பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்863

 

காலத்திலும் அதற்கு முன்னும் தமிழ் நாட்டார்வாணிபஞ் செய்து வந்தமை சரிதங்களாலறியப்படும். இச்சரிதத்துக்கு வேண்டப்படும் சிறப்பின்மை பற்றி அதனையும் இன்னதெனக் கூறிற்றிலர்.

அடைவுறச் சென்று சேர்ந்து - அடைவு உற - அடையும்படி, நீரின்மேற் செல்லுதலால் வழிகளைத் திசையறி கருவி முதலியவற்றின் றுணைகொண்டு அறிந்து செல்லும் வருத்தங்களைப்பற்றி அடைவுற என்றும், சென்று என்றும், சேர்ந்து என்றும் பயணத்தை அளவுபடுத்திக் கூறினார்.

அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி - வாணிபமுறையில் தான் கொணர்ந்த பண்டங்களை ஊதியம்பெற விற்று நிதியீட்டியும், மேல் திரும்பும் நிலையில் அந்நாட்டுப் பண்டங்களை ஊதியத்தின் பொருட்டுத் தான் சேரும் நாட்டில் விற்க நிறையக் கொண்டு இவ்வாறு விற்றும் வாங்கியும் பல வளங்களையும் நிறைவாக்கி. அளவில் - என்றது தொகையும், பல் என்றது வகையும் குறித்தன. வளங்கள் - நிதியும், அந்நாட்டுப் பண்டங்களும், பொன் மணி முதலாயினவும், முற்றி - எஞ்சாது நிறைவித்து.

படர்புனற் கன்னிநாட்டு ஓர்பட்டினம் - புனல்படர் என்க. ஆறுகள் கடலை நோக்கிச் சென்று சேரும். படர்தல் - செல்லுதல். கன்னி நாடு - பாண்டி நாடு. ஓர் பட்டினம் - பட்டினம் - கடற்கரை நகரம் என்ற பொதுப்பெயர்குறித்து நின்றது. பட்டினம் - பாக்கம் முதலியன கடற்கரை நகரங்களின் பெயராதல் மரபு. இப்பட்டினத்தின் பெயர் ஆசிரியர் கூறவில்லை. இது மந்திர நகர்(தூத்துக்குடி), சேதுக்கரை, குலசேகரன் பட்டினம் முதலாகிய துறைமுகப் பட்டனங்களுள் ஒன்று என்று கருதப்படும். மதுரை என்று சிலர்கருதிப் படங்களிற் காட்டவும் துணிந்துவிட்டனர். கடற்கரையில்லாமையால் அது பொருந்தாமை யறிக.

ஓர் பட்டினம் - அம்மையாரைவிட்டு நீத்து அவன் சேர்ந்தமையாலும், அங்குத் தாமே போய்த் தங்கி வாழச் சென்றபோதும் அம்மையாரை ஏற்காமையால், இதன் மருங்கு நின்றே பேய் வடிவுடன் நீங்கியமையாலும் இந்நகரின் பெயரைக் கூறுதலும் வேண்டா என்று ஆசிரியர் விடுத்தனர் போலும், ஓர்என்ற இலேசாற் கூறியதும் கருதுக. சரிதத்துக்கு வேண்டப்படும் சிறப்பின்மையும் காண்க.

34

1751.

அப்பதி தன்னி லேறி யலகில்பல் பொருள் ளாக்கும்
ஒப்பின்மா நிதிய மெல்லா மொருவழி பெருக வுய்த்து
மெய்ப்புகழ் விளங்கு மவ்வூர்விரும்பவோர்வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்.

35

(இ-ள்.) வெளிப்படை. அந்த நகரத்தில் ஏறித்சென்று தான் கொணர்ந்த அளவில்லாத பலவகைப் பொருள்களால் ஆக்கிய ஒப்பற்ற பெருநிதியங்களை யெல்லாம் ஒரு வழியாகச் சேர்ந்து மேன்மேல் சேமஞ்செய்து, மெய்ப்புகழ் விளங்கும் அந்த ஊரார்விரும்பும்படி ஒரு வணிகன் பெற்ற செப்பரிய கன்னியைச் செல்வம் பெருகக் கலியாணம் செய்தான்.

(வி-ரை.) ஏறி - கப்பலில் நகர மருங்கு சார்ந்தவன் கப்பலினின்றும் இறங்கிப் படகுகளிற் சென்று கரையேறி நகரம் சேர்ந்து என்பார்ஏறி என்றார். கப்பல்கள் குறித்த ஆழமுள்ள நீர்அளவில் நின்றுவிடும், அதன்பின் இறங்கிப் படகேறி வந்து கரையேற வேண்டிய தன்மை குறிக்கப்பட்டது.

அலகில் பல் பொருள்கள் ஆக்கும் - இப்பொருள்கள் வணிகன் கப்பலிற் கொணர்ந்தவை, பொருள்கள் ஆக்கும் - பொருள்களால் ஆக்கப்படும் என்க.