பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்61

 

பான்மையோர்" (திருஞான - புரா - 55) என்ற ஆளுடையபிள்ளையாரது முன்னை நிலைக் குறிப்பும் இங்கு வைத்தது எண்ணுதல் பயனுடைத்து.

எனை அடையத் தவம் முயன்றான் - இறைவரை அடைவது கருதிச் செய்யும் சிவபூசையாதி வழிபாடுகளே தவமாவன என்பதாம். தவம் முயன்றான் - தவம் செய்தான். முயற்சியளவில் நின்றது - காலம் வரும் வரையில் முயற்சி பயன்றாராதாதலின் அக்காலம் இப்போது வந்ததாக, இனி - ஆள்வம் என்றருளினர்.

48

1314. (வி-ரை.) பண்டு புரி - நல் - தவம் - சிவனை அடைவதற்காகச் செய்யும் தவமாதலின் நற்றவம் எனப்பட்டது. எனையடையத் தவம் என முன்பாட்டிற் கூறினார்.

இறையளவு பழுதின் வழுவும் என்க. தவத்தின் வழுவுதல் - தவம் செய்யும் போது மனம் - மொழி - மெய் - முயற்சிகளைப் பிறிதொன்றிற் செலுத்துதலும், மந்திரம், பூசைப்பொருள், பூசைச செயல் முதலியவற்றிற் குறைபாடு செய்தல் மனந்தாழ்தலின்றி மேற்கிளம்புதல் முதலியவற்றால் மனமொழி மெய்களாற் குற்றம் செய்தலும் முதலாயின.

இறை வழுவும் - என்றதனால் வழுச் சிறிதேயாதலின் இவ்வளவில் அனுபவம் நிகழ்ந்து தீர்வுபெற நின்றதென்பதும், பெரும் வழுவாயின் சிவாபராதமாகிக் கொடுந் தண்டனைக்குரித்தாகும் என்பதும் குறிப்பு.

இறை வழுவும் - சுதபா முனியாயிருக்கும் காலையில் கயிலையைப் பேர்த்த இராவணனுக்கு விரகறிவித்தமையும், உண்மையறிய வேண்டிவந்த சாந்தரென்று முனிவருக்கு சமணம் பெரிதென்று வாதித்தமையும் குறித்ததென்று கூறுவர். இவைபற்றி முன் உரைக்கப்பட்டன.

இறை வழுவும் - இறை - விடை என்ற பொருளும் தருதலால் வினா விடைகளாகிய சொல்லின் தவறு என்ற குறிப்பும்பெற நிற்றலும், கூற்றாயின - என்ற இடத்தும் கூற்று - சொல் குறிப்புப்பட நிற்றலும் கருதத்தக்கன.

ஆளத்தொடங்கும் சூலை வேதனை - நல்குரவு - நோய் - முதலியன வந்தபோது, இப்போது இறைவர் நம் மேல அருள்வைத்து நமது முன்னைத் தீவினைகளை அனுபவிக்கச் செய்து கழிப்பித்து ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளார் என்று கொள்வது அறிவு முறை என்பது குறிப்பு. "விரைந்தாளு நல்குரவே" (திருவாரூர் - 8), "அல்லலிலருளே புரிவனை" முதலியவை காண்க. ஏயர்கோன் கலிக்காமரைச் சூலைநோய் தந்தாட்கொண்டமையும் கருதுக.

கண்தரு நெற்றியர் - அருள்நோக்கம் செய்பவர். இங்குச் சூலை அனல்போல் அடுந்தன்மையுடன் புகுந்தபடியால் அனலாகிய நெற்றிக் கண்ணைப்பற்றிக் கூறினார். கனல்வதே யாயினும் அது அருளிப்பாடேயாகும் என்பார் அருள என்றார். "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" என்ற கோயிற்றிரு விருத்தமும் காண்க. ஒரு காலத்து அம்மையார், இறைவனது இருகண்களையும் மூடியபோது உயிர்களின் மேல்வைத்த அருளினால் நெற்றியில் ஒளியுடன் தோற்றிய கண்ணையுடையவர் என்ற வரலாறுங் கருதுக. அருள - அது - புக்கது என்க.

அடும் - கொடிய - மண்டு - பெரும் என்ற அடைமொழிகள் மிக்க வருத்தம் செய்யும் சூலையினது தன்மை குறித்தன.

பண்டுதவம் புரிதவந்து - என்பதும் பாடம்.

49

1315.

அடைவிலமண் புரிதரும சேனர்வயிற் றடையுமது
வடவனலுங் கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாங்