொழிகளை முதலில் வைத்துத் தொடங்கிய நல்ல தமிழ்மாலையாக, "நமச்சிவாய" என்று, துன்ப காலத்தில் உடனிருந்து காக்கும் திருவைந்தெழுத்தை நிரம்பிய அன்பொடும் விடாதுபற்றிக் கொண்ட உணர்ச்சியிலே திருப்பதிகத்தைப் பாடியருளினர். 126 இந்த இரண்டுபாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிவு கொண்டன, |