பக்கம் எண் :


894திருத்தொண்டர் புராணம்

 

1777.

கூடுமா றருள்கொ டுத்துக் "குலவுதென் றிசையி லென்றும்
நீடுவாழ் பழன மூதூர் நிலவிய வாலங் காட்டில்
ஆடுமா நடமு நீகண்ட டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை" யென்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.

61

(இ-ள்.) கூடுமாறு அருள் கொடுத்து - தமது திருவடிக்கீழ்க் கூடியிருக்கும் நெறியினை அருளி; பரவுவார் பற்றாய் நின்றான் - பரவுகின்றவர்களுக்குப் பற்றுக் கோடாய் நிற்கும் இறைவர்; "குலவுதென்......நம்மை" என்றான் - விளக்கமுடைய தெற்குத் திசையில் எப்போதும் அழியாது வாழ்வுதரும் பழையனூர் என்னும் பழம் பதியில் நிலவிய திருவாலங்காட்டில் நாம் ஆடுகின்ற பெருநடனத்தையும் நீ கண்டு, எப்போதும் ஆனந்தத்துடன் கூடி எப்போதும் நம்மைப் பாடிக் கொண்டிருப்பாயாக" என்று அருளிச் செய்தார்.

(வி-ரை.) கூடுமாறு - அம்மையார் முடிந்த முடிபாகக் கேட்ட மூன்றாவது வரத்தின்படி தமது திருவடிக்கீழ் இருக்கும் நிலை கூடும்படி என்க. இதற்குப் பிறர் எல்லாம் கேட்ட வரம் பொருந்தும்படி என்றுரைத்தனர்.

தென் திசையில் - இவ்வரம் வடகயிலையில் தரப்படுகின்றபடியால் தென்றிசையில் என்றார்.

என்றும் நீடு வாழ் - அழியா வாழ்வினைத் தருதற்குக் காரணமாகிய இடத்து நிகழ் பொருளின்றன்மை இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. இறைவரது நடனம் அழியாது நித்தமாவதுபோல, அது நிகழ்தற் கிடமாகிய ஊரும் நித்தமென்பதாம்.

பழனம் மூதூர் பழையனூர் என்ற பழவூர். பழனை என்பது பழனம் என நின்ற. 1606 - 1607 பாட்டுக்களும் தலவிசேடமும் பார்க்க.

பழன மூதூர் நிலவிய ஆலங்காடு - பழையனூர்த் திருவாலங்காடு என்று சேர்த்துத் தேற்றமாய் அறியப்படுவது. "பழனை மேய, அத்தா ஆலங்காடா" முதலியவை காண்க.

மா நடம் - திருவடியை மேலே தூக்கி ஆடும் அருட்கூத்து; ஊர்த்துவ தான்டவம் என்பர் வடவர்.

ஆனந்தம் சேர்ந்து - முடிவிலாத பேரின்பமாகிய எமது தன்மையிற்கூடி.

எப்போதும் பாடுவாய் - சிவ பூதகணங்கள் இறைவர் திருக்கூத்தினுடன் இலயம்பட ஆடியும், பாடியும், இயங்கள் முழக்கியும், இன்பமார்ந்திருப்பன என்பது அம்மையார் திருப்பதிகங்களாலும், "கோடி கோடி குறட்சிறு பூதங்கள் பாடி யாடும் பரப்பது பாங்கெலாம்" (16) என்பது முதலிய திருவாக்குக்களாலும் அறியலாம். "பப்பினை யிட்டுப் பகண்டை பாட" I (11); "பேய், கொட்ட முழவங் கூளி பாட" II (1); முதலியனவாய் வரும் அம்மையார் திருவாக்குக்களும் காண்க. எப்போதும் - என்றும் மீளாது நிலைபேறு பெற என்றபடி "பலவாறே தொழும்பாகும் அங்கு" ஆளாகா மங்கு" என்றபடி பாடுதல் அடிமைப்படுத் தொழும்பு செய்யும் முறைகளுள் ஒன்று என்க. எப்போதும் என்றதனால் மீளாநிலையாகிய வீடுபேறு குறிக்கப்பட்டது.

பரவுவார் பற்றாய் நின்றான் - ஆதலின் இவ்வாறருள் செய்தனர் என்று காரணம் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஓதினார்.

நடமும் கண்டு......பாடுவாய் - என்றது ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்று வேண்டிய வரம் தந்த வகை. காணுதலும் பாடுதலும் அநுபவ வகைளாம்.

ஆர்த்தி செய்தே யெப்போதும் - என்பதும் பாடம்.