"வரும் இவள் என் அம்மையாவாள்" என்று கூறி அருளும் பேறுபெற்றவள்; செழும்தேன்.....குலதனமே - மரக்கொம்புகளினின்றும் செழுந்தேன் பொழியும் காரைக்காலில் மேவிய எமது குலதனமாகிய அம்மையேயாம். எனப்பெற்றவள் - குலதனமே என்று கூட்டுக. நம்பன்....பெற்றவன் - அம்மை திருக்கயிலையைத் தலையால் நடந்து ஏறியது கண்டு உமையம்மை முறுவல் செய்யப், பெருமான் "இவள் என் அம்மை" என்றனர், இவ்வரலாறு புராணம் (1771 - 1775) பாட்டுக்களில் விவரிக்கப்படும். உமை நகலும் நகல் - திருக்கண்ணோக்கம் செய்து அதிசயித்து வினவுதல் என்ற பொருளில் வந்தது. செம்பொன் உருவன் - சிவபெருமான். "பொன்னார்மேனியனே", "செம்பொன் மேனி வெண் ணீறணி வானை" (தேவா) "பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி" (11- திருமுறை) முதலியவை காண்க. என் அம்மை - பேணுந் தன்மையால் அம்மை போல்வார். "நம்மைப் பேணு மம்மைகாண்" என்று இதனை ஆசிரியர்உரை செய்தமை காண்க. குலதனம் - குலம் இங்கு மேன்மை குறித்தது. தொகை நூல் பெயரைப் போற்றும் நிலையில் சரிதக்குறிப்புப் பெறப்போற்றிற்று; சரிதத்தின் முடிந்த பெருமையும் ஊரும் வகை நூல் வகுத்துக் காட்டிற்று. 1717. (இ-ள்.) கூனல்வளை..திருக்காரைக்கால் - வளைவுகளை யுடைய சங்குகளைக் கடல் அலைகள் சுமந்து எடுத்துக்கொண்டு மேல் ஏறி அடுத்து நிறைந்த கழிக்கானல்களில் உலவுகின்ற வளம் பெருக உள்ள திருக்காரைக்கால் என்ற ஊர்; மானமிகு தருமத்தின் வழி நின்று - மானம் மிகும் தருமநெறியில் ஒழுகி; வாய்மையினில் ஊனமில் சீர்- வாய்மையினின்றும் குறைவுபடாத சிறப்புடைய; பெருவணிகர் குடிதுவன்றி ஓங்கு பதி - பெரு வணிகர்களின் குடிகள் நெருங்கிவிளங்கும் பதியாகும். (வி-ரை.) இப்பாட்டால் நகரச் சிறப்பும் குடிச் சிறப்பும் கூறியபடி. நாடு சோழநாடு என்பது கருத வைத்தார். நாடறியப்படாமை இன்றைக்கும் காண்க. மானமிகு தருமத்தின் வழி நின்று - நிற்றல் - ஒழுகுதல். தருமம் - அறம். மானம் - பெருமை. "அஃதாவது எஞ்ஞான்றும் தந்நிலையிற் றாழாமையும், தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர்வாழாமையுமாம்" என்பர் ஆசிரியர் பரிமேலழகர். வணிகராவார்ஏனை மூன்று திறத்தார்க்கும் பொருள்செய்து உலகம் நிலைபேறு பெறத் துணையாய் நிற்றலின், "வாணிக வாழ்க்கை"யும் (தொல் - பொருள் - மரபு - 7), "மெய் தெரிவகையி னெண்வகை யுணவின் செய்தியும்" (மேற்படி 78) உலக நலங்கருதி அறத்தாற்றில் அருளுடன் ஆற்றி ஒழுகுதல் அவர்கடனாம். "கொள்வதூஉ மிகைபடாது கொடுப்பதூஉம் குறைபடாது" (பட்-பாலை) என்பது முதலிய நலங்கள் அவரது அறவொழுக்கத்தை அளவுபடுத்துவன என்பதும், அதற்குத் தாழ்வு நேர்ந்த வழி உயிரையும் பொருட்படுத்தார்என்பதும் இவை போன்ற நன்மைகள் எல்லாம் ஈண்டுக் கருதவைத்து மானமிகு தருமத்தின் வழி நின்று என்றார். தமக்குரிய நூல்களை ஓதுதல், வேட்டல், ஈதல், உழுவித்தல், பசுக்காத்தல், என்பன வணிகர்க்குரிய தருமங்கள் என்ற தொல்காப்பியமும் காண்க. தருமம் - இங்குக் கருணை என்னும் வித்தின்முளைத்த கொல்லாமையைமுதலாக உடைய அறம் என்ற பொருளில் வந்தது. என்னை? உணவின் செய்தியை உள்ளுறுத்த வாணிகக் கடன் பூண்டாராதலின் அதனிற் றாழ்வு செய்யின் உயிர்கள் வருந்துமென்று அஞ்சி அறத்தின் வழி ஒழுதல் கருத்து. இவ்வொழுக்கத்தினைத் தம்மியல்பாக உடையார்என்பதும் தருமம் என்றதன் குறிப்பு. (தருமம் - இயல்பு) "கவரிமா வன்னார்" என்ற உவமை உயர்குடிப் பிறர்ந்தார்க்கு அஃதியல்பென்பது |