அன்பின் அளவளாவும் அருமைப்பாட்டினைக் குறிக்கும் மெய்ப்பாடுகளுள் ஒன்று. இவ்வாறே அடிபணிந்தி குலச்சிறை நாயனாரையும், மங்கையர்க்கரசியம்மையாரையும் பிள்ளையார் கைகளாற்பற்றி எடுத்தருளும் வரலாறுகளும், பிறவும் இங்கு வைத்துக் கருதுக. "கரகம லங்கள் பற்றியே யெடுப்ப" (திருஞான - புரா - 657); "இன்ன ருட்பெருஞ் சிறப்பொடுந் திருக்கையாலெடுத்தார்" (மேற்படி - 671) என்பவை காண்க. எழுதரிய மலர்க்கை - அழகின் வண்ண மின்னபடி என்று எழுதவொண்ணாத வடிவமுடைய தாமரை மலர்போன்ற திருக்கைகள். ஆளுடைய பிள்ளையாரது திருக்கைகள். "பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்போங்கும், செங்கை" (மேற்படி - 172) என்பது முதலாக வருபவை காண்க. எழுதுதல் - படி எழுதுதல். ஒவியந்தீட்டுதல். "படிஎழுத லாகாத மங்கை", "இவனிறைவ னென்றெழுதிதக் காட்டொ ணாதே" (தேவாரம்), "யாழு மெழுதி யெழின்முத் தெழுதி" (திருக்கோவை) முதலியவை காண்க. இறைஞ்சி - அரசுகள் அடிபணிந்தமையின் தாமும் எதிர்பணிந்து. "உள்ளமிகு பதைப்பெய்தி யுடையவர சினைவணங்க, வள்ளலார் வாகீச ரவர்வணங்கா முன்வணங்க" (திருநா - புரா - 397) எனவும், "திருநாவுக் கரசரெதிர் சென்றிறைஞ்சச் சிரபுரத்துத் தெய்வ வாய்மைப், பெருஞான சம்பந்தப் பிள்ளையாரெதிர்வணங்கி" (1499) எனவும் பின்னர்வரும் நிகழ்ச்சிகளும் காண்க. இவ்வாறு ஒருவரை ஒருவர் வணங்குதல் அன்பின் பெருக்கினானிகழ்வதாம். இதனுள் ஏற்றத்தாழ்வு காண்போர் அன்பினது உண்மைநில யறியாதா ரென்றொழிக. விடையின் மேல்வருவார்தம்மை அழுது அழைத்துக் கொண்டவர் - அழைத்துக் கொண்டவர் - "அம்மே! அப்பா! என றழுதருளி யழைத்தருள" (திருஞான - புரா - 63) என்பது காண்க. வருவார் - தம் இயல்பாகவே என்றும் எங்கும் வருவாராயினும் அழைத்ததனால் விரைந்து அவ்வாறே வெளிப்பட்டனர் என்பது. "அப்பரே!" என - அப்பர் என்பது நாயனாரைப் பிள்ளையார் இப்போது அருமையுற அழைத்துக் கொண்டமையாற் போந்த பெயர். இப்பெயரே பயின்று வழங்கப்படுதல் இதன் அருமைப்பாட்டினையும், பிள்ளையார் அது போழ்து கொண்ட அன்பின் ஆழத்தினையும் புலப்படுக்கும். அப்பரே! - ஏகாரம். நீவிர் அப்பரேயன்றோ? ஆதலின் அடிபணிதல் தகாது என்ற கருத்துக்காட்டி நின்றது. அப்பர் - ஐயர் - தலைவர் - தந்தை போன்றவர். அவரும் "அடியேன்" என்றார் - அவர் - திருநாவுக்கரசு நாயனார். உம்மை பிள்ளையாரால் அப்பர் என்று போற்றப்பட்ட அவரும் என உயர்வு சிறப்பு. இவர் என்ன, அவரும் என்று எச்சவும்மை என்றலுமாம். அடியேன் - அப்பராந்தன்மையில் வைத்து நீர் அருளினாலும் நான் என்றும் உமது அடியவனேயாம். ஆதலின் அடிபணிதலே எனக்குத் தகுதி என்பது குறிப்பு. சைவத் திறத்திற் கூறும் பணிவுக்கு நாயனாரே சிறந்த எடுத்துக் காட்டாதல் காண்க. அப்பரோ! - என்பதும் பாடம். 182 1448. | அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா னங்கொடுப்ப வழுகை தீர்ந்த செம்பவள வாய்ப்பிள்ளை திருநாவுக் கரசரெனச் சிறந்த சீர்த்தி யெம்பெருமக் களுமியைந்த கூட்டத்தி லரனடியா ரின்ப மெய்தி யம்பர்களும் போற்றிசைப்பச் சிவம்பெருகு மொலிநிறைத்தா ருலக மெல்லாம். |
183 |