பதிகக் குறிப்பு :- அண்டங் கடந்த சுவடும் உண்டோ? ஏறுடைய கொடியுண்டோ? என்பன முதலாக இறைவரது திருவடையாளங்கள் பலவற்றையுங் கூறி இவை யிவை உண்டோ? நீவிர் எம்பெருமானைக் கண்டவாறு என்னே? என்று அடியாரிடம் வினவ, அவர், விரையுண்ட வெண்ணீறு தானுமுண்டு - கோவண ஆடையுண்டு; பெருமான் இலாதது என்னே?; அவரை மேனிமேற் பொடியும், புலத்தோலுடையும், நுண்ணிடையாள் பாகமும், என்றிவ்வாறு பல பல வண்ணங்களாக நான் சிந்தையுள்ளேயும் கனாவிலும் கண்டவாறு இவ்வண்ணமாம்; ஆனால், அவனது படிவமும், வண்ணமும், நிறமும் முதலாகக் காட்டி இவன்தான் இறைவன் என்று அவனருளே கண்ணாகக் காட்டக் காண்பதன்றி எழுதிக் காட்டொண்ணாது. முதலைந்து பாட்டுக்கள் "எவ்வகை யெம்பிரானாரைக் கண்டவாறே; என்ற வினாவும், 6 முதல் 11 வரை அவ்வினாவுக்கு விடையுமாக அமைந்திருத்தலின் இது வினாவிடைத் திருத்தாண்டகம் எனப்படும். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அண்டம் கடந்த என்றும், அண்டங்கள் தந்த என்றும் உரைக்க நின்றது. சுவடு - அடையாளம். எழுவர் படி - முனிவர் தொழுதல். - (2) எரிகின்ற - தீப்போல ஒளி செய்கின்ற; சொரிகின்ற - புனல் - சிறு துளியாகச் செய்யப்பட்டு உலகில் வந்து வழிகின்ற கங்கை. - (3) நிலா மாலை - கண்ணிபோல.-(5) இலயம் - சுருதி ஒத்திக்கைபடுதல். கூத்து என்றலுமாம். - (6) பட்டம் - நெற்றியணி. "ஏர்மதியி னும்பட்டஞ் சேர்ந்த நுதலானை" (ஆரூரர் - சீகாமரம்.); குழை காதினும், பிறை சென்னியிலும் என்க. - (7) வலித்து - இறுக்கி. - (9); இதன்முன் (11) -வது பாடலை வைத்துப் பொருந்த உரைத் தமைவுகொள்ள நின்றது. இவை இவை உண்டோ? உண்டோ? என்ற வினாக்களுக்கு இவை இவை உண்டு, உண்டு என்று விடை கூறுமுகத்தால் அமைந்தது இத்திருப்பாட்டு. சுமந்தது - இவை செலுத்தப்படாமல் நின்றன என்பது குறிப்பு. இரையுண் டறியாத - இறைவன்றிருமேனியில் தங்கும் அரவுகள் ஏனையரவுகள்போலப் பசிதீர்க்க வேண்டாதன. - (10) இறைவரை அவரருள் காட்டக் காணுதலன்றி வேறு எவ்வாற்றானும் காணவியலாது என்பதை அழகாக வலியுறுத்தியபடி. 1681. | அந்நிலைமை தனியாண்ட வரசுபணி செய்ய, வவர் நன்னிலைமை காட்டுவார் நம்பர் திரு மணிமுன்றில் தன்னில்வரு முழவார நுழைந்தவிடந் தானெங்கும் பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க வருள்செய்தார். |
416 (இ-ள்.) வெளிப்படை. அந்த நிலைமையினில் ஆண்ட அரசுகள் திருப்பணி செய்ய, அவருடைய நன்னிலைமையினை உலகறியக் காட்டுவாராகிச் சிவபெருமான் அழகிய திருமுற்றத்தில், திருப்பணிக்காக உழவாரம் நுழைந்தவிடமெல்லாம் பொன்னினோடு நவமணிகள் வெளிப்பட்டு விளங்கும்படி அருள் செய்தனர். (வி-ரை.) அந்நிலைமை தனில் - 1676ல் சொல்லிய அந்த நிலைமை. பணி - முக்கரணங்களாலும் செய்யும் திருப்பணிகள். நன்னிலைமை - இறைவரது திருவடியிற் பொருந்த வைத்த மனம், பொன் முதலிய உலக போகப் பொருள்களில் ஒரு சிறிதும் பற்றாது நிற்கும், நல்ல நிலைமை. நம்பர் - அருள் செய்தார் - என்று கூட்டுக. வரும் உழவாரம் நுழைந்த - திருப்பணியின் பொருட்டு உழவாரம் சென்ற. நுழைவித்த என்றது நுழைந்த என்று பிறவினை தன் வினையாக வந்தது; முயற்சியின்றிக் கைகள் தம்மியல்பிற் பணிசெய்த நிலை குறித்தது. "எண்ணுதலாஞ் செல்வத்தை யியல்பாக அறிந்தோமே" (பிள் - சீகா - திருப்பிரமபுரம் - 5) |