பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்853

 

விட்டது தவறென்றும், "கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை" என்றபடி அது உலகமறிந்த அளவில் கற்புநிலைக் கிழுக்காமென்று கணவன் எண்ணவரும் செயலாமென்றும், உயிருள்ளளவும் என் உடலுயிர்களை உம்மதாக்கி "என்னுயிர்க்கொரு நாதர்நீ ருரைத்த தொன்றை நான்செயு மத்தனை யல்லா லுரிமை வேறுள தோவெனக்" கென்றபடி (412) திருமணத்தில் இசைந்த நிலைக்கு மாறாகுமென்றும் மனத்துள் வந்த இன்னோரன்ன பல நிகழ்ச்சிகள் போலுமென்பது கருதப்படும், ஆயின், தாம் செய்தது தவறு என்று அஞ்சினரோ? அல்லது எண்ணினரோ? எனின், அந்நிலை ஒரு சிறிது மிலர்என்க. தாமும், கணவனும், அவனுடைய உடைமையாக எண்ணியுள்ள அந்த மாங்கனிகள் உட்பட யாவையும் "எல்லாமுன் னடிமையே எல்லாமுன் னுடைமையே" என்றபடி சிவபெருமானது அடிமையும் உடைமையுமேயாம் என்பதும், சிவனது உடைமையை, அவனை அடைந்ததனால் தம்மை உடையவடியார்களுக்கு ஆக்குதல் தகுதியே என்பதும், அதுவே பொருள் பெற்ற நீடுபயனாம் என்பதும், அவ்வாறு ஆக்குதலினால் கணவனது கருத்துக்கு மாறுபாடில்லை என்பதும், அவனோடு தாமோ அக்கனியினை உண்டு பெறும் இன்பத்தினும் மிக்க நீடிய இன்பம் சிவன் அடியார்உண்டதனால் பெறப்படுமென்பதும், அதனால் கணவனுக்கு நலமே செய்ததாகலின் கற்பு நெறிக்கு ஒரு சிறிதும் இழுக்கில்லை என்பதும், பிறவும் நன்குணர்வர். ஆனால் இவ்வாறு தெருட்டியறிவித்தற்குப் போதிய நிலையில் கணவன் அமைவிலன் ஆதலின் அவனது மனம் மாறுபடாவண்ணம் நிற்பதொன்றினையே அதுபோழ்து கருதி அகன்றார் என்க. மங்கையார்க்கரசி யம்மையார் தமது கணவன் வழுவிச் சமண நெறியுட் புக்கொழுகினா னாயினும் தாம் தம் கடைப்பிடியினின்றும் வழுவாது சிவநெறியின் ஒழுகிப், பிள்ளையாரது திருவருளினாற் பின்னர், அவனையும் செந்நெறிப்படுத்திய வரலாற்றின் உண்மைத் திறத்தினையும், கற்பு நெறி வழுவாத கடமைப் பாட்டினையும் இங்கு வைத்துக் காண்க.

கொண்டுவர அணைவார்போல் - கனி கொண்டுவரத் துணிந்து அகலவில்லை; ஆனால் அவர்அகன்றது கொண்டுவரச் செல்பவர்போலக் காட்டிற்று என்க. நிகழ்ந்ததையும் அதன் முறையினையும் சொல்லிக் கணவனது மனத்தைத் தம்மின் மாறுபடச் செய்யவும் அம்மையார்விரும்பவில்லை; அன்றியும், கணவன் விரும்பிவினவிய தெதனையும் இல்லை என்பதும் இல்லாளுக்கு முறையன்று; ஆனால் கனிகொண்டு வரலாமென்ற துணிவுமில்லை. கணவன் கேட்ட கனி கொடுத்தல் வேண்டும்; ஆயின் அங்கு அஃது இல்லாமையால் இறைவர்தோற்றுவித்தபடி காணலாம் என்ற மனநிலையின் அம்மையார்அகன்றனர்என்க. "அருங்கனிக்கங் கென்செய்வார்?" என்றதனால் கனி கொண்டு வரமுயலுதல் அவரது எண்ணம் என்பது விளங்கும். அங்கு - அங்கு நின்றும்.

1741.

அம்மருங்கு நின்றயர்வா; ரருங்கனிக்கங் கென்செய்வார்?
மெய்ம்மறந்து நினைந்துற்ற விடத்துதவும் விடையவர்தாள்
தம்மனங்கொண் டுணர்தலுமே யவரருளாற் றாழ்குழலார்
கைம்மருங்கு வந்திருந்த ததிமதுரக் கனியோன்று.

25

(இ-ள்.) அம்மருங்கு நின்று அயர்வார் - அந்தப் பக்கத்தில் நின்று மனந்தளர்வார்; அருங்கனிக்கு அங்கு என் செய்வார்? - பின்னை அரிய கனி பெறும் வழிதான்வேறு என்ன செய்வார்?; மெய்ம்மறந்து....உணர்தலுமே - தம்மையும் மறந்து நினைந்து, அல்லல் உற்ற விடத்தில் வந்து உதவியருளும் விடையவராகிய சிவபெருமான் திருவடிகளைத் தமது மனத்தில் முற்றும் உறவைத்து உணர்வினிற் பொருந்தவைத்தவுடனே; அவர்அருளால் - அவரது திருவருளினாலே; தாழ்குழ