ரெனப்பட்ட வேளாளர் வரையறையன்றி வேந்தன் ஏவிய திறமெல்லாவற்றினும் பிரிதற்கு ஆக்கமுடையார்" எனவும், "அரசரேவுந் திறம் பகைவர் மேலும்" எனவும், "உயர்ந்தோர்க்கு உரிய - அந்தணர், அரசர், வணிகர்க்கும் உயர்ந்த வேளாளர்க்கும் உரிய" என்றும் வரும் நச்சினார்க்கினியர் உரையும் காண்க. வேல்வேந்த னேவப் போய்" (1296) என்றதும் காண்க. "வேந்துவிடு தொழிலிற் படையும்" (மரபு - 81) என்று இதனைத் தொல்காப்பியம் கூறும். "வேந்துவிடு தொழில்" என்பதற்கு "வேந்தனாற் கொடுக்கப்படும் தண்டத் தலைமையாகிய சிறப்புக் காரணத்தான்" என்றுரை கூறினர். சமம் - போர். போந்தவரும் - சிறப்பும்மை. படையும் - உம்மை தம்முடன் படைக்கலன் முதலிய அங்கங்களுடன் என இறந்தது தழுவிய எச்சவும்மை. "வேந்துவிடு தொழிலிற் படையும்" என்ற தொல்காப்பியமும் கருதுக. சிலநாளில் - கலந்து - என்று கூட்டுக. பகைப்புலம் - இங்குப் பகைவர் என்ற பொருளில் வந்தது. பகைவர் இருக்குமிடம் என்று உரை கூறுவாரு முண்டு. கலந்து - கிடைத்து - கூடி - கைகலந்து. சமர்க்கடல் நீந்துவார் - போரினைக் கடலாக உருவகஞ் செய்தார். நீந்திக் கடத்தற்கரிய தன்மை குறிக்கப்பட்டது. "கடலைக் கையா னீற்தினன் காரியங்க காண்" (சித்தி - பாயிரம்) என்றபடி அது செய்தற்கரிய தொழில் என்பதும், கலிப்பகையார் இப்போரைக்கடந்து திரும்பாதவராய் முடிகுவர் என்பம் இவ்வுருவக முகத்தாற் குறிப்பாலுணர்த்தப்பட்ட திறமும் காண்க. நீந்துவார் - நீந்துவாராகி - நீந்த எண்ணி - என்க. முற்றெச்சம். நீந்துவார் - விளைத்தார் - என்க. சிலநாளில் - நெடுநாள்கள் - முரண் அணி. போரிற் சென்று பகைவரைக் கலந்து எளிமையும் துணிவும், பின்னர் இஃது அவர் கருத்துப்படி எளிமையாய் முடிவுபெறாது நீண்டதிறமும் குறிக்கப்பட்ட நயம் காண்க. இந்நாளில் சென்ற இரண்டு ஆண்டுகளாக நடக்கும் மேல்நாட்டுக் கோரப்பூசலின் றிறமும் வரலாறும் நடைமுறையும் இங்கு வைத்துச் சிந்திக்கற்பாலன. சிலநாளில் - என்றதனால் அமர்க்களமிருந்த போர்த்துறை நெடுந்தூரமாம் என்பது குறுப்பிடப்பட்டது. விளைத்தல் - போர் செய்தல். விளைத்தல் என்பதும் பல உபாயத்தானும் தமது அமர்த்தொழிலைப் பெருகச் செய்தல் குறித்தது. துறை - தும்பை - வாமை முதலிய புறத்திணைத்துறைகள். "படையும் கண்ணியும்" என்பது சூத்திரம். கலந்து - விளைத்தார் - என்று கூட்டுக. கடந்து நெடுஞ்சமர் - என்பது பாடம். 36 1292. | ஆயநா ளிடையிப்பா லணங்கனையா டனைப்பயந்த தூயகுலப் புகழனார் தொன்றுதொடு நிலையாமை மேயவினைப் பயத்தாலே யிவ்வுலகை விட்டகலத் தீயவரும் பிணியுழந்து விண்ணுலகிற் சென்றடைந்தார். |
27 (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறாகிய அந்நாள்களினிடையே, இங்குத், திருவனைய திலகவதியாரைப் பெற்ற தூயகுலப் புகழனார், தொன்று தொட்டு வருகின்ற நிலையாமையினைப் பொருந்திய வினையின்பயனாலே, இவ்வுலகைவிட்டு நீங்கும்படி தீய அருநோயினாற் பீடிக்கப்பட்டு விண்ணுலகத்தினிற் போய் அடைந்தனர். (வி-ரை.) ஆயநாய் இடை - கலிப்பகையார் நெடுநாள்கள் நிறைவெம்போர்த் துறை விளைத்தனவாகிய நாள்ககளினிடையே. |