திருவாயிலின் வழக்கம் - திருவாயிலின் வழி அன்பர்கள் சென்றுவர வழங்கியது. என்றும் நிகழ்ச்சி எய்தியது - அன்றுபோல் என்றும். இது நாயனார் திருவுள்ளத்துக் கருதிய பொருள். ""திறந்து மடைத்துஞ் செல்லும் நெறி" (1536). இத்திருவருள் நிகழ்ச்சியினைப் பற்றி ஆசிரியர் பாராட்டுகின்றவை ஆளுடைய பிள்ளையார் புராணத்துக் காண்க. செயல் முற்றி நிறைவேறிய பின்னரே அதனை பாராட்ட வேண்டுவது முறையாகலானும், அது ஆளுடைய பிள்ளை யாரது அருளிப்பாட்டுடன் நிறைவெய்துவதனானும் ஆண்டுக் கூறினார் என்க. 273 1539. | அங்கு நிகழ்ந்த வச்செயல்கண் டடியா ரெல்லா மதிசயித்துப் பொங்கு புளக மெய்திடமெய் பொழியுங் கண்ணிர் பரந்திழிய வெங்கு நிகரொன் றில்லாத விருவர் பாத மிறைஞ்சினார், நங்கள் புகலிப் பெருந்தகையு மரசு மடத்தி னண்ணியபின். |
274 1540. | அரிதிற் றிறக்கத் தாம்பாட, வடைக்க வவர்பா டியவெளிமை கருதி, "நம்பர் திருவுள்ள மறியா தயர்ந்தே" னெனக்கவன்று, பெரியது மஞ்சித் திருமடத்தி லொருபா லணைந்து பேழ்கணித்து மருவு முணர்விற் றுயில்கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர். |
275 1541. | மன்னுஞ் செல்வ மறைக்காட்டு மணியின் பாத மனத்தின்கண் உன்னித் துயிலும் பொழுதின்க ணுமையோர் பாக முடையவர்தாம் பொன்னின் மேனி வெண்ணீறு புனைந்த கோலப் பொலிவினொடுந் துன்னி யவர்க்கு "வாய்மூரி லிருப்போந் தொடர வா" வென்றார். |
276 1539. (இ-ள்.) அங்கு.....இறைஞ்சினார் - அங்கே நிகழ்ந்த அந்த அருஞ் செயலினைக் கண்டு அடியவர்கள் எல்லாரும் அதிசயமடைந்து உடல் முழுதும் மயிர்க் கூர்ச்செடுக்கக், கண்களினின்றும் அன்பு நீர் பொழிந்து வழிய, எங்கும் ஒன்றாலும் நிகரில்லாத ஒரு பெருமக்களின் பாதங்களையும் வணங்கினார்கள்; நங்கள்....பின் - நங்களுடைய சிகாழிப் பெருந்தகையாரும் அரசுகளும் திருமடத்திற் சேர்ந்தபின்னர், 274 1540. (இ-ள்.) தாம் அரிதில் திறக்கப்பாட - தாம் கதவம் திறக்கும்படி மிக அரிதின் முயன்று பாடவும்; அவர் அடைக்கப்பாடிய எளிமை கருதி - கதவம் திருக்காப்புக் கொள்ள அவர் பாடியதன் எளிமையினைக் கருதி; "நம்பர்...அபர்ந்ததேன்" என - "இறைவரது திருவுள்ளக்கிடையினை உணர அறியாது அயர்ந்தேன்" என்று; கவன்று - கவலை யடைந்து; பெரிதும்...பேழ்கணித்து - மிகவும் அச்சமடைந்து திருமடத்தில் ஒரு பக்கத்தில் அணைந்து கண்மூடிக்கொண்டு; மருவும்...வாகீசர் - உணர்வு பொருந்திய நிலையில் துயின்றவராகிய உண்மைநிலையின் வழுவாத வாகீசர், 275 1541. (இ-ள்.) மன்னும்...பொழுதின்கண் - செல்வம் பொருந்திய திருமறைக்காட்டின் மணிபோன்றவராகிய இறைவரது பாதங்களை மனத்தினிடத்து வைத்து ஊன்றி நினைத்துக்கொண்டு துயிலும்போது; அவர்க்கு - நாயனார் காண்பதற்கு; பொன்னின் பொலிவினுடன் - பொன்னார்ந்த திருமேனியில் வெண்ணீறு புனைந்த திருவேடப் பொலிவுடனே; உமையோர்...தாம் - அம்மையாரை ஒரு பாகத்தில் உடைய இறைவர்தாமே;துன்னி - எழுந்தருளி; "வாய்மூரில்...தொடரவா" என்றார் - "நாம் திருவாய்மூரில் இருப்போம் "அங்கு எம்மைத் தொடர்ந்துவா!" என்றருளிச் செய்தனர் (இறைவர்). 276 |