அழியும் தன்மை என்ற பொருள் தருவதனை "வீடுபே றின்மையின் வீடெளி தாமே" என்ற பிள்ளையார் திருவாக்காலும் அறிக. பொய் என்று மெய்யுணர்ந்த - பொய் என்ற உண்மையை உணர்ந்த என்றுரைப்பினுமாம். சமணர் மொழிகள் மெய்யென்றே இதுவரை உணர்ந்து அவர்க்காகப் பொல்லாங்கு புரிந்தனன்; இப்போது அவை பொய் என்ற உண்மையை நாயனார்பால் நான்கு நிகழ்ச்சிகளாலும் அறிந்துகொண்டான் என்க. உணர்ந்த என்ற குறிப்பும் அது. காடவன் - சோழர்களது பல்லவர் மரபு காடவர் எனவும்படும். ஐயடிகள் காடவர்கோன் என்றது காண்க. கண்ணுதற்குக் - குணபர வீச்சரம் - எடுத்தான் - என்க. குணபரவீச்சரம் - கோயிலின் பெயர். கோயில் அதனை எடுப்பித்த அரசன் பெயராலும் வழங்கப்படும். இராசராசேச்சரம் - கங்கை கொண்ட சோளேச்சரம் முதலியவை காண்க. இந்தக் காடவ அரசன் குணபான் என்பவன். மகேந்திரவர்மன் என்ற பெயரும் கல்வெட்டுக்களிற் காணப்படும். குகைக்கோயில்கள் (கல்லிற் குடைந்தெடுக்கப்பட்டவை) பல இவன் எடுப்பித்தான் என்பது மறியப்படும். திருச்சிராப்பள்ளிக் குகையில் காணப்படும் இவன் காலத்து வடமொழிக் கல்வெட்டில் இவன் சமண சமயத்திலிருந்து சைவம் புகுந்த செயல் கூறப்பட்டுள்ளது. குணதரன் என்றும் வழங்குவர். அமண் பள்ளியொடு பாழிகளும் - பாழி - கோயில்; பள்ளி - அமணகுருமார் தங்குமிடம். "அரதைப் பெரும்பாழி" முதலிய வழக்கும் காண்க. கூட - ஒருசேர. பாழிகளும் கூட என்று அருகர் கோயிலையும்கூட என்று கூட்டி உரைத்தலுமாம். இடித்துக் கொணர்ந்து - எடுத்தான். வேறாக ஒரு கோயில் எடுக்க வல்லவனாயினும், இவ்வாறு பாழி பள்ளிகளை இடித்துக் கோயில் எடுத்த தென்னையோ வெனின்? பொய்யினால் உலகை மயக்கும் சாதனங்களை அழித்தல் கருதியும், அவற்றையே புனித சாதனங்களாக மாற்றக்கூடிய வகை கருதியும், இவ்வாறு செய்தான் என்க. அன்றியும் இச்செயல் அவன் சமணத் தொடர்பினின்றும் வீடு பெற்றுச் சைவனாகிய செயலையும், அதில், பின் அவன் உறைத்து நின்றதனையும் விளக்குதலும் காண்க. திருப்பேரூரில் (கொங்குநாடு) மாறன்சடையன் (எட்டாவது நூற்றாண்டு) திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோயில் ஆக்கினான்; அது பின்னாளில் பழுதுபட்டு வீழ்ந்தது; பதினைந்தாம் நூற்றாண்டில் அந்தக் கோயிலின் கற்களை எடுத்து "திருக்கணாம்பி மாதையன்" என்பான் இப்போது திருஆன்பட்டியுடையார் கோயிலுக்கு முன்புறம் உள்ள திருக்குளத்துப்படிகளை அமைத்தான் என்ற வரலாறும், அவ்வாறுள்ள பிறவும் இங்குச் சிந்திக்கத்தக்கன. எடுத்தான் - அமைத்தான் - கட்டுவித்தான். கோயில் எடுப்பித்தல் - எடுத்தல் என்பது முன்னாள் வழக்கு. இராசராசச்சோழரது கல்வெட்டுக்கள் காண்க. 146 1412. | இந்நாளிற் றிருப்பணிகள் செய்கின்ற வின்றமிழ்க்கு மன்னான வாகீசத் திருமுனியு மதிச்சடைமேற் பன்னாக மணிந்தவர்தம் பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச் சொன்னாமத் தமிழ்புனைந்து தொண்டுசெய்வான் றொடர்ந்தெழுவார்; |
1413. | திருவதிகைப் பதிமருங்கு திருவெண்ணெய் நல்லூரும் அருளுதிரு வாமாத்தூர் திருக்கோவ லூர்முதலா மருவுதிருப் பதிபிறவும் வணங்கிவளத் தமிழ்பாடிப் பெருகுவிருப் புடன்விடையார் மகிழ்பெண்ணா கடமணைந்தார். |
|